text
stringlengths
309
27.8k
அந்த ஊரில் குமரேசன் என்ற குல்லா வியாபாரி ஒருவர் இருந்தார்.டவுனுக்கு சென்று வித,விதமான தலைக்குல்லாய்களை வாங்கி அவற்றை எல்லாம் ஒரு பெரிய மூட்டையாக கட்டி தலை சுமையாக நடந்து சென்றுபக்கத்து ஊர்களிலும், சந்தைகூடும் இடங்களிலும் விற்பனை செய்துவந்தார். அவரும் தனது தலையில் எப்போதும் குல்லா அணிந்து இருப்பார். வெயில் காலம் தொடங்கியது.மக்கள் வெயிலுக்கு பயந்து குல்லா வாங்கி அணிய ஆரம்பித்தனர்.வாங்கி வந்த குல்லாக்கள் அனைத்தும் உடனே விற்று தீர்ந்துவிட்டதால், குமரேசன் டவுனுக்கு சென்று விதவிதமான குல்லாக்களை வாங்கி பெரிய மூட்டையாக கட்டி பஸ்சில் ஏற்றி தன் ஊருக்கு கொண்டு வந்தார். அடுத்தநாள் காலை அந்த மூட்டையைதன் தலைமீது வைத்து சுமந்து கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றார். முதலில் போன ஊரில் சில குல்லாக்கள் மட்டுமே விற்பனையானது. குல்லாவியா பாரி வெயிலையும் பொருட்படுத்தாமல் பக் கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்தின் கீழேசற்று நேரம் ஓய்வு எடுக்கநினைத்து குல்லா மூட்டையை இறக்கி வைத்துவிட்டு சற்று நேரம் தூங்கிவிட்டார். குல்லாவியாபாரி குல்லாமூட்டையுடன் தூங்குவதை அந்தமரத்தில் தங்கி இருந்த குரங்குகள் கண்டன. அவர் அணிந்து இருந்த குல்லாவை ரசித்தன.பின்னர் மரத்தில் இருந்து இறங்கிவந்து, குல்லா மூட்டையை பிரித்தன. இதைக்கண்ட வயதான குரங்கு ஒன்று“குரங்கு நண்பர்களே…மூட்டையை அவிழ்க்காதீர்கள். அந்தமனிதர் மிகவும் ஏழ்மையானவர். இந்தக் குல்லாக்களை விற்று தான் அவர் பிழைத்து வருகிறார்.தயவு செய்து மூட்டையை பிரிக்காதீர்கள்”என்றது. மற்ற குரங்குகளோ “போ… போ…கிழட்டுக்குரங்கே உனக்கு ஒன்றும் தெரியாது, அவர் தலையை பார்…அந்தகுல்லா எப்படி கச்சிதமாக இருக்கிறது பார்…நாங்களும் அவரை போல குல்லா அணியப்போகிறோம்நீ பேசாமல் வேடிக்கை பார்” என்றுகூறிவிட்டு குல்லாக்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்து குரங்குகள் தலையில் அணிந்து கொண்டன. தூக்கம் கலைந்து எழுந்த குல்லா வியாபாரி குல்லா மூட்டை அவிழ்ந்து கிடப்பதைக்கண்டு திடுக்கிட்டார்.அப்போது கிழட்டுக்குரங்கு,“குல்லா வியாபாரியே, உம்முடைய குல்லாக்களை குரங்குகள் எடுத்து தலையில் அணிந்து கொண்டன.நான் எவ்வளவோகூறியும் அவை எனது பேச்சை கேட்கவில்லை” என்று கூறியது. குல்லாவியாபாரி ஆலமரத்தை ஏறிட்டார்.மரத்தில் இருந்த குரங்குகள் ஒவ் வொன்றும் குல்லாக்களை அணிந்து இருந்தன. உடனே குல்லாவியாபாரி, “குரங்குகளே எனதுகுல்லாக்களை கொடுத்துவிடுங்கள்,நான் அவற்றை விற்பனைக்காக வைத்து இருக்கிறேன்”என்றார். குரங்குகள் அவரின் பேச்சை காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. உடனே குல்லா வியாபாரி கோபத்துடன் தான் அணிந்து இருந்த குல்லாவை தூக்கி வீசினார். உடனே குரங்குகளும் குல்லாவை கழற்றி வீச முயன்றன.ஆனால் அவைகளால் குல்லாவை கழற்றமுடியவில்லை. குல்லாதலையில் இருந்து கீழே இறங்கி அவற்றின் கண்களை மறைத்தன. இதனால் குரங்குகள் பயந்து நடுங்கின. உடனே குமரேசன்,“குரங்குகளே அந்தக் குல்லாக்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்பட் டவை. உங்கள் தலைக்கு ஒத்து வராது. இந்தபுதுக்குல்லாவை தலையில் மாட்டுவது சுலபம், ஆனால் கழட்டுவது மிகவும் கடினம். எனவே அதைகழற்றும் விதமாகத்தான் கழட்ட வேண்டும். ஒவ்வொருவராக வாருங்கள், நான் கழற்றிக் கொள்கிறேன், இல்லைஎன்றால் அந் தக் குல்லாக்கள் உங்கள் கண்களை மறைத்து… நீங்கள் கிளைகளை விட்டு கிளைக்கு தாவ முடியாமலும், உணவை அடை யாளம் காண முடியாமலும் தவியாய் தவிக்க நேரிடும்” என்று கூறினார். உடனே குரங்குகள் குல்லா வேண்டாம், தலை தப்பினால் போதும் என்று குல்லாவியாபாரி முன்பு வரிசையில் வந்து நின்றன. வியாபாரியும் குல்லாக்களை குரங்கின் தலையில் இருந்து கழட்டி எடுத்துக் கொண்டார். “பிறர் பொருட்களைஅவரின் அனுமதி இன்றி அபகரிப்பது அடி முட்டாள் தனமான காரியம்,அது அநாகரீகமும் கூட. அந்த செயலைத்தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.உங்கள் செயலுக்கு துணை போகாத வயதான குரங்கு மட்டும் தான் நாகரீகம் பேணிய நல்ல குரங்கு. அந்த வயதான குரங்குக்கு நான் ஒரு பரிசு கொடுக்க போகிறேன்”என்று கூறிய குல்லா வியாபாரி தான் தலையில் அணிந்து இருந்தவிலை உயர்ந்த ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய குல்லாவை எடுத்து அந்த வயதான குரங்கின் தலையில் அணிவித்தார். வயதான குரங்கும் அந்தகுல்லாவை மகிழ்ச்சியுடன் தலையில் அணிந்து கொண்டது. மற்ற குரங்குகள் அந்த வயதான குரங்கை ஏக்கத்துடன் பார்த்தன. இனிமேல் பிறர் பொருட்கள் மீது ஆசை வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தன. குல்லாவியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.
மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள் செய்து இரண்டு காதுகளிலும் போட்டுக் கொண்டார். ஒகு நாள் வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் செல்ல வேண்டி நேரிட்டது. இர்வு வெகு நேரமாகி விட்டதால் அங்குள்ள சத்திரத்தின் திண்ணையில் படுத்துக் கொண்டார். அவ்வாறு படுக்கும்போது அவர் ஒருக்களித்தவாறு படுத்திருந்தார். அவருடைய இடது காது தனரயிலும், வலது காது மேற்புறமாகவும் இருந்தது. மணிவண்ணனுக்கு எதிரே ஒரு வழிப் போக்கன் படுத்திருந்தான். அவன் மணிவண்ணனின் வலது காதில் மின்னும் வைரக் கடுக்கனைப் பார்த்து விட்டான். அவன் மிகவும் பொல்லாதவன்.
ஒருநாள் இரவு நேரத்தில் முட்டாள்களும் கோழைகளுமான பத்துப்பேர் கரைபுரண்டு ஒடும் ஒர் ஆற்றின் ஒரு கரையிலே குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் வந்த முல்லா " என்ன சமாச்சாரம், ஏன் தயக்கத்தோடு நிற்கிறீர்கள்" என வினவினார். " ஆற்று நீரில் இறங்கி அக்கரைக்குச் செல்ல பயமாக இருக்கிறது. எங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில் விடுகிறீர்களா?" என்று முட்டாள்கள் கேட்டார்கள். " உங்கள் விருப்பத்தை நிறைவேற்றினால் என்ன கொடுப்பீர்கள்?" என்று முல்லா கேட்டார். " ஆளுக்குப் பத்துக் காசு கொடுக்கிறோம்" என்றனர் முட்டாள்கள். முல்லா அவர்களை ஒவ்வொருவராக கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில் விட்டுக் கொண்டிருந்தார். கடைசி மனிதனை அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஆற்று நீரில் இறங்கினார். பாதி தூரம் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென வெள்ளம் அதிகமாகப் பெருக்கெடுத்து விட்டது. முல்லா கையைப் பிடித்து அழைத்து வந்த முட்டாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்ற முல்லா படாதபாடுபட்டார், முடியவில்லை. அவர் வருத்தத்தோடு அக்கரையை அடைந்தார். அங்கே காத்துக் கொண்டிருந்த ஒன்பது முட்டாள்களும் வருத்தம் ததும்பிய முகத்தினராக வந்து சேர்ந்த முல்லாவை நோக்கி " ஐயா, தாங்கள் ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டனர். " உங்களிடமிருந்து எனக்கு வரவேண்டிய வருமானத்தில் பத்துக்காசு குறைந்துவிட்டதே என்பதை எண்ணித்தான் வருந்துகிறேன் " என்றார். அவர் சொன்னதன் உட்பொருளை உணராத முட்டாள்கள் " கவலைப்படாதீர்கள். ஒரு பத்துக் காசு சேர்த்துத் தருகிறோம் " என்று கூறினார். அவர்களுடைய முட்டாள்தனத்தை எண்ணி முல்லா மனத்திற்குள் மிகவும் வேதனைப்பட்டார்.
தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். "அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?" தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். "நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு" குட்டி திரும்பவும் கேட்டது. "அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்" தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது. "பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு" குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. "இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?", "அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்". பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம். "பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?". இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?" இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?"
ஒரு வாலிபன் பல வில்வித்தைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய வில்லாண்மையை காட்டி பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருந்தான். ஆனால் அந்த பாராட்டுகளும், பரிசும் பண்பினை உருவாக்காமல் அவனுக்கு கர்வமும், தலைக்கணமும் ஏறுவதற்கு காரணமாக அமைந்தது. தற்பெருமை கொண்ட அவன் அந்த ஊரில் வில்வித்தையில் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஸென் ஆசிரியரிடம் சென்று தானே வில்வித்தையில் சிறந்தவன் என்று கூறி தன்னுடன் போட்டியிட வருமாறு அழைத்தான். வாலிபனுக்கு நிஜமாகவே அருமையான வில்வித்தை தெரிந்திருந்தது. வில்லிலே அம்பினை பூட்டியவன் முதல் முறையிலேயே தூரத்தில் இருந்த ஒரு பொம்மை மாட்டின் கண்களை சரியாக குறிபார்த்து நேர்த்தியாக அம்பு எய்தினான். தன்னுடைய இரண்டாவது அம்பானது, முதல் அம்பினை இரண்டாக பிளக்குமாறு செலுத்தினான். "ஆ, அதைப் பார்" என்று சுட்டிக் காட்டியவன், "உன்னால் எனக்கு நிகராக குறிபார்த்து வில்லாள் அடிக்க முடியுமா? எங்கே உன் திறமையைக் காட்டு" என்று ஆசிரியரைப் பார்த்து ஆனவத்துடன் கேட்டான். வாலிபனுடைய பேச்சினைக் கேட்டு கொஞ்சமும் தடுமாறாமல், தன்னுடைய அம்பினை உறியிலிருந்து எடுக்காமல், இளைஞனைப் பார்த்து கைகளால் சாடையாக தன்னை பின்பற்றி வருமாறு கூறிவிட்டு முன்னோக்கி நடக்கலானார். ஆசிரியரினுடைய விருப்பம் என்னவாக இருக்கும் என்று நினைத்தவாறே, வாலிபன் அவரை பின் தொடர்ந்து ஒரு மலையின் மீது ஏறினான். மலையின் மீது ஒரு கிடுகிடு ஆழமான பள்ளம் இருந்த இடத்திற்கு வந்தார்கள். செங்குத்தான பாறைகளில் இரண்டாக பிளவு பட்டு இருந்த இடத்தில் எந்த விதமான பிடிமானமும் இல்லாமல் அதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்திருந்த ஒரு மரமானது பட்டுப் போயிருந்தது. தன்னுடைய பாதையிலிருந்து விலகி அந்த பட்டுப் போன மரத்தின் மீது அமைதியாக ஏறியவர் தூரத்தில் தெரிந்த மற்றொரு மரத்தினை நேராக குறிபார்த்து ஒரே தடவையில் சரியாக அம்பினை எய்தினார். "இப்பொழுது உன்னுடைய முறை" என்று கூறியவர் கவனமாகவும் நேர்த்தியாகவும் அந்த மரத்திலிருந்து அமைதியாக இறங்கி அவனுக்கு வழிவிட்டார். கிழே ஆழங்கான முடியாத கிடுகிடு பாதளம். வளர்ந்திருந்த மரமோ பட்டுப் போனது எப்பொழுது முறியலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது. நடந்து அந்த மரத்தில் ஏற முயற்சித்தவனுடைய கால்களோ சரசரவென வழுக்கியது. அவனால் பயத்தில் அந்த பட்டுப் போன மரத்தில் ஏறவே முடியவில்லை, எங்கே வில்லை எடுத்து, நாணினை முடுக்கி அம்பினை எய்தப் போகிறான். தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தலையை தொங்கப் போட்டான். வாலிபனின் இக்கட்டான நிலையைப் பார்த்த ஸென் ஆசிரியர், "உனக்கு அம்பு எய்துவதில் சிறந்த திறமை இருக்கிறது, ஆனால் அதனை ஒரு முகப்படுத்தி குறிபார்த்து எய்யக் கூடிய மனதினைக் கட்டுப் படுத்துவதில் இன்னும் உனக்கு திறமை போதவில்லை" என்றுக் கூறினார்.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, "அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?" என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, "நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?" என்றார். உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, "சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்" என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ "அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்" என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, "கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்" என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். "அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?" என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, "நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்" என்று புகழ்ந்தார். கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது. நன்றி தினமலர்!
முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி" முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?" என்று கேட்டார்." உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது, ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே" என்று முல்லா சொன்னார்." முல்லா அவர்களே, என்னிடம் எந்த ரசகசியத்தைச் சொன்னாலும் உண்மையிலே அது என்னை விட்டுத் தாண்டாது தயவு செய்து அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள்" என்று நண்பர் வேண்டிக் கொண்டார்." நான் என் வெற்றியின் ரகசியத்தை உங்களிடம் கூறினால் யாரிடமும் கூற மாட்டீர்களே" என்றார் முல்லா." என்னை நம்பலாம் என்னிடமிருந்து ரகசியம் ஒரு போதும் வெளியே போகாது" என்று உறுதியாகக் கூறினார் நண்பர்." யாராவது உம்மிடம் வந்து ஏராளமான பணம் தருகிறேன் என்று ஆசை காட்டினால்?" என்று கேட்டார் முல்லா." கோடிப் பொன் தருவதாக ஆசை காட்டினால் கூட யாரிடமும் கூற மாட்டேன்" என்று திடமாகக் கூறினார் நண்பர்." அப்படியானால் நம்பி உங்களிடம் ரகசியத்தைக் கூறலாம். மறந்துகூட இதைப் பிறரிடம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பலாம் இல்லையா?" என்று முல்லா கேட்டார்." என்னை முழு அளவுக்கு நம்பலாம்" என்று வாக்குறுதி கொடுக்கும் விதத்தில் நண்பர் சொன்னார்." உண்மையிலேயே நீர் ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான், என் வெற்றிக்கான ரகசியத்தைக் கூறினால் நான் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் ஆகிவிடுவேன். அதனால் அன்பு நண்பரே என் ரகசியத்தை உமக்குக் கூறத் தயாராக இல்லை. நானும் என் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?" எனக் கூறியவாறு முல்லா அந்த இடத்தை விட்டு அகன்றார்.
முல்லாவிக்க ஏற்பட்டு வரும் புகழையும் மதிப்பையும் கண்டு பொறாமைபிடித்த சிலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் மன்னர் அவையில் அமைச்சர்களாகவும் இருந்தனர். அவர்கள் மன்னரிடம் முல்லா பற்றி ஏதாவது கோள் சொல்லி அவர் மதிப்பைக் குறைப்பதிலேயே கண்ணாக இருந்தனர். ஒருநாள் மன்னர் முல்லாவைக் கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்கத் தீர்மானித்து சபையினர் கருத்தைக் கேட்டார். முல்லாவைப் பிடிக்காதவர்கள் எழுந்து " முல்லா எந்த வகையிலும் அறிவாளி அல்ல. சாமானிய மக்கள் செய்யக்கூடிய செயல்களைத்தான் அவர் பேசி செய்து வருகிறார். சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை. அதனால் அவர் எந்த வகையிலும் சிறப்பு செய்வதற்குத் தகுதியானவர் இல்லை" என்று ஒரே குரலில் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அந்தச் சமயம் முல்லா சபையில் இல்லை. சபையை நோக்கி வந்து கொண்டிருந்த அவருக்கு அவருடைய எதிர்ப்பாளர்களின் பேச்சு காதில் விழுந்தது. உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி கால்களாலும் கைகளாலும் ஒரு விலங்கு நடப்பதுபோல நடந்து சபைக்குள் பிரவேசித்தார். அதைக் கண்டு சபையில் இருந்தவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். மன்னர் வியப்பு தோன்ற சிரித்தவாறு " என்ன முல்லா அவர்களே எதோ ஒரு விலங்கு போல நான்கு கால்களின் உதவியுடன் நடந்து வருகிறீரே, உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா" என வினவினார். முல்லா எழுந்து மன்னரை வணங்கி " மன்னர் பெருமானே, நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரண செயல் எதையும் செய்யவில்லை என்று என் நண்பர்கள் சிலருக்கு வருத்தம். அதனால்தான் மனித இயல்புக்கு மாறுபட்டு ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள்" என்றார். முல்லாவின் எதிரிகளான பொறாமைக்கார்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவுச்சாதுரியத்தைக் கண்டு மகிழந்து பரிசுகள் அளித்தார்.
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது. இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து, "சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்" என்றது . நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்கு சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன் அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக "சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்" என்று கூறி கிளம்பியது. சேவல், "அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது" நரி "அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்". இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் "யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது" என்று கூறி சிரித்தது. கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.
“ஙொய்ய்ய்…” என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார். “குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!” என்றான் மட்டி. அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன. வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர். “குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?” எனக் கேட்டான், மடையன். அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், “ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன” என்று புளுகினார். உடனே சிஷ்யர்கள், “அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்” என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள். “உஸ்ஸ்… சத்தம் போடாதே… ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்” என்று மெல்லக் கூறினான், முட்டாள். “குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!” என்று குதித்தான், மூடன். “அதைவிட, அதற்குக் “கிச்சு கிச்சு” மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!” என்றான் மண்டு. “சரி…சரி… முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்” என்று கட்டளை இட்டார் குரு. மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். மண்டையில நெருப்புப் பட்டதும், “ஐயோ…” என்று கதறினான் மண்டு. மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது. சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன. “குருவே” இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன” என்றான். “வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்” என்றான், மண்டு. “இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றான் முட்டாள். முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர். இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன. “சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?” என்று பரமார்த்தர் கேட்டார். “குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்” என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி. “ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!” என்றான் மடையன். “குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!” என்றான் மூடன். “அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?” என்றான் மண்டு. “செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!” என்றான் மூடன். “பலே மூடா!” என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர். அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர். “திகு, திகு” என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள். சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள். அப்போதும் “சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!” என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!
ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார். இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள். வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான். இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. ''ஏய்...கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா'' என்று அம்மா கூவ, ஓடிவந்தான். ''போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி'' கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். ''கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்'' என்றாள் அம்மா. சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. ''தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா'' என்றான். பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்: ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள். மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள். அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை. இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார். ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள். ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி ''ஜலக் ஜலக்'' -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா. உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள். அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது. வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, ''தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்'' என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது. நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள். ''என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!'' என்று தாத்தா கேட்க, ''கொர்...கொர்'' என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷ•ம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்: ''என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?'' என்று கேட்டான். தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார்.
பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியின் சக்கரம் நகர நகர, ஆறு புரண்டு கொண்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக ஆற்றுக்கு நடுவில் உறை இறக்கி, யாராவது இரண்டு பேர் வெளியில் மொண்டு குளித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு ரிப்பன் போல தண்ணீர் நெளிந்து கொண்டு கிடக்கும். தலை சிதைந்த பாம்புபோல அந்த இடத்திலேயே ஈரம் கிடந்து தத்தளிப்பது இவ்வளவு அகலமும் நீளமுமான பாலத்தில் இருந்து பார்க்க கஷ்டமாக இருக்கும். இன்னொரு பக்கம் பூராவும் சலவைத் துறை. ஆற்றின் நடுப்படுகையிலேயே துணி உலர்ந்து கொண்டிருக்கும். காற்றின் விசிறலில் துணிகளின் நீள அகலங்களில் அலை எழும்பிப் படபடக்கும் போது மடியிலிருந்து தடவி எடுத்துக் கொண்டது போல இருக்கும். யாராவது இதுதான் பாடல்பெற்ற அந்த ஆறு என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் இன்று நம்பும்படியாக இருக்கிறது. அந்தப் பழைய பெயரைப் புதுப்பித்துக் கொண்டதுபோல கரையற்றுச் சீறிக்கொண்டிருந்தது. தன்னுடைய பெயரைத் தானே சொல்லிக் கொண்டு, நான்தான் நான்தான் என்று நிரூபிப்பதுபோல, புத்தம்புதிதாக நுரை தெறித்துக் கொண்டிருந்தது. வெள்ளம் அப்படி உரக்கக் கத்தக் கத்த, கத்தலின் எதிரொலி மீண்டும் வெள்ளத்தில் கனத்து வந்து விழுந்து, விழுந்த இடத்திலிருந்து நீர் சுழன்று சுழன்று நாலாபுறமும் தெறித்தது. செம்மண்ணும் செங்காவியுமாக நிறத்தைக் கரைத்துக்கொண்டு அப்படியே வானத்தோடு போய் அப்பிக் கொள்வதுபோல தண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. கருத்த மேகங்கள் வெள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்ததா அல்லது தண்ணீர் சுருண்டு மேலே ஏறிக் கொண்டிருந்ததா தெரியவில்லை. ''அம்மாவைக் கொண்டுவந்து காட்டுங்க ''ப்பா'' - தினகரி பின்னால் இருந்து கொண்டே சொன்னாள். ''காலேஜூக்கு லீவ் போட்டிடுறியா'' - நிஜமாகவே கேட்டேன். ''பரீட்சை இல்லாவிட்டால் இங்கேயே நின்றுவிடலாம்'' தினகரி சொல்லும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. இது போன்ற நேரத்தில் அலுவலகம் போகக் கூடாது. கல்லூரி போகக்கூடாது. சமைக்கக்கூடாது துவைக்கக் கூடாது. வெள்ளம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். வெள்ளம் மட்டும் தானா. மழை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் இருக்கிற நாட்களில் தட்டான்கள் பறப்பதை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கடற்கரையில் அலை நனைத்துக் கொண்டு நிற்கவேண்டும். தம்பி கையை தினகரி பிடித்துக்கொள்ள தினகரி விரல்கள் அம்மா கையை கவ்வி இருக்க கவ்வின கையில் என்கை புதைத்துக்கொண்டு, மலையின் சரிவுகளில், சருகுகுளை மிதித்துக் கொண்டு நடந்து கொண்டே இருக்கவேண்டும். கல்தூண்கள் நிரம்பிய கோவில் பிரகாரங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும். நிலாச்சாப்பாடு சாப்பிட என்று மொட்டை மாடிக்குப் போய், அப்புறம் நிலாவைப் பார்க்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தம்ளர்கள், தண்ணீர்ச் செம்பு, சாப்பிட்ட தட்டுகள் போல வேறு சிலசில பாத்திரங்களாக மாறி அவரவர் நினைவில் வேர்விட்டு இருட்டில் முளைக்க வேண்டும். இப்படி நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ தோன்றுகிறது. ஆனால் அது எல்லாம் நடக்கக்கூடியதா என்ன. அலுவலகக் கதவும் பள்ளிக்கூடத் கதவும், சமையல் கட்டுக் கதவும் அகலமாகத் திறந்து கொண்டிருக்கையில் இதையெல்லாம் அவ்வப்போது இப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தான். ''என்னைக் கொண்டுபோய்க் காலேஜில் விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பியுங்க அப்பா'' தினகரி வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டேதான் சொல்லியிருக்கவேண்டும். எல்லோரும் வெள்ளத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் நிற்கிறவரை யாரும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. தனித்தனியாக வெள்ளம் ஒவ்வொருவரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடும் போல. சில்லென்ற குளிருக்குச் சேலையைப் போர்த்திக் பல்லில் கடித்துக் கொண்டிருந்த முகத்தில் வெள்ளம் தளும்பிக் கொண்டிருந்தது. புத்தகப் பையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பையனை சைக்கிள் காரியரில் வைத்துக் கொண்டு காலை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர் முகத்தில் தளதளவென்று ஈரம் சிலுப்பி அலையடித்தது. வடக்கு வளவுத் தாத்தா உன்னைத் தூக்கிட்டுப் போய் நம்ம ஊரிலே வெள்ளம் காண்பிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கா? - இன்றைக்கு மட்டுமல்ல. தினகரியை இதற்கு முன்பு எத்தனையோ தடவை கேட்டாயிற்று. ஒவ்வொரு தடவையும் சிரிக்க மட்டும் செய்திருக்கிறாள். பார்த்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். பார்க்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சிரிப்பு. அவள் ஒன்றரை வயதுக் கைப்பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது என்ன ஞாபகம் இருக்க முடியும்? ஆனால் அரசரடிப்பாலம் முங்க முங்க, பேட்டை ரோடு வரை தண்ணீர் வந்த அந்த வெள்ளம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தினகரியின் விவரிக்க முடியாத ஞாபகங்களின் மடிப்புகளில் கண்டிப்பாக அந்த வெள்ளம் எங்கேனும் ஈரமாக ஒளிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எப்போதாவது சொல்வாள். சொல்லாவிட்டாலும் ஒரு ஈரம் இன்னொரு ஈரத்தையும், ஒரு தீ இன்னொரு தீயையும் உடனடியாகத் தொட்டுவிடும்படியாக ஏதேனும் சங்கிலிகளை அவளுக்குள் வைத்திருக்கும். ''அம்மாவைக் கூட்டிக் கொண்டாந்து காட்டுங்க ''ப்பா'' என்று சொல்வது கூட அப்படி ஒரு ஈரம் அல்லாமல் வேறு என்ன. காட்டணும் தான். காட்ட வேண்டும் கூட சதா வீட்டுவேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும், பணியிலும், மலையடிவாரத்திலும், அருவிக் கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும் தினகரி அம்மா மட்டுமல்ல. எல்லோருடைய முகமும் அப்படி இருக்கும்போது கொள்கிற தோற்றமும் வேறு. குறுக்குத்துறை முன்னடித்துறையில் பித்தளைக் குடத்துடன் படியேறுகிற முகம், குடையும் வைத்துக்கொண்டு நனைந்தும் வந்துகொண்டிருந்த முகம், கட்டுமானம் ஆகிக்கொண்டிருக்கிற கட்டிடத்துக்குள்ளேயே தலையில் வைத்த துணிச்சுருளையும் பாண்டுச் சட்டியும், சிமெட்டிப் பாலுமாக நிற்கிற முகம், கரியும் கலர் சாக்பீஸ் கட்டியுமாக இரண்டு மணி நேரமாக நடுரோட்டில் வரைந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக மழையில் கரைவதையும், ஈயத்தகடு போல வீசப்பட்டிருந்த நாணயங்களின் மேல் மழைத் தண்ணீர் விழுவதையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிருக்கிற, இடுப்பில் பிள்ளை வைத்திருக்கிற நைந்த முகம், ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டுக்குள் வருவதற்குள் நனைந்துவிட்ட சிரிப்பு முகம், மேலே ஒரு பாறை விளிம்பில் இருந்து, கீழே புரள்கிற கடலையே பார்த்துக் கொண்டிருக்கிற சிவப்புப் புடவை கட்டின கருகமணிப் பாசிமுகம். இப்படியெல்லாம், எல்லோரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். தினகரி அம்மாவும் அப்படித்தான் இருப்பாள். இப்போது மறுபடியும் வீட்டுக்குப்போய், அவளை இவ்வளவு தூரம் கூப்பிட்டுக் கொண்டுவந்து காண்பித்து, மறுபடியும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அலுவலகம் போக முடியாது. நேரமாகிவிடும். ஏற்கனவே இன்று தாமதம். இன்னும் கொஞ்சம் நின்று பார்க்கலாம் என்று தோன்றுகிற நாட்களில் தான் இதைவிடச் சீக்கிரமாய் போகவேண்டும்படி ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது. ஏற்கனவே நிர்ணயித்து வைத்திருந்த வேலைகள் அலுவலகத்தில் இப்போது காத்திருக்கும். சாயந்திரம் கண்டிப்பாகக் கூப்பிட்டுக்கொண்டு வரவேண்டும். மறுபடியும் தினகரி, தினகரி அம்மா என்று இந்த இடத்தில் நிற்க வேண்டும். கங்கையும், யமுனையும் ருத்ரப் பிரயாகையும் திரிவேணி சங்கமும் இதுதான். பெயர் இழந்து, பெயர் அழிந்து, பெயர் புனைந்து ஓடுகிற மகாநதியின் ஏதாவது ஒரு கரையில் நிற்கவேண்டும் இதுதான் அந்த நதி. அந்தக் கரை. யோசித்துக்கொண்டே ஓட்டும்போது, பாலம் பின்னால் போயிற்று. ''ஹோ'' என்கிற காவிச்சுழிப்பு எட்டுத்திசையிலும் கைபரப்பிக் கொண்டிருந்தது. பார்வையில் விழுந்தது ஒரு பகுதியின் ஏதோ ஒரு தெறிப்பு, ஏதோ ஒரு நுரை எனினும் என்கூடவே ஆறு வந்தது. இரண்டு சக்கரங்களுக்கு அடியில் வெள்ளம் கீறிப்பிளந்து வகிடு எடுத்து உறுமுவதுபோல இருந்தது. குனிந்தால் கையில் அள்ளிவிடுகிற அண்மையில் தண்ணீர்த் தகடு அலைந்தது அன்றைக்கு முழுவதும் அலைச்சலாகத்தான் போயிற்று. அலுவலகத்தில் நுழைந்ததுதான் தெரியும். வேலை ஆளை உள்ளே இழுத்தது. அது இன்னொரு மாதிரி வெள்ளம். இன்னொரு மாதிரிக் கசம்.. வெறும் மணல்திட்டு மாதிரிக்கிடக்கிறதே சற்று உட்காரலாம் என்று நினைத்தால் திடீரென்று ஆளை முக்குகிறமாதிரி அடித்துப் புரண்டு கொண்டு வரும், வேலை இருக்கிறது என்று தயாராகி நின்றால், மருத மரத்தையும், பாசஞ்சர் ரயிலையும் பார்த்துக் கொண்டு நிற்கவைத்து, கரண்டையை நனைக்கிற அளவு நகர்ந்துகொண்டுபோகும். ஒன்று மாற்றி ஒரு சிக்கல், ஒரு சிக்கலை எடுப்பதற்குள் இன்னொரு முடிச்சின் இறுகல் என்று தொட்டுக் கொண்டேபோய், பழைய புள்ளி விபரங்கள், கணக்கெடுப்புக்கள், விவாதங்கள், தட்டச்சுக்கள், ஒப்புதல்கள், மீண்டும் விவாதங்கள், தொலைபேச்சுக்கள், மறு ஆலோசனைகள், கையெழுத்துக்கள், இடையில் தேநீர், மறுபடி தேநீர் என்ற இரவு பத்தாகி விட்டது. எப்போது இருட்டு விழுந்தது என்று தெரியவில்லை. இரண்டாவது ''ஷிப்ட்'' காவலர்கள் "பஞ்ச்'' செய்துகொண்டிருந்தார்கள். எல்லா மேஜைகளிலும் ஃபைல்கள், மின்விளக்கு விசிறிக் சுழற்சி. வண்டியை ஷெட்டிலிருந்து எடுக்கும்போது மழைபெய்து கொண்டுதான் இருந்தது. வாட்ச்மேன் குனிந்து பிளாஸ்டிக் குவளையில் பாலூற்றிக் கொண்டிருந்தார். பிறந்து இரண்டு நாள் இருக்குமா தெரியவில்லை. நாய்க்குட்டிகள் ஐந்தாறு முட்டிக் கொண்டு இருந்தன. ஒரு சமயம் எல்லாம் அழகாக இருப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல் இருந்தது. வாட்ச்மேனைத் தொந்தரவு செய்ய மனமில்லை. இறங்கிப் போய் கதவை திறந்து, மறுபடி சாத்தி வெளியேறுகையில் மழை மீண்டும் வலுக்க ஆரம்பித்திருந்தது. நிற்கத் தோன்றவில்லை நனைய நனைய மேலும் விரைவு கொள்கையில் நடமாட்டம் குறைவான பாதையின் சரிவுகளில் தண்ணீர் ஓட ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய்ப் பெய்கிற மழையில் ஒரு குளிரின் கனத்த திரை இறங்கியிருந்தது. வெள்ளம் இன்னும் அதிகரித்துவிட்டிருக்கும் என்று தோன்றியது. இன்றைக்கு முடியவில்லை. நாளைக்குக் காலையாவது தினகரி அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டுப் போய்க்காட்ட வேண்டும். ஒரு வேலை தினகரியே இதற்குள் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போயிருப்பாளோ. தினகரியும் அம்மாவும் குடையில் போவது மாதிரி, ஒரு குடைக்குள் இரண்டு பேரும் ஒடுங்கிக் கொண்டு பாலத்தின் மேல் நிற்கிற மாதிரி, அவர்களைத் தவிர யாருமற்ற பாலத்தில், அடர்ந்து இறங்குகிற மழையில் காணாமல் போன, தென்னை அசைவுகளும், கரையோரத் தோப்புகளுமாக அவர்கள் வந்து கொண்டிருக்கிற மாதிரி.... வீடு அதற்குள் வந்துவிட்டிருந்தது. மின்சாரம் இல்லைபோல. எங்கும் இருட்டாக இருக்கையில், வண்டியின் முன்விளக்கு வெளிச்சம் கற்றையாக அலைந்து எங்கெங்கு எல்லாமோ ஈரத்தில் விழுந்தது. ஹார்ன் அடிக்காமலேயே நான் வந்துகொண்டுவிட்டதைத் தெரிந்து, கதவைத் திறக்கும் போதே.... ''நனைஞ்சுக்கிட்டா வாரீங்க'' - என்று சத்தம் வந்தது. ''துண்டை எடுத்துகிட்டு வாம்மா. அப்பா தலையை துவட்டிகிடட்டும்'' என்று தினகரி பெயரைச் சொல்லி உத்தரவு போட்டது. பார்த்து வாங்க. இருட்டா இருக்கு என்று பத்திரப்படுத்தியது. ''பார்த்து வீட்டுக்குள்ளே வாங்க. ஆட்கள் இருக்கு'' நான் வீட்டுக்குள் நுழையும்போது ஹாலின் மத்தியில் ஒரு அரிக்கேன் லைட் பொருத்திவைக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் யாரோ இரண்டு பேர் எழுந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். சுவரோரமாக ஒரு பெண் குழந்தை சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது என்னைப் பார்த்ததும் எழுந்திருந்து நின்றவர்களின் காலடியில் பதுங்கியிருந்த இருட்டுக்குள் அந்தக் குழந்தை படுத்திருப்பது போல இருந்தது. தலையை துவட்டுவதற்குத் துண்டை என் கையில் கொடுத்தவாறு சொல்ல ஆரம்பித்தாள். ''பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படித்தெரு பூராவும் ஒரே வெள்ளக்காடாம். வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணியாம். தறிக்குழி எல்லாம் தெப்பத்திலே நிற்குதாம். பாவு மட்டத்துக்கு முங்கிப்போச்சாம். நெசவு செஞ்சது பாதி நின்னது பாதியிண்ணு அப்படி அப்படியே விட்டுவிட்டு, எல்லா ஜனமும் தெருவுல நிக்கிதாம். பத்து அறுபது வருஷத்துல இவங்க கண்காண இப்படி ஒரு கஷ்டம் வந்தது இல்லையாம்.'' இதை இவள் சொல்லும்போதே இருட்டுக்குள் நின்றவர்கள் திடீரென்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தார்கள். முக அடையாளமே தெரியாமல் நிற்கிற அவர்களின் குரல் மட்டும் விக்கித்து ஒரு கூரான ஆயுதம்போல நெஞ்சில் செருகியது. ''நாங்க இனிமே என்னம்மா ஐயா எந்திரிக்க போறோம்'' என்று வாய்விட்டு அதே குரலில், நிர்ணயிக்க முடியாத வயது நடுங்கியது. எனக்கு அவர்கள் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ''தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ, நம்மளால் வேறு என்ன பண்ணமுடியப்போகுது. அந்தப் பச்சைப் பிள்ளையாவது படுத்துகிடட்டும்னு நான்தான் இவங்களை கூட்டியாந்தேன். பள்ளிக்கூடம் ரெம்பிக் கிடக்கு. கல்யாண மண்டபம் ரெம்பிக் கிடக்கு. நம்ம வீடும் ரெண்டு நாளைக்கு ரெம்பிக் கிடக்கட்டுமே'' இதை சொல்லும் போது அவள் தினகரியைத் தன்னோடு அனைத்துக் கொண்டு நின்றாள். கை தினகரியின் தலையை வருடிக் கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஹரிக்கேன் லைட் வெளிச்சத்தில் அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. வயிறு இறங்கி ஏறியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்கவேண்டுமா என்ன?..
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். "ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா. "நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். "ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார். "மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். "டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா. "குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. "பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். "தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர். அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். "சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்" என்று வந்தான். "அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன் "கொல்" லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது
ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்த்தில்லை. இது நம்மை பற்றிய நமது கருத்து எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை. இதில் படிப்படியாக நாம் உள்ளே நுழையலாம். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜூஸஸூக்கும் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில் இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால் நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன்………………… நாம் கடலின் அலைகள்தான். நாம் மறந்துவிட்டோம். ஆனால் கடல் நம்மை எப்போதும் மறப்பதில்லை. கடல் என்றால் என்ன என்று கேட்குமளவு நாம் அதை மறந்து விட்டோம். ஆனாலும் நாம் கடலில்தான் இருக்கிறோம். அலை தன்னை மறந்து கடலை மறந்து விடலாம். ஆயினும் அது கடலில்தான் இருக்கிறது. ஏனெனில் கடலில்லாவிட்டால் அலை இல்லை. அலையில்லாவிட்டாலும் கடல் இருக்கும். அலையில்லாமல் கடல் உண்டு. ஆனால் கடலில்லாவிட்டால் அலை கிடையாது. அலை கடலின் அலைதான். அது தனியானதல்ல. கடலின் நிகழ்வுதான். அது கடல் தன் இருப்பைக் கொண்டாருதல்தான். கடவுளின் கொண்டாட்டம் மக்கள். கடவுளின் கொண்டாட்டம் பிரபஞ்சம். இது கடலே கடலைத் தேடும் விளையாட்டுதான். அதற்கு அளவு கடந்த சக்தி இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்னசெய்வது. ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஆனால் ஒரு அலை, தான் ஒரு அளவற்ற கடலின் பாகம் என்று அறிந்துகொள்ளும்போதுதான் இந்த பலம் சாத்தியப்படும். அந்த அலை இதை மறந்துவிட்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கும். நமது மறக்கும் திறன் அளவற்றது. நமது நினைவு கொள்ளும் திறன் சிறியது, மிகச் சிறியது. ஆனால் மறக்கும் திறன் அளவற்றது. நாம் மறந்துகொண்டே போகிறோம். அதுதான் மிகவும் எளிதானதாகத் தோன்றுகிறது. மிகவும் சுலபமாக மறந்துவிடுகிறோம். இது எப்போதும் நிகழ்கிறது, சுலபமாக மறக்கிறோம். நீ உனது சுவாசத்தை நினைவில் வைத்திருக்கிறாயா. அதில் ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் அது உன் நினைவுக்கு வருகிறது. சளி, பின் மூச்சுத்திணறல் என ஏதாவது வந்தால்தான், இல்லாவிடில் யார் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் தங்களுக்கு பிரச்சனை வரும்போதுதான் கடவுளை நினைவு கூறுகிறார்கள். இல்லாவிடில் யார் நினைவு வைத்திருக்கிறார்கள். மேலும் கடவுள் உன்னுடைய மூச்சை விட, உன்னை விட உனக்கு நெருக்கமானவர். அவர் உன்னிடத்தில் உன்னைவிட நெருக்கமாக இருக்கிறார். ஆகவே மறப்பது இயல்பே. நீ அதை கவனித்திருக்கிறாயா. உன்னிடம் எது இல்லையோ அதை நீ நினைவு வைத்திருப்பாய். உன்னிடம் உள்ளதை மறந்து விடுவாய். நீ அதை சாதகமாக எடுத்துக் கொள்வாய். ஏனெனில் கடவுளை இழக்க முடியாது. ஆகவே நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினம். மிக அரிதான மக்கள் மட்டுமே கடவுளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். உன்னை எப்போதுமே விட்டு விலகாத ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமான செயல். கடலில் உள்ள மீன் கடலை மறந்துவிடும். அதைத் தூக்கி கரையில் சுடுமணலில் வீசினால் அப்போது அதற்கு தெரியும். அதன் நினைவுக்கு வரும். ஆனால் உன்னைக் கடவுளிலிருந்து பிரித்து வெளியே வீச வழியே இல்லை. அவருக்கு கரை.யே இல்லை. கடவுள் கரைகளற்ற கடல். நீ ஒரு மீன் போன்றவன் அல்ல. நீ ஒரு அலை போன்றவன். நீ கடவுளைப் போன்றவன். உனது இயல்பும் கடவுளின் இயல்பும் ஒன்றேதான். இந்தக் கதைக்கு இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான். குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். தனிப்பட்ட முறையில்…………ஏனெனில் தனியாய் இருக்கையில் அவன் தன் அகங்காரத்தை மறந்து விடுகிறான். இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்……………….. ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார். இதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு பெயரைக் கொடுத்து அதன் மூலம் உனக்கு ஒரு வழிமுறையை உருவாக்கித் தருகிறேன். நீ உன் பெயர் மூலமாக உனது வழிமுறையை நினைவில் கொள்ளலாம். உனது யுக்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதனால் அது தொடர்ந்து உனக்கு நினைவில் இருக்கும். உனது பாதையை சுட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறி போல அது செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவனது பெயர் ஓ-நமி – மாபெரும் அலைகள் – எனக் கேள்விப்பட்ட குரு கூறினார். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது. கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய். கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக்கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்…….அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மைதன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ – இன் – என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய். பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய். அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய். ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன. அதனால்தான் பல மதஙகளும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… வெறும் காதுகளாக மாறிவிடு – என்ற ஜென் குரு – வெறுமனே கவனி – வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏன் என்றோ என்ன நடக்கிறது என்றோ எந்த கருத்தும் இன்றி கவனித்துக் கொண்டிரு. எந்த இடையூறும் இல்லாமல், உன்னுடைய பங்கிலிருந்து எந்த செயலும் இல்லாமல் கவனித்துக் கொண்டிரு. – என்றார். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். முதலில் கவனி. பின் அந்த அலைகளுடன் இணைந்து விடு. நீ முழுக்க முழுக்க உள் வாங்குபவனாகவும் மௌனமாகவும் இருப்பதை உணரும் நேரத்தில் உன்னை அந்த அலைகளாக கற்பனை செய்து கொள். இது இரணடாவது படி. முதலில் ஆக்ரோஷமானவனாக இருக்காதே. ஏற்றக் கொள்பவனாக இரு. உள் வாங்குபவனாக மாறும் நேரத்தில் அந்த அலைகளுடன் ஒன்றி விடு. நீ தான் அந்த அலை என கற்பனை செய்துகொள். அவன் தன்னை, தன் ஆணவத்தை மறக்கக்கூடிய ஒரு யுக்தியை அவனுக்கு கொடுத்தார். முதல்படி ஏற்றுக்கொள்பவனாக இருத்தல். ஏனெனில் ஏற்றுக்கொள்ளும் போது ஆணவம் அங்கிருக்க முடியாது. பிரிவினை இருக்கும்போதுதான் ஆணவம் அங்கிருக்க முடியும். நீ உள் வாங்குபவனாக இருக்கும்போது உனது கற்பனைத்திறன் பன்மடங்கு அதிகரிக்கும். ஏற்றுக்கொள்ளும் மக்கள், உணர்ச்சிகரமான மக்கள் கற்பனைத்திறன் உடையவர்கள். தஙகளது பாகத்திலிருந்து எந்த வித ஆக்கிரமிப்பும் இல்லாமல், ஒரு சிறிதளவு ஆக்கிரமிப்பு கூட இல்லாமல் மரத்தின் பசுமையை பார்க்கும் மக்கள். மரத்தின் பசுமையை பருகும் மக்கள். அந்த ஒரு நீருறிஞ்சி போல உறிஞ்சும் மக்கள் யாரோ அவர்கள் படைப்பவர்களாகின்றனர். மிகவும் கற்பனை செய்பவர்களாகின்றனர். அவர்கள்தான் கவிஞர்கள், ஓவியர்கள், நடன கலைஞர்கள், இசையை உருவாக்குபவர்கள். அவர்கள் இந்த பிரபஞ்சத்தை உல் வாங்குதலோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் எதை உள் வாங்கினார்களோ அதை அப்படியே தருகின்றனர். நீ கடவுளுக்கு அருகில் வர உதவக்கூடிய ஒரு சாதனம் கற்பனை. கடவுள் ஒரு சிறந்த கற்பனைவாதி – ம்ம் – அவருடைய உலகத்தை பார். சிந்தனை செய்து பார். இத்தனை மலர்களுடனும், இத்தனை பட்டாம்பூச்சிகளுடனும், இத்தனை மரங்களுடனும், இத்தனை நதிகளுடனும், இத்தனைவிதமான மக்களுடனும் உலகத்தை கற்பனை செய்துள்ளார். அவருடைய கற்பனைத்திறனை எண்ணிப்பார். இத்தனை நட்ஷத்திரஙகள், இத்தனை உலகங்கள், உலகத்திற்கப்பால் உலகம், முடிவில்லாதது…. அவர் ஒரு சிறந்த கனவு காண்பவராக இருக்க வேண்டும். கிழக்கில் இந்துக்கள் இந்த உலகம் கடவுளின் கனவு என்று கூறுவர். இந்த உலகம் அவரது கண்கட்டிவித்தை. அவரது கற்பனை. அவர் இப்படி கற்பனை செய்துள்ளார். நாம் அவரது கனவின் பாகம்தான். ஜென் குரு ஓ-நமியிடம் உன்னை அந்த அலைகள் போல கற்பனை செய்து கொள் – என்று கூறினார். மேலும் அவர் நீ உருவாக்க முடியும், முதலில் உள் வாங்குபவனாக இருந்தால் பின் உன்னால் உருவாக்கமுடியும். நீ உனது ஆணவத்தை விட்டு விட்டால் பின் நீ வளைந்துகொடுப்பவனாக மாறி விடுவாய். பின் நீ கற்பனை செய்வது நடக்கும். உனது கற்பனை நிஜமாகிவிடும். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலைகளை நினைக்க முயன்றான். முதலில் அது கடினமாகத்தான் இருக்கும். அவன் பல விஷயங்களை நினைத்தான். அது இயற்கைதான். – ஆனால் அவன் தங்கினான். அவன் மிகவும் பொறுமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பின் மெதுமெதுவாக அவன் அலைகளை மட்டுமே நினைக்க ஆரம்பித்தான். பின் அந்த கணம் வந்த்து………. நீ பொறுமையாக பின் தொடர்ந்தால், பிடிவாதமாக இருநாதால், இந்தக் கணம் வந்தே தீரும். பல பிறவிகளாக நீ ஏங்கிக்கொண்டிருக்கும் அந்த விஷயம் நடக்கும் – ஆனால் பொறுமை தேவை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. இப்போது இவை உண்மையான கடலின் அலைகள் பெரியதாகி வருவதல்ல. இப்போது இவனது கற்பனை அலைகளுக்கும் உண்மையான அலைகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அந்த வேற்றுமை மறைந்துவிட்டது. இப்போது அவனுக்கு எது எதுவென்று தெரியாது. எது உண்மை எது கற்பனை என்று தெரியாது. அவன் ஒரு சிறு குழந்தை போலாகிவிட்டான். குழந்தைகளுக்கு மட்டும்தான் அந்தத்திறன் இருக்கிறது. ஒரு குழந்தை தான் கனவில் கண்ட பொம்மை எங்கே என்று காலையில் எழுந்தவுடன் அழும் காட்சியை பார்க்கலாம். அது அந்த பொம்மை வேண்டுமென்று அழும். அது கண்டது கனவென்று சொன்னால் அதற்கு புரியாது. அது பொம்மை எங்கே என்றே அழும். அவனது கனவிற்கும் விழித்திருத்தலுக்கும் வேறுபாடு இருப்பது அவனுக்கு தெரியாது. அவனுக்கு எல்லாமும் ஒன்றுதான். நீ உள் வாங்குபவனாக மாறும்போது நீ ஒரு குழந்தை போலாகிவிடுகிறாய். இப்போது இந்த அலைகள் முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அது அழகு. ஒரு புத்ததுறவிக்கு புத்தரே அடித்துச்செல்லப்பட்டு விட்டார் என்பது கஷ்டமானதாகத்தான் இருக்கும். அவர் தனது மதத்துடன் மிகவும் ஒன்றிவிட்டிருந்தால் இந்த இடத்தில் அவர் தனது கற்பனையிலிருந்து பிரிந்திருப்பார். அவர் – போதும், போதும். புத்தரின் சிலையே அடித்து செல்லப்பட்டு விட்டதா, நான் என்ன செய்வது, இல்லை, நான் அந்த அலை அல்ல. – என்று கூறியிருப்பார். அவர் புத்தர் சிலையின் காலடியில் நின்றிருப்பார். அவர் காலடியில் விழுந்திருப்பார். ஆனால் அதற்கு மேல் எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனால் நினைவில் கொள். ஒரு நாள் இந்தப் பாதையில் நீ செல்ல உனக்கு உதவிய அந்த பாதங்களையும் விட்டாக வேண்டும். புத்தர்களும் அடித்து செல்லப்பட்டாக வேண்டும். ஏனெனில் நீ பிடித்துகொண்டிருந்தால் நீ செல்வதற்கு கதவுகளே தடையாக இருக்கும். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. அது நிஜமாக நிகழ்ந்தது அல்ல. அது ஓ-நமிக்கு நிகழ்ந்தது. நினைவில் கொள். நீ அந்த சமயத்தில் அந்த கோவிலில் இருந்திருந்தால் அந்த கோவிலை நீர் சூழ்ந்ததை உன்னால் பார்த்திருக்க முடியாது. அது ஓ-நமிக்கு மட்டுமே நிகழ்ந்தது. அது அவனது இருப்பின் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் நிகழ்ந்தது. கவிதை தளத்தில், கனவு தளத்தில், கற்பனை தளத்தில் நிகழ்ந்தது. வெகுளித்தனமான, குழந்தை போன்ற, பெண்மைதனமான, உள்ளுணர்வில்………………………… அவன் தனது கறபனை யுக்தியின் கதவுகளை திறந்து விட்டான். அலையோசையை கேட்டதன் மூலம், உள் வாங்கிகொள்பவனாய் இருத்தல் மூலம், அவன் கற்பனையியல் சேர்ந்தவனாகிவிட்டான். அவனது கற்பனை ஆயிரம் இதழ் தாமரையாய் மலர்ந்தது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அவன் புத்தனாகி விட்டான். புத்தருக்கு ஒருநாள் போதிமரத்தடியில் அமர்ந்திருந்தபோது வந்த அதே புன்னகை ஓ-நமிக்கு வந்திருக்க வேண்டும். திடீரென அவன் அங்கே இல்லை. அந்த புன்னகை, திரும்ப வீடு வந்து சேர்ந்துவிட்ட அந்த புன்னகை, வந்து சேர்ந்துவிட்டவரின் புன்னகை, இனி எங்கும் போக வேண்டியதில்லை என்ற புன்னகை, ஆதார மையத்தை வந்தடைந்த புன்னகை, ஒருவர் இறந்து மறுபடி பிறந்த புன்னகை. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை. ஏனெனில் அப்போது அது அவனது சக்தியல்ல. அவன் வெறும் ஓ-நமி மட்டுமல்ல, அவன் வெறும் அலையல்ல, அவன் இப்போது கடல். உன்னால் எப்படி கடலை தோற்கடிக்க முடியும். உன்னால் அலைகளை வேண்டுமானால் தோற்கடிக்க முடியும். நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய். எல்லா வாழ்வும் முழுமைதான். நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வந்து சேர ஒரே வழி சரணடைதல்தான்.
ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறியது. இல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் துங்குவதற்கு முன்னாலேயே நீ கடித்து விடுவாய். உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்" என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது. "நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்" என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி. "சரி, அப்படியானால் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்" என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன்.இடம் கொடுத்தது. கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது. ஏதோ என்னைக் கடித்து விட்டது" என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள். அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது. உடனே அவர்கள், ! நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?" என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது. ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது.
ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான். பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான். ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார். தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. "அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக. "அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்." தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக. சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான். "அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?" "ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான். "உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன். அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.
ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். Auml;வருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான். இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள். அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய். அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள். இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன். நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள். தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான். நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன. எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள். பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள். சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள். அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின. தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள். எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை. மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான். என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன். நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள். உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள். அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன். துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான். அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான். இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான். துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன். என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய். கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர். வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள். வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது. அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது. தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள். மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள். கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள். இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள். நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன. இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள். நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன். பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள். நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள். பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள். இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன். இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள். சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன். தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான். அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான். ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள். வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள். அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள். துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன். இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள். இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மானிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள். புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள். நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன். உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது. சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான். சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான். உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள். எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள். மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள். அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள். மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான். படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை. மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது. நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.
அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார். ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார். இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார். அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார். அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார். “ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார். அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார். அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார். இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் "தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!" என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார். காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். "என்ன விஷயம் ஐயா?" என்று நடுங்கும் குரலில் கேட்க, "தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!" என்றார் அதிகாரி. இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். "கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?" என்றாள். "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது" என்ற அதிகாரி சற்று யோசித்தபின், "தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்" என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர். உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் "கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்" என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார். சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் "ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே" என்று அலற, "நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது" என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார். மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான். அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், "மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்" என்றான். உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது. "இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?" என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. "பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி" என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது. அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்… பேய்… என்று அலறினான். “”தம்பி பயப்படாதே… நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்.” மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். “”உன் பெயரென்ன தம்பி?” “”மதின்!” “”எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?” “”வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.” “”நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார். “”பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன். “”ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?” என்று கேட்டான். “”சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்…” என்றார். “”பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்” என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை “”எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்,” என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது. மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது. புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான். “”உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்,” என்றான். சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான். அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின். அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது “கிர்ர்…’ என்ற சப்தம் கேட்டது. அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான். கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன. துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்… இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின். அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன். பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான். இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான். இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான். பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர். குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.
ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான். இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள். அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள். இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன். நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள். தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான். நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன. எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள். பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள். சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின. தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள். எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான். என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன். நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள். உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள். அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான். இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான். துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய். கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர். வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள். வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது. அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது. தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள். மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள்.கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள். இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன. இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள். நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன். பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள். நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள். பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள். இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன். இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள். சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன். தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான். அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான். ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள். வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன். இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மாளிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள். நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது. சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான். சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான். உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள். மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள். அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான். படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை. மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.
இது ஒரு மிகவும் அழகான கதையாகும். ஆன்மீகத்தின் முழு வரலாற்றிலும் இதற்கு இணையான கதையே கிடையாது. ஆகவே இதை புரிந்து கொள்ள வேண்டும். நீ இதை தவறாக புரிந்து கொள்வாய். இதை தவறாக புரிந்து கொள்வது மிகவும் எளிது. இதை படிக்கும் யாரும் எப்படி புரிந்து கொள்வார்களோ அப்படித்தான் நீயும் புரிந்து கொள்வாய். கேள்வி எழும் : இரண்டு ஞானமடைந்த மனிதர்கள் ஏன் தங்களது குரு இறந்ததால் பாதிக்கப்பட்டனர் ? அவர்கள் பாதிக்கப்படவேயில்லை. அது துயரத்தினால் நிகழ்ந்ததல்ல. அது முற்றிலும் வேறுபட்ட பரிமாணம். ரஜப் திரும்பவும் தனது கண்களை திறக்கவேயில்லை. அவரிடம் ஒருமுறை ஏன் அவர் தனது கண்களை திறப்பதேயில்லை என்று கேட்கப்பட்டது. அவர், "நான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயத்தை பார்த்து விட்டேன். இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை" என்று கூறினார். டாடூ ஒரு மிக அழகான மலர். இப்போது உனது கண்களை திறந்து வைப்பதால் என்ன பயன் ? உன்னிடம் கோஹினூர் வைரம் இருக்கும்போது நீ எதற்காக கடற்கரை கூழாங்கற்களை சேகரிக்கிறாய் ? – சேகரிப்பாயா ? ரஜப் பாதிக்கப்படவில்லை. சோகத்தினால் அவர் தனது கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. அவர் அழவில்லை, அவர் தேம்பவில்லை. மூடிய கண்களுடன் அவர் டாடூவின் பாடல்களை பாடி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர், "ஒருமுறை கடவுளை மனித உருவில் பார்த்துவிட்டால் பின் வேறு என்ன இருக்கிறது பார்ப்பதற்கு ? வேறு எதுவும் பார்ப்பதற்கு இல்லை ! நான் எனது கண்களில் பதிந்துள்ள எனது குருவின் உருவத்தை எனது இறுதி பதிவாக வைத்திருக்க விரும்புகிறேன். அதைத் தவிர வேறு எதையும் அதில் படியவைக்க விரும்பவில்லை. அது தூசியால் மூடப்படவும் விரும்பவில்லை. "என்றார். அம்புபாய், இப்போது இந்த முழு கதையும் வேறுவிதமாக தோன்றுகிறது. இது மிக அபிரிதமான அன்பு. இது குருவின் உடலோடு கொண்டுள்ள ஈடுபாடு அல்ல. இது மிகப் பெரிய புரிதலாகும். நீ ஒரு முறை குருவை பார்த்துவிட்டால் !! ரஜப் தனது குருவோடு நெருக்கமாக வாழ்ந்துவந்தார். அவர் தீட்சை பெற்றபோது அவருக்கு வயது ஏழு. மிகச்சிறிய பையன். ஒரு திருவிழாவில் கலந்துகொள்ள தனது பெற்றோர்களுடன் அவர் வந்திருந்தார். அவருக்கு டாடூவைப் பற்றி எதுவுமே தெரியாது. டாடூவும் அப்போது அங்கிருந்தார். டாடூ ஞானமடைந்தவர் என்பது நாடெங்கும் அறிந்த செய்தியாதலால் ரஜப்பின் பெற்றோர் அவரை வணங்கி செல்ல போனார்கள். அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, எனினும் அந்த நாடு பாரம்பரியமும் பழமையும் வாய்ந்தது. யாராவது ஞானமடைந்தவர்கள் என்று கேள்விப்பட்டால் அது உண்மையோ, பொய்யோ, போய் அவர்கள் காலை தொட்டு வணங்கி விட்டு வருவார்கள். உண்மையிலேயே அவர் அடைந்திருந்தால் ஏன் வாய்ப்பை தவற விட வேண்டும் ? அவர் உண்மையிலேயே அடையவில்லை யென்றாலும் உனக்கு ஒன்றும் இழப்பில்லையே.! இது தந்திரமானது, வியாபாரத்தனமானது. பெற்றோர் சென்றனர். ரஜப் தொடர்ந்தார். பெற்றோர் அவரது காலை தொட்டு வணங்கினர், ஆனால் ரஜப் நிலைமாற்றமடைந்துவிட்டார். அவர் டாடூவை பார்த்த கணமே தனது சென்ற பிறவிகளிலிருந்து ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுவிட்டார். இந்த மனிதன் புதிதல்ல. இந்த குணங்களும் புதிதல்ல. அவரை முன்பே தனக்குத் தெரியும் என்பதை உணர்ந்து கொண்டார். நீ ஒரு குருவுடன் வாழ்ந்திருந்தால் உடனடியாக அவரை அடையாளம் கண்டு கொள்வது எப்போதும் நிகழ்வதுதான். அவர் அவரது காலடியில் விழுந்துவிட்டார். பெற்றோர் ரஜப்பை தங்களோடு அழைத்து செல்ல மிகவும் முயற்சித்தனர். ஆனால் ரஜப், "நான் எனது உண்மையான பெற்றோரை கண்டுவிட்டேன். நீங்கள் போகலாம் "என்றார். "நீங்கள் டாடூவின் காலை தொட்டு வணங்கியது போல நானும் உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன், சென்று வாருங்கள் "என்று கூறி விட்டார், ஏழு வயது பையன். பல முற் பிறவிகளில் இந்த பக்குவம் வந்திருக்க வேண்டும். பெற்றோர் கதறி அழுதனர், ஆனால் ரஜப், "சாத்தியமேயில்லை, நான் அவரை கண்டுவிட்டேன், இனி ஒரு கணம் கூட அவரை விட்டு விலக என்னால் முடியாது." என்று கூறி விட்டார். அப்போதிலிருந்து இருபது வருடங்கள் அவர் தனது குருவின் அருகிலேயேதான் இருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டு, அதே அறையில் தூங்கிக் கொண்டு, அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். டாடூ இறந்த அன்று ரஜப் வெறுமனே தனது கண்களை மூடிக் கொண்டுவிட்டார். அது இந்த உலகுக்கு தனது கண்களை மூடிக் கொண்டுவிடுவது. அவர், "இப்போது பார்ப்பதற்கு எதுவும் இல்லை, எதை பார்க்கவேண்டுமோ அதை நான் பார்த்துவிட்டேன். இப்போது ஏன் அனாவசியமாக கண்களை வீணடித்து குப்பையை சேகரித்துக் கொள்ள வேண்டும் ? நீ ஒரு முறை கடவுளை பார்த்து விட்டாலே போதும் ! அங்கு வேறு எதையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை. நீ இறுதியானதை பார்த்துவிட்டாய் "என்று கூறியிருக்கிறார். அம்புபாய், ரஜப் தனது கண்களை மூடிக் கொண்டது பந்தத்தினால் அல்ல. அது மிகப் பெரிய புரிதலில் இருந்து வந்தது. அவர் துக்கப்படவில்லை. அவர் நடனமாடிக் கொண்டிருந்தார், அவர் வாழும்வரை மூடியகண்களுடன் பாடியபடி ஆடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் தனது குருவை உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தார். இருபது வருடங்கள் தொடர்ந்து தனது குருவுடன் தொடர்பு கொண்டிருந்தார் அவரது குரு கிட்டத்தட்ட அவரது உயிர் போலாகி விட்டார். கண்களை மூடியதன் மூலம் அவர் தனது குருவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அவரை தவறாக புரிந்து கொள்ளாதே. ரஜப் இது வரை இருந்த மிக அழகான சீடர்களில் ஒருவர். மற்றொரு சீடரான சுந்தரோ-வுக்கு நடந்தது என்ன? டாடூ இறந்தவுடன் அவர் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் அந்த படுக்கையிலேயே சாகும்வரை இருந்தார். அந்த படுக்கையை விட்டு அவர் நகரவே இல்லை. குரு அவரது வாழ்நாள் முழுவதும் அந்த படுக்கையில தான் படுத்திருந்தார், அதில் அவரது அதிர்வு இருந்தது, அவரது இருப்பு இருந்தது, அது அதில் முழுமையாக நனைந்திருந்தது. அவர் படுக்கையை விட்டு நகரவேயில்லை. ஏன் என்று மக்கள் கேட்டனர். அதற்கு சுந்தரோ "போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. நான் வந்தடைந்துவிட்டேன். இதுதான் என் வீடு. இதுதான் என் சொர்க்கம், இதுதான் என் மோட்சம். இந்த படுக்கையில் என் குரு உருவாக்கியுள்ள இந்த அற்புதமான இடத்தில்தான் நான் இருக்க விரும்புகிறேன், இறக்க விரும்புகிறேன். "என்றார். நீ உனது வாழ்வையும் சாவையும் தனியாக பார்க்காமல் உன்னுடைய குருவுடன் ஒன்றிப் போய் விடுகிறாய். இதுதான் அதன் பொருள். சுந்தரோ சில சமயங்களில் டாடூவைப் போல பேசும் அளவு தன் குருவுடன் ஒன்றி போய் விட்டார். மக்கள் அவரிடம், "நீங்கள் டாடூ அல்ல! "என்று கூறுவர். பின் அவர், "ஆம், என்னை மன்னித்து விடுங்கள். நான் மறந்து விட்டேன். ஆனால் உண்மையில் என்னை கேட்டால் நான் டாடூதான். நான் என் குருவுடன் ஒன்றி விட்டேன் "என்று கூறுவார். இதுதான் சீடனாக இருப்பதன் இறுதி நிலை. சீடன் குருவுடன் ஒன்றி போய் விடுதல். அவர், தான் டாடூ என்று கூறுவார். அவர் பாடல்கள் எழுதுவார், ஆனால் அதில் அவரது பெயர் இருக்காது, டாடூவின் பெயர்தான் இருக்கும். மக்கள் இது தவறு என்று நினைப்பர். பண்டிதர்கள் சுந்தரோ எழுதிய பாடல்களை இடம் மாற்றியமைத்து விட்டனர். அவர்கள் அது டாடூவின் பாடல் அல்ல என்று நினைத்தனர். ஆனால் நான் சொல்கிறேன் அது டாடூவிடமிருந்துதான் வந்தது. சுந்தரோ டாடூவின் வாயில் இருக்கும் ஒரு புல்லாங்குழல் தான். சுந்தரோ ஒரு தனிபட்ட நபராக அங்கு இருக்கவில்லை. இதுதான் ஒரு சீடனின் மிக அதிகபட்ச உயர்நிலை. சீடனும் குருவும் சந்தித்து, இணைந்து ஒன்றாகி விட்டனர். சுந்தரோ தனது குருவுடன் ஒன்றாகி விட்டதால் அவருக்கு டாடூ என்று கையெழுத்திட எல்லா உரிமையும் உண்டு. அவர் தனது கவிதைகளில் டாடூ என்றுதான் கையெழுத்திடுவார். சுந்தரோ என்று கையெழுத்திட மாட்டார். மேலும் நான் முழுமையாக அவருடன் ஒத்துப் போகிறேன். மேலும் இந்த பண்டிதர்கள் இன்னும் சிறிதளவு உணர்வோடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இவை கல்வியறிவுக்கானவை இல்ல. இவை கற்கும் மனிதர்களுக்கானவை அல்ல. இவை நேசிப்பவர்களுக்கானவை. நேசிப்பவர்களால் மட்டும்தான் இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். என்ன ஒரு அழகான விஷயம்.! ஒரு சீடன் தனது பெயரை கையெழுத்திட மறந்து குருவின் பெயரை எழுதுவது என்பது என்ன ஒரு அற்புதமான விஷயம். சில சமயங்களில் மக்கள் டாடூவை அழைக்க வருவார்கள், அப்போது சுந்தரோ, "சரி, நான் வருகிறேன்." என்பார். அப்போது அவர்கள், "நாங்கள் உங்களை அழைத்துப் போக வரவில்லை, நாங்கள் டாடூவை அழைத்துப் போக வந்தோம்" என்பர். சுந்தரோ, "நான் யார் ? ஏன் அனாவசியமாக அந்த வயதான மனிதனை தொந்தரவு படுத்துகிறீர்கள் ? நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். என்னால் வெகுதூரம் பயணம் செய்ய முடியும். என்னால் வர முடியும். ஏன் அவரை தொல்லை செய்ய வேண்டும் ? என்று சொல்வார். மேலும் டாடூ சில சமயங்களில் சுந்தரோவை அனுப்புவார். மக்கள் டாடூவை அழைப்பார்கள், அவர் சுந்தரோவை அனுப்புவார். நாம் குருவை தானே அழைத்தோம், சீடரை அழைக்க வில்லையே என்று மக்கள் குழம்பி போய் விடுவார்கள். ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. குருவும் சீடனும் நேசிப்பின் உச்சத்தில் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போய் விட்டனர். ஆகவே டாடூ இறந்த அன்று சுந்தரோ அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தகனத்திற்கு கூட செல்ல வில்லை. எல்லோரும் தகனத்திற்கு சென்று விட்டனர். ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடி விட்டனர், எல்லோரும் அழுது கொண்டும் கதறிக் கொண்டும் இருக்கின்றனர். எல்லோரும் துயரத்தில் இருந்தனர். ஆனால் சுந்தரோ என்ன செய்தார். அவர் தனது குருவின் படுக்கையறைக்குள் நுழைந்து அவரது படுக்கையில் படுத்துக் கொண்டு, அவரது போர்வையை போர்த்திக் கொண்டு தானே டாடூவாகி விட்டார். போன மக்கள் திரும்பி வந்து பார்த்தவுடன், இது கிறுக்குத்தனம் என்று நினைத்தனர். அவர்கள் சுந்தரோவிடம், இது சரியல்ல, நீ பைத்தியமாகி விட்டாய் உனக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா என்ன ? இது குருவின் படுக்கை ! எழுந்திரு! என்றனர். ஆனால் சுந்தரோ, "நான் இனிமேல் இல்லை. சுந்தரோ இறந்து விட்டான். நீங்கள் அவனது தகனத்திற்கா சென்றிருந்தீர்கள்? நீங்கள் சென்று அவனை எரித்து விட்டு வந்திருக்கிறீர்கள். நான் டாடூ. இனி என்னில் டாடூதான் செயல்படுவார் என்றார். அதனால்தான் அம்புபாய், அவர் படுக்கையை விட்டு எழவேயில்லை. ஒரு கணம் கூட எழவில்லை. அவர் அந்த படுக்கையிலேயே வாழ்ந்து அந்த படுக்கையிலேயே இறந்துபோனார். ஏனெனில் இவர் தனது குருவுடன் ஒன்றி குருவாகவே மாறிவிட்டார். நான் இந்த விளையாட்டை MAD விளையாட்டு எனறழைக்கிறேன். MAD என்றால் M என்பது MASTER என்ற குருவையும் D என்பது DISCIPLE என்ற சீடனையும் குறிக்கும். குரு – சீடன் விளையாட்டு அதுதான் கிறுக்கு – MAD – விளையாட்டு. நீ கிறுக்கனானால் ஒழிய உன்னால் இதை புரிந்து கொள்ள முடியாது. மேலும் அம்புபாய், சிறிது கிறுக்குத்தனம் உன்னுள் நுழைந்திருப்பதை பார்க்கிறேன், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீ வந்துகொண்டேயிருக்கிறாய். நீ புத்ததளத்திலிருந்து வெகுநாள் தள்ளி இருக்க முடியாது. நீ நெருங்கி வருவதை நான் பார்க்கிறேன். கூடிய விரைவில் ஆரஞ்சு வண்ணம் உன் வண்ணமாகப் போகிறது. நீ உனது உடலை விட்டு நீங்கும் முன் இது நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நானிருக்கிறேன். ரஜப் போல மாறு, சுந்தரோ போல மாறு அவர்களை பற்றி நினைத்துப் பார்க்காதே. அவர்கள் கண்டனம் செய்வதற்கானவர்கள் அல்ல. அவர்கள் வாழ்ந்து பார்ப்பதற்கானவர்கள். வாழ்வதன் மூலம் மட்டுமே அது போன்ற அற்புதமான ஒரு விஷயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
் அந்த ஒற்றை மாட்டு வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாக சில மனிதர்களையும், கட்டடங்களையும் கடந்து போனது. கவலையுடன் அமர்ந்திருக்கும் தன் கணவன் லட்சுமணராவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரத்னாபாய். வினாடிக்கு வினாடி பல அவதாரமெடுத்து ஜொலிக்கும், அழும், கர்ஜிக்கும், ஆனந்திக்கும், சவால்விடும், ஏமாற்றம் அந்த முகம் குராவிப்போய் வண்டியின் அசைவிற்கு தக்கபடி ஆடிக் கொண்டிருந்தது. பத்து இருபது வருடங்களுக்கு முன்னர் ரத்னாபாய் பல தடவை இதே ஊருக்கு தன் கணவருடன் வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் வண்டி ஊருக்குள் நுழைந்த உடனேயே ஊரே திரண்டு நின்று வரவேற்கும். ஊர் நாட்டாண்மையும், முக்கியஸ்தர்களும், வண்டியைச் சுற்றி நிற்க இளவட்டங்கள் ஒவ்வொரு பெட்டியாக போட்டி போட்டுக் கொண்டு இறக்கி வைப்பார்கள். அந்த பெட்டிகளுக்குள் லட்சுமணராவ் இந்த உலகத்தை அடக்கி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், ராவணன், மாரீசன், ஜடாயு, வாலி அப்புறம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், குந்தி, பாஞ்சாலி, துரியோதனன், கர்ணன், ஏகலைவன், கிருஷ்ணர், பீஷ்மர், துரோணாச் சாரியார், அரவான், அரக்கன், கீசகன், தாடகை, சூர்ப்பனகை அனைவரும் பெட்டிக்குள்தான் உறங்குகிறார்கள், நல்லதங்காளும், அவளுடைய பிள்ளைகளின் உயிர்குடித்த அந்தக் கிணறும் கூட பெட்டிக்குள் தான். வண்டி மேலக்களத்தில் வந்து நின்றது. சோகத்துடன் மெதுவாக இறங்கும் தன் கணவன் லட்சுமணராவை உற்றுப்பார்த்துக் கொண்டே வண்டிக்குள் தூங்கும் தன் மகன்களையும், மருமகளையும் தட்டி எழுப்பினாள் ரத்னாபாய். மாட்டைக் கொண்டுபோய் கட்டுவதற்காக இடம் தேடியலைந்த தன் மகன் கோபால்ராவை பார்த்துக் கொண்டே நின்றார் லட்சுமணராவ், வண்டியின் பக்கத்திற்கு யாருமே வராதது ரத்ணாபாய்க்கும் லட்சுமணராவுக்கும் வருத்தமளித்திருக்க வேண்டும், வண்டிக்குள்ளிருந்து இறங்கிய தன் மருமகளையும் மகள்களையும் கண்டவுடன் சில இளவட்டங்கள் நெருங்கி வந்து வேடிக்கை பார்த்தனர். கூடார வண்டியின் முதுகில் காளான்களைப் போல் தொங்கிக் கொண்டிருந்த நாலைந்து ஸ்பீக்கர் குழாய்களையும், இளம் பெண்களையும் மட்டுமே இளவட்டங்கள் உற்றப்பார்த்துக் கொண்டு நின்றனர். கூட்டத்தில் மெதுவாய் தலைகாட்டிய முத்துவீரன் தாத்தாவை அடையாளங்கண்டு கொண்டதில் லட்சுமணராவுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை. நடமாடும், பறக்கும், நீந்தும் அத்தனை ஜீவராசிகளையும் தன் கண்கள் வழியே கிரகித்து விரல் வழியே மலரச் செய்யும் சூட்சும கலை கற்ற கலைஞனல்லவா லட்சுமணராவ், அன்றாடம் தான் பார்க்கும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கவனித்து, சூர்ப்பனகைக்கு ஏற்ற நடையை உள் வாங்கிக் கொண்டு தன் விரலசைவில் சுழலும் நிழலுருவப் பாவைக்கு ஏற்றி திரையில் பரவசப்படுத்தும் நவீன கம்பன் லட்சுமணராவ், பீமன் நடையும், அர்ச்சுனனின் ஆர்ப்பரிப்பும், கிருஷ்ணனின் சாந்தமும், பாஞ்சாலியின் ஆவேசமும், கர்ணனின் கர்ஜனையும், குந்தியின் வருத்தம் கலந்த பதட்டமும் லட்சுமணராவின் விரல் வழியே திரையில் அசையும் ரசனை அற்புதத்திலும் அற்புதம். ஊரைச் சுற்றிலும் மலைமலையாய் நிற்கும் படப்புகளையும், மரத்தடியில் கழுத்து மணியோசை எழும்ப அசைபோட்டுக் கொண்டு நிற்கும் மாடுகளையும் காணவில்லை. முத்துவீரன் தாத்தா தொழுவத்தில் எருமைகளுக்காக வைத்திருந்த இரண்டு கட்டு நாற்றுக்கூளத்தை கொண்டு வந்து கொடுத்தார். கூடார வண்டிக்கு அடியிலேயும், மரநிழல்களிலும் ஜாமன்களை இறக்கி வைத்துவிட்டு, தன்னுடைய பேத்திற்காக தொட்டில் கட்டிக் கொண்டிருந்தாள் ரத்னாபாய். இன்னும் இரண்டு மூன்று சிறுசுகள் வண்டிப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. கால மாற்றங்கள் பற்றியும், ஊர்களின் இன்றைய நிலவரம் பற்றியும், தங்களுடைய நிராதரவான நிலை பற்றியும் பேசிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தனர். முத்துவீரன் தாத்தாவும் லட்சுமணராவும், தன் மனசை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை சமயம் பார்த்து கேட்டார் தாத்தா. ''ராவ், இன்னிக்கி என்ன கத நடத்தப் போறீரு'' ''கதையா? கதையெல்லாம் மலையேறி எத்தனையே வருஷமாச்சு'' ''அப்புறம்...'' ஆச்சரியமாய் கேட்டார் வருஷமாச்சு'' ''ஆடலும், பாடலும்.'' சிரித்துக் கொண்டே சொன்னார் ராவ். ''அப்படின்னா'' ''சினிமாப்பாட்ட பாடவிட்டு, அதுக்கேத்தமாதிரி ஆம்பளையும், பொம்பளையும் சேர்ந்து ஆடுறது.'' துண்டால் தன் முதுகில் அழுக்கு உருட்டிக் கொண்டிருந்த முத்துவீரன் தாத்தாவின் மேலெல்லாம் ஒரே நேரத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டியதைப்போல் சுரீரென்று தைத்தது ராவ் சொன்ன வார்த்தைகள். தாத்தா ராவ் முகத்தையே உற்றப் பார்த்தார். ஒரே நேரத்தில் போர் வீரனாக, மானம் காக்கப் போராடும் பெண்ணாக, வஞ்சிக்கப்பட்ட ஏகலைவனாக, தன் குருதி வடிய கவசக் குண்டலம் அறுக்கும் கர்ணனாக, போர் செய்ய உபதேசிக்கும் கிருஷ்ணராக, பறவையாக, குரங்காக, யானையாக, குதிரையாக, அரக்கனாக, ரதமாக, நளின நடைப்பெண்ணாக பல்லுருக் கொள்ளும் லட்சுமணராவின் வார்த்தைகளா இது? முத்துவீரன் தாத்தா ஆச்சரியமாய் பார்த்தபடி பெருமூச்சுவிட்டார். சில வருஷங்களுக்கு முன்னால் ரத்னாபாயும், லட்சுமணராவும் தெய்வங்களைப் போல் வலம்வந்த ஊர்களில் இன்று ஏறிட்டுக் கூட பார்க்காமல் எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். இதே பாவைக்கூத்து வண்டி ஊருக்குள் நுழைகிறது. வண்டியைச் சுற்றிலும் ஊரே கூடி நிற்கிறது. முக்கியஸ்தர்களின் அறிமுகம். இரவு ஊர்க்கூட்டம் என்ன கதை படிக்க வைக்கலாம் என்ற விவாதம். வீட்டுக்கு இவ்வளவு வரிப்பணம் நிர்ணயம். கேலியோ கிண்டலோ செய்தால் தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம், எட்டு நாளோ பத்து நாளோ ராமாயணம் என்றால் ராமர் பட்டாபிஷேகம், மகாபாரதம் என்றால் வனவாசம் முடிய அன்று ஊரே திருவிழாக்கோலம். பக்கத்து ஊர்களிலிருந்து வந்து நிறைந்துகிடக்கும் வண்டிகள். ஊர்ப்பொதுவில் கொடுக்கும் வரிப்பணம் போக கோடி வேஷ்டி, சேலைகள், தானியங்கள், பயறுவகைகள், வத்தல், மல்லி என்று வண்டி நிறைந்துவிடும். பட்டாபிஷேகம் முடித்த மறுநாளே தன் விரலுக்குள் ஒளித்து கொண்டு வந்திருக்கும் மழையை பெய்ய வைப்பார் லட்சுமணராவ். பதினெட்டு நாள் குருசேக்ஷத்திரப் போரையே தன் விரலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் ராவால் காற்றையும், மேகத்தையும் ஒளித்து வைத்திருக்க முடியாதா? மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, சம்சாரிகள் சந்தோஷத்துடன் கும்பிட்டு வழியனுப்பி வைப்பார்கள். கடந்த காலத்தையெல்லாம் ஒன்று கூட்டி தன் நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு தொழுவத்தின் மூலையில் உட்கார்ந்து முகட்டு வளையையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் முத்துவீரன் தாத்தா. இந்த பாவைக் கூத்தைப் போல் எத்தனை கூத்துக்கள் வந்தன ஊர்தேடி. அவர்களெல்லாம் எங்கே எப்படி ஏன் தொலைந்து போனார்கள். சாமக்கோடாங்கி ராப்பிச்சை, பச்சை குத்துபவர்கள், காவடிப் பாட்டுக்காரர்கள், கிண்ணட்டிக்காரன், மரக்கால் ஆட்டம் மணியாட்டிக்காரன், பொழிப்பாட்டுக்காரன், அடக் கடவுளே இவர்களையெல்லாம் கால வெள்ளம் எங்கே கொண்டுபோய், எந்தக் கரையில் ஒதுக்கியது. எந்த நாகரீக சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டார்கள், கால இழுவைக்குள் மறைந்து தன் சுயமுகம் இழந்து உருத்தெரியாமல் மாறிப் போனார்களா என்ன? முத்துவீரன் தாத்தா துள்ளும் இளவட்டமாய், பொழிகளம் சுற்றி வரும் இருபது மாடுகள். பொழிப்பாட்டுக்காரன் வந்து களத்தில் நிற்கிறான். முத்துவீரன் தாத்தாவின் அப்பா கும்பிட்டு வரவேற்கிறார். தன் இஷ்ட தெய்வங்களை வணங்கிப் பாடிவிட்டு மாடுகளைப் பற்றி பாடுகிறான் பொழிப்பாட்டுக்காரன். கூட்டம் திரண்டு கூடி நிற்கிறது. பிணையலடிக்கும் ஒவ்வொரு மாட்டையும் பற்றி அதன் நிறம் சுழி, கள்ளப்பாய்ச்சல், சண்டி, ரத்தக்கண், சுண்டுவாதம், மொட்டைவால், ஒட்டுவால், மூழி, போர், மயிலை, செவலை, கழிச்சான், கடகாபல் ஓட்டை, குறுங்கால், என்று பலவித மாடுகள் - அதன் குணங்கள் சரம்சரமாக ராகம் தாளம் தவறாமல் வந்து கொண்டேயிருக்கிறது. கடேசியில் பாட்டை நிறுத்தியவன் இருபது மாடுகளில் முதன் முதலில் பிணையல் கண்ணியில் பூட்டியமாடு இந்த மாடுதான் என்று அடையாளம் காட்ட கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தப்பாத குறி. மாடுகளின் கால்களுக்குள் என்ன மகசூல் பிணையாக மிதிபடுகிறதோ அதில் மூன்று தரம் தன் இருகைகளாலும் அள்ளிக் கொள்ளலாம் இதுதான் பாட்டுக்கான கூலி. இதற்காகவே தைத்துக் கொண்டு வந்திருக்கும் அகன்ற நீண்ட சாக்குப்படுதாவை களத்தை ஒட்டி விரிக்கிறான். நீச்சலடிப்பவனைப் போல் பொழியின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு தன் நெஞ்சுக்கு முன்னால் தவசங்களை கூட்டி வைத்துக் கொண்டு மலையைத் தூக்கிக் கொண்டு பறந்து செல்லும் அனுமனைப் போல் பாடிக் கொண்டே, ஆயிரம் கண்கள் பார்த்திருக்க அப்படியே துள்ளிப் போய் அவன் விரித்த சாக்கில் உட்கார்கிறது தானியம். மூன்று தரம் அள்ளி அம்பாரமாய் மூட்டை கட்டியவுடன் அடுத்த களம் போகிறான். மேளக் களத்திலிருந்து மிதந்து வந்த சினிமா பாட்டின் ஒலி முத்துவீரன் தாத்தாவை இந்த உலகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. மெதுவாக நடந்த தெருவில் நின்று மேற்காமல் எட்டிப்பார்த்தார். நிறைய டியூப் லைட்டுகள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தன. மேடையைச் சுற்றிலும் ரொம்ப தூரத்திற்கு துணியால் கோட்டைச் சுவர் மாதிரி தடுப்பு எழுப்பியிருந்தார்கள். எட்டி நின்று பார்த்தாலும் உள்ளே பார்க்க முடியாதபடி உயரமாய் இருந்து தடுப்பு சினிமாப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இடையிடையே அறிவிப்பு செய்தான் கோபால்ராவ். ''அன்பார்ந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், தனுஷ் ரசிகர்களே... உங்களின் ரசனைக்கேற்ற பழைய புதிய பாடல்களைக் கொண்டு உங்களை கிறங்க வைக்கும், அழகிகளின் ஆட்டம் காணத் தவறாதீர்கள். சரியாக எட்டு மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். முதல் வகுப்பு இருபது ரூபா, இரண்டாம் வகுப்பு 10 ரூபா, மூன்றாம் வகுப்பு ஐந்தே ரூபாதான். இடையழகி, தொடையழகி, இடுப்பழகி, சிரிப்பழகி, என்று அத்தனை அழகிகளும் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறார்கள், இளஞ்சிட்டுக்கள் இன்பமொட்டுக்கள், உங்களை மகிழ்விக்க இன்னும் சற்று நேரத்தில்...'' முத்துவீரன் தாத்தாவும் முண்டியடித்துக் கொண்டு செல்லும் கூட்டத்துடன் நின்றார். லட்சுமணராவும், ரத்னாபாயும் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து பெருமூச்சு விட்டார். திரைக்குப்பின்னால் லட்சுமணராவ் பக்கத்தில் ரத்னாபாய். மலை போல் குவிந்து கிடக்கும் தோல் பாவைகள், கால்விரல்களிலும், கை விரல்களிலும் பல முனைகளிலிருந்தும் கயிறுகளால் இணைக்கப்பட்டிருக்கும் பாவைகள். கைகளைச் சுண்டி பாவைப் பொம்மைகளை திரையில் காட்டிக் கொண்டிருக்கும் போதே வசனம் பேசும் வாய். வாயசைவில் உதிர்த்து வரும் வசனத்திற்கேற்ப பாவைகளின் உறுப்புகளை சுண்டியிழுத்து அசையச் செய்யும் ஆடச் செய்யும் கால் விரல்களின் லாவகம், ஒரே நேரத்தல் உடலின் அனைத்து உறுப்புகளும் லயத் தவறாமல் இயங்கி கத்தி, கதறி, ஆடி, பாடி, பறந்து, மறைந்து, அந்த மாயஜால நிழலுருவப் பாவைகளின் குவியல்களின் தங்களை மறந்து ரசித்து கைதட்டி, ஆரவாரித்து, ஆர்ப்பரித்து. குறிப்பிட்ட மணித்துளிக்குள் முடிக்க வேண்டிய இதய அறுவைசிகிச்கையில் அடுத்ததாக மருத்துவரின் கையில் என்ன ஆயுதம் இருக்க வேண்டுமா அதை யூகித்துணர்ந்து எடுத்துக் கொடுக்கும் நிபுணனைப் போல் ரத்னாபாய், கதையோட்டத்தின் அடுத்தவரிக்கு என்ன பாவை வேண்டுமோ தயாராக ராவின் கைகளில் திணிக்க வேண்டும். வினாடி பிசகினாலும் கதையோட்டம் மாறி, உருவங்கள் பொருந்தாது. கர்ணனுடன் போர் செய்ய அர்ச்சுனன் ஆய்த்தமானான் என்றவுடன், அர்ச்சுனனுக்குப் பதில் கிருஷ்னன் போய்விட்டால், யுத்தம் கிருஷ்ணனுக்கும் கர்ணனுக்கும் நடந்தேறி விடுகிற அபாயமுண்டு. லட்சுமணராவின் கண்கள் வழியே செல்லும் தேவலோக பாஷைகள்தான். ரத்னாபாயை கச்சிதமாக பாவைகளை எடுத்துக் கொடுக்க உதவுகின்றன போலும். கொச்சைத்தனமான இரட்டை அர்த்த காம ரசப் பாடல்களுக்கு கோபால்ராவும், அவனுடன் பிறந்த சகோதரிகளும் அரைகுறை ஆடைகளுடன் சேர்ந்து ஆடியதைப் பார்க்க சகிக்காதவராய் முத்துவீரன் தாத்தா வெளியே வந்தார். திரையுலக நிழலுருவப் பதுமைகளை தன் அந்தரங்க நாயகிகளாக வரித்துக் கொண்டு அமர்ந்திருக்க இளவட்டங்கள் உற்சாக மிகுதியால், ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் கைதட்டி, விசிலடித்து, ஆர்ப்பரித்ததோடு மேடையேறி அன்பளிப்பாக ரூபாய் நோட்டுக்களை பெண்களின் மேலெல்லாம் குத்தி நிரப்பினர். அன்னிய ஆடவரின் கை ஸ்பரிசம் பழகிப் போய்விட்டதோ என்னவோ, எந்த இடத்தில் தொட்டாலும் முகம் சுளிக்காமல் ரூபாய் நோட்டுக்கள் குத்துவதற்கு தங்கள் உடலைக் காட்டிக் கொண்டு சிரித்தபடியே நின்று போஸ் கொடுத்தனர் பெண்கள். ஒவ்வொரு பாடலுக்கும் ஆடி முடிந்ததும் வியர்வை வழிய ஓடிவரும் தன் மகள்களுக்கும், மருமகளுக்கும் ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள் ரத்னாபாய் திடீரென்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டான் கோபால்ராவ். ''டான்ஸ் ஆடத்தெரிந்த இளவட்டங்கள் மேடைக்கு வரலாமென்றும், ஒரு பாடலுக்கு பெண்களுடன் சேர்ந்து ஆட இருபது ரூபாய் கட்டணமென்றும், அதே போல் நல்ல சேலைகள் இருந்தால் பெண்கள் கொடுத்து உதவும்படியும் காலையில் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் வேண்டுகோள் விட்டான்.'' இளைஞர் பணம் கொடுத்து பெண்களுடன் ஆடுவதற்கு போட்டி போட்டனர். புதுப்புது டிசைனில் சேலைகள் குவிந்து விட்டன. தன் சேலையைக் கட்டிக் கொண்டு ஆடிய பெண்கள் தனக்குப்பிடித்தவன் தொட்டு ஆடியதைத் தானே ஆடியதாக ரசித்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள். ஆடத் தெரியாமல் ஆசையில் மட்டும் மேடையேறிய உள்ளூர் இளைஞர்களை, வலுக்கட்டாயமாக பெண்கள் இழுத்து இழுத்து அணைத்து நெருங்கி ஆடியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. தொழுவத்தில் வந்து படுத்த முத்துவீரன் தாத்தாவுக்கு உறக்கம் வரவில்லை. தொடர்ந்து கொச்சைத்தனமான பாடல்களும் கூச்சலும் கும்மாளமும், விசில் சத்தங்களும் மிதந்து வந்து அவரை அலைக்கழிக்க எப்போது ஆட்டம் முடிந்தது... எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கினார். காலையில் அவருக்கு லட்சுமணராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக வந்த கூடாரத்தை எட்டிப் பார்த்தார். வேஷம் கலைக்காத பவுடர் பூச்சுக்கள் அழியாத அரங்கோலத்துடன் பெண்கள் தாறுமாறாகப் படுத்துக்கிடந்தனர். வெளியே பந்தலுக்குள் சத்தங்கேட்கவே உற்றுப்பார்த்தார். லட்சுமணராவ் தன்னுடையப் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். முத்துவீரன் தாத்தா மறைந்து நின்று கவனமாய் கேட்டார். ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தா, அந்த பாட்டி மரத்தடியில் உட்கார்ந்து வடை வித்துக்கிட்டிருந்தா, ஒரு காக்கா வேகமா வந்து பாட்டியோட வடைய தூக்கிட்டு பறந்து போயி மரத்து மேல உட்கார்ந்திருக்கிக்சி. பாட்டி கூப்பாடு போட்டு அழுதா. அப்போ அந்த வழியா ஒரு போலீஸ்காரர் வந்தாரு. பாட்டி அழுதுக்கிட்டே போயி போலீஸ்காரர் கிட்ட சொன்னா. போலீஸ்காரர் வேகமாயப் போயி மரத்தடியில் நின்று காக்காயப்பாத்து, ''ஏய் காக்கா! ஒழுங்கா மரியாதையா பாட்டியோட வடையைக் குடுத்துரு. இல்ல ஒன்னய இந்த துப்பாக்கியால சுட்டுப் பொசுக்கிடுவேன்''னு சொன்னாரு அப்போ காக்கா சொல்லுச்சு, ''ஒம்ம சோலியப் பாத்துட்டு பேசாம போரும், இது எனக்கும் பாட்டிக்கும் உள்ள விவகாரம்'' அப்படின்னு சொல்லிட்டு வடையத் திங்கப் பார்த்துச்சு. ஒடனே போலீஸ்காரருக்கு கோபம் வந்து ''ஒழுங்கா குடுக்கப் போறயா இல்ல சுடவா?''னு கேட்கவும், காக்கா சொல்லிச்சு, ''நம்ம ரெண்டு பேரும் ஆளுக்குப் பாதியா பங்கு வச்சிக்கிருவம்'' அப்படின்னு சொல்லி பாதி வடைய பிச்சு கீழ போட்டுருச்சு. ஒடனே போலீஸ்காரர் துப்பாக்கிய கீழவச்சுட்டு குனிஞ்சு வடைய எடுக்கப் போனாரு. அப்ப காக்கா விருட்னு பறந்துவந்து துப்பாக்கிய தூக்கிட்டுப் போயி உச்சி மரத்துல உக்கார்ந்துக்கிருச்சு. ஒடனே போலீஸ்காரர் ''காக்கா.... காக்கா நாளைக்கு ஒனக்கு அஞ்சு வட வாங்கித் தாரன், என்னோட துப்பாக்கிய குடுத்திரு காக்கா''ன்னு கெஞ்சினாரு. காக்கா சொல்லிச்சு ''நீ என்ன பெரிய அரிச்சந்திரனா ஒன்னய நம்பமாட்டேன்போ''னு சொல்லிருச்சு. ''சத்தியமா என்னய நம்பு காக்கா''ன்னு போலீஸ் சொன்னாரு. ''சத்தியத்த நாம் நம்பவே மாட்டேன். அதெல்லாம் அந்தக் காலம் ஒன்னோட துப்பாக்கி வேணும்னா; அஞ்சு வடைய ஒடனே இப்பவே வாங்கிட்டு வா. இல்லனா நடையக்கட்டு, டயத்த வேஸ்ட் பண்ணாத எனக்கு நெறய்ய வேல இருக்கு எடத்த காலி பண்ணு'' அப்பிடினு சொல்லிட்டு அடுத்த மரத்துல போயி ஜம்னு உக்கார்ந்துக்கிருச்சு. முத்துவீரன் தாத்தா லட்சுமணராவையே பார்த்துக் கொண்டு நின்றார். மரத்தடியில் வடை விற்கும் பாட்டியாக பாஞ்சாலியை உட்கார வைத்திருந்தார். கீசகனைக் கொல்வதற்காக பீமன் பிடுங்கிய மரமே இப்போது வடைவிற்கும் பாஞ்சாலிக்கு நிழல் தந்து கொண்டிருந்தது. வடையைத் திருடிக் கொண்டு ஓடிய காக்கையாக மரக்கொப்பில் ஜடாயு உட்கார்ந்திருந்தது. துப்பாக்கியைப் பறி கொடுத்த போலீஸ்காரனாக கிருஷ்ண பரமாத்மா வடைகள் அடுக்கிய கூடையாக ஜடாயுவின் வெட்டுப்பட்டு வீழ்ந்த ஒற்றை இறக்கை. ஒரு துயரப் பெருமூச்சுடன் முத்துவீரன் தாத்தா லட்சுமணராவைப் பார்க்கமலேயே திரும்பி நடந்தார். தூரத்தில் சீதையைத் தூக்கிச் சென்ற ராவணனின் தேரும், மாய மானும் தரையில் கிடந்தன. மூலைக் கொன்றாய் சிதறிக்கிடக்கும் தோல் பாவைகள் உபயோகமற்று விளையாட்டுப் பொருட்களாக சிதறிக் கிடந்த பாவை ஒன்று அவர்காலில் இடற குனிந்து எடுத்தார். முள் படுக்கையில் பீஷ்மர். திடுக்கிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கிய முத்துவீரன் தாத்தாவின் விரல்களில் முள்குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தாத்தா லட்சுமணராவின் விரல்களை நினைத்தபடியே மெதுவாக நடந்தார். அவருக்கு பாஞ்சாலி கதறுவது போலவும், ராவணனின் தேருக்குள்ளிருந்து சீதை கத்துவது போலவும், கட்டைவிரல் இழந்த ஏகலைவன் கதறியழுவது போலவும் பல சத்தங்கள் கேட்டன. நேற்று இரவு கட்டி ஆடுவதற்காக இரவல் கொடுத்த தங்கள் சேலைகளை குமரிப் பெண்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். முகர்ந்து கொண்டும், மார்போடு அனைத்துக் கொண்டும்.
நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும். ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள். அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை, உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள். அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான். அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான். மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார். அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை. முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்? முதல் அறிஞர் முல்லாவிடம், "இந்த உலகின் மைய இடம் எது?" என்று கேட்டார். அதற்கு முல்லா, ""என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்," என்றார். அந்த அறிஞர், "அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்," என்றார். உடனே முல்லா, "அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்," என்றார். முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார். அடுத்து இரண்டாம் அறிஞர், "ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்," என்றார். இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார். மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், "மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?" என்றார். அதற்கு முல்லா, "அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர். "இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்," என்றார். இவ்வாறு முல்லா கூறியதும், "வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்" என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள். போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே "அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்" என்றார். அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.
அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது. அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது. அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது. ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.
இன்று ஸென் ஆசிரியர் ஒருவருக்கும் அவரது சீடனுக்கும் நடந்த சுவரசியமான உரையாடலைக் கவனிப்போம். சீடன்: உண்மையான வழி எது? என்று ஸென் ஆசிரியரிடம் நிஜமாகவே தெரிந்து கொள்ளும் ஆவலுடன் சுவராசியத்துடன் கேட்டான். ஆசிரியர்: 'அது உன்னுடைய கண்களுக்கு எதிரிலேயே உள்ளது' என்றார் சீடனைப் பார்த்து. சீடன்: ஏன் என்னால அதனைப் பார்க்க முடியவில்லை? ஆசிரியர்: ஏனென்றால், நீ உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய் சீடன்: அப்படின்னா, உங்களால் பார்க்க முடியுதா? ஆசிரியர்: நீ எதுவரை 'உங்களால் முடியும்', 'என்னால் முடியாது' என்று இரு தோற்ற மயக்கங்களைப் பற்றி சொல்லிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறாயோ, அதுவரை உன்னுடைய கண்களானது கட்டப் பட்டே இருக்கிறது. சீடன் ஏதோ புரிந்து கொண்டவனாக 'நான்','நீ' என்ற பாகு படித்தி பார்க்காத போது யார் ஒருவராலும் பார்க்க முடியுமா? ஆசிரியர்:'நானோ', 'நீயோ' இல்லாத போது யாரது பார்க்க விரும்புவது?
ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின. அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை. அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம். இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான். அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான். பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது. ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான். செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
நல்வழிப்படுத்தவும். Saturday, April 08, 2006 கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம் எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. “நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது. “கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…” என்று அவர்கள் வாயை கிளறியது. “ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!” என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின. “கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…” என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. “ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,” என்று கோபமாக கூறின. “கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,” என்று கூறியது. கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.
வானம் நீலமாய் தெளிந்திருக்க, திருதிருவென கீழ் இறங்கிய சித்திரை மாத வெயில் பூமியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அகன்றதொரு அத்தி மரத்தின் நிழலில் அந்த "அன்னை தெரஸா" என்கிற முதியோர்களுக்கான இல்லம் சற்றே குளிர்ந்திருந்தது. மரத்தடியிலிருந்த நீண்ட சிமெண்ட் இருக்கையில் சுந்தரமூர்த்தி உட்கார்ந்திருந்தார். மெலிந்த தேகம். நிறைய நரைத்திருந்தார். குறுக்கும், நெடுக்குமாக கீறல்கள் விழுந்த மூக்கு கண்ணாடிக்குள் அவருடைய பார்வை அமைதியாய் விழித்திருந்தது. அருகாமையில் "தெரஸா" இல்லத்தின் மானேஜரான ஜோசப், கருணையோடு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். "என்னோட மனைவி இருந்திருந்தா, நான் இங்க வந்திருக்கவே மாட்டேன். ஆச்சு... அவ செத்துப் போயி மூணு வருஷமாச்சு, ஆனா நான் துளிகூட நினைச்சே பார்க்கலே. எனக்கு இந்தகதி வரும்னு. அவ இறந்த அடுத்த வருஷமே என்னோட மூத்த பையன் சண்டை போட்டுக்கிட்டு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான். கடைசி காலத்தில் என்னோட அவன் இருப்பான்னு ரொம்பவே எதிர்பார்த்தேன். சுந்தரமூர்த்தியின் கண்களில் நீர் கசிந்தது. "ஏதோ எனக்கு கிடைச்சிட்டிருந்த பென்ஷன் பணத்தை வெச்சுகிட்டு இரண்டாவது பையனோட இருந்திட்டுருந்தேன். காலேஜ்ல படிச்சிட்டிருந்தான். அவனும் இப்ப என்னோட இல்ல.", "ஏன் சார்!" ஆதங்கத்தோடு ஜோசப் கேட்டார். "அவன் இப்ப இருக்கிற இடமே தெரியல. போதை பொருளுக்கு அடிமையாகி, புத்தி பேதலிச்சுப் போச்சு, ஆஸ்பிடல்ல சேர்த்து பார்த்தேன். எல்லா ட்ரீட்மென்ட்டும் கொடுத்தாங்க. திடீரென்று ஒரு நாள் அவன காணல. எங்க போனான்னு தெரியல. எல்லாமே திசை மாறிப்போச்சு. அதுக்கப்புறம், என்னால - தனியா..." சுந்தரமூர்த்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார். "சார், உங்களோட கவல எனக்கு புரியறது. கடவுள் உங்கள கை விடமாட்டார் சார். காட் இஸ் கிரேட்." ஜோசப் ஆறுதல் அளித்தார். சுந்தரமூர்த்தி கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன் பேச்சை தொடர்ந்தார். "ஆனா... ரொம்பப் பெரிய அதிசயம் என்னன்னா, நான் இங்க உள்ள நுழைஞ்ச உடனே கவனிச்சிட்டேன். என்னோட உயிர் நண்பன் பக்கத்தில இருக்கானேன்னு ரொம்ப சந்தோஷமா போச்சு. ஆச்சரியமாக் கூட இருந்துச்சி." ஜோசப்பிற்கு ஒன்றும் புரியவில்லை. "சார். நீங்க யாரை சொல்றீங்க?", "வாங்க காட்றேன்." சுந்தரமூர்த்தி இருக்கையை விட்டு எழுந்தார். கூடவே ஜோசப்பும் எழுந்தார். நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவர் ஒன்று இல்லத்தைச் சுற்றி வளைத்திருந்தது. சுந்தரமூர்த்தி மெல்ல நடந்து அந்த சுவரருகே சென்றார். மதிலின் மறுபக்கம் ரயில் தண்டவாளங்கள் இருந்தன. தெற்கே செல்லும் டீசல் ரயில் ஒன்று பெருத்த இரைச்சலோடு வேகமாக கடந்துபோனது. சற்று தொலைவில் உபயோகத்தில் இல்லாத நீராவி ரயில் இன்ஜின்கள் ஐந்தாறு ஓரங்கட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்தப் பழைய நீராவி ரயில் கூட்டத்தின் மீது சுந்தரமூர்த்தியின் பார்வை விழுந்தது. "அதோ நிக்கறானே அவன்தான்!" சுந்தரமூர்த்தி கைநீட்டி குறிப்பிட்ட இடத்தில் ரயில் இன்ஜின்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதையறிந்த ஜோசப், குழப்பத்தில், "யாருமே அங்க இல்லையே சார்" என்றார். "அதோ அங்கே நான்காவதா நிக்கறானே, அவன்தான், ரைட் சைட்ல பாருங்க" ஜோசப்பில் கண்கள் சற்று சுருங்கி விரிந்தது. "நான் சதர்ன் இரயில்வேயில் லோகோமோடிவ் டிரைவராயிருந்து ரிடயர்ட் ஆயிட்டேன். நாலு வருஷமாச்சு." சுந்தரமூர்த்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கூறியது ஜோசப்பின் நினைவுக்கு வந்தது. அவர் அங்கே நின்று கொண்டிருந்த ரயில் இன்ஜின்களில் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார் என்பதும் புரிந்தது. "அந்த லோகோதானா சார் நீங்க ஓட்டிட்டிருந்தது!" மிகுந்த ஆச்சரியத்தோடு ஜோசப்பின் கேள்வி எழுந்தது. "ஆமாம். அவனேதான்". "நீங்க ஓட்டின லோகோ அதுதான்னு எப்படி உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது?" ஜோசப்பை மெல்ல ஏறிட்டு பார்த்தார் சுந்தரமூர்த்தி. "ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல. முப்பத்தி நாலு வருஷம் அவனோட நான் பழகியிருக்கேன். அவன நீங்க ஒரு இயந்திரமா பாக்காதீங்க. அவனுக்கும் உணர்வுகள் இருக்கு. இன்ச் பை இன்ச் அவன எனக்கு தெரியும்" ஆத்மார்த்த நட்பின் புரிதலோடு சுந்தரமூர்த்தி தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார். "அவனோட உழைப்பு ரொம்பப் பெரிசுங்க ஜோசப். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைப்பு. அவன் கடுமையா உழைச்சான். கூலியேயில்லாம!" ஒரு பழைய நீராவி ரயிலை... இத்துப்போன இரும்பு மிஷினை.... வெறும் இயந்திரமாக மட்டுமே பாராமல், உயிருள்ள மனிதனாகவே மனதிற்குள் பாவித்து நேசம் கொண்டிருக்கும் சுந்தரமூத்தியை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசப். "நான் ரிடயர்ட் ஆன இரண்டு மாசத்துல, அவனையும் டிபார்ட்மெண்ட் வயசாயிடுச்சுன்னு சொல்லி ஓய்வு கொடுத்துடுச்சி, டீசல், எலக்டிரிக் ட்ரெய்னெல்லாம் வந்திடுச்சில்ல. அதான் அவன ஒதுக்கிட்டாங்க. முதல்ல யார்டுக்குத்தான் அனுப்பிச்சாங்க. நானும் அப்பப்ப போயி பார்த்துட்டு வருவேன். தனியா... ஒரு மூலையில அனாதையா நின்னுட்டிருந்தான்." சுந்தரமூத்தியின் குரல் கம்மியது. ஜோசப்பின் முகத்தில் இறுக்கம். "அப்புறம் என்னாச்சு சார்!" என்றார். "அவனையும் ஒரு நாள் அங்க காணல. இட நெருக்கடியால யார்ட்ல இருந்து வேற எங்கேயோ கொண்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நெஞ்சு பதறிப்போச்சு. எல்லாமே என்னவிட்டு போன மாதிரி ஒரு வேதனை. அவன தேடி அலைஞ்சேன். எங்கேயும் காணல. இரண்டரை வருஷமா அவன பார்க்கவே முடியாமப் போச்சு." சுந்தரமூர்த்தியின் தொண்டைக்குழி, விம்மி அடங்கியது. "அதுக்குப்பிறகு இப்பதான் அவன பார்க்கறேன். இங்க அவன சந்திப்பேன்னு நினைக்கவேயில்ல." எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடிய அரியதொரு புதையல் கிடைத்துவிட்டது போல் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. மழை வருவதையுணர்ந்த மயில் குதூகுலத்தோடு தோகை விரித்தாடுவதைப்போல் அவர் நெஞ்சு ஆனந்தக் கூத்தாடியது. தரை தவழ்ந்து, தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிட்ட குழந்தையின் தெம்பில் அவர் திளைத்திருந்தார்.
தேனீ ஒன்று ஜூபிடரைச் சந்தித்து ஒரு பானை நிறைய சுத்தமான, சுவை மிகுந்த தேனை கொடுத்தது. கடவுளரான ஜூபிடரும் அதை அன்போடு வாங்கிக் கொண்டார். தேனீயின் அன்பால் மகிழ்ந்த அவர், தேனீ கேட்கும் வரத்தைத் தருவதாகவும் சொன்னார். தேனீ உடனே, தான் கொட்டியவுடன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் கேட்டது. தேனீ இப்படி மோசமான வரத்தைக் கேட்டதில் ஜூபிடர் கோபமடைந்தார். தேனீயின் கருணையில் பிற உயிரினங்கள் வாழ்வதா என்றும் யோசித்தார். பிறகு, தேனீ கேட்ட வரத்தைத் தருவதாகவும் ஆனால் அவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் சொன்னார் ஜூபிடர். "ஏன்?" என்று கேட்டது தேனீ. "நீ யாரைக் கொட்டினாலும் மரணம் சம்பவிக்கும். அவர்களுக்கல்ல, உனக்கு" என்றார் ஜூபிடர். தீய எண்ணம் தீமையையே கொண்டுவரும்.
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் “எல்லாம் நன்மைக்கே!” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. இரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர், “அரசே! எல்லாம் நன்மைக்கே!” என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், “நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதா?, காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப்படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தனர். அப்போதும் அமைச்சர், “எல்லாம் நன்மைக்கே!” என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்காக மலைவாசிகள் கொண்டு வந்த அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, “காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம்” என்றான். விடுதலை பெற்ற அரசன்! அரண்மனைக்கு வந்தான். உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், “சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மை உணர்ந்தேன். உம்மைச் சிறையில் அடைத்ததற்காக வருந்துகிறேன்” என்றான். அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் என்னையும் உங்களுடன் சிறைப்படுத்தி இருப்பார்கள். விரல் வெட்டுப் பட்டதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன். “எல்லாம் நன்மைக்கே!” என்றார் அவர்.
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன். வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான். அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன். எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான். அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான். சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான். குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான். அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது. திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன். முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான். உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான். தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான். எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான். முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான். உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான். அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன். வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர். அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது. உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி. அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட ஒரு காவலன் வந்தான்.நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன். புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான். சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன். உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான். புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது. அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில் கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான். பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி. பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான். கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.
சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர். அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும். ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது, ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது. அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் "சுவாமி" நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு "ஆம் சுவாமி" வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது. அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், "மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை. உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!" என்று கதை சொல்லலாயிற்று. ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான். ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான். அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், "மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது. அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!" என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது "ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை" என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார். அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், "மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை" என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. "இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!" என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, "மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!" என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, "மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?" என்று மன்னரையே கேள்வி கேட்டான். "எந்த வாயில் வழியாக?" என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்."நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!" என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். "லஞ்ச வாயிலா? அது என்ன?" என்று மன்னன் கேட்டான். "மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?" என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்."என்ன?" என்று துள்ளிக்குதித்த மன்னன் "என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!" என்று அதிர்ச்சி யுடன் கூறினான். "மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!" என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, "இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!" என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, "உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!" என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா!ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!" என்றது.அதற்கு விக்கிரமன், "முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்" என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார். " ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள். நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர். செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார். முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார். " என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார். " என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார். மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார். மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார். மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.
ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார். ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார். " கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர். ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள். தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. "அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான். "யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான். இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன். "அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான். கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான். யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே கதைதான். இந்த நேரம் என்றில்லை, இன்ன பொழுது என்றில்லை. வந்துவிடுகிறான் தினகரன். யார் வெற்றிலை - பாக்கு வைத்து அழைத்தார்கள் இவனை. ராஜூவுக்கு எரிச்சலான எரிச்சல். அவனுக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்கவில்லை. இவனை யார் வரச்சொன்னது. போன ஞாயிற்றுக்கிழமை. சித்திரைவெயிலுக்கு பயந்து, கதவை ஒருச்சாத்திவிட்டுப் படுத்திருந்தான் ராஜூ. வீடோ ரொம்ப சின்னது. மத்தியானம், இரண்டு, இரண்டரை மணி இருக்கும். கடுமையான வெக்கை. புழுக்கம். மேஜைக் காற்றாடியை மூன்றில் வைத்திருந்தான். அப்படியிருந்தும் தூங்க முடியவில்லை. பக்கத்தில் அலமேலு ஒருக்களித்துப் படுத்தபடி, அதிசயமாக "குமுதம்" பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகன் ஐயப்பன்தான் வந்து சொன்னான், தினகரன் வந்திருப்பதை. இவர்கள் வளவில் மூன்று வீடுகள். எதிரே வடக்கு பார்த்த வீடு. தெற்கே பார்த்து இரண்டு வீடுகள். உள்ளபடியே, அது ஒரு வீடுதான். வாடகைக்காக இரண்டாக மறித்து, சுவர்வைத்துப் பிரித்திருந்தார்கள். இந்த வீடு ஒரு முடுக்கு மாதிரி. நீளமாய் இருக்கும். விசாலம் கிடையாது. முன்புறம் சின்ன தார்சா. நடுவில் சரியாக இரண்டு பேர் படுக்கிற மாதிரி பட்டாளை. பின்னால் அடுக்களை. பின்புழக்கம் உண்டு. மேல வீடுதான் உண்மையிலேயே வீடு. அதுவும் இவர்கள் புழக்கத்தில்தான் இருக்கிறது. அதாவது, இவன் மாமனார், மாமியார், மருமக்கள் - அலமேலுவின் அண்ணன் பிள்ளைகள். மூத்த தாரத்து மக்கள். பஞ்சபாண்டவர்கள் - மதினி, சகலர் எல்லோரும் இருக்கிறார்கள். பெரிய வீடு அது. யாராவது வந்தால் அங்கேதான் இருக்க வைப்பது. சொந்தக்காரர்கள், ரொம்ப வேண்டியவர்களை மட்டும் தாம் இந்த வீட்டில் கூப்பிட்டுவைத்துப் பேசுவது. இருக்கச் சொல்வது. இடவசதி - இல்லை, இட நெருக்கடிதான் காரணம். அந்த வீட்டுத் திண்மையில் தான் தினகரனை உட்காரச் சொல்லியிருந்தார்கள். அலமேலு போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அவள் வந்தவுடன் ராஜூ ஆத்திரமாய்க் கேட்டான். "இவனுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாதா ஒரு வீட்டுக்கு வர. பொண்டாட்டி, பிள்ளை இருக்கற மனுஷன் மாதிரியே தெரியலியே இவனப் பாத்தா. இந்த வேனா வெயில்ல ஒரு உடை உடுத்தி நடை நடந்து வந்திருக்கானே முட்டாப்..." ராஜூவுக்கு கோபம் வந்தால் கெட்ட வார்த்தைகள்தாம் வரும், தன்னியல்பையும் மீறி. "இல்ல. நாளைக்கிதான் பணம்கட்ட கடைசி நாளாம். அதச் சொல்லத்தான் வந்தாராம்" என்றவள், இவன் முகத்தைப் பார்த்துவிட்டு மேலவீட்டுக்குப் போய்ப் படுத்துக்கொண்டாள். அதற்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. காலையில் பத்து மணி இருக்கும். கோடைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லையென்று, மேற்கே கொஞ்சம் தள்ளி ஊற்று இருக்கிற இடத்துக்குப் போய்க் குளித்து விட்டு வருகிறான். போக வர இரண்டு மைல் நடை. திரும்புகையில், எதிர்வெயில் வேறு. காலையிலே மனுஷன் குளிக்கிறதுக்கு இந்தப் பாடா. பசியும் எரிச்சலுமாய்த் தெரு வாசல்படி ஏறியவன் கண்ணில் முதலில் பட்டது தினகரனின் கட்டம்போட்ட சட்டைதான். பெரியவீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான். எதிரே தார்சாவில் ஸ்டீல் சேரில் உட்கார்ந்திருந்த அலமேலு இவனைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து கொண்டாள். "இட்லி எடுத்துட்டு வரட்டா" என்று கேட்டுக் கொண்டே வந்தாள். "குளிச்சிட்டு வர்றீங்களா" என்று கேட்டபடியே புறப்பட்டுப் போய் விட்டான் தினகரன். துணிகைக்கூடக் காயப்போடாமல், தலைகூட சீவாமல், சாப்பிட உட்கார்ந்து விட்டான் ராஜூ. இட்லி எடுத்துவைத்துக் கொண்டிருந்த அலமேலுவிடம் கோபமாய்க் கேட்டான். "எங்கடி வந்தானாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரப்பிடாது இவனுக்கெல்லம். புறப்பட்டு வந்துர்றான் புடுங்கி மாதிரி. போவேண்டியதுதானே கொழுந்தியா வீட்டுக்கு. அடுத்த தடவ வரட்டும், கேட்டுர்றேன்.", "ஏன் இப்டி வாயில வந்ததல்லாம் பேசுறீங்க. புது ஏ.சி.டி.ஓ. வந்திருக்காராம். "அக்கவுண்டயெல்லாம் சீக்கிரமா முடிச்சிக் கொண்டுட்டு வாங்க"ன்னு சொல்லிட்டுப் போறாரு. அவ் வீட்டுக்காரிக்குத் திரும்பவும் உடம்பு சரியில்லியாம். சொல்லிக்கிட்டிருக்கையிலியே அழுதிட்டாரு. பாவம்" என்ற அலமேலு எச்சில்தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். இவனுக்குத்தான் மனசு சமாதானமாக வில்லை. போன மாசம். புனித வெள்ளி. அரசு விடுமுறை. சாயங்காலம், அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, அடித்துப்போட்ட மாதிரி, தூங்கிக் கொண்டிருந்தாள் அலமேலு. வாரத்தில் ஆறுநாள் மாடு மாதிரி வேலை பார்க்கிற அசதி. அலைகிற அலைச்சல். தினகரன் வந்திருப்பதை வந்து சொன்னான் - இரண்டாவது - மருமகன் - லட்சுமணன். யாராக இருந்தாலும் தூங்கும்போது எழுப்புவது எப்போதுமே இவனுக்கு சம்மதமில்லாத காரியம். "அத்த தூங்குறா, நாளக்கி வந்து பாருங்க"ன்னு சொல்லு" என்று லட்சுமணனிடம் சொல்லி அனுப்பிவைத்தான் ராஜூ. ராஜூவுக்குத் தினகரனைப் போய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை. "வாங்க" என்று மரியாதைக்குக் கேட்கக்கூடத் தோன்றவில்லை. "இருங்க" என்று சொல்ல இஷ்டமில்லை. "சனியன், போய்த் தொலைந்தால் சரிதான்" என்றிருந்தான். ஆனால் தினகரன் போகவில்லை. இருந்து கொண்டிருந்தான். லட்சுமணனோடு பேசிக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் கழிந்திருக்கும். இவன், "என்னப்பா" என்று கோபமாய்க் கேட்டான். லட்சுமணன் வந்து பைய, "அவரு இன்னும் போல. இருந்துட்டு இருக்காரு, அதான்" என்றதும், "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்த" என்று கடுப்போடு இரைந்தவனின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் அலமேலு. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். பின்வாசல் பக்கம் போய் முகம் கழுவிக்கொண்டு நிற்கிறாள். அதற்குள் அவனே திண்ணையில் வந்து நின்றான். முகம் துடைத்துக் கொண்டிருந்த அலமேலுவை ராஜூ சுட்டெரித்து விடுவது போலப் பார்க்க, அவள் இவனை பாவம் போலப் பார்த்தபடி நின்றாள். "எப்ப வந்தீங்க, எப்டி இருக்கீங்க" என்று இவனை விசாரித்த தினகரனிடம் ஒப்புக்காகப் பேசும்படியாய்த் தொலைந்தது. "என்ன, இந்த நேரத்துல தூங்குறீங்க" என்று அலமேலுவைக் கேட்டவன், "சின்னத்தம்பி" படத்துக்கு டிக்கெட் கிடைக்க மாட்டேங்கு"ன்னு சொன்னீங்கல்ல. தியேட்டர் பக்கம் - ஆபீஸ்லர்ந்து போயிருந்தம். நாலு டிக்கெட் கேட்டு வாங்கிட்டு வந்தேன். அதக் கொடுத்திட்டுப் போலாமேன்னுதான்" என்று பர்ஸிலிருந்து சினிமா டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தான். லட்சுமணனைக் கூப்பிட்டு "பூஸ்ட்" வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள் அலமேலு. காபி குடிக்க மாட்டானாம், மயிராண்டி. நாலு நாளைக்கு முன்தான் சொன்னாள் அலமேலு. அலுவலகத்தில் இவள் பொறுப்பில் - ஐயாயிரம் ரூபாய் - சார்ட்டேஜாம். எங்கேயாவது வட்டிக்கு வாங்க முடியுமா என்று அலைந்து பார்த்தாள். யார் யாரிடமெல்லாமோ கேட்டுப் பார்த்தாள். தினகரனிடமும் சொல்லியிருக்கிறாள். "சங்கிலிய வேணா தர்றேன். அடகுவச்சு எடுத்துக்குங்க" என்றானாம். மைனர் செயின். அஞ்சு பவுன். அலமேலு இவனிடமே வந்து கேட்டாள், என்ன செய்ய என்று. ராஜூ என்ன சொல்வான். "வேண்டாம், அப்டில்லாம் வாங்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டான். தனது கையாலாகத்தனம் நெருட, அன்றைக்கு ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை ராஜூவுக்கு. அலமேலு நல்ல பெண்தான். அவளை ஒன்றும் தப்புச் சொல்ல முடியாது. ஆனால், சில பெண்களுக்குப் பிற ஆண்களிடம் சகஜமாகப் பேசும் குணம் உண்டு. அலமேலுவிடமும் இந்த அம்சம் இருக்கிறது. அதுதான் இப்படி. இந்த வினை. இவள் வேலையும் அதற்கேற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வணிக வரி அலுவலகத்திற்குப் போக வேண்டும். எப்படித்தான் நல்லபடியாகக் கணக்கு வைத்திருந்தாலும் கண்டமேனிக்கு வரி தீட்டி விடுவார்கள். விசாரணை, அபராதம் இதெல்லாம் இல்லாமல் தப்பித்துவர வேண்டும். இதற்கெல்லாம் அங்கேயே ஒரு தெரிந்த ஆள் இருந்தால் நல்லது. அலமேலு கணக்குப் புஸ்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். தினகரன் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வான். ராஜூவுக்கு நிலையான வேலையில்லை. நிலையான வேலையில்லாதவனுக்கு நிரந்தரமான வருமானம் எப்படி இருக்கும். வீட்டில் சும்மாதான் இருக்கிறான். இரண்டு பையன்கள் படிப்புச் செலவு, வீட்டு நிர்வாகம் எல்லாம் அலமேலுதான். இவள் வேலை பார்க்கப் போய்த்தான் குடும்பம் நடக்கிறது. உண்மையிலேயே, தினகரன் பாவம்தான். மனைவிக்குப் கர்ப்பப்பை ஆப்பரேஷன் ஆகிவிட்டது. அதுதான் இப்படி அலைகிறானோ, ஜொள்ளு கேஸ•. பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாலே போதும் என்கிற டைப்பு. சீச்சீ. இப்படியெல்லாம் தப்பாக நினைக்கக்கூடாது. அவனென்ன தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்காதவனா. பனிரண்டு வயதில் பையன் இருக்கிறான். அவனுடைய பழைய புஸ்தகங்கள்தாம் ஒவ்வொரு வருஷமும் இவன் பையனுக்கு. மெனக்கெட்டு எடுத்துக்கொண்ட வந்து கொடுத்துவிட்டுப் போவான் தினகரன். தெரிந்தவர்கள் என்று வருகிறான். இல்லையென்றால், வருவானா. ஆனாலும், ஒரு இங்கிதம் வேண்டாம். செத்த மூதி. கடன்காரன் மாதிரி வந்து விடுகிறான். புருஷன்காரன் என்ன நினைப்பான் என்று தோன்றாதா இவனுக்கு. இரண்டு மூன்று தடவை அலமேலுவிடம் எரிச்சல்பட்டே சொல்லிவிட்டான் ராஜூ. "இவன் இப்டி வீடு தேடி வர்றது எனக்குப் பிடிக்கல அலமேலு. இவன் ஏன் வர்றான். நீ சொல்லிரு. "என் புருஷன் ஒரு முசுடு. எதாவது சொல்லிருவாரு"ன்னு சொல்லிரு அலமேலு". "இதயெல்லாம் எப்படிங்க சொல்லமுடியும். அவருக்கே தெரியணும்" என்று அலமேலு சொல்வதும் சரிதான். முந்தா நாள். சித்திரை விஷ•. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோமே, பிள்ளைகளோடு இவளோடு எதாவது சினிமாவுக்குப் போகலாமே என்று எல்லோருமாகப் போனார்கள். ஆறரை மணிக் காட்சி. படம் முடிந்து வெளியே வந்தார்கள். தியேட்டர் வாசலை விட்டு இறங்குகிறார்கள். கூட்டத்தை எதிர்த்து வந்து கொண்டிருக்கிறான் தினகரன். வீட்டுக்குப் போயிருந்தானாம். சொன்னார்களாம். வந்துவிட்டான். வழக்கமான நாகரிகம், மரியாதையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுவிட்டான் ராஜூ. அவனைப் பார்க்காததுபோல, விறுவிறுவென்று சரவணனையும் கோபியையும் இரண்டு கையில் பிடித்துக்கொண்டு முன்னே நடந்து போய்க்கொண்டே இருந்தான். சம்பிரதாயத்திற்காக ஒரு நிமிஷம் நின்று விசாரித்துவிட்டு, வேக வேகமாக நடந்து வந்து இவனோடு சேர்ந்து கொண்ட அலமேலு கேட்டாள்; " என்னங்க, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறீங்க ". "என்னடி இது. தியேட்டருக்கே வந்துட்டான். பொண்டாட்டிய தேடிட்டு வர்ற மாதிரில்ல வர்றான். இவனையெல்லாம் என்னடி செய்றது" என்று வெடித்தான் ராஜூ. "சத்தம் போடாதீங்க. எல்லோரும் பாக்காங்க. வீட்ல வந்து பேசுங்க" என்று அமைதிப்படுத்தினாள் அவள். வீட்டுக்கு வந்து சேர்ந்து, கைலியை மாற்றிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் ராஜூ. பிள்ளைகள் இரண்டு பேரும் ஒன்றும் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார்கள். அலமேலு பழையதை எடுத்து வைத்து மோர் ஊற்றிக் கொண்டிருந்தாள். சாதத்தைப் பிசைந்தபடியே ஆங்காரமாகச் சொன்னான் இவன். "ஏய், இந்த பாருடி. அவன் இன்னொரு தடவ இங்க வந்தா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவன்ட்ட சொல்லிரு. இல்ல, அசிங்கமா போயிடும்.", "சரி, சரி. விடுங்க இழவு சனியனை. அவர்தான் மடையன்னா நாமளுமா" என்ற அலமேலு சாப்பிடாமலேயே போய்ப் படுத்துக் கொண்டாள். "என்ன மனுஷங்க" என்ற நினைப்பே வேதனையாக இருந்தது. மாடக்குழியில் இருந்த "அவில்" மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அப்போது அலமேலுவின் பாவமான முகமே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே கடைசி ஞாபகமாக இருந்தது.
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான். இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர்.இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர். சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன்.நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள்.ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன்.முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன்.அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.
முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது. செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், "எலும்புத்துண்டை தறுமாறு" கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ "இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்", என்று கூறி விட்டுச்சென்றது. செல்லும் வழியில் ஒரு பாலத்தை வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது. அதைக் கண்ட நாய் "இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக "லொள்","லொள்" எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது. அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று. அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று. பேராசை பெரு நஷ்டம்
ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்துப் பதினாயிரம் வராகன்கள் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன். அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. "தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார். தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார். "நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார். சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார்.
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது. மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம் பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது, பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன. பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன. முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து " அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் " என்றான். " தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்றான் அவன். " நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார். " ஏன் சிரிக்கிறீர் " என அந்த இருவரும் கேட்டனர். " பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் " என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.
ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், "எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார் உடனே சபையிலிருந்த அனைவரும் "ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது." என்றனர். ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், "ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று கேட்டார். உடனே பீர்பால், "இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்," என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார். பீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். தண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், "நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு," என்று உரத்த குரலில் அறிவித்தார். இதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், "அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும்," என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், "சரி ஒரு குடம் பால் தானே…கொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், "நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?" என்று கேட்டார். உடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, "பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்" என உத்தரவிட்டார். பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். "பீர்பால்…என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?" என அதிர்ச்சி மாறாமல் கேட்டார். ஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், "மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே.." என்று சிரித்தபடியே கூறினார். பீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும். செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான். பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள். மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது. "அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே" என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர். செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார். "குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!" என்றான் முட்டாள். "நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!" என்றான்ன மூடன். "புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!" என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர். அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. "ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!" என்றான். இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார். "தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மட்டி "ஆமாம்! இதுதான் சரியான வழி!" என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர். வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன. "குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மடையன். மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர். சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன. குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. "குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினான் மடையன். "இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!" என்றபடி குதித்தான் மட்டி மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர். இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது. மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள். மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன். "அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!" என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள். பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான். பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான். "டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!" என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான். "கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்" என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.
மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் "இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே" என்றது. அதற்கு எறும்பு "இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்" என்றது. வெட்டுக்கிளி எறும்பிடம் "மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்" என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது. நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது. தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு "எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்" என்ற எண்ணம் வந்தது. வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் "எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?" என்று கேட்டது. தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. "அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்" என்றது. கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது. கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.
முதல் வரி எழுதப்படு முன்பே, முழுசாக நடந்து முடிந்து விட்ட சம்பவத்தைதான் இப்போது சொல்லப் போகிறேன். அதற்கு முந்தின நாள்வரை இருந்த ராகவனே வேறு. மறுநாளில் ஒவ்வொரு காலுக்கும் வெவ்வேறு ரகச் செருப்புகளை அணிந்து அலுவலகம் செல்கிற அளவு மோசமாகிவிட்டது. மனநிலை, உண்மையில். இதை எழுதுகிற நான் இந்தச் சம்பவத்துக்குள் இல்லை. அது நடந்து இருபது வருடமாகிவிட்டது என்பதோடு, நடந்தது ராமநாதபுரத்தில், நான் இருப்பது சென்னையில். இதில் இன்னொரு விசித்திரத்தைக் கவனித்தீர்களா. சம்பவத்துக்குச் சம்பந்தப்பட்ட நான் இதனுள் இல்லை. ஆனால், வரிகள் நகர நகர, வாசிக்கிறவராகிய நீங்கள் இதன் அங்கமாகிக் கொண்டே வருவது புலனாகிறதா. பூச்சியைப் பிடிக்க நீள்கிற தவளையின் நாக்கு போல, ஏதோ ஒரு வரி நீண்டு உங்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பிறகு, உங்கள் சுற்றுச் சூழ்நிலை கவனத்திலிருந்து நீங்கி விடுகிறது. கொஞ்சம் குழப்பமாகப் பேசுகிறேன், இல்லையா. பொறுங்கள். தயவு செய்யுங்கள். இந்த வரிகளுக்கு நான் பொறுப்பில்லை. சௌரிராஜன். அவன் தான் காரணம். நிம்மதியாகப் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், மைதுனச் சித்திரங்களுக்கு உபகரணங்களாக அவர்களை ரகசியமாய்ப் பயன்படுத்திக் கொண்டும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை பாக்கெட்டுக்கள் சிகரெட் குடித்துக் கொண்டும். டி.ஏ. அர்சியர்ஸ், நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலக்குறைவு, விடுப்புக் காலத்தை சமர்ப்பித்து ஈடு வாங்கிக் கொள்வதற்கான தகுதி இந்த வருடம் எனக்கு உண்டா என்பது போன்ற எளிமையான ஆனால் முக்கியமான கவலைகளைப் பட்டுக் கொண்டும் இருந்தவன்தான் நான். அந்த ஒரு ராத்திரிக்குப் பிறகு, என் யோசனையின் தடம் மாறி விட்டது. குழப்பமான வாக்கியங்களைச் சுமந்து திரியும் கூடையாகி விட்டேன். நடைமுறைத் தர்க்கத்துக்குட்பட்டு நடக்கும் எதையுமே நடைமுறைத் தர்க்கத்துக்குட்பட்டதாகப் பார்க்கவியலாத வியாதியஸ்தனாகி விட்டேன். வாக்கியங்களில் குழப்பமும், ஒருவிதமான சுழற்தன்மையும் பெருகி, சாதாரணமாக, ஒரு வில்ஸ் குடுங்க. என்று சொல்வது கூட மாபெரும் தத்துவப் பிரச்சினையாகி விட்டது. டாக்டர் சீனிவாசன் போத்தி எம்.டி., அட்டிவான் தெரப்பிக்கு என்னை அறிமுகம் செய்திருக்கிறார். தூக்கம் ஒரு பிரச்சினையாக இல்லை இப்போது. என்ன, பகல்பொழுதுகளில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறேன் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை என்ன. கட்டின வீடுகளுக்குக் குற்றம் சொல்கிறவர்கள். மன அழற்சிக்கான அல்லோபதி மாத்திரிகளை வருஷக் கணக்காகச் சாப்பிடுவது, தவறான பின் விளைவுகளை உண்டாக்க வாய்ப்பிருக்கிறது, மாற்று மருத்துவ முறை எதையாவது முயற்சிக்கலாமே என்று இரண்டு வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள், சண்முகம் போன்ற நண்பர்கள். இந்தச் சிக்கல் தீராதது. இப்போது சௌகரியமானதாக இருக்கிற ஒன்று, எதிர்காலத்தில் கேடு விளைவிப்பதாக ஆகிவிடுகிறது. இதற்கு நேர்மாறாகவும் நடக்க வாய்ப்பிருக்கிறது தான். இதில் நான் கவனிப்பது என்னவென்றால், எதிர்காலம் தானே நிகழ்காலம் ஆகிக்கொண்டே வருகிறது. ஆனால், மேற்சொன்ன விதத்தில், எதிர்காலமும் நிகழ்காலமும் ஒன்றுக்கொன்று விரோதமானவையாகத் தெரியவில்லையா? அல்லது, எதிர்காலம் என்றே நிகழ்காலத்திலிருந்துதான் கிளைக்கிறதோ.... பார்த்தீர்களா, மறுபடி ஆரம்பித்து விட்டது குழப்பம். நான் ஏற்கெனவே சொன்னேனே. சௌரிராஜன்தான் காரணம். இத்தனைக்கும் சௌரி என்னுடைய பலவருட நண்பன். சக ஊழியன், அறைத் தோழன், கல்லூரியில் ஒன்றாகப் பட்டப்படிப்பு முடித்து வெளிவந்தவர்கள் நாங்கள். நான் வணிகவியல் அவன் விலங்கியல். எங்கள் நட்பு உருவானதும் ஒரு ஆபூர்வ சந்தர்ப்பத்தில்தான். அறிவியல் மாணவர்களுக்கும், மானுட - கலையில் மாணவர்களுக்கும் நிகழ்ந்த கோஷ்டிக் கலவரமொன்று, அந்த நாட்களில் மதுரை வட்டார நாளிதழ்களில் மிகவும் விசேஷமாகப் பேசப்பட்டது. பதினைந்து மாணவர்களுக்கு எலும்புகள் முறியவும், அவர்களில் நால்வருக்கு நிரந்தர ஊனம் ஏற்படவும், நூற்று இருபத்தெட்டு மாணவர்கள் தன் பெற்றோருடன் முதல்வரையும் தாளாளரையும் நேர்முகமாகச் சந்திக்க வரவேண்டும் என்று பதிவுத் தபால்கள் பறக்கவும், மூன்று மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்படவும் காரணமான கலவுரம் அது. விசாரணை துவங்குவதற்கு முன்னரே, மாணவர்களுக்குள் திரைமறைவுச் சமரசம் ஏற்பட்டு விட்டது. மாணவர்களின் நட்பு ரீதியிலான சிறு தகராறு நடந்துகொண்டிருக்கும்போது, கல்லூரிக்குள் உருட்டுக்கட்டைகளுடன் ஓடிவந்த அந்நியர்களே ரத்தக்காயங்களுக்குக் காரணம்; மாணவ சமுதாயம் தன்னுடைய ஒற்றுமையில் உறுதியாக இருக்கிறது என்று எலும்பு முறிவுக்கான நபர்களே வாக்குமூலம் கொடுத்த பிறகும், தம்மையும், சமரசத்தையும் மறந்து நாளிதழ் நிருபரிடம் நடந்ததை நடந்தபடியே சொன்ன மாணவர்கள் மூவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டனர். இதை மிகுந்த மனவருத்தத்தோடு துரதிர்ஷ்ட வசமாகச் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று தாளாளர் மனம் வெதும்பிப் பேட்டியளித்தார். நீக்கப்பட்ட மாணவர்கள் பேட்டி அளித்திருந்த அதே இதழில். பாருங்கள், இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்ததைக் கூறுவதாகத் தொடங்கிவிட்டு, இருபத்தேழு வருடம் முன்பு நடந்ததை விலாவாரியாகக் கூறிக்கொண்டிருக்கிறேன். இது ஒரு விதமான காலக் குழப்பம்தானே. சௌரிதான் காரணம்... மொத்தத்தில் நானும் சௌரியும் ஒரே இலையில் சாப்பிடக் கூடியவர்கள். தேவைப்பட்டால் ஒரே கழிவரையையும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள். அவன் செய்தது என்ன, அவனுக்கு நடந்தது என்ன, அதன் காரணமாக எனக்கு நடந்தது என்ன என்கிற மாதிரி சங்கதிகளெல்லாம் மூட்டம் போட்ட காய்கள் மாதிரி ரொம்ப காலமாக உள்ளே குமைந்து கொண்டிருக்கின்றன. டாக்டர் போத்தி சொல்லியிருக்கிறார். திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து தொந்தரவு தர்ற விஷயங்களை, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கடகடகடன்னு எளுதுங்க. ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ படிச்சுச் பாத்துட்டுக் கிளிச்சுப் போட்ருங்க. மனசைக் காலி பண்ணிக் கிறதுக்கு இது ஒரு வழி. அப்படி நினைத்துத்தான் எழுதினேன். இதை மெனக் கெட்டு எழுதியதைக் கிழித்தெறிவானேன் என்று யோசித்த போது உங்கள் ஞாபகம் வந்தது. சில வரிகளையும் சில வார்த்தைகளையும் மட்டும் மாற்றியமைத்திருக்கிறேன்...... சின்னக்கனி காம்ப்ளக்ஸ் மூன்றாவது மாடியில் நாங்கள் - அது தான், நானும் சௌரியும் - இருந்த போது நடந்தது இது. எங்கள் அறையில் ஒரு சுவர்க்கடிகாரம் இருந்தது. ஒரு மணி நேரத்துக்கொருமுறை, கடிகாரத்தின் அடிப்பாகத்திலுள்ள கூடு திறந்து மரக்குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்கும் குக்....குக்...குக்.. என்று சப்தம் கொடுத்துவிட்டுக் கூட்டுக்குள் திரும்ப போய்விடும். கூடு மூடிக்கொள்ளும். என் பெரிய மாமா வடக்கே பட்டாளத்திலிருந்த போது வாங்கி வந்தது அந்தக் கடிகாரம். பழம் பொருள் பிரியர் அவர். எங்கெங்கோ ஏலங்களில் போய் குடுவையையோ, முக்காலியையோ, தாம்பூலம் துப்பும் கூளாம்பியையோ ஏக விலை கொடுத்து வாங்கி வருவார். அம்மா ஆசைப்பட்டாள் என்று இந்தக் கடிகாரத்தை அவளுக்கு அன்பளித்தார். வடக்கே ஏதோ ஒரு சமஸ்தானத்துக்குள் அடங்கிய ஜமீன்தாரின் சொத்துக்கள் ஏலம் வந்த போது வாங்கினாராம். ஏலத்துக்கு வந்தவற்றில் வாங்கக் கூடிய விலையில் இருந்தது இந்த ஒன்றுமட்டும் தான் என்றார் மாமா. அம்மா, மாமா, இருவருமே செத்துப் போய்விட்டார்கள். கடிகாரமும், குருவியும் துடிப்போடு என் அரையில் இயங்கிக் கொண்டிருந்தன. அறைத்தோழன் சௌரிக்கு இந்த குருவியைப் பிடிக்காது. ரொம்பக் கத்துதுடா என்பான். அந்தக் குருவி கழுகாக மாறிவிடாதா, அந்தப் பயல் சௌரியைக் கண்ணை நோண்டி விடாதா என்று தோன்றியது. அன்று ஓயாத புலம்பல் மனதில் ஒடிக்கொண்டிருந்த முன்னிரவு அது. அன்று சாயங்காலம் நடந்ததைச் சொன்னால்தான் ஏன் இவ்வளவு வேதனைக்கு ஆளானேன் என்பது புரியும். சௌரிக்கும் எனக்கும் இடையில் ரகசியங்கள் கிடையாது. மிக முக்கியமான ரகசியம் ஒன்று என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது என்பது, அன்று அவனுடைய நாட்குறிப்பை எடுத்துப் படிக்கும்வரை எனக்குத் தெரியாது. என் உடன் பிறந்த தங்கையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அது வெறும் ரகசியம் மட்டுமில்லை, பயங்கரம் என்றும் தோன்றியது. வருஷக் கணக்காகத் தோன்றாத ஒரு குறுகுறுப்பு அன்றைக்கு மட்டும் தோன்றியது ஏன் என்று புரியவில்லை நண்பன்தான் என்றாலும் அவடைய பற்பசையையோ ஷவரக் க்ரீமையோ கூடத் தொடாத நான், அவனது நாட்குறிப்பைப் படிக்கிற உந்துதலை எவ்விதம் பெற்றேன் என்பது புரியவில்லை எத்தனையோ பெண்களின் கண்களையும் உதடுகளையும் கண்ணங்களையும் கூந்தலையும் முலைகளையும் மோவாய்க் கட்டகளையும் புட்டங்களையும் பற்றி அபிப்பிராயங்கள் பகிர்ந்து கொண்ட நண்பன், என்னுடைய தங்கையின் மார்பைப் பற்றி வாயித்து எழுதிய நாட்குறிப்பு என்னைக் கொலை வெறிக்கு ஆளாக்கிய மர்மம் புரியவில்லை ஆறுமாதத்துக்கு முன்னால் என் வீட்டுக்கு அவன் வந்த அந்தச் சனியன் பிடித்த அக்டோபர் ஆறு ஏன் அத்தனை அழுத்தமாக எனக்கு ஞாபமிருந்தது என்பதும் புரியவில்லை. மனிதர்கள் இறக்கும்போது, உடல் மட்டுமே அழிகிற நாம்; ஞாபங்கள் காற்று வெளியில் பரமாணுத் துகள்களாகப் பத்திரமாக இருக்கின்றனவாம். இதிலிருந்து தெரிவது என்ன, ஞாபங்கள் ஒரு போதும் அழிவதில்லை. அவன் மூஞ்சியில் முழிக்கப் பிடிக்காமல், கதவை வெறுமனே சாத்திவிட்டு, உறங்கத் தலைப்பட்டேன். உறக்கம்தான் வரவில்லை. சௌரி வருகிறான். துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு, கதவை ஓசையெழாமல் முடிவிட்டு, குளியலறைக்குப் போகிறான். பற்பசை, சோப்பு இவற்றின் கலவையான மணம் அறைக்குள் பரவி, அவன் திரும்பி வந்துவிட்டதைக் குறிப்பு உணர்த்துகிறது. அ€றைவாசலுக்கு அருகிலுள்ள மேஜை நாற்காலியில் உட்கார்ந்து படிக்கத் தொடங்குகிறான். சனியன் பிடித்தவன். மேலேந்தின கூழாங்கற்களாமே..... கருமையின் கவின்மிகு கதிர்வீச்சாமே.... காம்புகளின் காந்த ஈர்ப்பாமே... நண்பனின் தங்கை மேல் கௌரவமான அபிப்பிராயம் இல்லை. தலைகாணி தலைகாணியாய்ப் புஸ்தங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது. நடு ராத்திரிவரை படிப்பதென்ன வேண்டிக்கிடக்கிறது. நாளைக்குச் சொல்லிவிட வேண்டும். பத்து மணிக்கெல்லாம் விளக்கை அணைச்சுடுறா. தூக்கம் வரமாட்டேங்குது. சொல்லி விட வேண்டியதுதான். வேறு அறை பார்த்துக் கொண்டு போவதானால் போகட்டுமே. அல்லது நான் கூட வேறு அறை பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பச்சை அட்டைத் தலைகாணியைத் தான் படிக்கிறான். சும்மாப் புரட்டிப் பார்த்தபோது, புத்தகம் ஆரம்பிக்கும் பக்கத்தில் ஒரு பாலைவனம் பற்றி நெடுக வர்ணித்திருந்தது. மணற் கடல் என்கிற மாதிரிச் சொற்றொடர்கள்..... சாவதானமான காற்று மணற் புயலாக மாறும் சாத்தியக் கூறுகள், ஒட்டகங்களில் பயணிக்கும் யாத்திரைக் குழுக்கள்... அபூர்வமாகத் தட்டுப்படும் பேரீச்சை மரச் சோலைகள்... உஷ்ணம் குளிர் இரண்டினுடையவும் அதீத உச்சநிலைகள்... ஆங்கிலப் புத்தகம். எப்போதோ தூங்கிவிட்டிருக்கிறேன். புரண்டு படுத்திருபேன் போல, லேசாக உறக்கம் கலைந்ததில், கண்களின் அரைத் திறப்பு வழி நான் பார்த்தது என்ன என்கிறீர்களா? சௌரி, சௌரிராஜன், என் அறைத் தோழன், என் மாஜி நண்பன், திறந்திருந்த அந்தப் பச்சை அட்டைப் புத்தகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தான். முதுகுத் தண்டு வெடவெடத்தது எனக்கு. உடல் முழுக்க நடுங்க, கண்களை அகலத் திறந்து பார்க்கிறேன். வெற்று நாற்காலி. மல்லாந்து கிடக்கும் புத்தகம். திறந்து கிடக்கும் கதவு. அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் அடர்ந்திருக்கும் இருள். நிசப்தம் ரகசியமாக அறைக்குள் வந்துபோகும் முன்னிரவுக் காற்று. ஒரு கணம் ஏக்கமாக இருந்தது. என்ன இருந்தாலும் நண்பனில்லையா. உடனடியாகத் தோன்றிவிட்டது. நட்பை விடவும் ரத்தபந்தம் உசத்தியானது. Blood is thicker than water ...... சண்டாளன். பாலைவனத்துக்குள் நுழைத்திருக்கிறான் பொசுங்கிச் சாகட்டும். அறைவாசலுக்கு எதிர்புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்... ராகவன் என்னுடைய நெருங்கிய நண்பன் தான். ஆனாலும் அவன் சொல்வதை நீங்கள் முழுக்க நம்ப வேண்டியதில்லை என்றே சொல்வேன். கொஞ்சம் ஊதிப் பெரிதாக்கித்தான் எதையுமே அவனால் சொல்ல முடியும் என்பதோடு, மேற்படி நிகழ்வு அவன் பெரும் தொந்தரவுக்கு ஆளாகியிருந்தபோது நடந்தது. ஆகவே, அறுபது முதல் எழுபது சதவிகிதம் தள்ளுபடி செய்துவிடலாம். என்றாலும், தன் தரப்பைப் பொதுவில் வைத்துவிட்டான் அவன் என்பதால், என் தரப்பை நானும் கூறித்தான் ஆக வேண்டும். இப்போதே இங்கேயே. சொற்களுக்கு அர்த்தம் உரைக்கும் அகராதியிலேயே எதிர்ச் சொற்களும் இருக்கிற மாதிரி. அத்தியந்த நண்பர்கள் என்பதாலேயே ஒரே அறையில் தங்கியிருந்தோம் நாங்கள் இருவரும். ஆனால், அவன் பிரஸ்தாபித்தானே, அந்த இரவு கவியும் வரை. மறுநாள் காலையில், தான் வேறு அறைக்கு மாற்றிச் செல்வதாகத் தெரிவித்தான் ராகவன். நானும் மறுக்கவில்லை. ஏனென்றால், அந்த நாட்களில் அவனுடைய நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. பாதி செருகிய கண்களில் வெறுமை கூடியிருந்தது. ஒழுகும் மூக்கைப் பற்றிப் பிரச்ஞையில்லாதவனாய் இருந்தான். வெட்டிச் சீராக்கப்படாத தலைமுடி நிரந்தரமாகக் கலைந்து கிடந்தது. எரிந்து முடிகிற சிகரெட்டிலிருந்து அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்தான். டீயோ, காப்பியோ, எப்போது குடித்தாலும் இரண்டு கோப்பைகள் வாங்கிக் குடித்தான். எதைப் பேசினாலும் இரண்டிரண்டு தடவைகள் சொன்னான். உச்சமாக மழைத்தண்ணீர் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்லி. ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையிலிருந்து வழியும் அழுக்கு நீரைக் கையிலேந்திக் குடித்தான். மொத்தத்தில், அழுத்தமான ஏதோ ஒன்று நடப்பதற்காகக் காத்திருப்பவன் போல இருந்தான். அது நடந்துவிட்டால் போதும். சுவாதீனம் முழுக்கப் பிறழ்ந்துவிடும். அந்த ஒரு புத்தகத்துக்குள் நான் நுழைந்து விட்டதாகச் சந்தேகப்பட்டானில்லையா, அது எனக்கு அப்போது தெரியாது. சற்றுப் பிற்பாடு தெரிய வந்தபோது ராகவனை நினைத்து மிகவும் கவலையும் வேதனையும் பட்டேன். அவனை ஏதோ பீடித்திருக்கிறது என்பது போக, புத்தகத்துக்குள் நுழைவதைப் பார்த்து மிரண்டிருக்கிறானே, பாவம், என்று தோன்றியது. புத்தகத்துக்குள் மட்டுமில்லை, ஓவியங்களுக்குள் கூட நான் நுழைந்திருக்கிறேன். ஸால்வடார் மாலியின் ஓவியம் ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பருந்தின் பார்வையில் சித்திரிப்பது. சிலுவையேற்றம் நடந்த அந்தப் பிராந்தியத்தில், அந்த நாளில் சென்று இருக்காமல் அந்த ஓவியத்தைப் பார்க்க முடிந்ததில்லை எனக்கு. சொல்லப் போனால், ஒலியினூடாகச் செல்வது கூட சாத்தியம்தான். ஸரோட் கச்சேரி ஒன்றை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்த போதுதான் தெரிந்தது. அத்தனை நேரமும் நான் இருந்தது. இசை அரங்கத்தில் அல்ல, இசைத்தவரின் மனோதர்மத்துக்குள் என்று. சில பேருக்கு இவையெல்லாம் பொழுதுபோக்குகள். வேறு சிலருக்கு பிரயாண மார்க்கங்கள். ஆக, நான் புத்தகத்துக்குள் நுழைந்ததை ராகவன் பார்த்தது சரிதான். ஆனால், நான் நுழைந்த இடம் பற்றி அவன் கூறியது சரியில்லை. உண்மையில் நான் போனது பாலைவனத்துக்கு அல்ல. அடர்ந்த வனம். சம்பல் பள்ளத்தாக்குக்கு. சென்று நூற்றாண்டின் ஆரம்பத்தில். மனிதகுல வரலாற்றில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றிய தொகுப்பு அந்தப் புத்தகம். நிர்வாணமாகக் கால்பந்து விறையாட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், ஏர் நுகத்தில் பூட்டி ஊழப் பயன்படுத்தப்பட்டவர்கள், ருதுவான மாத்திரத்தில் பிறப்புறுப்பை முட்டித் தைக்கப் பட்டவர்கள், நூற்றிச் சொச்சமாவது ராணியாக அந்தப்புரத்தில் அலிகளின் காவலில் இருந்த அரசிகள், மேலாடை இன்றி ஒட்டகப் பந்தயத்தில் ஓட்டுநர்களாகப் பணிக்கப்பட்டவர்கள், விருந்தினர்களுக்கு உபசாரமாகப் படைக்கப்பட்டவர்கள், சந்தைகளில் நிறுத்தி ஏலம் விடப்பட்டவர்கள்.... உறவியல் ரீதியாகப் பெண்கள் தரும் இதத்தை அனுபவித்தவாறே, உடலியல் ரீதியாக அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டதைச் சொல்லும் மானுடவியல் வரலாறு அந்தப் புத்தகம். சென்ற தடவை போலவே, பழுப்பேறிய செம்மண் தரையாக விரிந்த வனத்தினுள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன். நல்ல கோடை, வெய்யலில் தோள் பொசுங்குகிறது. இலை உதிர்ந்த கிளைகளை, இறைஞ்சும் கைகளாக ஆகாயம் நோக்கி விரித்திருந்த மரங்கள், வியாதி பீடித்த சருமம் போலப் பாளம் பாளமாக வெடித்திருந்த மரப் பட்டைகள். கருகி நின்ற குட்டைச் செடிகள். புதிய இடத்தில் அறியாத்தன்மைக்குள் காரணம் தெரியாமல் பகல் முழுக்க நடந்து கொண்டேயிருக்கிறேன். அந்தி கவியும் நேரத்தில், மனிதர் வாழ்ந்திருந்த இடம் என்பதற்கு ஒரே சாட்சியம் போல, சிதிலமாகியிருந்த குட்டிச் சுவர்த் தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது. கூரையும் கதவுகளும் இல்லாது பகுக்கப்பட்ட வெற்று வெளிப் பாத்திகள், மேகம் போல நிறைந்திருந்த நிசப்தம். பீதியூட்டிய அமானுஷ்யம். அதைக் கூட்டும் வகையில், சுவருக்குப் பின்னாலிருந்து விசிக்கும் ஒலி கேட்டது. அவ்வப்போது மூக்கை உறிஞ்சியவாறு கேவும் பெண் குரல். அந்த முன்னால் வீட்டின் நிலைவாசலைப் தயங்கித் தயங்கித் தாண்டி நுழைந்தேன். அவள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். முன்பு பார்த்த அதே நிலையில். வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை உடல் முழுவதும் பூட்டியிருந்தாள். பல வருஷங்கள் ஆகி விட்டன என்பதால், ஆடை எதும் உடுத்தியிருந்தாளா என்று ஞாபகமில்லை இப்போது. வெள்ளி மினுங்கிய இடங்கள் போக மற்ற இடங்களில் பளபளக்கும் அட்டைக் கறுப்பு நிறத்தவளாக இருந்தாள் என்பது மட்டும் நினைவிருக்கிறது. நான் வரும் ஓசை கேட்டுத் தலை நிமிர்ந்தாள். மாலை மாலையாகப் புதிய கண்ணீர்த்தலைகள் கன்னத்தில் வழிந்திறங்கின. பல நூற்றாண்டுகளாகத் தேங்கிய துயரம் வெளியேறுவதாகப் பட்டது எனக்கு. மாற்றவியலாத நியதிபோல. இந்த முறையும் கேட்டேன். யாரம்மா நீ? இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய். நான் ஸவிதா .... இங்கிருந்து ஐம்பது கல் தொலைவில் உள்ள ஜமீனைச் சேர்ந்தவள். இந்த இடத்தில் என்ன செய்கிறான்? ஒளிந்திருக்கிறேன். என்ன? ஆமாம். நான் குற்றம் இழைத்தவள்தான். ஆனால், குற்றவாளியல்ல. பின்னே? முழுக்கச் சொன்னால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள், மூச்சிரைக்கச் சொல்லத் தொடங்கினாள். ....ஐயா எங்கள் ஜமீனில் நாலாயிரம் குடும்பங்கள் இருந்தன. ஜமீந்தார் மிகவும் நல்லவர். வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகள் எதிலும்குறை வைக்காவர். ஆனால், உடம்புக்கு மாத்திரம் வசதிகள் இருந்தால் போதுமா. மனதுக்கு வசதியில்லாத இடம் நகரமாகத் தோன்றாதா? ஒரு விசித்திரமான வியாதி ஜமீந்தாருக்கு. எங்கள் ஜமீனில் திருமணமாகும் எந்தப் பெண்ணுக்கும் முதலிரவு ஜமீந்தாருடன் தான் நடக்க வேண்டும். ஜமீந்தார் கடவுளின் அவதாரம் என்பதால் அவருக்குத்தான் முதல் படையலாம். வெகு விசேஷமான சன்மானங்கள் எல்லாம் வழங்குவார்தான். அவற்றை அனுபவிப்பதற்கான மனோ நிம்மதி மட்டும் இல்லாமல் போய்விடும். என்னுடைய திருமணத்தன்றும் சாயங்காலம் ஊரே திரண்டது. ஷெனாயும் பக்வாஜூம் ஒலிக்க ஊர்வலமாய் நடந்து, என்னை ஜமீன் அரண்மனை வாசலில் கொண்டு நிறுத்தியது. முதல் தவையாக ஒரு ஆடவனின் முழுமையான ஸ்பரிஸத்துக்கு ஆயத்தமாகும் பெண்ணுக்கு இயல்பாகவே இருக்கும் பயத்தோடு, உபரியான வெறுப்பும் எங்கள் ஊர்ப்பெண்களுக்கு இருக்கும். என் விஷயத்தில் கூடுதலான அச்சமும் கலந்திருந்தது. என் குடும்பத்தை ஜமீந்தாருக்குப் பிடிக்காது. காரணம், இறந்துவிட்ட என் அண்ணன். அவனுடைய புது மனைவியை ஜமீனுக்கு அனுப்ப வேண்டி வந்தபோது, ஜமீந்தாரை எதிர்த்துப் பேசிவிட்டான் அவன். போன மாதம் உங்கள் மகளுக்குத் திருமணம் நடந்ததே, முதல் ராத்திரியை உங்களுடன்தான் கழித்தாளா அவள்? என்று கூடியிருந்த ஜனங்கள் முன்னிலையில் கேட்டு விட்டான். பதறித் துடித்துவிட்டது. ஊர் உச்சகதியில் எழும்பிய கூச்சல்கள் அடங்கிய பின், ஊர் ஜனங்களே அவனுடைய மனைவியைத் பறித்துப்கொண்டுபோய் ஜமீந்தாரிடம் ஒப்படைத்தார்கள். மறுவாரமே திருட்டுப் பட்டம் கட்டிக் கொன்றுவிட்டார்கள் என் அண்ணனை.... பெருமூச்சு விட்டான். வெள்ளிச் சரங்களுக்குக் கீழ் மதர்த்த மார்புகள் ஏறித் தாழ்ந்தன. துயரத்திலும் எத்னை வடிவாகத் தெரிகிறாள் என்று நினைத்துக் கொண்டேன். அவள் தொடர்ந்தாள். ..... என்னவெல்லாம் பட வேண்டியிருக்கமோ என்ற கிலேசத்துடனே அந்த அறைக்குள் நுழைந்தேன். ஜமீந்தாரின் படுக்கையறை எங்கள் ஊரின் கதிரடிக்கும் பொட்டல் போல விஸ்தாரமாயிருந்தது. அரக்கு நிறத் திரைச் சீரைகள். அரக்கு நிற வெல்வெட் படுக்கை விரிப்பின் மேல் வாசனைப் பூக்கள் இறைந்திருந்தன. சாம்பிராணிப் புகையின் நறுமணம் மயக்கியது. ஒரச் சுவரின் அருகில் தயங்கி நின்றிருந்தவளின் தலைக்கு மேல் குருவியொன்று கத்தும் சப்தம் கேட்டது. திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தேன். விசித்திரமான கடிகாரம் ஒன்றின் கீழ்ப் பகுதியில் உள்ள கூட்டிலிருந்து வெளிவந்து ஒசையெழுப்பிவிட்டு உள்ளே சென்று மறைந்தது அந்த மரக்குருவி. ஜமீந்தார் தனியாக வரவில்லை. அவருடைய மெய்க் காப்பாளன் போல உடனிருக்கும் மல்லன் ஒருவனுடன் வந்தார். விரோதியின் குடும்பத்துப் பெண்ணாம் நான். என்னைத் தீண்டுவதே பாவமாம். மல்லன்தான் என்னை ஆளப் போகிறான். அதிகாரம் கைக்கேறிவிட்டால், அவமானப் படுத்துவதற்கு எத்தனை நூதனமான யுக்திகளெல்லாம் தோன்றுகின்றன பாருங்கள்? நிர்க்கதி என்று சொல்வார்களே, அதை முழுமையாக அனுபவித்தேன் அன்று, பெண்ணாகப் பிறந்ததை, அந்த ஜமீனில் பிறந்ததை, என் அண்ணனுக்குத் தங்கையாக பிறந்ததை, கடவுள் என்ற ஒருவர் இல்லாத உலகத்தில் பிறந்ததை நினைத்து என் மனம் மறுகிக் கொண்டிருக்க, மல்லனின் கைகளில் என் உடல் ஆட்பட்டுக் கிடந்தது. மனதில் ஒடிய எண்ணங்கள் கண்ணீராய் வழிவதை, உடல் வலியின் விளைவு என்றெண்ணிக் குதூகலித்தனர் என்னைக் கையாண்ட மல்லனும் பொறுமையாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஜமீந்தாரும். முதல் சுற்று முடிந்ததும் என் கையால் மது ஊற்றிக் கொடுக்கச் சொன்னார்கள். மிதமிஞ்சிக் குடித்தார்கள். கிறங்கிச் சாய்ந்தார்கள். ஐயா, வனத்தினுள் போய் சுள்ளி பொறுக்கியும், காட்டுப்பழங்களை உதிர்த்துப் பொறுக்கியும் ஜீவனம் நடத்தும் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். பத்துப் பதினைந்து பெண்களாகச் சேர்ந்துதான் போவோம் எப்போதும், காட்டுப் பன்றிகளும், முள்ளம்பன்றிகளும், ஓநாய்களும், கரடிகளும் எங்களைக் கடந்து போவதைச் சர்வசாதரணமாகப் பார்த்திருக்கிறேன். ஒரு தடவை புலியைக் கூடப் பார்த்துண்டு. நின்று, நிதானமாய் எங்களை வெறித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டது. அத்தனை ஜீவராசிகளிடமும் தப்பியவள், என் இனப் பிராணிகளிடம் சிக்கிக் கிழிபட நேர்ந்ததே என்று துக்கம் மேலிட்டது எனக்குள். அப்போதுதான் அந்த முடிவெடுத்தேன். நான் பட்ட கஷ்டம் வேறு யாருமே படக்கூடாது இனி. பழங்கள் வெட்டுவதற்காக மேஜை மேல் வைத்திருந்த குறுங்கத்தியை எடுத்துக் கிறங்கிக் கிடந்த ஜமீந்தாரின் குரல்வளையில் பாய்ச்சினேன். சத்தம் கேட்டு எழ முடியாமல் போதையில் புரண்ட மல்லனின் ஆணுறுப்பைத் துண்டித்து வீசினேன். நல்லவேளை. யாரும் பார்க்கவில்லை. நடந்து செல்லும் வழியாக ரகசியமாக வெளியேறினேன். என் ஊரை விட்டு. என் வனத்தை விட்டு என் காலத்தை விட்டு. என் ஊர்ப் பெண்கள் என்னைக் காவல் தேவதையாக்கி வழிபடுகிறார்களாம். என் திருமணம் நடந்த நாளில் விரதம் இருந்து படையல் வைக்கிறார்களாம் ஊரில் பாதிப் பெண் குழந்தைகளுக்கு என் பெயர்தான் இடப்பட்டிருக்கிறதாம். காற்றில் வருகின்றன சேதிகள். எனினும் நான் கொலையாளிதானே. இதோ ஒளிந்திருக்கிறேன். காட்டிக் கொடுத்துவிட மாட்டீர்களே.. சௌரீ..... சௌரீ..... முதலில் யார் என்று புரியவில்லை சௌரிராஜனுக்கு. வாசலைப் பார்த்தான். தூங்கிக் கொண்டிருக்கும் ராகவனைப் பார்த்தான். மறுபடி புத்தகத்துள்குள் ஆழ்ந்தான். நாலைந்து தடவை கூப்பிட்டுப் பார்த்தும் பலனில்லாமல் போனதால் மறுபடியும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. சௌரீ.... நான் தான் குருவி. கடிகாரக் குருவி பேசுகிறேன்.... அவன் கண்களில் மிரட்சி. புத்தகத்தைக் சடுதியாக மூடினான். என்ன, நம்ப முடியவில்லையா. தலையை லேசாகக் குனிந்து கொண்டவன், மெதுவாகச் சொன்னான். ஆமாம். என்னப்பா இது, ஓவியத்துக்குள் நுழையலாம், மரக்குருவி பேசச் கூடாதாக்கும். அசட்டுத்தனமாகச் சிரித்தான். நீ பேசுவாய் என்று எதிர்பார்க்கவில்லை. சரிவிடு. எதிர்பார்த்துத்தான் நடக்கிறதா எல்லாம்? என்ன சொல்கிறாய்? இதோ தூங்குகிறானே உன் சினேகிதன். அவன் உன் மேல் ஆத்திரமாக இருக்கிறான். அடடே ஏன்? சாயங்காலம் உன் டைரியை எடுத்துப் படித்து விட்டான். அதற்கு நானல்லவா கோபித்துக்கொள்ள வேண்டும்? அதில் அவன் தங்கையைப் பற்றித் தாறுமாறாக எழுதியிருக்கிறாயாம். அடக் கடவுளே. அந்தப் பெண்ணைப் பற்றி நான் ஏன் ஏழுதவேண்டும்? உனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது. ராகவனுக்குத் தெரியவில்லையே... எந்தத் தேதியிலாம்? அக்டோபர் ஆறு. சௌரிராஜன் அக்டோபர் ஆறு ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதற்கு மேல் ஒன்றும் பெயரிவில்லை. என்னப்பா குழம்புகிறாய்! அன்றுதானே ராகவன் வீட்டுக்குப் போனது? அங்கிருந்து ஹ"க்கின் பாதம்ஸ் போகவில்லை? அட, ஆமாம்..... அதுசரி, உனக்கெப்படித் தெரிகிறது இதெல்லாம்? எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது சௌரி. சௌரி சிரித்தான். கடவுள் மாதிரியாக்கும் நீ? வைத்துக் கொள்ளேன். ஒருமையில் சொல்லாதே. மாபெரும் கூட்டத்தின் பிரதிநிதிதான் நான். ஓஹோ. உங்களுக்கு வால் கழன்று, ரோமம் உதிர்ந்து, பல் உள்ளடங்கி, இப்போதைய வடிவத்துக்கு நீங்கள் வந்திருக்கிற மாதிரி எங்களுக்கும் வளர்ச்சிப் பாதை ஒன்று உண்டு. என்னுடைய கொள்ளுப் பாட்டனின் பாட்டன் மணல் நிரப்பின குடுவையாய் இருந்தார். அவருடைய ஒன்றுவிட்ட தம்பி, நீர் சொட்டுகையில் சுழலும் சக்கரமாய் இருந்தார். அவருடைய தாத்தா, மைதானத்தின் நடுவில் நட்டுவைத்த கம்பமாய் இருந்ததாய்ச் சொல்வார்கள். குருவிகளைப் பற்றியா சொல்கிறாய்? அட கிறுக்கா. குருவியென்றால் உணவு கொள்ளவும், உயிர்பெருக்கவும் மாட்டோமா? சௌரி கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தான். பிறகு கேட்டான். போகட்டும். அவன் படித்த குறிப்பில் என்ன எழுதியிருந்தேனாம்? மேலேந்தின கூழாங்கற்கள்.... கருமையின் கவின்மிகு கதிர்வீச்சு... காம்புகளின் காந்த ஈர்ப்பு.... அடப்பாவி. அது அவன் தங்கையைப் பற்றிய வர்ணனை என்றா நினைக்கிறான். ஸவிதாவை முதல் தடவை பார்த்த போது எழுதியதல்லவா அது? ராகவனைத் திரும்பிப் பார்த்தான் சௌரிராஜன். சந்தேகத்தைத் தலையணையாய் வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானே என்று தோன்றியிருக்கும். தூக்கத்தில் வெகுளி பூண்ட முகத்தைப் பார்க்கப் பாவமாய் இருந்ததோ என்னவோ. அது கிடக்கட்டும்.... வாதைப்படும் ஒரு பெண்ணைச் சந்தித்ததை எழுதும்போது, இப்படியா அவள் உடம்பைப் பார்த்துக் கிறங்குவது? அட, வேணுமென்றா கிறங்குகிறோம். இதைப் சொல்கிறாய். ஒரு தடவை இடுகாட்டுக்ப் போயிருக்கிறேன். சாயங்காலம். மனம் முழுக்கத் துயரம் நிரம்பியிருக்கிறிது. இடுகாட்டு அரசமரத்திலிருந்து சிலுசிலுவென்று காற்று வீசியது. உடம்புக்கு எவ்வளவு இதமாய் இருந்தது என்கிறாய்.... என் சிநேகிதன் ஒருத்தன் கவிதை எழுதியிருக்கிறான்..... கண்ணீர் உருளும் பெண்ணின் கன்னம் அழைக்கிறது என்னை முத்தமிட.... தொடர்ந்து, ஆதங்கத்துடன் கேட்டான். அது சரி, உனக்குத்தான் தெரிகிறதே. நீயாவது அவனிடம் விளக்கியிருக்கக் கூடாதா? நான் பேசுவது எல்லாருக்கும் கேட்காதே. கேட்பவருக்கெல்லாம் புரியவும் செய்யாதே. ரொம்ப மர்மமாகப் பேசுகிறாய். நிஜ வாழ்வு இன்னும் மர்மமானது சௌரி. அப்படியா. ஆமாம். அந்தப் பெண் ஸவிதா, தான் செய்த கொலைகளை யாருமே பார்க்கவில்லை என்கிறாளே, நீயும் நம்புகிறாய் தானே? ஆமாம். அதுதான் இல்லை. நான் பார்த்தேன் .... குக்... குக்... குக்...........
அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நான் அடம்பிடிக்கத் தொடங்கினேன். அத்தை எனக்குள் வசீகரமாய் இருந்தாள். ஆனாலும் அதை ஒரு திட்டமிடலோடு செய்ய வேண்டியிருந்தது. உயரமான, பெரிய விழிகளோடு பெண்களின் அழகுகளாக வர்ணிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலை கொண்டவள். எங்களுக்கும் அத்தை வீட்டுக்கும் உறவு அறுந்துபோயிருந்தது. அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. அப்பாவைவிட நான்கு வயது மூத்தவள்... நான்கே நாள் பழக்கத்தில் ஒரு ஆணோடு ஓடிப்போனவள்........ தகுதியற்ற சேர்மானத்தை கொண்டிருந்தவள் என்ற காரணமே போதுமானதாக இருந்தது அப்பாவுக்கு அப்போது 18 வயது..... தகப்பனற்ற வீட்டில்... இப்படியொரு சம்பவம் நடந்ததால் அதை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது அப்பாவுக்கு... அதிலிருந்து அப்பா இந்த உறவை வேண்டாம் என்று முற்றிலுமாக புறக்கணித்து இருந்தார். அப்பாவுக்கு திருமணம் நடந்தபோத கூட அத்தைக்கு அழைப்பில்லை. அதன் பிறகு அக்கா பிறந்தாள். பிறகு நான் பிறந்தேன். அதுவரைக்கும் அத்தை எங்கள் ஊர்ப்பக்கம் வரவில்லை. எனக்கு 10 வயது இருக்கும்போது எங்கள் ஊர் சீனிவாசன் அத்தையை டவுனில் பார்த்து பேசி இருக்கிறார். அடுத்த மாதமே தன் வீட்டில் நடக்கும் காதணி விழாவுக்கு அத்தைக்கு பத்திரிகை வைத்தார். அந்த வீட்டிற்கு வந்த அத்தை என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். அத்தையின் கண்களிருந்து நீர் வடிந்தது. குழுமியிருந்த பெண்கள் எல்லாம் என்னிடம் "உங்க அத்தைடா" என்று சுட்டினார்கள். அத்தை அழுததற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை. அத்தை என் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டாள். அப்போது அம்மா என்னைப் பார்த்து கோபப்பட்டதை அம்மாவின் கண்கில் தெரிந்த "அனல்" உணர்த்தியது.. அதற்கு பிறகு ஊரிலிருப்பவர்கள் அத்தைக்கு மறக்காமல் அழைப்பு விடுத்தார்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு. அப்போது எல்லாம் அக்காவுக்கும் எனக்கும் தின்னுவதற்கு என்று ஏதாவது வாங்கி வந்திருப்பாள். அம்மா பேச்சைக்கேட்டு அக்கா அந்த தின்பண்டங்களை புறக்கணித்தாள் என்றாலும், நான் அவற்றை தின்றுவிடுவேன். இப்படியாக தொடர்ச்சியாக வந்தபொழுதெல்லாம் அம்மா கூட அவளிடம் பேசவில்லை. அத்தை பற்றிய பேச்சுக்களை முற்றிலுமாக அம்மா தவிர்த்தே வந்தாள். அத்தை பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் மிகவும் விவரிக்க முடியாத பெருந்துயரத்தை கொண்டதாகவே தோன்றியது. இதற்கிடையில் பத்து ஆண்டுகள் அத்தை எங்கள் ஊருக்கு எந்த விஷேங்களுக்கும் வரவில்லை. ஊரிலிருப்பவர்கள் மறக்காமல் அவளுக்க அழைப்பு அனுப்பியபோதும் அத்தை வரவில்€ல். சிலர் அத்தைவீடு மிகவும் வசதியாகிவிட்டதாகவும், நில புலன்கள் பெருகிவிட்டதாகவும், அரவை மில், மாடி வீடு என்று சுபவாழ்வு வாழ்வதாகவும் என்னிடம் சொன்னார்கள். இதற்கிடையில் நான் பிளஸ் டூ வகுப்பை முடித்து விட்டிருந்தேன் நான் எடுத்திருந்த மதிப்பெண்கள் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு கல்லூரியில் "சீட்" கிடைக்கவில்லை. சும்மா ஊர் பேருந்து நிலையத்தில் என்னையொத்த சிலரோடு உட்கார்ந்து வெட்டிக்கதைகள் பேசிக்கொண்டிருந்த நாளில்தான் அத்தையை எதேச்சையாக சந்திக்க நேரிட்டது. அத்தை உயரம் அப்படியே இருந்தாலும் அவளின் நீண்ட கூந்தல் குறைந்து முக வசீகரம் குறைந்து இருந்தது. உதடுகள் உலர்ந்து முதுமையை அடைந்திருந்தாள். பத்தாண்டுகளுக்கு முன்பாக அத்தை பற்றிய எனது சித்திரம்..... மிகப் பெரிய இடைவெளியை உணர்த்தியது. அத்தை எளிதாக என்னை அடையாளம் கண்டவள் பக்கத்து ஊரில் ஒரு விஷேசத்துக்கு செல்வதாகவும் என்னை பார்த்ததும் பஸ்சிலிருந்து இறங்கிவிட்டதாகவும் சொன்னாள்.... என் படிப்பைப்பற்றி கேட்டாள், ஒழுங்காக படிக்கச் சொல்லிவிட்டு.... ஒரு மணி நேரமாக என்னைப்பார்த்து சில வார்த்தைகள் மட்டும் பேசினாள்...... மாமாவுக்கு நாலு வருசமாக உடம்பு சரியில்லை. எங்க வீட்டுக்கு நீ.... வர்றீயா என்று கெஞ்சலுடன் கேட்டாள். ஒங்கப்பன் இப்படி அக்கா பாசம் இல்லாமல் இருக்கான்.... நீயாவது அத்தை மேல பாசமா....இருடா....என்று கடிந்தாள்...... எப்ப ராசா என் வீட்டுக்கு வர்றே......இருபத்தைஞ்சு வருசமாயிட்டுடா இந்த உறவு அறுந்துபோயி," என்றபடி அவள் கண்கள் ஈரமாகின. அதை நான் விரும்பவில்லை " வர்ற வாரம் சனிக்கிழமை கண்டிப்பா நான் வர்றேன்" என்று உறுதியளித்தேன். அத்தை போய் விட்டிருந்தாள். வீட்டில் தொடர்ந்து பேசத் தொடங்கினேன். அத்தையை நான் பார்த்ததைப் பற்றியும். அத்தையோடு பேசியது குறித்தும்தெரிந்த, அப்பா என்னோடு பேசுவதை நிறுத்தியிருந்தார். நான் வெட்டியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. என் பேச்சு அவருக்கு எரிச்சலூட்டுவதாகவும் சமயங்களில் கோபத்தை அளிப்பதாகவும் இருந்தது. அம்மா முகம் சுளித்தாள். அக்காவுக்கு திருமண ஏற்பாட்டை துரிதப் படுத்திக் கொண்டிருந்தார் அப்பா. "நான் அத்தை வீட்டுக்குப் போகிறேன்" என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதை அம்மா பெரிதுபடுத்தாமல் இருந்தாள். பணம் வேண்டும் என்பதை அம்மாவிடம் தெரிவித்தேன். அவளிடம் திரும்ப திரும்பச் சொல்லி அத்தை வீட்டுக்கு செல்வதை உறுதி செய்து ஓரிரு நாள் தங்கிவிட்டு வரும் எண்ணத்தோடு கிளம்பினேன். தெற்கே 120 கி.மீ தூரத்தில் இருந்தது அத்தையின் கிராமம். முதன் முதலாக தனிமை பயணம் மிகவும் இன்பத்தை கிளர்த்தியது. மூன்று பஸ் பிடித்து.... அந்த மேட்டு கிராமத்துக்கு நான் சென்றபோது மாலையாகியிருந்தது. கிராமத்துக்குள் நுழைந்தபோது தார் சாலை முடிவுற்று போயிருந்தது. மண் சாலைகளில் நடக்கத் தொடங்கினேன். எதிரே தென்பட்டவர்களிடம் அத்தையின் பெயரைச் சொர்லி "வீடு எங்கே இருக்கிறது" என்று நான் கேட்ட போது அவர்கள் "முதலில் நீ யார்?" என்று கேட்டார்கள். " தம்பி மகன் " என்று அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் நம்புவதற்கு தயங்குவது போல் இருந்தது. அத்தையின் பெயரைச் சொல்லி.... குடத்தோடு நீர்பிடிக்க வந்த பெண்ணிடம் கேட்டேன்.... இந்தா....... கடைசி மெத்தை ஓடு என்றாள். தெற்கு பார்த்த வீடு...... கச்சிதமாக திண்ணை..... இரண்டு ஆட்டுக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. வர்ணங்கள் அற்ற கதவு வெள்ளை மட்டும் அடிக்கப்பட்டிருந்தது. திருஷ்டி பொம்மை நிறம் மங்கி. முகப்பு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. வாசலில் நின்று " அத்தை " என்றேன்..... ஒரு முகம் மட்டும் தெரிந்தது. அடுத்த நொடிப்பொழுதில்... அத்தை கையில் கரண்டியோடு ஓடிவந்தாள். சோற்றை கிண்டியிருக்க வேண்டும் பதம் கவனிக்கும் பொருட்டு.... என்னை பார்த்ததும் பாசத்தின் நெகிழ்வில் கண்கள் கசிந்தன. சட்டென்று என் கையிலிருந்த் "பேக்" கை வாங்கிக் கொண்டே உள்ளே அழைத்தாள். "பாருங்கடி இதுதான்..... உங்க மாமா" என்றாள். இரண்டு பெண்களும் என்னைப் பார்த்ததும் லேசாக சிரித்தார்கள். பெரியவள் என்னிடம் பேச வேண்டும் என்ற நோக்கில் "வாங்க" என்று மெலிதாகச் சொன்னாள்... சின்னவள் என்னிடம் சகஜமாக உரையாடத்தொடங்கினாள். அத்தையின் மகன் மில்லுக்குப்போயிருப்பதாகவும் இப்போது வந்துவிடுவான் என்றும் அத்தை சொன்னாள். என்னைக் கண்ட ஆனந்தத்தில் வீடு களைகட்டத் தொடங்கியது. "மாமா எங்கே?" என்றேன் அத்தை என்னை "வா" என்று அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள்சென்றாள். மரக்கட்டிலில் இருமியபடி மாமா படுத்திருந்தார். என்னை பார்த்து யாரென்று அத்தையிடம் கேட்டார். உடல் நலிந்து மூச்சுவிட திணறியபடி கிடந்தார். என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு அடுத்த நிமிடமே தலையை கீழே கவிழ்த்துக் கொண்டார். நான் அத்தையிடம் கேட்டபோது கதை கதையாகச் சொன்னாள். மாமா இப்படிப் பட்ட இலட்சிய மனிதரா? என்பது வியப்பளித்தது. அப்பாவை கீழ்த்தரமான மோசமான மனிதர் என்ற நினைத்து கடிந்து —க்‘ண்டேன். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபோது, விவரிக்க முடியாத பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கே பார்த்தாலும் கிளிகள் கூட்டம் கூட்டமாக மரங்களிலும் கிளைகளிலும் வீட்டுக் கூரைகளிலும் உட்கார்ந்து கத்தியபடி இருந்தன. அடுத்த நிமிடமே வாசலுக்கு வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன் பச்சை நிறம்.... கிளிகளின் தீராத பாடல் காற்றில் கலந்து கொண்டிருந்தது. தீவிர ரசனையோடு கிளிகளை பற்றி பேசினேன். அத்தைக்கு சிரிப்பு வந்தபோது அத்தையின் மூக்கு கூட கிளி மூக்கு போலிருந்தது. பெரியவளின் மூக்கு கூர்மையாக இருந்தாலும்... சற்று உள்ளங்டகியிருந்தது. கிளியின் வசீகரமும், நுனி சிகப்பும் இல்லாதிருந்தது. சின்னவளின் மூக்கு ஆண் கிளிகளின் மூக்கு போல சற்று முரட்டுத் தனமாய் எடுப்பாய் இருந்தது. அதிகாலையிலேயே கிளிகள் சிறகுதிர்த்து பறந்து பறந்து ஒரு மரத்திலிருந்த வேறோரு மரத்துக்குச் செல்வதும், பாடுவதும் விளையாடுவதுமாக இருந்தன. தானிய வயல்களிலிருந்து...... இங்கே கூட்டம் வருவதும்..... ஒரு கூட்டம் அங்கே சென்று தானியங்களை கொறிப்பதுமாக இருந்தது. நான் அத்தையிடமும், பெரியவளிடமும், சின்னவளிடமும் கிளிகளைப் பற்றியே பேசினேன். என் கனவுகளில் வந்து உரையாடிக் கொண்டிருந்தன கிளிகள். கிளிகளுக்கான தானியங்களான சோளங்களையும் கேழ்வரகுகளையும் அடுக்குப் பானைகளிலிருந்து அள்ளி வீசினேன். அத்தை என்னிடம் லேசாக கடிந்து கொண்டள். இவ்வூரில் அனேக பெண்களின் மூக்கு கிளிகளின் மூக்குப் போல் எனக்குத் தோன்றியது என்றாலும், அத்தை மகள் பெரியவளின் சினேகிதி ரஞ்சிதாவின் மூக்கு அப்படியே ஒரு கிளியிடம் கடன் வாங்கி வைத்தது போலிருந்தது. ரஞ்சிதா அடிக்கடி என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அத்தையிடம் எனக்கு ஒரு கிளி வேண்டும் என்று சொன்னேன். உள்ளூர் செல்லப்பாவிடம் சொல்லி இருப்பதாகச் சொன்னாள் அத்தை. அவன் "கண்ணிகள்" வைத்திருந்தான். ஆனால் கிளிகள் அதன் மூக்கால் அந்த கண்ணிகளைச் சேதப்படுத்தியிருந்தன. தோழனாக மாற்றிக் கொள்ள அவனை ஊருக்கு மேற்கே அவனிருக்கும் குடிசைக்கு போய் தினமும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் எனக்காக எப்படியாவது ஒரு கிளியை பிடித்து தந்துவிடுவதாக உறுதியளித்தான். ரஞ்சிதா எனக்கு கிளி வளர்க்கும் கூடு ஒன்றை அவளே தன் சுயமாக சிந்தித்து மூங்கில் குச்சிகளால் தயாரித்துக் கொடுத்தாள். அதிலிருந்த தொழில் நுட்ப வேலை மிகவும் உன்னதமான பாட்டுக்காரனின் அறிவை ஒத்திருந்தது. கிளிகள் சதா நேரமும்.... கீச்...... கிச் என்று ஒசையெழுப்பியபடி இருந்தது. கிராமமே ஒரு இசைக் குவியலில் மிதந்து கொண்டிருந்தது. வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும், கடும் உழைப்பாளிகளுக்கும் இந்த கிளிகள் பெரும் தொல்லையாக இருக்கிறது என்று கிராம பஞ்சாயத்து போட்டு கிளிகளை விரட்டுவது குறித்து பேசத் தொடங்கினார்கள். இவர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை என்று அத்தையிடம் கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள். செல்லப்பா கிளியோடு என்னைப் பார்க்க வந்தான். அதன் சிறகுகள் இரண்டையும் நறுக்கி விட்டிருந்தான். பறக்காது பயப்படாமல் வைத்துக் கொள்ளலாம் என்றான். கிளியின் வெதுவெதுப்பும், கோவை நிற சிகப்பு மூக்கும் எனக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இருக்கும் கிளிகளிடம் என் கையிலிருக்கும் கிளியை காட்டினேன். அதற்கு "செல்லம்மா" என்றொரு பேரும் வைத்தேன். ஊரிலிருந்து கிளிகளை விரட்டுவதற்கான ஏற்பாட்டை கிராம நிர்வாகம் எடுக்கத் தொடங்கி விட்டதாக அத்தை சொன்னாள், ஆனால் அதை நான் நம்பவில்லை. ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு செல்வது என்பது மறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தன. யாவற்றையும் மறந்தவன் ஆகி இருந்தேன். கிளிகளோடு என் பொழுதுகள் கரைந்து சொண்டிருந்தன. கிளியை என் அருகில் வைத்துக் கெண்டு தூங்கிக்கொண்டிருந்தேன். கிளி என்னிடம் பேசத் தொடங்கியிருந்தது. அப்பொழுது இரவு மெல்ல விடியத் தொடங்கிய அதிகாலை நேரம்.... ஊரையே குலுக்கிப் போடும். ஐந்து வேட்டுக்கள் தொடர்ந்து போடப்பட்டன. திடிக்கிட்டு எழுந்த நான் பெரும் அதிர்ச்சிக்குள் உறைந்தேன்...... வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபொழுது, கிளிகள் அச்சத்தோடு பறந்து போய்க் கொண்டிருந்தன கீழ்திசை நோக்கி. கலவர பூமியாக கீச்.... கீச்..... துயர குரல் நடுக்கத்தில் ஒலித்தது. சில நிமிடங்களிலே அனைத்து கிளிகளும் பறந்து போயிருந்தன.... அந்த ஊரிலிருந்து உடனே கிளம்பிவிட தயாரானேன். அத்தை என்னை உணர்ந்து கொண்டாள். "இனிமே எப்பொழுது இங்கு வருவார்?" என்று சின்னவள் கேட்டாள். "கிளி வர்றப்போ" - என்றேன்.
கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார். ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார். கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் கேசவனோ "நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கனவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?" என்று கேட்டுவிட்டான். தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டான். வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை இராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார். "அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்" என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை இராமன். மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை இராமன். கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன. "என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்" என்றான் மரியாதை இராமன். கேசவன் மரியாதை இராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான். திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான். உடனே கீழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். 'அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்' என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.
ஓபாகு ஸென் பிரிவினைச் சேர்ந்தவர் ஸென் துறவி ஏன்சூ. மரபுகளை ஏற்றுக் கொள்ளாத விசித்திரமான துறவி. தனியாக வசித்தார். ஒரிடத்தில் தங்கியிருக்க மாட்டார். எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு செல்வார். என்ன செய்ய வேண்டும் என்று பிரியப் படுகிறாரோ அதைச் செய்வார். ஒரு சமயம் ஏன்சூ ஜப்பானின் பழைய தலை நகரான கியோடோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினைச் சந்திக்கச் சென்றார். ஏதோ ஆரவரத்தில் சிந்தனை வயப்பட்டவராக தான் எங்கு செல்கிறோம் என்பதினையே மறந்து விட்டார் ஏன்சூ. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவர், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, "இந்த வீட்டிற்கு தான் ஏன்சூ வருவதாக கூறியிருந்தாரா?" என்று ஒவ்வொருவரையும் கேட்கலானார். மற்றொரு சமயம், ஒரு புத்தகத்திற்கு முகவுரை எழுதச் சொல்லி ஏன்சுவிடம் ஒருவர் கேட்டுக் கொண்டார். ஏன்சூவும் அவருடைய கோரிக்கையினை ஏற்று முகவுரையினை எழுதிக் கொடுத்தார். அந்த முகவுரைத் தாளில் இருந்த மோசமான தெளிவில்லாத கிறுக்கல் கையெழுத்தினைப் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தெளிவில்லாத கையெழுத்தினைக் ஏன்சூவிடம் காட்டி அது என்ன என்று கூறுமாறு எழுதச் சொன்னவர் கேட்டார். ஸென் துறவியான ஏன்சூ மறுபடி மறுபடியும் தான் எழுதியதைப் படித்துப் பார்த்தார். ஏதோ கண்டு பிடித்தவராக முடிவில் "என்னாலும் இதனை படிக்க முடியவில்லை. என்னுடைய மாணவர்களில் ஒருவன் என்னுடையக் கையெழுத்தினைப் படிப்பதில் கெட்டிக்காரன் - ஏன் நீங்கள் அவனிடம் காட்டி என்ன எழுதியிருக்கிறேன் என்றுக் கேட்கக் கூடாது" என்றார்.
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான். அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான். இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான். இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான். இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான். "சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம். ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான். அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா.........பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான். இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான். "என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான். எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர். தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே," எனக் கூறினான். "போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்," எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது. அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது. பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது. அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…" என எண்ணி மனம் புழுங்கினான். அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது. அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?" என எண்ணி ஆச்சரியப்பட்டான். அப்போது, "அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன். "அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…" என்று சொல்லி மறைந்தது. அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.
ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார். இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். இந்த அரசர் மிகப் பெரும் துறவியாக இருக்கலாம், அவர் என்னுடைய குருவை விட மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும் இல்லாவிடில் எப்படி என் குரு தன்னுடைய ஒவ்வொரு சீடனையும் கடைசி தேர்வுக்கு, கடைசி பாடத்திற்கு அங்கே அனுப்புவார் என்று எண்ணினான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான். அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது. இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான். அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள். இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம். அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை. இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன். இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்…..அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்…. அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள். ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது. இந்தியாவில் அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும். அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான். பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும். அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள். இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன். அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்….. இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான். பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான். அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர். குடி, திருப்தியாகும் வரை குடி. ஏனெனில் திரும்பவும் உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நான் உனக்கு சொல்லுகிறேன். குடிப்பதற்க்கும் சுயஉணர்விழப்பதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் உன்னுடன் குடிக்கிறேன். உண்மையில் மாலையில் இருந்து நான் குடித்துக் கொண்டேதான் இருக்கிறேன். நான் சுயஉணர்வை இழந்து விட்டேன் என்று உன்னால் சொல்ல முடியுமா அதனால் குடி. அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும். அதனால்தான் எல்லா மதங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில் மது உனது சொர்க்க ஆசையை பூர்த்தி செய்துவிடும்போது யார் சர்ச், கோவில், ஆசிரமம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவார்கள் மதுவை குடித்தால் போதும் சொர்க்க ஆசை நிவர்த்தி ஆகும் எனும்போது யார் வேறு எதையும் செய்வார்கள் அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்… யாரையும் எங்கிருந்தாலும் – சாவு – உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும். அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார். அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான். அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார். இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான். அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய். அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார். இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கோவணம் என்பது ஒரு சிறிய துண்டு துணியைத்தவிர வேறெதுவும் இல்லை. தையல் ஏதுமற்ற மிகச் சிறிய உள்ளாடை. உன்னுடைய இடுப்பைச் சுற்றி ஒரு நூலை கட்டிக் கொண்டு அதில் முன்னால் ஒரு முனையையும் பின்னால் ஒரு முனையையும் கட்டிக் கொண்டால் முடிந்தது. தையல் ஏதும் தேவையில்லை. அதை எங்கேயும் எப்போதும் செய்யலாம். இதைத்தான் இந்து துறவிகள் அணிவர். ஏனெனில் தையல் சிக்கலான விஷயம். அதில் மற்றவர்கள் உதவி தேவை. பணம் தேவை. அவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இந்து துறவி எல்லாவற்றையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க வேண்டும். ஒரு பிச்சை பாத்திரம் அதுவும் உலோகத்தால் ஆனது அல்ல. தேங்காய் மூடி அதுதான் பிச்சை பாத்திரம். அதை உன் கையோடு கட்டிக் கொண்டால் முடிந்தது. பிச்சை பாத்திரம் போலவே உன் கோவணமும். ஒரு குச்சி – எதற்காக குச்சி என்று வியப்படைவாய். அது இந்திய நாய்களுக்காக. அவை சீருடைகளுக்கு எதிரானவை. துறவியின் சீருடை பெரிதாக இல்லையென்றாலும் சீருடை சீருடைதானே. பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான். அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான். அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார். துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்…….. எத்தனை நஷ்டம் என்றான். ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார். அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான். அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும் ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம் நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும். அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான். அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார். மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக – சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது. அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்….. ஒரே ஒரு கணம் கவனமில்லாமை…… பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது. கவனித்தல் ஒரு சிறிய விஷயம். ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான். பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான் நீ – செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய். செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும். மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை. எதையும் செய்யாதே. நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது பசிக்கும்போது சாப்பிடு. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி தூக்கம் வரும்போது தூங்கு விழிப்பு வரும்போது எழுந்து கொள். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு. தேவையான சிறிய விஷயங்களை செய். சாதாரண வாழ்க்கையை வாழ். நீ கண்டுபிடிப்பாய். ஜீஸஸ் தேடு, கண்டடைவாய் என்றார். நான் தேடினால் கிடைக்காது என்கிறேன். ஜீஸஸ் கேளு அது உனக்கு கொடுக்கப்படும் என்றார். நான் கேட்டால் அது உனக்கு கொடுக்கப்படாது என்கிறேன். ஜீஸஸ் கதவை தட்டு திறக்கும் என்றார் . நான் கதவை தட்டினால் அது ஒருபோதும் உனக்கு திறக்காது என்கிறேன். உண்மையில் தட்ட வேண்டிய அவசியமே இல்லை. கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே நுழை.
"அப்பா..." பெரிதாகக் கத்திக் கொண்டே ரவி வீட்டுக்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம் போல் அப்பா வாசலுக்கு வந்து வரவேற்கவில்லை. ரவிக்கு ஏமாற்றமாக இருந்தது. தெருத் திண்ணையில் ஏறி, வலப்பக்க அறைச்சன்னல் மேல் கால் வைத்து லேசாய்த் தள்ளியதில் அது திறந்தது. உள்ளே கைவிட்டு முக்கோண மாடத்திற்கு எம்பிய போது கால் நழுவியது. "அப்பா..." மீண்டும் கத்தியவாறு ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்தான்... விழாமல் தப்பித்தான். அதற்குள் உள்ளே சப்தம் கேட்டது. "ரவி...கண்ணு... இதோ வந்துட்டேன்..." என்று அப்பாவின் குரல்தான்... ரவிக்கு நிம்மதியாக இருந்தது. கதவு திறந்தவுடன் தோளில் இருந்த புத்தகப் பையை அப்படியே திண்ணையில் எறிந்து விட்டு உள்ளே ஓடினான். அப்பாவின் மடியில் தாவி ஏறினான். சக்கர நாற்காலியில் இருந்த கண்ணப்பன் சமாளிக்கத் தடுமாறினார். "பார்த்து பார்த்து... மெல்ல ரவி... அப்பாவுக்கு வலிக்குமில்லை?" நாற்காலி உருண்டு பின்னோக்கி நகர்ந்தது. முற்றத்துத் தூண் மேல் இடித்து நின்றது. "ரவி... பை எங்க?" கேட்ட குரலுக்கு ரவி வாசலைக் கை காட்டினான். "அப்பா... இன்னிக்கு எங்க ஸ்கூல் பின்னால இருக்கற வேப்ப மரத்தில ஏறினோம்... செந்தில் கீழ விழுந்துட்டான், மருந்தெல்லாம் போட்டாங்க" என்று கைகளை விரித்துச் சொன்ன போது கண்ணப்பனுக்குக் கவலையாக இருந்தது. முரட்டுப் பிள்ளையாக இருக்கிறானே! "ரவி... பாரு... புஸ்தகப் பையை இப்படி எல்லாம் வெளியிலேயே போட்டுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்லை... அம்மா பார்த்தா அவ்வளவுதான்... தொலைஞ்சோம்... போ... முதல்ல எடுத்துட்டு வந்து ஆணியில மாட்டி வைச்சிட்டு கைகால் கழுவிட்டு வா... ரெண்டு பேரும் காப்பி குடிக்கலாம்... சரியா?" என்று சொல்ல, ரவி கொஞ்ச நேரம் யோசித்தான். "அப்பா... சீக்கிரம் குடிச்சிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாடலாமாப்பா? அம்மா வர்றதுக்குள்ள?" குரல் கெஞ்சியது. கண்ணப்பன் மனம் நெகிழ்ந்தது... "விளையாடலாண்டா கண்ணா... ஆனா நான் சொன்னபடி கேட்கணும்... நல்ல பிள்ளையா இருந்தாதான் எல்லாம், என்ன?", "சரிப்பா" என்றபடி மடியிலிருந்து இறங்கி திண்ணைக்கு ஓடினான். விலுக்கென்று உதைத்து அவன் இறங்கியதில் கண்ணப்பனின் கட்டுப்போட்ட காலில் சுரீரென்று வலி... பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டார். வெயில் தாழத் தொடங்கியிருந்தது. நாலரை மணிக்கு வெயில் பளிச்சென்றிருந்தாலும் இன்னும் அரை நேரத்தில் சட்டென்று விழுந்து விடும். காலையிலிருந்து வீட்டில் கவிழ்ந்திருந்த நிசப்தம் இப்போது விடைபெற்றுக் கொண்டாலும் உள்ளறைச் சுவர்களில் இன்னும் அந்த மௌனம் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மல்லிகா பஸ் மாற்றி வீடு வந்து சேர இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாகும். ஆறு மணியல்லாமல் வீடு வர அவளால் முடிவதில்லை. இதில் ஓவர்டைம் என்றால் இன்னும் நேரமாகும்... பஸ் நிறுத்தத்தில் வெளிச்சம் இருந்தாலும் நடந்து வருகிற பாதை இருட்டுதான். நேரமாகி வருகிற மனைவியைப் போய் அழைத்து வர இயலாத நிலை எத்தனைக் கொடுமை! அமுதா பள்ளி முடிந்ததும் தட்டச்சு வகுப்பிற்குப் போய்விடுவாள். பஸ் நிலையத்துக்கு அருகில்தான்... சில சமயம் அம்மாவும் மகளும் சேர்ந்து வருவார்கள். அவர்கள் வரும் வரை ரவியை சமாளிக்க வேண்டும். ரொம்ப முரடனாக இருக்கிறான். நீண்ட நாள் கழித்துப் பிறக்கிற குழந்தைகள் இப்படித்தான் துறு துறுவென்று இருக்கும் போல... மல்லிகா வரும் போதே அலுத்துக் களைத்து வருவாள். கோபமும் எரிச்சலும் சட்சட்டென்று தெறிக்கும். அவளைக் குறை சொல்வதில் நியாயமில்லை, இருந்திருந்தாற் போல் கணவன் உடல் நிலை சீர்கெட்டு, இதய அறுவை சிகிச்சை, சர்க்கரையில் அஜாக்கிரதையாக இருந்து ஒரு கால் துண்டாடப்பட்டு வீட்டோடு சக்கர நாற்காலியில் கிடப்பதில், வெளியே போய் அறியாதவள் மேல் திடீரென்று வீட்டுப் பொறுப்பு முழுவதும் விழுந்தால்... ஒற்றை ஆளாக அவள்தான் என்ன செய்வாள்? நடுத்தரக் குடும்பத்துக்கு இத்தனை சோதனை தாங்குமா? கண்ணப்பன் வேலை செய்த கம்பெனி ஆதரவு கொடுத்ததில் குடும்பம் அந்த மட்டுக்கும் இவ்வளவாவது நிற்கிறது. மல்லிகாவின் எப்போதோ படித்த எஸ்.எஸ்.எல்.சி.க்கு வந்த மவுசு... தூசி தட்டின சான்றிதழ் போதுமென்று கம்பெனி கொடுத்த குமாஸ்தா உத்யோகம் பெரும் வரம். தள்ளியிருக்கிற கோயமுத்தூர் ஜிஹெச்சில் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய பிறகு ஆயிரத்தெட்டு எச்சரிக்கை. சர்க்கரை விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு, நேர நேரத்துக்கு மருந்து மாத்திரைகள், எப்போதும் ஓய்வு, "சிரமப்படவே கூடாது, அடிபடக்கூடாது..." ஆனால் அது எப்படி முடியும்? ஓடியாடி வேலை செய்த கால்களால் சும்மாயிருக்க முடியுமா? கால்கள் இல்லை, கால்தான்... இன்னும் அந்தப் புண் ஆறவில்லை. மனைவி வெளியே போய் வேலை பார்க்கும்போது வீட்டு வேலையாவது செய்து வைத்தால் அவளுக்கு எத்தனை உபயோகமாக இருக்கும்! சக்கர நாற்காலியை உருட்டி உருட்டி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடிப்பார். வீட்டை அரைகுறையாகக் கூட்டி, முற்றத்தில் காய்கிற துணிகளை உட்கார்ந்தபடியே கம்பி நீட்டி சேகரித்து, மடித்து அலமாரியில் வைத்து, காலையில் போட்டு வைத்து விட்டுப் போன பாத்திரங்களைத் துலக்கி அடுக்கி... சமையலறைக்குப் போவதில்தான் சிரமம். கொஞ்சம் உயரமான நிலைப்படியைத் தாண்டுவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். மல்லிகா "நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம்... பேசாம ஓய்வு எடுங்க... எதையாவது செய்யப் போய் மறுபடியும் உங்களுக்கு ஒண்ணு ஆச்சுன்னா முதல்ல நான் இருக்க மாட்டேன்" என்பாள்... அச்சம்... நியாயமான அச்சம்... பெயரளவுக்காவது புருஷன் இருந்தால் போதும். நடமாடக்கூட வேண்டாம். உயிரும் சதையுமாய் அசைந்து கொண்டிருந்தால் போதும், எத்தனைக் கஷ்டமும் படத்தயார். ஆனால் மொத்தமாக கணவனே இல்லாது போனால் வரக் கூடிய இருட்டுக்கு அவள் தயாராயில்லை. அமுதா விவரம் தெரிந்தவள். வீடு வந்ததும் முதலில் அப்பாவுக்குத் தேவையானதைச் செய்து விட்டுப் பிறகுதான் உடை மாற்றுதல் முதற்கொண்டு மற்றதெல்லாம். ஆனால் துறு துறுவென்றிருக்கிற ஆறு வயதுப் பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது? சதா விளையாட வேண்டும். மரமேற வேண்டும், திண்ணையில் ஏறி ஜன்னல் மேல் கால் வைத்து தொப்பென்று தெருவில் குதிக்க வேண்டும். மல்லிகாவின் முதல் அச்சம் ரவிதான். ஓய்வெடுக்க வேண்டிய கணவரைப் பாடாய்ப்படுத்துகிறானே என்று... சதா "அப்பா... திருடன் போலீஸ் விளையாடலாம்பா, அப்பா மாடிக்குப் போலாம்பா, அப்பா அத்திப் பழம் அடிக்கலாம்பா..." இவனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? காலையில் கையோடு பள்ளிக்கு அழைத்துப் போய் விடலாம், மதியம் வீட்டுக்கு வர முடியாதபடி கையில் டிபன் பொட்டலம்... ஆனால் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வருகிற பிள்ளையை என்ன செய்ய முடியும்? அடக்கிப் பார்த்தாள். ஆர்ப்பரிக்கிற அலை, போவது போல போக்குக் காட்டி விட்டு மீண்டும் பெரிதாகத் திரும்பி வருவது போல்... திட்டையும் அடியையும் வாங்கிக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்வான். "நாசமாப் போறவனே, கடங்காரா" என்று ஒரு நாளைக்கு நூறு முறை வசவு வாங்குவான். கண்ணப்பனிடம் கெஞ்சினாள். "நீங்களாவது ஜாக்கிரதையா இருங்களேன்... செல்லம் கொடுக்காதீங்க... பக்கத்தில் விடாதீங்க... ரெண்டு அதட்டல் போட்டு தூரத்தில் வையுங்க... உங்க கால்ல விழுகறேன்..." சொன்னதல்லாமல் அவர் காலில் விழுந்து அழுதாள். மகளும் அழுதாள். அம்மாவும் அக்காவும் அழுவதைப் பார்த்து ரவியும் அழுதான். "உன்னால்தாண்டா குட்டிப் பிசாசே இத்தனைக் கஷ்டமும்" என்று அக்கா புலம்புவது கேட்டாலும் ரவிக்கு புரியவில்லை. கண்ணப்பன் எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தையை நிஜமாக அதட்ட முடியவில்லை. மேலே வந்து விழுகிறவனை "தூரப்போ" என்று தள்ள முடியவில்லை. மற்ற நேரங்களில் கடுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மல்லிகா வீட்டில் இல்லாத அந்த மாலை நேரத்து இரண்டு மணி நேரமும் ரவிக்கு எந்த அணையும் போட முடியவில்லை. பழைய காலத்து வீடு. பெரிய வீடு. கண்ணப்பனின் அப்பா தந்து விட்டுப்போன ஒரே சொத்து. முற்றமும், நாலு பக்கம் தனித்தனி அறைகளும், இரண்டாவது கட்டும், கொல்லைப்புறமும், முற்றத்து உள்ளிலிருந்து மேலே வளைந்து வளைந்து போகும் மாடிப்படியும், சிறிய மாடியறையும் கொல்லென்று கிடக்கும். இப்படியொரு வீட்டில் ஓடிப் பிடித்து விளையாடக்கூடாது என்று அந்தச் சிறு பிள்ளைக்குக் கட்டளை போடுவது எத்தனைக் கொடுமை! திருடன் போலீஸ் விளையாடப் போய் சக்கர நாற்காலி திட்டில் முட்டிக் கீழே விழுந்து காலில் அடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்து... மல்லிகா "ஜாக்கிரதை ஜாக்கிரதை" என்று எதற்கு அத்தனை அஞ்சினாளோ அது நடந்தே விட்டது. இரத்தம் உறையாமல் பெருகுகிற தன்மை... கீழே விழுந்து, அக்கம்பக்கம் யாரையும் கூப்பிட முடியாமல் அப்படியே கிடந்து, இரத்தம் ஏகத்திற்கு சேதம் ஆகி, அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மல்லிகா நிலைமையைக் கண்டு அலறி, அதிர்ச்சியில் நின்றதில் மறுபடியும் நேர விரயமாகி... அன்றைக்கு ஏதோ நல்ல காலம்... பக்கத்து வீட்டுக்கு உறவுக்காரர்கள் யாரோ காரில் வந்திருந்தார்கள். உடனே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் துடியலூரில் ஒரு நர்சிங் ஹேமில் முதலுதவி செய்து, ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டு... கண்ணப்பன் உயிர் பிழைத்தது அதிசயம் தான்... வீடு வந்த பிறகு கையில் கிடைத்த ஸ்கேலால் ரவியை விளாசித்தள்ளி விட்டாள் மல்லிகா. கண்ணப்பன் பல நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவர் இருக்கும் அறைப் பக்கம் கால் போனால் காலை ஒடித்து விறகாக அடுப்பில் வைத்து விடுவேன் என்று மிரட்டி வைத்தாள். அதற்கெல்லாம் அஞ்சி கொஞ்சம் அடங்கியிருந்த ரவி, அவர் உடல் கொஞ்சம் தேறியதும் பழையபடி உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்து விட்டான். மல்லிகா பட்ட சிரமங்களைப் பார்த்து வேதனைப் பட்டுப்பட்டு கண்ணப்பனுக்கு மனம் காய்த்துப் போய் விட்டது. ஏனோ அர்த்தமற்ற இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும் என்று தோன்றவும் தொடங்கி விட்டது. அதற்குள் ரவியைக் கட்டுப்படுத்துவானேன் என்று முன்னெப்போதுமில்லாத வாஞ்சை... போதாதா ரவிக்கு? கொஞ்ச நாட்களாக, பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு பழகிக் கொண்டு வந்து தினம் வீட்டில் அதை விளையாட வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கண்ணப்பன் மல்லிகாவுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டில் சொல்லி ஒரு பிளாஸ்டிக் மட்டையும் பந்தும் வாங்கி வரச் செய்திருந்தார். அதைக் காப்பாற்றத்தான் பெரிய யோசனையாக செய்ய வேண்டியிருந்தது. ரவியின் விளையாட்டு சாமான்கள் பூராவும் தூக்கி நிஜமாகவே அடுப்பில் போட்டுப் பொசுக்கி விட்டிருந்தாள் மல்லிகா. "எதையாவது விளையாடறேன்னு அப்பா மேல பட்டுதோ தொலைச்சுருவேன் கடங்காரா..." வீட்டில் மல்லிகா கண்ணுக்குப் படாமல் இந்த மட்டையையும் பந்தையும் எங்கே ஒளித்து வைப்பது? ரவிதான் அற்புதமான ஓரிடைத்தைக் கண்டு பிடித்தான். இருட்டான மாடிப்படி வளைவில் மேலறைக்குத் திரும்புமுன் இடது பக்கம் ஒரு சிறு மரப்பலகை பெயர்ந்திருந்தது. ஒரு பக்கம் நன்றாக சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் மறு பக்கம் திறந்து மூடும்படி அமைந்து விட்டது. திறந்தால் ஓரடி உயரத்திற்கு ஓர் இடம். இருட்டுக்குள் இருட்டாக ஒரு பெட்டி போல் இருந்தது. கிரிக்கெட் மட்டையும் பந்தும் அங்கே ஒளிந்தன. மாலை வந்ததும் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து ஆசை தீர விளையாடுவதும் அம்மா வருமுன்பு சர்வஜாக்கிரதையாக மாடி வளைவில் ஒளித்து வைப்பதுமாக இருந்தான். வைப்பதுமல்லாமல் அப்பாவிடம் வந்து கண்களை மட்டும் ரகசியமாக உருட்டி "ஒளிச்சு வைச்சிட்டேன்" என்று தலையை ஆட்டுவான். ஞாபகமாக "நாளைக்கு மறுபடியும் விளையாடலாம்பா... நீ இன்னிக்கு காஜி குடுக்கவேயில்லை" என்பான். இத்தனூண்டு பிள்ளைக்கு எத்தனை விவரம்! கண்ணப்பன் அமுதாவின் பரீட்சை அட்டையை ஒரு கையில் கேடயமாக வைத்துக் கொண்டு அடி ஏதும் மேலே படாமல் மட்டை பிடித்து சமாளித்து வந்தார். முதலில் மட்டை அவர் பிடித்தால், ஆட்டம் முடிகிற போது ரவி பிடிக்க வேண்டும். ரவி மட்டை பிடிக்கு முன்பு மல்லிகா வரும் சப்தம் கேட்டால் ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். ஆனால் ரகசியமாக ராத்திரி தூங்கும் வரை, "அப்பா எனக்கு நீ காஜி குடுக்கவேயில்லை" என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கத்தில் கைகளைத் தூக்கி மட்டை வீசுவான். "காஜி, காஜி"" என்று முனகுவான். ரவி பள்ளியிலிருந்து கற்றுக் கொண்டு வந்த எண்ணற்ற சங்கேத வார்த்தைகளில் காஜியும் ஒன்று. கிரிக்கெட் மொழி. முதலில் மட்டை பிடிப்பவர், ஆட்டம் முடியும்போது பந்து வீசுபவராக இருக்க வேண்டும். நேரமில்லாமல் அல்லது அவுட்டாகாமல், முதலில் பந்து வீசியவருக்கு மட்டை சந்தர்ப்பத்தை மிச்சம் வைத்தால் அது "காஜி"". ஒவ்வொரு நாளும் இந்த ஆட்டத்துக்காகவே பள்ளி விட்டதும் தலை தெறிக்க ஓடி வருவான். மாடிக்கு ஓடி மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவான். "அப்பாவ் வந்துட்டேன்..." கத்தியபடி வந்தவன் கை காலைத் துடைத்துக் கொண்டு, வேகவேகமாக காபி குடித்து விட்டு, மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். விளையாட்டு தொடங்கியது. அரை மணிக்குப் பிறகு கண்ணப்பனுக்கு முடியவில்லை. மூச்சு வாங்கியது. வேர்க்கத் தொடங்கிது. "விபரீதம்" என்று உள்ளம் எச்சரித்தது. மெதுவாக ஆட்டத்தை நிறுத்தினார். ரவி அடம்பிடிப்பான் என்று தெரிந்து, "அம்மா சீக்கிரம் வர்றா போலிருக்கு, சீக்கிரமா ஓடிப் போய் மட்டையை வைச்சிட்டு வந்திரு" என்று அவசரப்படுத்தவே, ரவி தலைதெறிக்கப் படியேறி ரகசிய இடத்தில் வைத்து விட்டு சாது போல் இறங்கி வந்து அப்பா அருகே நின்று கொண்டான். ஆனால் அம்மாவைக் காணோம். ஏமாற்றம்! "என்னப்பா அம்மா வரவேயில்லை? நீ அவுட்டானதும் நான்தான் பேட்டிங் பண்ணணும், அதுக்குள்ள ஏன் நிறுத்தின?", "கண்ணு, அம்மா வர்ற மாதிரி சத்தம் கேட்டதா அதனாலதான்... திடீர்னு வந்துட்டா என்ன பண்றது? அப்புறம் தெரியாம விளையாடறதும் நிண்ணு போயிடும்... மட்டையெல்லாம் அடுப்புக்குப் போயிடும். உனக்கு அடி விழும் இல்லை? அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும்ணு அப்படிச் சொன்னேன்." கண்ணப்பன் சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் ஆறுதலடைந்தான். இருந்தாலும் அடுத்த நிமிஷமே "அப்பா ஐஸ் நம்பர் விளையாடலாம்பா" என்று ஆரம்பித்தான். போச்சுடா, மல்லிகா வரும் வரை இவனை எப்படி சமாளிப்பது? பேசிகீசித்தான் பிடித்து வைக்க வேண்டும். "வேண்டாம் கண்ணு... நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருக்கலாம். இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க?", "கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்க கணக்கு டீச்சர் ரெஜிஸ்தர்ல இங்க்கை கொட்டினதுக்காக பெருமாளை அடிச்சாங்க. கடங்காரா, இனிமே இங்க் மேல கையை வைப்பியான்னு திட்டினாங்க... அப்பா, கடன்காரன்னா என்னப்ப?", "கடன்காரன்னா... நாம யார் கிட்டயாவது ஏதாவது வாங்கியிருந்தோம்னா உடனே திருப்பிக் கொடுத்திடணும். அப்படிக் கொடுக்கலேண்ணா அவங்க வந்து திருப்பிக் கேட்பாங்க. கொடுக்காம விட்டோம்னா நாம கடங்காரங்க ஆயிடுவோம்...", "அன்னிக்கு மீசை மாமா வந்து உங்ககிட்ட கடனைத் திருப்பித்தான்னு கேட்டாரே, அந்தக் கடனா?" எல்லாவற்றையும் இந்தப் பொடியன் கவனித்திருக்கிறான். வீட்டு மேல் வாங்கிய கடன். வட்டி ஒழங்காய்க் கொடுத்தும் அசலைத் திருப்பிக் கேட்கிறார் செட்டியார். "ஆமாப்பா... அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர்கிட்டதான் கடன் வாங்கியிருக்கோம்? திருப்பிக் கொடுக்கணுமில்லை? அதைத்தான் கேட்கிறார்.", "ஏம்பா திருப்பிக் கொடுக்கலை?" ஆரம்பித்து விட்டது. குழந்தைகளின் கேள்விகள். எண்ணற்ற கேள்விகள். ஒன்று சொன்னால் அதிலிருந்து இன்னொரு புதுக் கேள்வி... நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேள்விகளெல்லாம் எப்படித்தான் இந்தப் பிஞ்சுத் தலைகளிலிருந்து உதயமாகிறதோ? "நம்ம கிட்ட இப்ப இல்ல... அதனால கொடுக்கல.", "கொடுக்காமயே போன்னு துரத்திலாமாப்பா?", "ஐயையோ... அப்படி எல்லாம் செய்யக் கூடாது. வாங்கின கடனை ஒழுங்கா திருப்பிக் கொடுக்கிறவங்கதான் ரொம்ப நல்லவங்க. நம்மகிட்ட இருந்தால் நாமே திருப்பிக் கொண்டு போய் கொடுத்திடணும். கடனை அவங்க கேட்கிற மாதிரி வச்சுக்கக்கூடாது.", "நீ நல்லவனாப்பா?" கண்ணப்பனுக்குக் கண்கள் பொங்கின. யார் நல்லவன் யார் கெட்டவன்? எல்லாம் நல்லபடியாக இருக்கிற போது நல்லவனாக இருக்க முடிகிறது. கொஞ்சம் தாழுகிற போது எல்லாமே மாறிப் போய் விடுகிறது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத வார்த்தைகள் எதிர்பாராதவர்களிடமிருந்து வருகிற போது... ஒரு வேளை கெட்டவனாகி விட்டோமோ? வாழ்க்கை கெட்டுப் போனவன் கெட்டவனா? "நா எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா... கண்டிப்பா கடனை திருப்பிக் கொடுத்திருவோம். நீ கவலைப்படாதே, என்ன கண்ணு?", "இல்லப்பா... கெட்டவங்கன்னா சாமி வந்து ராத்திரி கண்ணைக் குத்துமா... எங்க டீச்சர் சொன்னாங்க. அப்பா, நான் நல்லவனாப்பா?" குழந்தையின் கேள்வியில் ஒரு கெஞ்சல் இருந்தது. உடனே பதில் தெரியாவிட்டால் கடவுள் எதிரே வேலை வைத்துக் கொண்டு கண்ணைக் குத்தக் தயாராக இருக்கிற பயத்தில் கண்கள் விரிந்திருந்தன. "இப்பதான சொன்னேன்? நாம எல்லாம் நல்லவங்க... நீ நல்லவன், அம்மா நல்லவ, அமுதா நல்லவ...", "அப்புறம் ஏம்ப்பா அம்மா சும்மா என்னை கடங்காரான்னு திட்டறாங்க? நான் கடன் ஏதும் அம்மா கிட்ட வாங்கவேயில்லப்பா." இதைச் சொல்லும் போது அழுகை. "அதுக்கில்லை கண்ணு... அம்மா சும்மா கோபத்தில சொல்றது அது...", "ஆனா நான் கடன் வாங்கவே இல்லைப்பா... நிஜமா...", "கடன்னா பணம்தானா? நாளைக்கு நீ பெரியவனாகி அம்மாவுக்கு வீடு, கார் எல்லாம் வாங்கிக் கொடுக்கணுமில்லை, அதுக்காகத்தான் இப்பவே சும்மா சொல்லி வச்சுக்கறா..." அடுத்த கேள்விக்கு அவன் வாயைத் திறப்பதற்குள் வாசலில் செருப்பு சத்தம் கேட்டது. ரவியின் வாயும் அடைபட்டது. கண்ணப்பன் அவனை மடியிலிந்து இறக்கிவிட்டு, வாய்மேல் கை வைத்து, "ஒழுங்கா இருக்கணும். என்கிட்ட வரக்கூடாது. போய் கதவைத் திறந்து விட்டுட்டு அம்மாவோட பையை வாங்கிட்டு வா..." என்று இரகசியம் போலச் சொன்னார். ரவி இறங்கி ஓடினான். வீடு அமைதியாக இருப்பதை ஒரு சந்தேகத்தோடு பார்த்தபடியே உள்ளே வந்தாள் மல்லிகா. நேரே கண்ணப்பனிடம் போனாள். "ரவி ஏதாவது படுத்தினானா? உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு? நல்லா இருக்கீங்க இல்லை?" என்று கேள்விகளை அடுக்கினாள். "ம்... ஒண்ணுமில்லை... அசதியா இருக்கிற மாதிரி இருக்கு... நல்லாத்தான் இருந்தேன்... மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டேன்... ஆனா இப்ப லேசா சிரமமா இருக்கு" என்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியாமல் காலில் விண்விண்ணென்று வலி. பல்லைக் கடித்துக் கொண்டு புரண்டு படுத்தார். பக்கத்தில் ரவி தூக்கத்திலேயே "அப்பா காஜி கொடுப்பா..." என்று முனகினான். மல்லிகா எழுந்து வலி குறைக்க மாத்திரை தந்து விட்டு, ரவி முனகுவதைப் பார்த்து "என்ன, என்னவோ உளர்றானே" என்றாள். அதற்கு, "அவன் ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருக்கான். அதைத்தான் சொல்றான்" என்றார். அடுத்த மூன்று நாட்களும் அமுதா பள்ளிக்குப் போகவில்லை. அப்பாவுடனே இருந்தாள். மல்லிகா ஒரு நாள் விடுப்பு எடுத்து உடன் இருந்தாள். விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு ரவியால் அப்பாவின் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை. ஒரு வாரத்தில் கண்ணப்பனை மருத்துவமனையில் சேர்க்கும்படியாயிற்று. பத்தாம் நாள் கதை முடிந்தது. உடலை வீட்டுக்குக்கூட கொண்டு வராமல் மருத்துவமனையிலிருந்தே தகனத்துக்குக் கொண்டு செல்லும்படியாயிற்று. வீடு முழுக்கக் கூட்டம், உறவுக்காரர்கள் மயம், அழுகை... ஏனென்று ரவிக்குப் புரியவில்லை. எல்லோரும் இவனையல்லவா இழுத்து வைத்துக் கொண்டு அழுதார்கள்! அப்பா ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவில்லை. எப்போது மருத்துவமனைக்குப் போனாலும் கொஞ்ச நாள் கழித்து கட்டுடனோ, சக்கர நாற்காலியுடனோ திரும்பி வந்துவிடுவார். இந்த முறை இன்னும் வரவில்லை. கேட்டால் "அப்பா செத்துப் போயிட்டார். இனிமே வர மாட்டார்" என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ரவியால் அதை நம்பமுடியவில்லை. அதெப்படி அப்பா வராமல் இருப்பார்? கண்டிப்பாக வருவார். எப்போதும் அடிக்கிற அம்மாவிடம் என்னை விட்டு விட்டுப் போகவே மாட்டார். வாங்கிய கடனெல்லாம் அடைக்க வேண்டி வீட்டை செட்டியாருக்கே விற்று விட்டு, வேறு சிறு வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ரவி வீட்டை விட்டு வெளியே வர முடியாதென்று அடம்பிடித்தான் "அப்பா இந்த வீட்டுக்குத்தான் திரும்பி வருவார்... அவருக்கு வேற வீடு தெரியாது" என்று கத்தியழுதான். கூட சேர்ந்து மற்றவர்கள் அழுதாலும் வேறு வீட்டிற்குக் கட்டாயமாகக் கொண்டுபோய் விடுவார்கள் என்று ரவிக்குத் தெரிந்தே இருந்தது. "தூங்கும் போது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்." அவனுடைய கவலையெல்லாம் அப்பா திரும்பி வந்தால் அந்த வேற வீடு எங்கேயிருக்கிறது என்று யார் காட்டுவார்கள்? நான்கு தெரு தள்ளி இவன் பள்ளிக்கு அருகே இருந்த சிறு வீட்டிற்கு சுத்தம் செய்ய அமுதா போன போது இவனும் கூடப் போனான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. இந்தப் புது வீட்டு அடையாளத்தை எழுதி அந்தப் பழைய வீட்டில் வைத்து விட்டால் என்ன? அப்பா வந்தால் பார்த்துத் தெரிந்து கொள்வார். பள்ளியில் இருந்த போது கணக்கு நோட்டிலிருந்து பேப்பர் கிழித்த புழுக்கைப் பென்சிலை சுவரில் தேய்த்து எழுத்துக் கூட்டி, "ஸ்கூல் கிட்ட பச்சை வீடு" என்று நினைத்துக் கொண்டு அடித்து அடித்து எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். வீட்டில் எங்கும் உடனே வைக்க முடியாதபடி வீட்டு சாமான்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. செட்டியாருக்குக் கைகூப்பி சாவியைக் கொடுத்து விட்டு, சாமான்கள் எல்லாம் ஏறிப் போன மாட்டு வண்டியில் கடைசி ட்ரிப்பில் ஏறிக்கொண்ட மல்லிகாவும் அமுதாவும் ரவியை ஏறச் சொன்னபோது பெரியதாக அழுது பார்த்தான்... "நான் வர மாட்டேன்... அப்பா வருவாரு...", "ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். நீ வேற ஏண்டா படுத்தற நாயே" என்று இரண்டு அறை முதுகில் வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டாள் மல்லிகா. வண்டி தெருத் திரும்பும் போது, யாரும் எதிர்பாராத சமயம், டக்கென்று கீழே குதித்து வீட்டை நோக்கி ஓடினான் ரவி. செட்டியார் தெரு இறங்கிப் பக்கத்து வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். உள்ளே ஓடியவன் தலைதெறிக்க மாடிப்படி ஏறினான்... "அப்பா வந்தா இங்கதான் வருவார். அவருக்கு நல்லாத் தெரியும் இந்த இடம்... வேற யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க... வர மாட்டாராமே... அதெப்படி? அப்பா நல்லவர்னு சொன்னாரே... கடன் வாங்கினா நாமே திருப்பிக் கொடுத்திடணும்னு சொன்னாரே... எனக்க காஜி கடன் வச்சிட்டுப் போயிருக்காரு... திருப்பிக் கொடுக்க வருவாரு... நான் இந்த வீட்டில இல்லாவிட்டாலும் இங்க வந்து பார்த்துட்டு நேரா வேற வீட்டுக்கு வருவாரு..." என்று எண்ணங்கள் குதித்தோடி வந்தன. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசிய இடத்தில் ரகசிய விலாசக் கடிதம் ஒளித்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே பந்தும் மட்டையும் பின்னாலேயே ஓடி வந்த அமுதா இவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினாள். "எங்கடா போன? ஏண்டா என் உயிரை வாங்கற கடங்காரா? என்று மல்லிகா அழுது கொண்டே தப்தப்பென்று நான்கு அறை வைத்தாள் முதுகில். ஓவென்ற அழுகைக்கிடையே, "நான் கடங்காரனில்லை, அப்பாதான் கடங்காரன்" என்று பெரிதாக அவன் அலறியதற்குப் பிரதிபலனாக மேலும் இரண்டு மொத்து விழுந்தது.
கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா, சிகா என்று சொல்லவேண்டியதுதான். தாமதம், சிகாமணி உடனே புறப்பட்டு விடுவாள். நான் அவளை எங்கே கூப்பிட்டுக்கொண்டு போவேன் என்றும் அவளுக்குத் தெரியும். ''வரும்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாமா'' என்ற கேட்பாள். சட்டைப் பையைத் துளாவிக்கொண்டு பணம் இருக்கிறதா என்று பார்ப்பேன். ''பர்ஸ் எடுத்துக்கிட்டேன்'' என்று சிரிப்பாள். எத்தனை வருஷமாகச் சிகா இப்படியே சிரித்துக் கொண்டிருக்கிறாள். ஓரு கீரைத் தண்டைப் போலக் கணுக்கணுவாக முற்றி, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் அப்படியே இருப்பது இவளாகத்தான் இருக்கும். கனகராஜ் நல்ல குண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அம்பலவாணபுரத்திலிருந்து அம்பை ஆர்.எஸ் வரமிஞ்சிப் போனால், பஸ்ஸில் பதினைந்து நிமிஷம் ஆகும். அகஸ்தியர்பட்டி தாண்டி கோடரம்குளம்விலக்கு வருகிறவரை, ஒவ்வொரு தடவையும் எப்படிச் சொல்ல முடியாத ஒரு அமைதி வந்து நம்மிடம் சேர்கிறது என்று தெரியவில்லை. சிகாவும் இதை எத்தனையோ தடவை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி எல்லாம் தோன்றச் செய்தது எது. தூரத்தில் தெரிகிற மலைகளா, எங்கோ ஓடிக்கொண்டிருக்கிற ஆறா. இரண்டு பக்கமும் திறப்பாகக் கிடக்கிற வெளியா. ''அழக் கூடாது மணி, பச்சை பிள்ளையா நீ '' என்று பின் சீட்டில் இருந்து சிகாமணியின் அம்மா சொல்லிக் கொண்டே வந்தார்கள். சிகாவின் தங்கை பொன்னுக்குட்டியும் அழுது கொண்டிருந்தாள். இத்தனையிக்கும் பஸ் ஏறுகிற வரை அத்தானைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தவள் தான் அவள். கனகராஜ் இது எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதுபோலக் கைக்குட்டையால், முகத்தைக் துடைத்துக்கொண்டு, ''ரவி அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமல்லவா'' என்று கேட்டார். ஆமாம் என்ற சூட்கேஸ்களை எல்லாம் நகர்த்திக் கொண்டே சிகாவைப் பார்த்தேன். முன் பக்கத்துக் கம்பியில் குப்புறச் சாய்ந்து ரிஸ்ட்வாட்ச் கட்டின இடதுகையில் முகத்தை அழுத்தி சிகா அழுதுகொண்டிருந்தாள். பிச்சிப்பூ ஒரு ஒருமாகச் சரிந்து கிடந்தது. கனகராஜ் வீட்டில் எடுத்திருந்த கல்யாணச் சேலையைத்தான் கட்டியிருந்தாள். எனக்கு அந்தக் கலர் என்னவோ பிடிக்கவில்லை. சிகாவுக்குப் பிடித்ததோ என்னவோ, ஒரு பேச்சுப் பேசாமல் கட்டிக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தாள். சந்தோஷமில்லாமலா நலுங்கில உருட்டின தேங்காயை கனகராஜ் பிடுங்க முடியாமல் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அப்படி ஒரு சிரிப்புச் சிரிக்க முடியும், ஈறு தெரியச் சிரித்தால், சிகா மனதாரச் சந்தோஷமாக இருக்கிறதாகத்தானே அர்த்தம். ஆலமரத்தடியில் இருந்து அம்பாசமுத்திரம் ஸ்டேஷன் வரை சொல்லிவைத்தது போல சருகுகளாக உதிர்ந்து கிடந்தது. கனகராஜ் பூட்ஸ் சரக்சரக்கென்று மிதித்து நடக்க, சிகா ஒரு ஒல்லிப் பாச்சா போலக் கூடவே போய்க்கொண்டிருந்தாள். சிவப்புக் கலர் வெல்வெட் செருப்பு பளிச்பளிச்சென்ற மாறிக் கொண்டிருந்தது. பொன்னுக்குட்டி சேலைகட்டி அக்காவையிடப் பெரிய மனுஷி மாதிரி இருந்தாள். ''ஏ'' இந்தப் பையை வாங்கு'' என்று பொன்னுக்குட்டியை சிகாவின் அம்மா தன்பக்கம் கூப்பிட்டுக் கொண்டதற்குக் காரணம் இருந்தது. கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வருவதற்குள்ளேயே தனத்துச்சித்தி, ''பேசாமல் பொன்னுக்குட்டியை கட்டி வச்சிருங்க. அவதான் பொருத்தமா இருக்கா வளர்த்தியும் சதையுமா'' என்று, சொல்லிவிட்டாள். கைக்கு ஏழெட்டுத் தங்க வளையல் போட்டிருக்கிறவள். சொன்னால் எல்லோரும் சும்மா இருப்பார்களா? நிசந்தான் என்று சொன்னார்கள். சிகா கனகராஜைவிட ரொம்ப மெலிவுதான். ஆனால் சிகாவின் அழகு வேறுயாருக்கும் வராது. கீற்றுப்போல ஒரு தடவையும் ஈறு எல்லாம் தெரிகிறதுபோல இன்னொரு தடவையிம் சிரிக்கிறது. எல்லாவற்றையும் விட, சிகாவின் முகத்தில் இருக்கும் ஈரம் முக்கியமானது. அது லேசில் அமையாது. சிலேட்டைத் தொடுகிற மாதிரி ஒரு குளிர்ச்சி, சதா அவளுடைய பார்வையில் இருக்கும். ரயில் இதையெல்லாம் சொல்வது மாதிரி ''கூ'' என்று ஊதியது. தண்டவாளங்கள் தாண்டி பிரம்மதேசம் அம்மை முத்து முதலியார் ஜவுளிப் பொட்டலத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தார். கார்டு பச்சைக்கொடி அவருக்காகவே காத்திருந்தது. ரெயில்வே ரெஸ்டாரண்ட் நாயனா ஏதோ கிண்டலாகத் சொன்னார். சிகா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரயில் புறப்படும்போது நானும் ஏறினேன். ''என்ன ரவி'' என்றுக் கேட்டுக் கொண்டே ''வண்டி நகர்ந்துட்டுது, இறங்கு என்றாள். பொன்னுக்குட்டியைப் போல எனக்கு அழ முடியவில்லை. ''ஜங்ஷன் வரைக்கும் வாரேன்'' என்று சொன்ன என்னைப் பார்த்த கனகராஜ் ''உட்காருங்க ரவி'' என்றார். ஆற்றப் பாலத்தைத் தாண்டும் போது சிகாமணியைப் பார்த்தேன். சிகா ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு சற்று உள் ஒடுங்கி பாறைகள் முளைக்க ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓட்டம் எங்கே நின்றது. நிற்கிற ஓட்டமா அது. அப்படி எல்லாம் இருந்தால், கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு சிகா இருக்கிற இடம் பார்க்க ஓடிவரத் தோன்றுமா? ''ஏன் ரவி வேலையை விட்டே? மில்லூல பெர்மனண்ட் ஆச்சுண்ணா நல்ல சம்பளம்லா'' சிகா ரொம்ப அக்கறையோடுதான் கேட்டாள். பாலிடெக்னிக் படித்துவிட்டு ஒரு வருஷம் சும்மா இருந்தபின், ஒர்க்கராகச் சேர்ந்து சைக்கிளும் தூக்குச்சட்டியுமாக வந்து கொண்டிருக்கும்போது, சிகா, சிகாவின் அம்மா, லீவுக்கு வந்திருந்த அக்கா பிள்ளைகள் எல்லாம் தாய்சீனிஸில் சினிமா பார்த்துவிட்டு நடந்து வருகிறார்கள். சிகாவிடம் என்ன மாயமிருந்தது. அக்காவுடைய இரண்டு பையன்களும் சிகாவின் கையைப் பிடித்து என்னென்னவோ பேசிக் கொண்டு வருகிறார்கள். அவள் பக்கத்தில் போனாலே இப்படி ஆகிவிடும். இத்தனைக்கும் சில பேரைப் போல, கையைப் பிடித்துக் கொண்டோ, தோளைத் தொட்டுக் கொண்டோ எல்லாம் பேசுவதே இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. பொன்னக்குட்டியைப் பார்த்து சிகா சத்தம் கூடப் போடுவாள். ''அதென்ன பழக்கம். எப்ப பார்த்தாலும் தொட்டுத் தொட்டு பேசிக்கிட்டு'' என்று. பின் எப்படி சூரிய வெளிச்சம் மாதிரி ஒவ்வொருத்தரையும் அவளால் பளிச்சென்று ஆக்கிவிட முடிகிறது. ''உன்னை மாதிரிக் கிறுக்கன் உண்டா, உள்ளூர்ல கிடைச்ச வேலையை விட்டுட்டு, மெட்ராஸ்லே வேலை கிடைக்குமென்று ஓடிவார புத்திசாலி நீதான்'' - சிகா தட்டில் சாதத்தைப் போட்டுக்கொண்டே சொன்னாள். சிகாவின் கைகள் எந்த மாறுதலும் இன்றி அப்படியே மெலிவாக இருந்தன. இரண்டு வெள்ளைக் கல்லும் ஒரு நீலக்கல்லும் வைத்த மோதிரம் எண்ணெய் இறங்காமல் அதே மினுமினுப்புடன் இருந்தது. குனிந்து பரிமாறும்போது காரை எலும்பு இன்னும் தென்னிக்கொண்டுதான் இருந்தது. ''ட்ரை பண்ணும்வோம் ரவி'' என்று கனகராஜ் சொன்னார், ஒரு டர்க்கி டவலை உடம்பு முழுவதும் மறைக்கிற மாதிரி அவர் போட்டிருந்ததை எடுத்து, ''துடைச்சுக்கோ'' என்று, கைகழுவிவிட்டு வந்த எனக்குச் சிகா கொடுத்தாள். கையைத் துடைத்த பிறகு அந்தக் துண்டை இன்னும் முகர்ந்து பார்க்கத் தோன்றியது. ஒருவித கிளர்ச்சியுடன் அதைச் சிகா தோளில் போட்டேன். சிகாமணியின் தோளில் அந்தத் துண்டுக் கனம் இறங்கும்போது பளிச்சென்று ஒரு விநாடி பார்த்துவிட்டு, கனகராஜ் பிசைந்து கொண்டிருக்கிற தட்டில் மோர் ஊற்றினாள். அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து மறுபடி அவள்மேல் வீச வேண்டும்போல இருந்தது. சிகா அவ்வளவு அழகாக இருந்தாள். ''நம்ம ஊர் துரைப்பாண்டி ஸார்வா இங்கேதான் இருக்காங்க'' சிகா என்னிடம் சொன்னாள். ''யாரு நம்ம கணக்கு ஸார்வாளா'' - எனக்கு நம்ப முடியவில்லை. சிகா தலையை அசைத்தாள். ''டிரில் வாத்தியாரா இருந்தானே அவரு பையன், அவரு கூட இருக்கிறதாக அல்லவா சொன்னாங்க'' ''ஆமா மயில்சாமி கூடத்தான். இங்கே தானே, இருக்கான் அவன்'' ''மயில்சாமி எனக்கு ஒரு வருஷம் சீனியர். நான் எட்டுப் படிக்கும் போது அவன் ஒன்பது படிச்சான். ஸ்போர்ட்ஸ்ல வருஷா வருஷம் ப்ரைஸ் வாங்குவான் அப்பவே'' ''தெரியும் தெரியும்'' சிகா ஒரு மாதிரியாகச் சிரித்தாள். சிகாமணி போகிற இடமெல்லாம் மயில்சாமி கொஞ்சநாள் அலைந்து கொண்டு இருந்தான். டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போகிற நேரம் பார்த்துச் சரியாக மூணுலாம்பிற்கு நேர் எதிரே ஒரு லாலாக்கடை இருக்குமே அதற்குப் பக்கத்தில் நிற்பான். தினசரி விடியற்காலம் ஆறுமணிக்கு என்ன அல்வாவா சாப்பிடமுடியும். அது எல்லாம் காய்ச்சல் அடித்துக் குணமாகிற மாதிரி தன்னாற் போல சரியாகிவிட்டது. காரைக்குடிக்குப் போய் டிரில் வாத்தியார் வேலைக்குப் படித்து விட்டு வந்து சமயம் ஆளே மாறிப் போய்விட்டான். வெள்ளை அரைக்கால் சட்டையும் கான்வாஸ் காலணியுமாக சைக்கிளில் பந்து விளையாட போகும்போது சிகா வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தால். வீட்டுச் சுவரில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மயில்சாமி பேசுவான் என்றுதான் சிகாமணி நினைத்தாள். கிணிங் என்று அவள் பக்கத்தில் வரும்போது ஒரு பெல் கூட அடிக்கவில்லை. சிலபேர் எப்படி இப்படி மாறிவிடுகிறார்கள். பாபநாசம் ரோட்டு மருதமரம், அதில் ஒட்டப்படுகிற கலைக்கோவில் சினிமா போஸ்டரும் பொந்தில் இருக்கிற கிளிகளும் மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றன. இவ்வளவு தெரிந்தபிறகு துரைப்பாண்டி ஸாரை பார்க்காமல் இருக்கமுடியுமா. மயில்சாமி வீட்டை சிகாவும் நானும்தான் நடந்து போய்க் கண்டுபிடித்தோம். கொஞ்சம் தூரம்தான். போகவரவே அரைமணிநேரம் கிட்டதட்ட ஆகிவிடும். மயில்சாமி சம்சாரம் அருமையான மனுஷி. பேச ஆரம்பித்தால் மடியில் தூக்கிவைத்துக் கொள்கிறமாதிரித்தான் இருந்தது. முதல் தடவையாக மயில்சாமி வீட்டிற்குப் போயிருக்கும்போது மயில்சாமியும் இல்லை. துரைப்பாண்டி ஸாரும் இல்லை. ''இவ்வோ இன்னும் வரலை. மாமா ட்யூஷன் எடுக்காஹ. வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்காஹ. பொழுது போகணும்லா, எம்புட்டு நேரம் சும்மாவே ஈஸிசேரிலே பேப்பர் படிச்சுட்டுக் கெடக்கிறதுங்காஹ, இதை சொல்லும்போது ஒரு தட்டில் கொழுக்கட்டையும் தண்ணீரும் வந்தது. ''நமக்கே குத்த வச்சு ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியலே. இதிலே அந்தக் காலத்து ஆட்கள் எப்படி இருப்பாஹ? - மயில்சாமி சம்சாரம் பேச்சை நிறுத்துகிறதாக இல்லை. ஆவுடையானூர்க்காரி என்பது சரியாகத்தான் இருந்தது. என்ன பிரியம். என்ன திருத்தம் ஒவ்வொண்ணிலும். என்றைக்கு வெளியே போகவேண்டும் என்று தோன்றினாலும் எனக்கும் சிகாவுக்கும் துரைப்பாண்டி ஸார் வீட்டிற்குத்தான் போகத் தோன்றும். இப்போதாவது என்னென்னவோ பேச்சு வந்துவிட்டது. ரேஷன் கடையில் கூட நான் கனகராஜ் இல்லை என்று தெரிந்து கொண்டே, ''கனகராஜ் ஸாருக்கு கோதுமைக்கு பில் போட்டாச்சா'' என்று கேட்டபடி என்பையில் கோதுமையை அளந்து போட்டிருக்கிறார்கள். ''மண்ணெண்ணெய் கேன் டீச்சர்கிட்டே இருக்கா ஸார் என்று தள்ளி நிற்கிற சிகாமணியை காட்டிக் கேட்டிருக்கிறார்கள். சிகா டீச்சர் இல்லை. வேலைக்கு போகவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்ததைத் தெரியாது போலப் பேசுகிற கெட்டிக்காரத்தனம்தானே இப்போது செல்லுபடி ஆகிறது இதற்கு எல்லாம் முந்தி நாங்கள் மூன்று பேருமே நடந்து, பெருமாள் கோவில் தாண்டி, போலீஸ் ஸ்டேஷன் பக்கமாய்ப் போய், ஏரிக்கரையில் நடந்து, நடுவில் பட்டம் விடுகிறவர்களைச் சற்றுப் பார்த்து, சர்வ சாதாரணமாக நடக்கிற சாராய வியாபாரத்தைக் கண்டுகொள்ளாமல் விலகி, ஒரு நீண்ட விசில் சத்தத்தின் கேலி ஒலிக்க - ( இப்போது நான் சற்றுக் கோபமாக நின்று திரும்பிப் பார்க்க, ''போவோம்'' என்று கனகராஜ் தோளில் கைவைப்பார். சிகா மடங்கிக் கீழே குனிந்து ஒரு நத்தைக் கூட்டைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பாள்) வேலிக்காத்தான் செடிகளுக்கு அப்புறமாகப் போய் ஸார் வீட்டை அடைந்தபோது, அன்றைக்கு கணக்கு ஸார் வீட்டில் இருந்தார்கள். கணக்கு ஸார் எவ்வளவு அருமையான மனிதர். எங்கள் பள்ளிக் கூடத்தின் சொத்தே அவர் அல்லவா. உலகம் என்ன என்ன முடிச்சை எல்லாம் எங்கெங்கு போடுகிறது. என்னுடைய தாத்தாவும் அவருடைய அப்பாவும் எஸ்டேட்டில் ஸ்டோர் கீப்பராக இருந்தார்களாம். ஏதோ ஒரு முக்கியமான சிறு உதவியை எங்கள் தாத்தா செய்திருப்பார் போல. '' அவர் பொருத்திவச்ச விளக்கு அல்லவா எங்க வீட்டில் இன்றைக்கும் எரியுது'' என்று என்னுடைய அப்பாவிடம் ஸார் சொலலிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா போனபிறகு அன்றைக்கு ஸார் எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்டங்கள் பற்றியும் அட்டைக்கடி பற்றியும், பள்ளிக்கூடம் போகிற வழியில் வேல்கம்பால் குத்தித் தூக்கி மரத்தில் உயிரோடு இருப்பதுபோல் கட்டி வைத்திருந்த சிறுத்தைப் புலி பற்றியும் சொன்னார். அந்தப் பக்கத்தில் இருந்த சர்ச்சின் மணி சப்தம் எப்படி இருக்கும் என்று ஸா‘ சொல்லும்போது மனி சப்தம் கேட்டது. குளிர்ந்த ஓடைகளும் பெரணிச் செடிகளுமாக இருக்கிற அவருக்குப் பிடித்த ஒரு பாறையைப் பற்றிச் சொல்கையில், நான் அந்த ஓடையில் இருந்து கூழாங்கற்கள் பொறுக்கினதுண்டு. ஒரு சமயம் இங்கிலீஷ் பீரியட் ஸார்வா வராதபோது துரைப்பாண்டி ஸார் வந்து ''இங்கிலீஷ் பொயட்ரி'' எடுத்தார். ஒரு படுகை பூராவும் மலர்ந்திருக்கிற ஒரு மலரைப் பற்றிய அந்தக் கவிதையைச் சொல்லிக் கொடுப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பது அவர் பேசின மற்றப் பேச்சிலிருந்தே எனக்குதெரிந்தது. எனக்கும் கூட சமபங்கு கணிதமும் வேண்டியிருந்தது. இதுபோல சொல்லிக் கொடுக்கப்படுகிற கவிதையும் வேண்டியிருந்தது. நான் பாலிடெக்னிக்கில் சேருவதற்குப் போதுமான கணக்கையும், சிகாமணியைக் கண்டடைவதற்கான மெல்லுணர்வையும் அவரிடமிருந்துதானே பெற்றுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் மூன்று பேரும் போன தினத்தில் சிகாவிடமும், என்னிடமும், ஊருக்குப் போனீர்களா, சமீபத்தில் மழை உண்டா, பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் எப்படி, மில்லில் ஆள் எடுக்கிறார்களா, எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஹைஸ்கூலில் போனவருஷம் எத்தனை சதம் தேறினார்கள். கணக்கில் சென்ட்டம் எத்தனைபேர், சொரி முத்தையன் கோவிலுக்கு இப்போது ஆடி அமாவாசைக்கு முன்னைப் போலக் கூட்டம் வருகிறதா. காணிக்குடியிருப்பில் ஸ்கூல் ஒண்ணு உண்டே. அது நல்ல பெருசா வளர்ந்துட்டுதா, இப்போ ஸ்ட்ரெங்த் எவ்வளவு இருக்கும் என்று எல்லாம் சற்று நேரம் கேட்டவர், ஒரு கேவலைப்போல நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, இதுவரை பேசாமல் கவனித்து கொண்டிருந்த கனகராஜைப் பார்த்து. ''உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று கேள்விப்பட்டேன்'' என்று அவருடனான தன் முதல் உரையாடலைத் துவக்கினார். அவர்கள் பியானோ இசையைப் பற்றி அப்புறம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கனகராஜ் ஒரு கட்டத்தில் பியானோ வாசிப்பதையே போன்று தன் பத்து விரல்களையும் ஒரு இசைவுடன் அசைத்துக் கொண்டு, காற்றில் சில நிமிடங்கள் அந்தரத்தில் கைகளை நிறுத்திக் கண்களை, மூடிக்கொண்டபோது, துரைப்பாண்டி ஸார் தன் பக்கத்தில் இருந்த சிகாமணியின் கைகளில் ஒன்றை எடுத்துத் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டார். சிகாவின் மெலிந்த கையின் மேல், வழுவழுப்பு நிறைந்த சேலை நினைத்து நினைத்துச் சரிந்து இறங்கியது. அப்புறம் நாங்கள் எத்தனையோ தடவை போயிருப்போம். ஒரு சில நெகிழ்வில் உள்ளங்கைக்குள் புரண்டு கொடுக்கிற கற்பனையான வைரக்கற்களைப் போல, மனிதர்களுக்குள்ளும் நிகழ்ந்து விடத்தானே செய்கின்றன. எல்லாம் காதுக்கு வந்த பிறகு மயில்சாமியின் மனைவி ஒரு சிறு வித்யாசம் கூடப் பாராட்டாதது எப்படி என்று இன்னும் புரியவில்லை. நானும் சிகாவும் போயிருக்கும் போது, இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு மயில்சாமி ஒரு தடவை சொன்னான். ''உங்க ரெண்டு பேரையும் கண்டிச்சுக் சொல்லணும் போலவும் இருக்கு. சொல்லவும் முடியலை''. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எப்படி அவனால் நிறுத்திக் கொள்ள முடிந்தது. அவன் வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோம். ''சிகா, உனக்குக் கார்ட்டுன்ஸ் பிடிக்கும் என்று சொன்னாயே'' என்று சொல்லி காஸெட்டைப் போடுகிறான். ''ரவி மீன் சாப்பிடுவியா நீ'' என்று அவன் மனைவி வந்து கேட்டுவிட்டுப் போன சிறிது நேரத்தில் அம்மி தட்டுகிற சத்தம் கேட்டது. ''அம்மி தட்டுகிற சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு'' சிகாமணி உட்பக்கம் எழுந்து போகிறாள். திரையில் பூனை எலியிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க மயில்சாமி அப்படிச் சிரிக்கிறான். சின்னப்பிள்ளை மாதிரி. சொல்ல முடியாத ஒரு கணத்தில் எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டும் எங்கேயாவது போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது. ''மயில் அப்ப நான் வர்ரேன்'' ''ச்சூ. இருந்து சாப்பிட்டுப் போகலாம் ரவி'' இல்லை போறேன்'' - எனக்கு என்னைத் தூக்கி யாராவது எறிந்து நொறுக்கிவிட மாட்டார்களா, சுக்கல் சுக்கலாகி, யார் காலிலும் குத்தாமல், மண்ணோடு மண்ணாகிவிட மாட்டேனா என்று இருக்கிறது. கனகராஜ் எதிரே வந்து விடக்கூடாது. துரைப்பாண்டி ஸார் வந்துவிடக்கூடாது. வெயிலின் கீற்றில் கரைந்து அரூபமாகி, ஏரிக்குள் பறக்க விடுகிற பட்டம் மாதிரி உச்சிக்கு எவ்வி எவ்வி உயிர் அறுந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும். ''சிகா சாப்பிட்டுட்டு வரட்டும். நான் போறேன்'' எழுந்திருந்தேன். ''இந்த பாரும்மா. ரவி போறானாம்'' - அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் வெளியே வந்தேன். ஹ’ண்டு பேப்பர் தரையில் சருகியது. நாய் கட்டிப் போட்டிருந்த இடத்தில் சூட்டு வாடை அடித்தது. தபால் பெட்டில் யாரோ டூத் பிரஷ் காலி டப்பாவைச் செருகியிருந்தார்கள். கருநீலமாகப் பூக்கள் அசைந்தன. மரக்கதவில் கனத்து விழுகிற இரும்புப்பட்டை நாதாங்கி. சிந்திக்கொண்டே போகிற தண்ணீர் லாரி. சைக்கிள் ரிக்ஷாவின் ஓரத்தில் இருந்த நீல பீக் ஷாப்பர் பையில் பசேல் என்று காராமணிக் கொத்து. ''என்ன ஆச்சு ரவி'' - சிகா வந்து கையைப் பிடித்தாள். மேலும் பிடித்தபடியே என்னுடனே நடக்க ஆரம்பித்தாள். மெலிந்த அவளுடைய கைகள் எனக்கு நிரம்பவும் வேண்டியிருந்தது. சேலையின் விசிறல் பக்கவாட்டில் நகர்ந்தபடி வந்தது. சிகாமணி சேலைத்தலைப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். ''நல்ல வெயில்'' என்றாள். எதிரே துரைப்பாண்டி ஸார் வந்து கொண்டிருந்தார். முழுக்கைச் சட்டையுடன் ஒரு கை உயர்ந்து குடையைப் பிடித்திருந்தது. தோளில் சாய்ந்த குடையில் அவருக்குப் பின்னால் உள்ள பாதை மறைந்து மறைந்து விலகியது. முக்கியமாக, ஒரு வீட்டுக்குள்ளிருந்து தெருப்பக்கம் சரிந்திருந்த செவ்வரளிப் பூக்கள் பார்வையிலிருந்து விலகுவதும் தெரிவதுமாக இருந்தது. தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விட்டார். துரைப்பாண்டி ஸாருக்கு எல்லாம் தெரியும். ''என்ன இந்த வேனா வெயிலில?'' ''நம்ம வீட்டுக்குத்தான் ஸார்'' - சிகா சொன்னாள் ''சாப்பிட்டீங்களா'' - மரத்தடிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. அவர் ஒரு மரத்தடிக்கு நகர்வது மூலம் எங்களையும் நிழலுக்கு உட்படுத்திக் கொண்டார். வெயிலை விட்டு எப்படி எல்லாம் நகர்த்திக் கொள்ள முடிகிறது. மணி ஒண்ணரைதானே ஆகுது'' ''ஒண்ணரை மணிக்குச் சாப்பிடக் கூடாதுன்னு என்ன எழுதியா வச்சிருக்கு?'' -ஸார் எங்களைப் பார்த்தார். நாங்கள் நின்றிருந்த வேலிக்கருவை மரம் நிறையக் காய்த்திருந்தது. குஞ்சம் குஞ்சமாகப் பூத்திருந்தது. ஊதினால் மகரந்தம் பறக்கும்போல. ஏற்கெனவே ஒடிந்த கிளை காய்ந்து முட்கள் துருத்திக் கொண்டு இருந்தன. நிழல் இருந்தது போதுமான அளவு. சிகாவும் நானும் பேசாமல் ஸாருடன் நின்றோம். ஸார் குடையை வலது தோளிலிருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டார். மறுபடியும் கேட்டார் - ''எழுதியா வச்சிருக்கு'' சிகா தலையை ஆட்டினாள் ''எழுதி வைக்கலையில்லா?'' - இப்போது என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இல்லை என்று தலையை ஆட்டினேன். ''பின்னே?'' - இதைச் சொல்லிவிட்டு துரைப்பாண்டி ஸார் முன்னால் நடந்தார். நாங்கள் பின்னால் வருவோம் என்று அவருக்குத் தெரியும்போல.
ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா. காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.” ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன். “நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது. அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும். அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை. ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். “அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.” அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான். இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான். தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான். அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது. மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான். அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை. அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.
பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார். “இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான். “முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன். சாப்பாட்டு நேரம்— முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார். திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான். நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி. “ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன். முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார். ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன. “இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார். “ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன். அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி. “என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.
ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான். இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான். இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர். “”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன். “”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள். “”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி. இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை. இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். “”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர். “”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன். “”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர். மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர். நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர். இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார். உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான். மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான். இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார். மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான். விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான். இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான். இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை. உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான். “”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன். போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை. போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன். மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான். இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான். ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள். ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள். இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான். விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான். அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன. ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும். இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான். ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.
வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது. அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது. ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது. ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது. “மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன். ‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு. "பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன். மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது. “வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு. "வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு. இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின. ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய. மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில். கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து. குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு. அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி. வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு. கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து. “அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது. குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது. குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன. மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.
தன் முன்னால் தரையில் அமர்ந்து, கதறியழும் வயதானப் பெண்ணை, மாவட்ட ஆட்சியாளர் இந்துவால், தேற்ற முடியவில்லை. பக்கத்தில் உள்ள, ஒரு சிறு கிராமத்திற்கு நிதியுதவி செய்யச் சென்றபோதுதான், அந்தப் பெண்மணி, அவளது காலில் விழுந்து அழுதாள். ஏன் அழுகிறாள்? தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு, பல நாட்களாய் சிறுகச், சிறுகச், சேர்த்த காசைக் கொண்டு, தன் மகளுக்கு நகை வாங்க நகருக்குச் செல்லும்போது, எவனோ ஒரு பிட்பாக்கெட்காரன் இரக்கமின்றி எடுத்துவிட்டான். இந்த சம்பவத்தைக், கேட்டுக் கொண்டிருக்கும் இந்துமதியின் மனம் பதினைந்து ஆண்டுகளுக்கு, முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்றது. எல்லா மரங்கள், செடிகளும், கொடிகளும், முதுமைக்கு விடைகொடுத்து, இளமையைச் சந்திக்கக் காத்திருக்கும், மார்கழி மாதம் அது. மருதாணியின் வெளுப்பைப் போல், இன்றும் வழக்கமாக சூரியன் வெளுத்தான் சற்று தாமதமாக... பட்டனை அழுத்தியவுடன் இயங்குகின்ற இயந்திரமாய், மணி அடித்தவுடன், மாணவர்களின் சலசலப்போடு புது கிளுகிளுப்போடு, வகுப்பறை ஆரம்பித்தது. அது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அன்று ஆறாம் வகுப்பு ஆசிரியர் கார்த்திகேயன், வரவில்லை. ஆசிரியர் வரவில்லையென்றால் சொல்லவேண்டுமா? அவ்வளவு தான் ஒருவர். ஒருவரின் குடுமியைப் பிடித்தும், அடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஏ குண்டு, கொழுக்கட்டை, கருவாச்சி என ஒருவர், மற்றவரை அவர்களது பட்டப் பெயர்களால் அழைக்கலாயினர். ராஜேஸ்வரியின் தந்தை, சிங்கப்பூரில் இருக்கிறார். தினமும் விதவிதமான, உடையுடன், பள்ளிக்கு வருவாள். இவளது அருகில் பள்ளியில், அமர்ந்து இருப்பவள் இந்துமதி. அவளது தந்தை சிறு வயதில் இறந்துவிட்டார். எனவே அவளது அம்மாவும், இரண்டு தங்கச்சிகளும், தான் இவளுக்குப் பெரிய சொத்து. இவளது அம்மாவினுடைய உழைப்பில் தான், குடும்பம் நடக்கிறது. இவளது அம்மா இலட்சுமியம்மாள் பஞ்சு ஆலையில் வேலைப் பார்க்கிறாள். வழக்கம் போல், ராஜேஸ்வரி தனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்த, பேனாவை வைத்துப் பெருமையடிக்கத் துவங்கினாள். ஐயா! எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டுவந்த சிங்கப்பூர் பேனா, சிவப்பு மை பேனா, பார்த்தியா? எவ்வளவு அழகா, இருக்குன்னு. வறுமை இந்துவின் வார்த்தைகளுக்குத் தாழிட்டது, இருப்பினும். ஏப்பா! ஏப்பா! இதை எனக்குத் தர்றியா? என ராஜியிடம் கேட்கிறாள். ராஜி... ம்ம் அசுக்குப், பிசுக்குப், போடி உனக்குத் தரமாட்டேன், என்று சொல்லி அவளைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. "பணக்கார வர்க்கத்தை வேடிக்கைப் பார்த்து, ஆசையை அடக்கிக் கொள்வதை, வாடிக்கையாக்க வேண்டும்." என்பது, அந்தப் பிஞ்சு நெஞ்சத்திற்குத் தெரியவில்லை. ரொம்பப் பீத்திக்காதடி, நானும் எங்கம்மாக்கிட்ட இந்த மாதிரி பேனா, வாங்கிக் கேப்பேன்னு தேம்பித் தேம்பி சொல்லிக் கொண்டே அழுகிறாள். இந்துவின் வீடு, பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. மாலையில் பள்ளி முடிந்ததும், வீட்டிற்குச் செல்லும்போது, வழியோரம் காணப்படும் கருவை மரங்களின் இலைகளையும், மஞ்சள் பூக்களையும், உதிர்த்து, உதிர்த்து, அவைகளிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொண்டே போனாள். வீட்டை அடைந்ததும், அவள் தனது பையை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு, பக்கத்து வீட்டுக்குத் தொலைக்காட்சிப் பார்க்கச் சென்று விட்டாள். இந்துமதியின் தாய் ஆலையை விட்டு வந்ததும், "இந்து, இந்து", என அழைக்கவே அவளைக் காணவில்லை மறுமுறை "இந்து, இந்து" என அழைக்க... "அம்மாக் கத்துறது ஊருக்கேக் கேட்கும் போல, ச்சே செத்த நேரம் கூட நிம்மதியாப் படம் பார்க்க முடியல, என முனங்கியவாறே", வீட்டிற்குள் நுழைந்தாள். "நானே ஒத்தக் கையாளு, பொம்பளப் பிள்ளை கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக் கூடாது", எனக் கூறிவிட்டு சமைக்கத் துவங்குகிறாள். இந்துமதி அம்மாவிடம் தயங்கிக் கொண்டே, " அம்மா, அம்மா இந்த இராஜிப் பிள்ளை வச்சிருக்கிற பேனா மாதிரி எனக்கு வாங்கித்தர்றியாம்மா?", "யாருடி இவ, வேற வேலையில்லை பெரிய இடத்துப் பிள்ளைங்க அப்படி, இப்படின்னு, வச்சிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துட்டுக் கேட்கக் கூடாது", தலையில் ஒரு கொட்டு வைக்கிறாள் அம்மா. இந்துமதி கலங்கிய கண்களோடும், வீங்கிய முகத்தோடும், பள்ளிக்குச் சென்றாள். இடைவேளையில் ராஜி இல்லாதநேரம், அவளது பேனாவைத் திருடுகிறாள். இராஜி அழுதுகொண்டே "சார், சார் என் பேனாவைக் காணோம் சார்! எங்கம்மா அடிப்பாங்க சார்" என்றாள். தன் ஆசிரியரிடம் புகார் செய்தாள். இந்துமதியின் விழிகள் அங்கும், இங்கும் உருண்டோடின. அச்சம் அவளை, ஆட்கொண்டது. வாத்தியார் கார்த்திக் மிகவும் பண்பானவர். அவர் தனது மாணவர்களை விட்டு அனைத்துப் பைகளையும், சோதனையிடச் சொல்கிறார். இந்துவின் பையில் பேனா, இருப்பது தெரியவருகிறது. ஆசிரியர் இந்துவைத் தனியாக அழைத்து, "இந்து இங்க வாப்பா, நீ நல்லப்பிள்ளையாச்சே ஏன் இந்தத் தப்புப் பண்ணுன?" இந்து அழுகிறாள். "சார், இந்த மாதிரி பேனா எங்கம்மாக்கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், சார். அம்மா, அதுக்கு இதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க வச்சிருக்கது, நம்மெல்லாம் அதுக்கு ஆசைப் படக் கூடாதுன்னு, சொல்லுச்சு சார். ஏன் சார் நான் ஆசைப்படக் கூடாதா?" எனக் கேட்கும் அவள் கண்களில் ஏக்கம் தெரிகிறது. ஆசிரியர் கார்த்திக், "ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்மாலயும் வாங்க முடியும். ஆனா பிறர் பொருளுக்கு, ஆசைப் படக் கூடாது. ஆனா உண்மையா இருக்கணும். இல்லைன்னா, சாமி நம்மளத் தண்டிக்கும் திருடுனாப் படிப்பு வராது! நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்க முடியும் எப்போ தெரியுமா? நீ நல்லாப் படிச்சு, வேலைக்கு வந்தா, நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்கலாம்" என்னும் ஆசிரியரின் வார்த்தைகள் இந்துவின் காதில் எதிரொளிக்கின்றன... கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்மணியைத் தேற்றத் துவங்கினாள்.
காட்டுக்குள் சில நாய்கள் பசியோடு இரை தேடிக் கொண்டிருந்தன. அப்போது ஆற்றில் ஒரு மாட்டின் தோல் மிதப்பதை அவை பார்த்தன. உடனே தண்ணீரில் இறங்கி அந்தத் தோலை கவ்வ முயன்றன. ஆனால், தண்ணீர் நிறைய இருந்ததால் அது முடியவில்லை. உடனே, ஆற்றில் ஓடும் தண்ணீரை எல்லாம் குடித்துவிட்டால் அந்தத் தோலை எடுப்பது எளிதாக இருக்கும் என அந்த நாய்கள் நினைத்தன. உடனே, எல்லா நாய்களும் சேர்ந்து தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தன. ஆனால், ஆற்று நீர் முழுவதையும் குடிக்க முடியுமா? ஆனால், அவை மேலும் மேலும் குடிக்க, அவற்றின் வயிறு வெடித்து இறந்துபோயின. அடையவே முடியாததை முயற்சிக்கவே கூடாது.
ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார். இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.
ஒரு முறை ஸென் ஆசிரியர் கைஸன் குளிக்கும் சுடுநீரில் கலப்பதற்காக தன்னுடைய மாணவன் ஒருவனிடம் வாளியில் குளிர்ந்த நீரினைக் கொண்டு வரச் சொன்னார். தண்ணீரினைக் கொண்டு வந்த மாணவன், வெந்நீரில் தேவையான அளவிற்கு குளிர்ந்த நீரினைக் கலந்து விட்டு, மீதியிருந்த கொஞ்சம் நீரினை கட்டாந் தரையில் ஊற்றினான். "மடையா" என்று கடிந்து கொண்ட ஆசிரியர், "ஏன் மீதியிருந்த தண்ணீரினை நீ செடிகளுக்கு ஊற்றாமல் கீழே ஊற்றினாய்? இந்த மடத்தில் உள்ள ஒரு சொட்டு நீரினை வீணடிப்பதற்கும் உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று கோபத்துடன் கேட்டார். அதைக் கேட்ட அந்த மாணவன் உடனடியாக ஸென்னின் தன்னொளியினைப் பெற்றான். பெற்றவன் தன்னுடைய பெயரினை டேகிசுய் என மாற்றிக் கொண்டான். "ஒரு துளி நீர்" என்பதே டேகிசுயின் அர்த்தம்.
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான். ""யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?" என்றான். ""தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!" என்றார். ""இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!" என்று அந்த அரக்கன் கூறினான். அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார். அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். ""குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!" என்று கத்தினர். கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார். ""வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!" அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ""இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!" என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது. அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர். ""எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?" என்றனர். அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார். அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.
அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார். சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல். “பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!” என்றார் அக்பர். “தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். “பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பல். சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர். திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார். மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின. அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார் பீர்பல். “அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார் அக்பர். “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது,” என்றார் பீர்பல். தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது,” என்றார். “இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்றார் அக்பர். “அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பல். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது. அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பல். பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர். பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர். “சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள்அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!” என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.
ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.
நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர். அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான். இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை. அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான். மூன்றாவது நபர், “ உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான். ஆனால் மற்ற இருவரும், “ ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது “ என்று கூறினார்கள். அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள். மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள். ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான். அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி – நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய். முதல் மனிதன் கேட்டான், “குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?” அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, “ எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை “ என்று கூறினார். இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, “ அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான், துறவி, “ வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார். மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், “ இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?” என்று கூறினான். துறவி சிரித்தார். அவர் “ நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு. எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “ என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்….. நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட……. எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம். நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்……அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்….. அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது.
விஷேசத்திற்கு முந்தின நாளே அந்த வீட்டில் ஒலிபெருக்கியின் சத்தம் ஒலித்தது. மாலை நேரமாகையால் சோகப்பாடலை போட்டிருந்தார்கள். தூங்கப்போன மூர்த்திக்கு "பேன்" காற்று வீசியதுபோல் இதமாயிருந்தது. "என்ன இனிமையான குரல் வளம்; அதற்கேற்ற இசை மெட்டு". "அம்மா ஊருக்குள்ளே என்ன விஷேசம். ரேடியாப் படிக்கிது". "டேலே, ஊர்ப்பய புள்ளையெல்லாம் எலும்புக் கறியும், சோத்துக்கும் ஏமாந்து போயி எப்ப பந்தி வப்பானுகண்ணு ஏங்கிப் போய்க் கிடக்குது. ஊரே அந்தச்சாமி வீட்டுக் கல்யாணத்தப்பத்திதான். இந்த ஒரு மாசமா பேசிக்கிட்டிருக்கு. படிச்சும் வௌரம் தெரியாத மாதிரி பேசுறியே. நாளைக்கு காலைல கல்யாணம். ஆத்திலேயே குளிச்சிட்டு வந்திரு. எல்லாரும் கல்யாணத்திற்கு போயிட்டு வந்துருவம்". "ஏம்மா இந்தக் காலத்திலே போயி, சாமி வீடு சும்மா வீடுன்னு. அவுகளும் நம்மள மாதிரி மனுஷதானம்மா. அவுக மட்டும் எப்படி சாமி ஆவாக". "நீ எப்பவுமே தலைகீழாத்தாண்டா பேசுவே". "அப்புறம் என்னம்மா. நம்ம மட்டும் கல்யாணத்துக்குப் போயி சாப்புட்டு வர்றோமே, அவங்க என்னிக்காவது வந்து, நம்ம வீட்டுக் கல்யாணத்திலே சாப்பிட்டுருக்காகளா. நம்ம மட்டும் போயி அங்க சாப்பிடணும். கிடக்கிற வேலையெல்லாம் நம்ம வூட்டு வேலை மாதிரி இழுத்துப் போட்டுச் செய்யணும். அவங்க மட்டும் காசு கொடுத்து, கலர் குடித்துவிட்டு, வெத்தலை, பாக்குகூடப் போடாமல் போயிறாங்க! நம்ம மேல நெசமாவே பாசம் இருந்தா பந்தியிலே வந்து சாப்பிடலாம்ல. எல்லாமே நடிப்பும்மா. அவனவன் இந்த ரேஞ்சோட இருந்துக்கிறான். நாம் தான் நாய் மாதிரி அவன் வாசப்படியிலேயே இன்னும் போய்கெடக்கிறோம். "உனக்கு என்னடா விவரம் தெரியாத பய. அந்தக் காலத்திலே அவுகளெல்லாம் எப்பிடி இருந்தாக தெரியுமா. கல்யாணப் பொண்ணையே வருஷக் கணக்காப் பார்க்க முடியாது. அவுகளும் பார்க்கவிடமாட்டாக. அவுங்க வூட்ல எல்லாம் நிறைஞ்சு கிடக்கும். அவ்வளவு வசதி அவுங்களுக்குன்னு தனியா எடம் ஒதுக்கி, எல்லா வசதியும் செஞ்சவச்சிருக்காங்க பாத்தியா. அந்தக் காலம் தொட்டு இப்ப வரைக்கும் அவங்க வச்சது தான் வேதமா இருக்கு. இப்பவும் பார்த்தியா ஏதாவது ஒண்ணுனா நானூறு வீடு இருக்கிற நம்மலெல்லாம் அந்த நாலு வீட்டுக்காரனத்தானே தேடிப்போறோம்". "அம்மா அந்த நாலு வீட்டுக்காரனைத் தேடிப்போனது நம்ம தப்பு. நம்ம நானூறு வீட்ல இல்லாத கூட்டு அந்த நாலு வீட்ல இருக்கு. அப்பவே வசதியாயிருந்தாங்கன்னு சொல்றியே. நீங்க கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும். அவன் அப்பவே விவரமா இருந்து, நம்மளத் தொட்டா தோஷம்ன்னு சொல்லி, தனியாய்ப் போயி அவனுக்குத் தேவையானதை செஞ்சுக்கிட்டான். இப்ப அவன் நல்லாயிருக்காண்ணா இருக்கத்தான் செய்வான். தலையை விட்டுபுட்டு வாலைப் புடிச்சா வழுக்கத்தான் செய்யும்.", "அடப்போடா நீயும், உம் பேச்சும். அவங்க என்னமோ நம்ம வூட்ல சாப்புடலேங்கிறியே சாப்புடாட்டா போயிட்டுப் போறாக. அவுங்க வந்துட்டுப் போனா நம்ம வீட்டுக்கு ஒரு மரியாதைடா. உனக்கு அதெல்லாம் எங்க புரியப்போகுது". "எதும்மா மரியாதைங்கிற. சாப்பிடாமப்போனா போயிட்டுப் போறாகங்கிறியே. கல்யாணம்னா என்னம்மா. அதுக்கு எதுக்குமா நாலுபேர் நாலு திசையிலிருந்து வர்றாக. வாழ்த்துறதுக்குத்தானே. வர்றவகள உபசரிக்கிறது தாம்மா கல்யாணம். அவுங்க நல்லா சாப்புட்றாங்க பாரு அதுதான் திருப்தி. அத விட்டுட்டு, வருவாங்களாம். மொய் செய்வாங்களாம். உட்காரக்கூட செய்யாம போயிருவாகளாம். இதுக்கு எதுக்கு வரணும்". "உனக்கு என்னடா என்னயென்னத்தையோ பேசுற. போயி பேசாமத் தூங்கு" என்று கோபமாய்ச் சொன்னாள். "நமக்குன்னு சுய மரியாதை கூட வேணாமா" ன்னு அண்ணனிடம் கூடக் கேட்டுப் பார்த்திட்டான். "நமக்குன்னு என்ன சுயமரியாதை வேண்டிக் கெடக்குது. நம்ம என்னதான் கூட்டமாயிருந்தாலும் அவனுக்கு இருக்கும் அடிமையாக்குற புத்தி நமக்கு இருக்காதுடா. நம்ம பயலுகளெல்லாம் முரட்டுக்காரங்க. எல்லாம் நாலு காசப் பாத்துட்டா கறித்துண்டமுனு சோயா மாவதின்னுற பயலுக. நம்ம சாதி எப்பவும் அடிமைதாண்டா. சாதிங்கறது அழிக்க முடியாத ஒண்ணா ஆகிப்போச்சு. உன்னாலேயோ என்னாலயோ மட்டும் அழிக்க முடியுமா? ஆனா, அது அதுக்குன்னு ஒரு நெறிமுறை வச்சுக்கணும். அவனவன் மனசாட்சிதான்டா அவனவன் ஜாதி". முன்னாடி ஒருமுறை சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. பாயை விரித்துப் படுத்தான். ராத்திரியில் பாதி நேரம் வரை தூங்காததால், காலை நேரத்தில் தூக்கம் அசத்தியது. அப்படியே தூங்கிப் போனான். கண் திறந்தபோது, சாமி வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் விட்டு, வீடு திரும்பியிருந்தாள் அவன் அம்மா. "என்னம்மா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து பழைய சோத்தை ஊத்திச் சாப்பிடுறே" சிரித்துக் கொண்டே கேட்டான். "அதுக்கு என்னடா இப்போ. சாமி வீட்டுச் சொந்தக்காரங்க எவ்வளவு பேரு வந்திருக்காங்க. அவங்களெல்லாம் முதல்ல சாப்புடட்டும். நம்ம போயி அவங்க மத்தியிலே சகுணம் புடிச்சாப்ல உக்கார முடியுமா. நாளைக்குப் போனா ஏதோ பழக பட்டை கெடந்தா ஊத்துவாக. சாவகாசமா உக்காந்து சாப்புட்டு வரலாம்" - சொல்லிக் கொண்டிருந்தவள், வீட்டிற்குள் நுழையும் இளைய மகன் பாண்டியைப் பார்த்து "என்னடாக் கண்ணு" என்றாள். "அம்மா நீ வந்தப்புறம் அங்க நடந்துச்சுல்ல பந்தி அதிலே சாப்பிடப்போனேம்மா. அப்போ அந்தச் சாமிவுக வந்து என்னைய எந்திரிக்கச் சொல்லி, போகச் சொல்லிட்டாரும்மா. ஆட்டுக்கறி ஒண்ணுகூட திங்கலமா". ஒழுகிய ஊழை மூக்கை "ம்ஹ்" என்ற உறிஞ்சிக் கொண்ட வண்ணம் ஏங்கி ஏங்கி அழுதான்.
தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக் கூடிய ஒரு சமுராய் போர் வீரன் ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றான். சமுராய் போர் வீரன் தன் வீர தீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவன். ஸென் ஆசிரியரின் தோற்ற அழகினையும் இனிய பண்பும் அருள் நிறைந்த மனத்தினையும் பார்த்தவன் தீடிரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ஆரம்பித்தான். ஆசிரியரினை நோக்கிய சாமுராய், "கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வரை நன்றாக இருந்த நான் திடிரென எதற்காக என்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கிறேன்? உங்களது இருப்பிடத்திற்கு வந்ததும் ஏன் நான் என்னைத் தாழ்வாக நினைக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கு இந்த மாதிரியான மனநிலை வந்ததில்லையே. நான் சாவினையே பலமுறை மகிழ்ச்சியுடன் சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏன் நான் பயப்பட வேண்டும்?" என்று கேட்டான். ஆசிரியர், "பொருத்திரு. எல்லாரும் இங்கிருந்து சென்றதும் உனக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார். பலரும் ஆசிரியரைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். காத்திருப்பதினாலேயே களைப்படைந்து சோர்ந்து போனான் சாமுராய். மாலையானதும் அனைவரும் சென்று விட்டனர். சாமுராய், "இப்பொழுது உங்களால் என் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா?" என்று கேட்டான். ஆசிரியர், "வெளியே வா" என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டு திறந்த வெளிக்குச் சென்றார். அது ஒரு பௌர்ணமி நாள். தொடுவானத்திலிருந்து முழுநிலவானது மறைகின்ற கதிரவனின் ஒளிபட்டு அழகுடன் சிவந்து ஒளிர்ந்தது. "அங்கே தெரிகின்ற மரங்களைப் பார். அதோ அந்த மரமானது வானத்தை தொட்டுவிடும் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைப் பார். அதன் பக்கத்திலியே இன்னொரு சிறிய மரம் வளர்ந்திருப்பதைப் பார். என்னுடைய ஜன்னலின் வழியாக பல வருடங்களாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுக்குள் எந்த பேதமும் இருந்ததில்லை. அந்த சின்ன மரம், பெரிய மரத்தினைப் பார்த்து "ஏன் தாழ்ந்து போனவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன்?" என்று ஒரு பொழுதும் கேட்டதில்லை. இது சிறிய மரம், அது பெரிய மரம், ஏன் அவைகளுக்குள் காதோடு காதாக குசுகுசுவென பேசியதை என்னால் ஒரு நாளும் கேட்க முடியவில்லை?" என்றார். சாமுராய், "ஏனேன்றால் அவைகள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை" ஆசிரியர் சாந்தமான குரலில், "நீ என்னிடம் பதிலினை எதிர் பார்க்க வேண்டாம். உனக்கே பதில் தெரிந்திருக்கிறது" என்றார்.
சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். "வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்" என்றார் ஜாலிம்கான். "நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்" என்ற அவர்கள், "பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது" என்றனர். "பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!" என்றார் ஜாலிம்கான். வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார். ‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், "பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்" என்றார் "காளை மாட்டின் பாலா?" என்று வியப்புடன் கேட்டார் அக்பர். "பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்" என்றார் ஜாலிம்கான். "யார் அதைக் கண்டு பிடிப்பது?" என்று அக்பர் கவலையுடன் கேட்க, "ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை"என்றார் ஜாலிம்கான். "பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?" என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். "அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!" என்று கூறிய வைத்தியர், "பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்" என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான். உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். "எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?" என்று பீர்பால் கேட்க, "நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்," என்றார் அக்பர். "காளை மாட்டின் பாலா?" என்று வியப்புடன் கேட்ட பீர்பால், "காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?" என்று கேட்டார். "ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்" என்றார் அக்பர். "அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?" என்று பீர்பால் கேட்டார். "ஆம்!" என்றார் அக்பர். தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார். அதைக் கேட்ட அவரது மகள் "கட்டாயம் செய்கிறேன் அப்பா!" என்றவள் "அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?" என்று கேட்க, "அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!" என்றார் பிர்பால். நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள். அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான். அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, "முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?" என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான். "ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?" என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். "உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு" என்றான் காவலன். ‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?" என்றாள் அவள். காவலன் கோபத்துடன், "அதிகப்பிரசங்கி! யார் நீ?" என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே "நான் ஒரு பெண்!" என்றாள். "திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?" என்றான் காவலன். "நான் என் அப்பாவுடைய பெண்!" என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான். "உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்" என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் "என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். "ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்" என்றாள் அவள். "என்ன உளறுகிறாய்?" என்றார் அக்பர் கோபத்துடன். "நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது" என்றாள் அவள். "முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!" என்று சீறினார் அக்பர். "இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது" என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். "உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?" என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார். "இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?" என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்" என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது. "பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?" என்று அக்பர் கேட்டார். "ஆம், பிரபு!" என்றாள். "பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!" என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள். அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். "சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்" ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்" என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
தூரத்தில் தெரிகின்ற மேகங்களைப் போலவே உன் நினைவுகளும் கலைந்ததும் மறைந்து விடுபவையாய்...! கார்த்தி பஸ்ஸை விட்டு கிருஷ்ணாபுரம் காலனியில் இறங்கியபோது ஹேமா ஞாபகம் வராமல் இல்லை. மனதில் அழுத்திக் கிடந்த உணர்வுகள் தமிழ் மண்ணை மிதித்தும் பீறிட்டு வெளிக்கிளம்பிய போது அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பஸ் கிளம்பியபோது எழுந்த தூசி முகத்தில் படிந்ததைக் கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுத் திரும்பியபோது ஒரு டீக்கடை கண்ணில் பட்டது. மெதுவாய் டீக்கடைப்பக்கம் கொட்டகைத் தூணருகே சாய்ந்து நின்று தெருவை நோட்டமிட்டான். நினைவுகள் மின்சார வேகத்தில் முன்னோக்கிச் செல்ல மெதுவாய்க் கண்களை மூடிய கார்த்திக்கு மகாத்மா காந்தி நகர் மெல்லிய பாசியாய்க் கண்முன் படிந்தது. மகாத்மாகாந்தி நகரில் தான் ஹேமாவின் வீடு இருந்தது. அங்கிருந்துதான் பெரியார் வந்து, பெரியாரிலிருந்து எஸ்.வி.என். காலேஜில் பி.பி.ஏ., படித்தாள். ஹேமா பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர். அவளுடைய தாய்மொழி கன்னடம். பிராமின் பேமிலி. அப்பரம்பரைக்கே உரிய வார்ப்பான மஞ்சள் தேகம். மின்மினிப்பூச்சியாய்க் கண்கள், துருதுருப்பாய் இயங்கும் இடை, நிலவு முகம் என்று சங்க இலக்கியத்தில் இருந்து உவமைகள் கடன் வாங்கும் அளவுக்குச் சந்தனத்தில் கடைந்தெடுத்த தங்கச் சிற்பம் என்றெல்லாம் சொல்லுமளவுக்கு அவளுடைய அழகு இருந்தது. கார்த்தியும் அங்குதான் பி.பி.ஏ., படித்தான். அவனுடைய வகுப்பில்தான் ஹேமாவும் வந்து சேர்ந்தாள். முதல் முதலாய் வேகமாய் வகுப்பறையில் நேருக்கு நேராய்ச் சந்தித்தபோது அவனது கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அப்படியே அசந்துபோய் நின்றுவிட்டான். அப்படியொரு அழகான, அமைதியான குளிர் வீசும் நிலவை, குட்டித்தேவதையை அவன் அதுவரை பார்த்ததில்லை. முதன் முதல் பார்த்த பார்வையிலே அவள் முகம் பளிச்சென நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. அன்று வகுப்பறையில் என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அதை அவன் ஆராய்ச்சி செய்யவும் விரும்பவில்லை. அவள் முகம் மட்டும் பட்டாம் பூச்சிபோல, அடிக்கடி கண்ணில் நின்று கண்ணாமூச்சி காட்டியது. கண்டதும் காதல் என்கிற கணக்கில் உடனே நோட்டை எடுத்துப் படபடவென்று ஒரு ஹைக்கூ கவிதையை எழுதி வைத்தான். நான் பசையில்லை இருந்தும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது உன் முகம் அப்புறமென்ன கவிதை ஊற்று தேனாய்ப் பாய்ந்தது. காதல் பறவை சிறகடித்து வானில் எழுந்து. கோடை குளிர்காலமாகியது. குளிர் கார்காலமாகியது, தென்றல் சுட்டது, தீ குளிர்ந்தது. மொத்தத்தில் உலகத்தின் இயல்பு நிலைகள் அனைத்தும் மாறி அவனது காதலுக்காகக் காமதேவனால் சிருஷ்டிக்கப் பட்டதுபோல் ஒரு திரிசங்கு சொர்க்கலோகம் உருவாகியது. அதில் அவனே இராஜா, அவனே காதல் மந்திரி, தந்திரி எல்லாம். ஹேமாதான் அவன் கனவுக் கன்னி என்று ஆயிற்று. இப்படியே நாட்கள் உருண்டன. படிப்பில் மனம் லயிக்கவில்லை. சதாசர்வமயமும் ஹேமா சுப்ரபாதமாகவே விடிந்தது. மழையடித்தால் ஹேமா, புயல் அடித்தால் ஹேமா, வெயிலடித்தால் ஹேமா என்று பார்க்குமிடமெல்லாம் ஹேமா உருவமே நின்றது. இளமை முறுக்கில், இன்பக் கிறுகிறுப்பில் எதிர்கால வாழ்க்கை ஒன்று இருப்பதே கார்த்திக்கு மறந்து போனது. அடுத்தடுத்து எழுதிய டெஸ்ட் பரீட்சைகள் செமஸ்டர் என்று எல்லாம் அரியர் விழுந்தது. (அதை இட்டு நிரப்புவதற்கு எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் ஆனது அடுத்த விஷயம்) ஹேமா ஞாபகத்திலேயே இது எல்லாம் நடந்து முடிந்தது. ஒருதலைக் காதலை வளர்த்தானே தவிர, அந்தக் காதலைப்போய் அவளிடம் மனம் விட்டுச் சொல்வதற்கு அவனுக்குத் தெம்பு வரவில்லை. இரண்டு மூன்று முறை சொல்ல முயற்சித்து அது பெரிய தோல்விகளிலேயே முடிந்தது. காரணம் அவனுக்கு முன்பே ஹேமாவை ஐந்து பேர் நான் முந்தி, நீ முந்தி என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணகுமார், கருணாகரன், ஆனந்த், சுரேஷ், நாச்சியப்பன் என்று மாதாமாதம் அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போனது. அவர்களோடு போட்டி போட்டு, இவன் காதலைச் சொல்லி வடிகால் தேடுவதற்கு ஒரு வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, கருணாகரனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் உள்ளூர் தாதாக்களின் செல்வாக்கு இருந்ததால் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று பாதியிலேயே முழுக்குப் போட்டுவிட்டான். அத்தோடு ஹேமா அத்தியாயமும் அவன் மனத்திலிருந்து முடிந்துபோனது. ஒரு வழியாய் இதயத்தில் படிந்த காதல் ரணங்களை ஆற்றி அரியர்ஸ் எல்லாம் முடித்து அடித்துப்பிடித்து சிபாரிசின் மூலம், மதுரைக் காமராஜ் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ., படிப்பதற்கு இடம் கிடைத்தபோது உண்மையில் கார்த்திக்கு தான் வாழ்வில் ஒரு இமாலயப் சாதனை செய்துவிட்டோம் என்று தோன்றியது. ஆனால் விதி அத்தோடு அவனை விடவில்லை. அவன் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை அங்குதான் இது தொடங்கி வைத்தது. அவன் எதிர்பாராத அளவுக்கு இன்னொரு கவிதைப் பெண்ணாய், தாரிணி வந்தாள். அப்படியே அவன் பழைய காதல் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப்போட்டாள். ஒரு பெண்ணால் உண்டான காயத்தை இன்னொரு பெண்ணால்தான் ஆற்ற முடியும் என்பது மாதிரி, ஏற்கனவே ஹேமாவினால் அடிபட்டிருந்த இதயம் அவளைப் பார்த்ததும் அவளிடத்தில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது. அது என்ன மாயமோ தெரியவில்லை. காதலின் ரசவாத வித்தை இது என்று சொல்லவேண்டும். வள்ளுவன் உரைத்ததுபோல் ஹேமா விட்டுச் சென்ற தீக்காயங்களை இட்டு நிரப்புவதற்கென்றே தாரிணி வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே, ஏதோ ஒரு முன்ஜென்ம சாபல்யம்போல் அவளது உறவு அவனுக்கு வாய்த்து, தறிகெட்டுத் தடுமாறியது நெஞ்சம், அவள் அன்புப் பார்வையிலும், பேச்சிலும், மறுபடியும் ஒரு காதல் அரவணைப்பைத் தேடிக்கொண்டது. முதல் காதலைப்போலவே, மனசுக்குள்ளேயே இதையும் வளர்த்தான். முன்பிருந்த அதே பயம் இப்போதும் அவனை ஆட்டிப்படைத்தது. சகோதரி போல் சிரித்து பழகுகிறவளிடம் போய் எப்படி படக்கென்று, காதலைச் சொல்வது என்று மனம் தவியாய்த் தவித்தது. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. முதற்காதல் போல் இதுவும் ஒருதலையாய், கைக்கிளையாய் தவக்களையாய்ப் போய் விடும் என்ற பயத்தில், ஒருநாள் அதிக முயற்சி செய்து, ரொம்ப யோசித்து அவளைத் தனியே கேண்டீனுக்கு அழைத்து, டீ, கட்லெட், வடை எல்லாம் வாங்கிக் கொடுத்து காதலைச் சொல்லப்போகையில், தாரிணியின் அம்மாவுக்கு சீரியஸ் என்று போன் வர, தாரிணி அத்தோடு போனவள்தான்; திரும்பி யுனிவர்சிட்டிக்கு வந்தபோது, அவளது கல்யாணப் பத்திரிகையோடு உள்ளே நுழைந்தாள். தாரிணிக்குச் சொந்த ஊர் செக்காணூரணி. அவளது அம்மாவுக்கு முடியாமப் போன நேரத்திலேயே அவளது முறை மாமனை முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கல்யாணத்திற்கு முடிவெடுத்து விட்டார்கள். தாரிணி, அவள் கல்யாணப் பத்திரிகையைக் கார்த்தியிடம் நீட்டியபோது அவனது காதல் மாளிகை அன்றோடு தவிடு பொடியாகிப் போனது. அப்புறமென்ன கண்ணீரை மொய்யாக்கி எங்கிருந்தாலும் வாழ்க என்று நெஞ்சில் ஓர் ஆலயம் ஜெமினிபோல் பாடி வாழ்த்திவிட்டு வீடு வந்து விட்டான். இரண்டு நாள் காலேஜ் போகாமல் வீட்டிலேயே படுத்துக்கிடந்தான். அப்புறம் ஒருவழியாய் அவள் ஞாபகத்தை மறந்து எம்.பி.ஏ., முடித்துக் கஷ்டப்பட்டு, ஆந்திராவில் ஒரு கம்பெனியில் அஸிஸ்டன்ட் டைரக்டராய்ப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தாரிணி, ஹேமா என்ற பெண்கள் எல்லாம் மறந்து போனார்கள். நெஞ்சின் ஆழத்திலிருந்து, இதய வாசலிலிருந்து அவர்கள் எல்லாம் படிப்படியாய்த் தொலைந்து போனார்கள். இந்தப் பத்து வருடத் தனிமை வாழ்க்கையால் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. முன்பிருந்த இன்பேச்சுவேஷன் என்று சொல்லப்படுகிற இனக்கவர்ச்சி இப்போது இல்லை. இப்போதுகூட பழைய நினைவுகளை நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்படியெல்லாமா சிறு குழந்தைத்தனமாக நடந்து இருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது, ஒரு மெல்லிய புன்னகை மட்டும் இதழ்களில் இழையோடுகிறது. கார்த்தி திடீரென்று யாரோ திட்டுவதைக் கேட்டான். டீக்கடைக்காரர் இவனைப் பார்த்துச் சத்தம் போட்டார். 'தம்பி எவ்ளோ நேரமா கத்தறது கொஞ்சம் தூணவிட்டு ஒதுங்கி நில்லப்பா, கழிவுத்தண்ணிய வெளியே ஊத்தணும்' என்று வொல்லிவிட்டு இவன் பதிலைக்கூட எதிர்பாராது ஊற்றினான். இன்னும் ஓரிரு கணங்களில் மறந்துபோய் விடும். காதல் என்பதே வாழ்க்கை அல்ல, ஆனால் பகுதி. காதலை விதைத்தவர்கள் தொலைந்து போனாலும், காதல் பாதிப்பு மட்டும் என்றும் இருக்கும் என்ற நினைப்பில் கார்த்தி வீடு நோக்கி நடந்தான்.
டமார் என்று ஒரு சத்தம். அந்த அலுவலகத்தில் இருந்த அத்தனை பேருடைய கண்களும் ஒரே இடத்தில் வெறித்து நின்றன. மேசையிலிருந்து தவறி விழுந்த கண்ணாடிக் குப்பி, ஆத்திரக்காரனின் அறிவைப்போல தரையில் சிதறிக் கிடந்தது. அருகே உள்ளம் பதற, உடலும் பதற ஒருகணம் தவித்துப்போய் நின்ற துரைசாமி அவசரமாகச் சிதறலைப் பொறுக்கத் துவங்கினார். பல திக்கிலுமிருந்து பலவகையான வசையொலிகள் வெடித்தன. பெரிய கிராணி ஆசோங்கின் குரல் உச்சஸ்தாயியில் ஒலித்தது. டைப்பிஸ்ட் லெங் லெங் கூட ஏதேதோ சொன்னான். அது மட்டுமா? வேலைக்குச் சேர்ந்து இன்னும் ஒரு மாதம்கூடச் சரியாக ஆகவில்லை, அந்த ஒஸ்மான். அவன்கூட என்னமாய்ச் சூடேற்றிப் பேசினான்! இத்தனைக்கும் சிகரட் சாம்பல் தட்டும் அந்தக் கண்ணாடிக் குப்பியை மேசை ஓரத்தில் வைத்ததே அந்த ஒஸ்மான்தான். அதை யாராவது கேட்கிறார்களா? எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அதைச் சுத்தம் பண்ணுவதில் மும்முரம் காட்டிக்கொண்டிருந்தார் துரைசாமி. மனத்துக்குள் அவர் தன்னைத்தானே சபித்துக் கொண்டுமிருந்தார். இப்போதெல்லாம் அவருக்கு முன்போல பார்வை சரியாகத் தெரிவதில்லை. அருகில் இருப்பதுகூட சமயத்தில் மங்கித் தெரிகிறது. அதனால்தான் பெரிய கண்ணாடி விரிக்கப்பட்டிருந்த மேசை மேல் இருந்தும் கண்ணில் படாமல் ஈரத் துணியால் துரைசாமி மேசையைத் துடைக்கும்போது அந்தக் குப்பி விழுந்து நொறுங்கியது. அது ஒரு தனியார் அலுவலகம். அதன் முதலாளி பெரிய கோடீஸ்வரர். சுற்றிலும் பல மாநிலங்களில் பெரிய பெரிய எஸ்டேட்டுகளையும் வெற்றி நிலங்களையும் வாங்கிப் போட்டு அதன் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வதற்காகவே அந்த அலுவலகத்தை அமைத்திருந்தார் முதலாளி. துரைசாமி அந்த அலுவலகத்துக்கு வேலைக்கு வந்து சேர்ந்த போது இப்போதிருக்கும் முதலாளியின் தாத்தா முதலாளியாக இருந்தார். அந்த முதலாளி அப்போது கோடீஸ்வரர் இல்லை. ஆனால், அவருடைய முயற்சிதான் இப்போது உள்ளவரைக் கோடீஸ்வரனாக்கி இருக்கிறது. தாத்தா முதலாளியாக இருந்தபோதும் துரைசாமி ஆபீஸ் தம்பிதான். இப்போதும் ஆபீஸ் தம்பிதான். துரைசாமியிடமும் முயற்சி இருக்கத்தான் செய்தது. இருந்தும் என்ன செய்ய? பழைய முதலாளிக்குத் துரைசாமி மேல் ஒரு தனிப் பிரியம் உண்டு. பெரிய பெரிய விருந்துகளுக்கெல்லாம் கூட அவரை அழைத்துப் போயிருக்கிறார். இந்தக் காலத்தில் அது சாதாரணமாகத் தெரியலாம். காரணம் தாங்கள் வளர்க்கும் நாயைக் கூட பலரும் பல முக்கிய இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போகிறார்கள் இல்லையா? ஆனால், அந்தக் காலத்தில் அது பெரிய பாக்கியம். அதை அனுபவித்தவர் துரைசாமி. இன்னும் அந்த நினைவுகளை அனுபவித்துக்கொண்டிருப்பவரும் அவரேதான். இப்போதுள்ள முதலாளி ரொம்ப ரொம்பச் சின்ன வயது! ஆனால், இந்தச் சின்ன வயதில்கூட அவருக்கு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். இந்த ஊரில் ஒன்று! பக்கத்து ஊரில் மற்றொன்று! அடுத்த நாட்டில் இன்னொன்று! ஒரு மனைவியை வைத்துக்கொண்டு அவளுடைய அந்தரங்க அபிலாஷைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கும் தன்னைப் பற்றிச் சமயத்தில் நினைத்துக்கொள்வார் துரைசாமி! அப்போதெல்லாம் அவருக்குச் சிரிப்புதான் வரும். உடைந்த துகள்களையெல்லாம் கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு எழுந்தார் துரைசாமி. ஆ காவ்விடமிருந்து அழைப்பு வந்தது. ஆ காவ் தான் கணக்கப்பிள்ளை! கையைக் கட்டிக்கொண்டு அவர் முன் நின்றார் துரைசாமி. ஐந்து வெள்ளி நோட்டு ஒன்றை எடுத்து நீட்டிய ஆ காவ் ஓடியன் தியேட்டருக்குச் சென்று இரண்டு டிக்கட் வாங்கி வரச் சொன்னார். எந்தக் காட்சிக்கு என்பதைக் கேட்டுக்கொண்டு உடனே விரைந்தார் துரைசாமி. இந்த வயதிலும் அவரால் என்னமாய்த் துவிச்சக்கர வண்டி ஓட்ட முடிகிறதோ? அரை மணி நேரத்தில் இரண்டு டிக்கட்டும் சில்லரையுமாக வந்து நின்ற துரைசாமிக்கு நெற்றிப்பொட்டிலும் முன்னங்கைகளிலும் நரம்புகள் புடைத்து நின்றன. ஆனால், வியர்வை முத்துக்களோ எல்லா இடத்திலுமே புடைத்து நின்றதோடு, நிற்க முடியாத சில முத்துக்கள் வழியவும் துவங்கின. டிக்கட்டைக் கொடுத்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தபோதே அடுத்தடுத்துப் பல அழைப்புக்கள்! அத்தனைக்கும் அவர் பதில் சொல்லி முடித்தார்; அந்த அலுவலகத்தில் அத்தனை பேருக்குமே அவர்தான் எடுபிடி. எந்தச் சமயத்திலும் எந்த வேலையையும் தட்டாமல் செய்ய அவர் நன்கு பழகியிருந்தார். அதனால்தான் ஐம்பத்தைந்து வயதுக்கு மேலும் அவரால் அங்கு வேலை செய்ய முடிந்தது. ''முதலாளி வரப்போகிறார்!'' திடீரென்று மானேஜர் இந்தப் பரபரப்பான செய்தியைக் கூறிவிட்டு அவர் இருக்கையில் அமர்ந்துவிட்டார். முதலாளி வரப்போவது ஒரு பரபரப்பான செய்தியா? உண்மையில் அந்த அலுவலகத்தில் அதைவிடப் பரபரப்பான செய்தி வேறு இருக்க முடியாது. காரணம் முதலாளி அங்கு எப்போதும் வருவதே இல்லை. மாதத்திற்கு ஒரு முறை, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் அங்கு வருவார். ஆனால், அவருக்கு ஒரு நல்ல பழக்கம். வருவதற்கு முன் மானேஜருக்கு டெலிபோன் செய்து தெரிவித்துவிட்டுத்தான் வருவார். அவருக்கென்று ஏர் - கண்டிசன் செய்யப்பட்ட ஒரு தனி அறை எப்போதும் பூட்டியே கிடக்கும். அவர் வரும் நாளில் மட்டும் திறந்துவிடப்பட்டு, மிகவும் முன் எச்சரிக்கையாகத் தூய்மையுடன் இருக்கும். முதலாளி அந்த அறையில் இருந்தபடியே அவருக்குத் தேவையான விவரங்களைக் கொண்டுவரச் சொல்லி, விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்து விளக்கம் பெற்றுக்கொள்வார். நிர்வாகத்தில் ஏதாவது கோளாறு என்று தெரிந்தால், மானேஜர் முதல் ஆபீஸ் தம்பி வரை யாராக இருந்தாலும் சரி, மிகக் கடுமையாகவும் மிக மிகக் கேவலமாகவும் திட்டித் தீர்த்து விடும் கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்தது. அந்த ஒன்றினால் தான் அவருடைய வருகை அங்கே பரபரப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. அடுத்து சில மணி நேரங்கள் துரைசாமி பம்பரமாகச் சுழலவேண்டியிருந்தது. முதலாளியின் அறையைத் தூய்மைப்படுத்தி வைப்பதில் ஈடுபட்டார். இடையில் மானேஜரிடமிருந்து ஓர் அழைப்பு. அங்கே ஓடிப்போய் நின்றார். நிலம் சம்பந்தமாக மானேஜரைப் பார்க்க யாரோ பிரமுகர் வந்திருந்தார். அவருக்கு குளிர்பானமும் சிகரெட்டும் வாங்கிவர உத்தரவு. அதையும் செய்து முடித்துவிட்டு, முதலாளி அறையில் விட்ட இடத்திலிருந்து பணியைச் செய்து முடித்தார். பிற்பகல் மூன்று மணிக்குத்தான் அங்கே ஒருவகையாகப் பரபரப்பு அடங்கியது. காரணம் அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் முதலாளி புறப்பட்டுப் போயிருந்தார். இனி ஒரு மாதத்திற்கோ இரண்டு மாதத்திற்கோ அங்குள்ளவர்களுக்குக் கவலை இல்லை. ஆனால், துரைசாமிக்கு? மாலையில் அலுவலகத்தைப் பூட்டி சாவியை ஜாகாவிடம் கொடுத்துவிட்டு, துவிச்சக்கர வண்டியில் வீடு போய்ச் சேர்ந்த போது உள்ளதைச் சொல்வோன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். துரைசாமி உள்ளே நுழைந்த சமயம் அங்கே உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவருடைய தம்பி கண்ணுசாமி அவரைக் கண்டதும் சடாரென எழுந்து நின்றார். கண்ணுசாமிக்கும் வயது நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கும். இவ்வளவு வயதாகியும்கூட அவர் அண்ணனுக்கு முன் சரிக்குச் சரியாக உட்கார்ந்ததே இல்லை. அவ்வளவுக்குச் சம்பிரதாயங்களிலும் மரியாதைகளிலும் ஊறிப்போன குடும்பம் அவர்களுடையது. கண்ணுசாமி ஒரு வெள்ளைக்கார கம்பெனியில் ''டிஸ்பேட்ச் கிளார்க்''காக வேலை செய்கிறார். கல்யாணமாகாமலேயே கடைசிவரை காலத்தை ஓட்டிவிட்ட கட்டை பிரமச்சாரி. அண்ணனிடம் எதுவும் கேட்கவேண்டும் என்றாலும் சரி, பேச வேண்டும் என்றாலும் சரி எல்லாம் அண்ணி மூலமாகத்தான் நடைபெறும். அவ்வளவுக்கு அண்ணன் மேல் பெரிய மதிப்பு வைத்திருப்பவர் கண்ணுசாமி. துரைசாமி உள்ளே சென்று உடைகளைக் களைந்துவிட்டு இடுப்பில் துண்டோடு குளியலறைக்கு வந்தபோது, அவர் மனைவி மீனாட்சி அவருக்கு வெந்நீர் விளாவிக் கொண்டிருந்தாள். நீர் பதமாக ஆனவுடன் மொண்டு குளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை அதில் திணித்துவிட்டு அகன்றாள். பாதி குளித்துக்கொண்டிருந்தபோது குளியலறையிலிருந்து சத்தம் வந்தது. ''இங்கே வந்து முதுகைக் கொஞ்சம் தேய்த்துவிடு மீனாட்சி. பகல்ல கொஞ்சம் வேர்த்ததும் நடு முதுகு நமநமன்னு அரிக்குது''. அடுத்தகணம்! அடுப்படியில் ஏதோ வேலையாக இருந்தவள், போட்டது போட்டபடி உடனே ஓடிவந்தாள். அவளுக்குத் தெரியும்; கொஞ்சம் சுணங்கினாலும் அவர் சத்தம் போட்டு அமர்க்களப்படுத்துவார் என்று. அந்தக் காலத்திலிருந்தே அவருடைய பழக்கம் அதுதான். அவருடைய மூத்த பையன் குணாவாகட்டும், அல்லது அவனுக்கு நேர் இளையவனான ராதாவாகட்டும்; யார்தான் அவருக்கு முன் சரிக்குச் சரியாகப் பேச முடியும். கடைக்குட்டிப்பயல் சோமு மட்டும் ஓரளவுக்குத் தைரியமாக அவரோடு பேசுவான். பிள்ளைகளில் அவன் கொஞ்சம் மாற்றமாக இருந்ததால்தானோ என்னவோ பதினேழாவது வயதிலேயே காலன் அவனைப் பறித்துக்கொண்டான். மூத்தவனுக்கு அரசாங்க இலாகாவில் வேலை. இளையவன் ராதா ரயில்வேக்கு எழுதிப் போட்டுப் போன வாரம்தான் இன்டர்வியூவுக்குப் போய்வந்தான். அநேகமாக அவனுக்கும் வேலை கிடைத்துவிடும். பிள்ளைகள் இருவரும் சேர்ந்து மீனாட்சியை நச்சரித்தார்கள்; அப்பா வேலைக்குப் போக வேண்டாம் என்று. ஆனால், துரைசாமி கேட்டால்தானே! மீனாட்சி எப்போதாவது அதைப் பற்றி அவரிடம் பேசுவாள். ''ஏண்டி போக்கத்த தனமா பொலம்புறே; மாதம் நூறு நூறு வெள்ளி சுளையா வருது. நான் வேலைக்குப் போகாம அதையும் நிறுத்திப்புட்டா யாருக்கு லாபம்?'' என்று எடுத்தெறிந்து பேசிவிடுவார் துரைசாமி. மேலும் பேசினால், ''முட்டாள் சிறுக்கி, உன் வேலையைப் பாரு'' என்றுகூடச் சொல்லிவிடுவார். குளித்துக்கொண்டிருந்தபோது முழங்காலுக்குக் கீழே ஏற்பட்ட லேசான வலி, நேரம் ஆக ஆக அதிகரிக்கத் துவங்கியது. முதலில் அது துவிச்சக்கர வண்டி மிதிப்பதால் ஏற்பட்ட வலி என்றுதான் அவருக்குத் தோன்றியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல அப்படித் தோன்றவில்லை. மீனாட்சி தலைவலித் தைலத்தைப் போட்டுத் தேய்த்துவிட்டாள். அப்போது ஒரு மாதிரியாக இருந்தது; ஆனாலும் வலி தீரவில்லை. மீண்டும் அதே தைலத்தைப் போட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தபோது, அதுவரை வெளியே நின்றிருந்த கண்ணுசாமி கையில் வேறொரு தைலத்தோடு உள்ளே நுழைந்தார். ''இந்தத் தைலத்தைப் போட்டா வலி கொஞ்சம் நிக்குமே''. ''என்ன தைலம் அது?'' துரைசாமி கண்களை மூடியவாறு கேட்டார். ''மீசைக்காரன் தைலம்!'' ''ஐயோ, அது எரிஞ்சு தொலையுமே!'' ''எவ்வளவுக்கு எரியுதோ அவ்வளவுக்கு வலியை எடுத்திடும்!'' அதுவரை அண்ணியை நோக்கித் தைலத்தை நீட்டிக் கொண்டிருந்த கண்ணுசாமி என்ன நினைத்தாரோ, சடாரென மண்டியிட்டு அமர்ந்து தைலப் பாட்டிலைத் திறந்தார். ''நீ ஏண்டா தேய்க்கிறே; அண்ணிக்கிட்டே குடு. அவளே தேய்ச்சு விடட்டும்'' என்று துரைசாமி சொல்லிக்கொண்டிருந்த போதே கண்ணுசாமியின் கை தைலத்தில் நனைத்து, துரைசாமியின் காலைப் பதமாகத் தேய்க்கத் துவங்கிவிட்டது. அதன் பிறகுதான் வலி ஒருவழியாக நின்றது துரைசாமிக்கு. படுக்கையில் படுத்த பின்னும்கூட இரவு வெகுநேரம் வரை கண்ணுசாமி தைலம் தேய்த்ததையே நினைத்துக்கொண்டிருந்தார். அந்த நினைவுகள் அவருக்கு ரொம்ப இதமாக இருந்தன. இவ்வளவு தூரம் உபசாரம் செய்வதற்குத் தம்பியும் மனைவியும் பிள்ளைகளும் இருக்கும்போது, நாம் ஏன் வேலைக்குப் போய் அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் அடிமையாக இருக்க வேண்டும்? நாளையிலிருந்து வேலைக்குப் போகாமல் இருந்து விடுவோமா?'' இப்படி ஓர் ஊமைக் கேள்வி! இப்படித்தான் தினமும் அவர் மனம் நினைத்தது. நாளைக்காவது தீர்மானமாக ஒரு முடிவைக் கண்டுவிட வேண்டும் என்று தீர்மானித்த வேகத்திலேயே அவர் தூங்கிப்போனார். பொழுதும் வழக்கமாகப் புலர்ந்தது. கிழக்கே உதித்த சூரியக் கதிர்கள் துரைசாமியின் கண்களை நோக்கி நேராகப் பாய்ந்தான். வழக்கமாக வரும் சூரியன்தான். ஆனால் இன்று ஏதோ ஒரு மாற்றத்தை அதில் உணர்ந்தவர்போல் திரும்பினார். அவரின் ஈருருளி வழக்கம்போல் வேலைத்தளம் நோக்கி வழக்கமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
பங்கி என்னும் ஜென் ஞானிக்கு நல்ல புகழ். அவரிடம் நிறைய மாணவர்கள். பொறாமைக்காரரான நிச்சேரியன் துறவிக்கு இது பிடிக்கவில்லை. பங்கியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்தார். ""பங்கி ! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் ; இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா ?'' என்று கேட்டார். "" என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்''என்றார் பங்கி. உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கி வந்தார். ""இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள்''. துறவி அவ்வாறே சென்றார். ""ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள்!'' - போனார். பங்கி அமைதியாக, ""சரி! நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி !'' என்றார்.
முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால், உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி - இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால் பட்டணத்துக்காரர்களைப்போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னா மாத்திரம் மத்ய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால் கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு. டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி., அந்தப் பிரதேசத்தின் தேக சௌக்கியத்திற்குப் பொறுப்பாளியல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக் கொள்ளக்கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. 'கைராசிக்காரர்' என்ற அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்து வந்தது. அவருடைய வைத்தியம் தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றிவிட்டால் போதும், சாதாரணமானதானாலும் வியாதியஸ்தனை நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டிகட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார். கம்பௌண்டர் வெங்கடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது; ஒன்று, யூனியன் ஜாக்கொடி போட்ட டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய - சீமைச் சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச் சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுள்வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே அவருடைய இந்த நெஞ்சழுத்திற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில் பெரும்பான்மையான நாட்களில், குழந்தைகளுக்குப் பேதி மருந்து அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தாயரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும். அதனால் பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை. கிடங்கு, ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து எசமானிடம் கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற்போகவே பூட்டுச் சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச்செல்ல வேண்டியதாக இருந்தது. கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் ''ரவுண்டு வரும்'' ஏட்டு கந்தசாமி பிள்ளை - எல்லாரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ், கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்துக்கு அதீதமானது. ரத்த காட்டேரி அடித்துவிட்டதால், அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது. இ.பி.கோ.வில் பேயடிப்பதற்குத் தனிப்பிரிவு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டிருந்தும், ஏட்டுப்பிள்ளைகூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார். டாக்டா வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம் வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதியடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இது மாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப்பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ என்று நினைத்தார் . கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு, ''யாருடா அது?'' என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார். இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமி பிள்ளை போலீஸ் ஸலாம் செய்து, தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். ''என்ன கந்தசாமி பிள்ளை, பய கதை விடரானே!'' என்று ''பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?'' என்றார் கந்தசாமி பிள்ளை. ''பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதிவையாதியும், சிரிச்சுத் துப்பப்போறான்!'' என்றார் டாக்டர். ''நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பந் தெரியும் - ஏலே வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்கடா!''என்று உத்தரவு போட்டார் கந்தசாமி பிள்ளை. டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார். கண் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல்நாக்கில் பதிந்து விறைத்துக்கொண்டதால் வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது. ''சாக்கை அப்புறம் எடுத்தெறி!'' என்றார் டாக்டர். பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்தால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்துவிறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்கிரமாக முறுகிக் கிடந்தன. ''சரி, உள்ளே எடுத்துக்கொண்டு போய் மேஜையில் கெடத்துங்கடா!'' என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர். ''உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது'' என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார். அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. ''அதாரது?'' என்ற குரலுக்கு, ''நான்தான் நாயுடு!'' என்று சொல்லிக்கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார். பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!'' எனறு சிரித்தார் டாக்டர் வீரபத்திர பிள்ளை. ''பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தெரிகெட்டுப்போய் அலையிது அதாத்தானிருக்கும்!' என்றார் நாயுடு. ''நீரும் பேயை நம்புறீரா - உருப்பட்டாப்லேதான்!'' என்று சொல்லி, டாக்டர், ''ஏலே இன்னுமா - எத்தினி நேரம், சவத்தெ இளுத்துக் கெடத்த?'' என்று அதட்டினார்.' ''வே, கந்தசாமி பிள்ளை, நம்ம தோட்டி பாத்துக்கிடுவான் - நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க - காலையிலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!'' என்று சொல்லிக் கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார். ''ஸார், ஒரு நிமிசம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வத்திருதேன்!'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு. டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார். உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடிவந்தார். ''வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லெ; ரத்தக் காட்டேரிதான்; என்றார் நாயுடு. ''உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலே இருந்தாப் போய்ப்பாரும்!'' என்று அதட்டினார் டாக்டர் ''இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்'' என்றார் நாயுடு. ''பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!'' என்று சொல்லிக்கொண்டே மேல்துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, கைகளைத் தோளுக்குமேல் உயர்த்தி சுடக்க முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர். ''நீங்க எங்ககூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!'' என்ற தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர். ''என்னதான் சொல்லுமே!'' ''நீங்க வாருங்க, ஸார்!'' என்று ஷெட்டுக்கன் நுழைந்து, பிணத்தின் மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர் ''டேய் தோட்டி! விளக்கைக் கொஞ்சம் ஒசத்திப் பிடி!'' என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக்கத்தி ஒன்றை எடுத்தார். அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ஷெட் வாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர், ''என்னவே, வேலை!'' என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப் போல், காயத்தை விரித்துப்பிடித்துக் காண்பித்து, ''இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!''என்றார். ''ரத்தம் இருந்தாலும் பிணமானபின் வடிவதை எங்கே கண்டீர்?'' என்று கொண்டே நெருங்கினார் டாக்டர். ''ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்?'' என்றார் நாயுடு. டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம். டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது. ''அப்புறம்!'' என்றார். அவருடைய நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது. ''வாருங்க, போவோம்!'' என்று வெளியே வந்த கம்பௌண்டர், இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?'' என்றார். ''கோயிலூர்க் கணியான் செத்துப்போனானே அவனைப் பொதைக்கத் தானே செய்தார்கள்?'' என்று கேட்டார் தோட்டியிடம். ''ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!'' என்றான் தோட்டி ராக்கன். ''எப்படா நடந்தது?'' ''சாயங்காலம் சாமி!'' ''வருகிறீர்களா. போவோம்?'' என்றார் கம்பௌண்டர். ''அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானாப் போவோம்!'' என்றார் டாக்டர். ''ஏட்டுப்பிள்ளையையும் கூட்டிக்கொள்ளுவோம்; ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டு கூட வா!'' என்றார் நாயுடு. ''நான் வரமாட்டேன் சாமி; எனக்குப் புள்ளை குட்டியில்லே'' என்றான் ராக்கன். ''நாங்க இருக்கறப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!'' என்று தேற்றினார் கம்பௌண்டர். இந்தப் பரிசோகனைக் கோஷ்டி கோயிலூர் பள்ளர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு. வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை; வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான். சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி. நாலைந்து பல்லாங்குக்கப்புறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது. ''எங்கடா அவனைப் பொதெச்சாங்க?'' என்று அதட்டினார் டாக்டர். தம்மை இழுத்தடிகிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு. ''அதோ, அந்த்க் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!'' என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை.... நாயின் ஊளை போல ஆரம்பித்த ஒரு சப்தம் கணநேரத்துக்கு நேரம் சுருதி கூடி, ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வானமுகட்டைக் கிழித்தது. கடகடவென்று விக்கி விக்கிச் சிரிப்பது போன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது. அடுத்த கணம் அமைதி. அதே பேய் அமைதி! நடந்துகொண்டிருந்தவர்கள் யாவரும் தரையுடன் தறையிட்டது மாதிரி கல்லாய் உறைந்துநின்றனர். ''சாமி, நான் வரமாட்டேன், பேய்!'' என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன். மண்வெட்டி, ஓடிய வேத்தில் அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துப்கொள்ள அவன் தாமதிக்கவில்லை. ''நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதுல்ல!'' என்றார் ஏட்டுப்பிள்ளை. ''சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம்; அது நாயில்லை!'' என்றார் கம்பௌண்டர். மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரித்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார். ஆற்றருகில் உள்ள இடந்தானே; வேலை சுளுவாக நடந்தது. ''அதே வெள்ளையா என்னமோ தெரிகிறது!'' என்றார் கம்பௌண்டருடன் ஒண்டிக்கொண்டிருந்த டாக்டர். ஏட்டுப்பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெயியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துக் தூக்கவே பிரேதம் தென்பட்டது. டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார். பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது. புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம் போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது. ''அவன் எமை ஆடுது!'' என்று அலறிக்கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர். நல்ல காலம், கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார். பிரேதத்தின் வலத இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள். பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை. வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கருவண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்தது போலத் தள்ளாடியது. பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது. ''வண்டுகளைப் போல அது ரீங்காரமிடவில்லை, பார்த்தீரா?'' என்றார் நாயுடு. வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன. ''இதோ பாருங்கள்!'' என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு. புது ரத்தம் குபுகுபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!. மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்கள். ''ரிப்போர்ட் எப்படி எழுத?'' என்று கைகளை மணலால் தேய்த்துக் கொண்டே கேட்டார் ஏட்டுப்பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டது போல அவ்வளவு பிரமை. ''பயத்தால் மரணம் என்று எழுதிப்புடும்!'' என்றார் கம்பௌண்டர். ''நாயுடு, இது எப்படித் தெரிந்தது?'' என்றார் டாக்டர். ''அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குச் செவ்வாய் தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!'' என்றார் கம்பௌண்டர்.
ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது. “மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள். ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. “அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி. “என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. “சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன. மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி. “அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி. “நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல். முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன. “ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது. அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன. தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார். இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.
விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், "அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்...'' என்றார். மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்'' என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, "விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா...'' என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, "சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்'' என்றார். மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு. அவர் அரசரிடம், "என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை'' என்றார். தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, "அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது'' என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? "காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது?'' என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், "தெனாலியின் சாதுரியம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்...'' என்று புகழ்ந்தார்.
எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு. இராஜசேகரன் பிறப்பால் ஓர் பெரிய தொழில் அதிபர் தான் என்று பார்ப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள். ஆனால் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அவளும் இராஜசேகரனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதுஇறந்து போனார். தங்கள் குடும்பத்திற்கு என இருந்த ஒரே நிலத்தையும் விற்று அதில் கிடைத்த லட்சம் ரூபாய் முதலீட்டை கொண்டு ஓர் சிறிய ரைஸ் மண்டி வைத்தார். இன்று அந்த தொழிலில் பெரிய மனிதராகி கார்... பங்களா அப்பப்பா. பணத்தின் அருமை தெரிந்த ஒருத்தியே தனக்கு மனைவியாய் வர வேண்டும் என்ற இராஜசேகரனின் ஆசைபடியே, இராஜசேகரின் வீட்டிற்கு விளக்கேற்றியவள் தான் வைஷ்ணவி. அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் தான் ரமேஷ். அவன் செல்வந்தர் மகன் என்பதால் நல்ல செலவழிப்பான். இது தான் ராஜசேகரனுக்கும் ரமேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழும்பக் காரணம் ஆகும். இரண்டு பேருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாய் போய்விடும் வைஷ்ணவிக்கு. இராஜசேகரன் ஒரு பைசாவை கூட செலவு செய்வது என்றால் மிகவும் யோசிக்க கூடியவர். அவரது தும்மலும் கூட பத்து பைசா வரயே செல்லும். ஆனால் இராஜசேகரன் கருமியல்ல. பணத்தின் அருமை புரிந்தவர். இந்த நிலையில் தான் ஒரு சிக்கல். இதுவரைக்கும் அவரது ரைஸ் மண்டியிலிருந்து கிடைத்த லாபம் நிர்வாகச் செலவு போக ஓர் அளவிற்கே உட்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது விளைச்சல் குறையவும் லாபம் அதிகமாயிற்று. அதனால் தான் வருமானவரி கட்ட வேண்டிய சிக்கல் வந்தது. வைஷ்ணவியும் ஏற்கனவே இதை ஞாபகப்படுதிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் இராஜசேகரன் இந்த விஷயத்தில் தாமதம் காட்டி வந்தான். இன்றைய செய்தித்தாளை பேப்பர்காரன் வாசலில் அவனுக்கே உரிய தோரணையில் வாசலில் விட்டெரிந்து விட்டு "அம்மா பேப்பர்" என்று ராகமும் பாடினான். வழக்கம் போல வைஷ்ணவி தான் வந்து பேப்பரை எடுத்தாள். செய்தித்தாளின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு இருந்த செய்தி வைஷ்ணவி கண்ணில் பட்டது. "என்னங்க" ஒரே உச்ச சாயலில் கூப்பிட்டாள் வைஷ்ணவி. "என்ன வைஷ்ணவி! காலம் காத்தால" என்றார் இராசசேகரன். "இத பாருங்க! இந்த நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்குன்னு பாருங்க", "என்ன போட்டிருக்கு! கொடு பார்ப்போம் வருமான வரி கட்டாதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை தொழிலதிபர் மீது வருமானவரி சோதனை", "அதற்கு என்ன செய்ய சொல்லுற" என்றார் இராசசேகரன் ஒன்றும் தெரியாதவர் போல " என்ன செய்யவா" பத்ரகாளி ஆனால் வைஷ்ணவி. "ஆமாங்க! நான் சொல்லறது கிண்டலாய் தாங்க இருக்கும் உங்களுக்கு. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது நமது நாட்டிற்கு நாம் தெரிந்தே செய்கிற துரோகம்ங்க" என்று ஒரு பாடமே நடத்தினாள் வைஷ்ணவி. "வருமான வரி கட்டணும்ணா. நமக்கு வருகிற லாபத்திற்கு எவ்வளவு கட்டணும். காசோட அருமை தெரிஞ்சா தானே உனக்கு" பதிலுக்கு இராஜசேகர். "இப்ப காசு கட்ட பயந்தா. பிறகு சிறைக்கு போன பின்னாடி பணம் நெறைய செலவழிக்கணும். அது மட்டுமா ,மன உளைச்சல் வேறு" இது வைஷ்ணவி. "பாத்துகிட்டே இரும்மா இவரு கம்பிதான் எண்ணப் போறாரு. இராஜசேகரனு பேரு வைச்சதும் போதும் இவருக்கு வரவர வில்லன் கெட்டப் வந்து விட்டது" இளமைக்கே உரிய துள்ளலுடன் ரமேசும் சேர்ந்து கொண்டான். "ம்... இந்த வீட்ல என்னை நிம்மதியாவே இருக்கவே விடுறாங்க இல்ல" சலித்து கொண்டார் இராஜசேகரன். வழக்கம் போல இராகம் பாட ஆரம்பித்தாள் வைஷ்ணவி " எம் பேச்சை இந்த வீட்ல யாருதான் கேட்கறாங்க. புருஷன் அப்படி, புள்ள இப்படி" இடைஇடையே அவளது பாட்டிற்கு ஏற்ப தாளம் போட்டன வைஷ்ணவி வீட்டு சமையலறை பாத்திரங்கள். வீட்டில் யாரும் பேசவில்லை. இராஜசேகரனுக்கு ஒரே தஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டி அவருக்கு பிடித்த நடிகர் கமலேஸ் குமார் வருமானவரி கட்ட வேண்டும் என்பதை பற்றி தொலைகாட்சியில் பேசினார். மதியம் இராஜசேகரன் வீட்டிற்கு வந்தார். "வைஷ்ணவி இந்த பைலை பத்தரமாக வை; இதுல வருமான வரி கட்டியதற்கான விபரமெல்லா இருக்கு சரியா" என்றார் இராஜசேகர். "வருமானவரியா? கட்டி விட்டீர்களா? எப்படி" தொடர்ந்தாள் வைஷ்ணவி. "நடிகர் கமலேஷ் குமார் சொன்ன பிறகு தான் வருமான வரி கட்ட வேணுங்கிறது நியாமுன்னு தெரிஞ்சது", "நாங்க சொன்னத கேக்கல. கமலேஷ் குமார் சொன்னா கேட்கிறார். இனிமே எதையாவது இவர செய்ய வைக்க வேணுமுன்னா, கமலேஷ் குமாரத்தான் கூப்பிடனும்" நொந்து போனாள் வைஷ்ணவி. மறுநாள், செய்தித்தாளில் வந்த செய்தி இராசசேகரனை அதிர செய்தது. செய்தி இதுதான். "நடிகர் கமலேஷ் குமார் வருமானவரி ஏய்ப்பு. அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை." நடிகன் என்னும் பொய் வேஷத்தை நம்பிய இராஜசேகரன் மனம் குறுகிப் போனது.
முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான். கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான். ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். முல்லா அருகே வந்ததும், " முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் " என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான். " எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!" என்றார் முல்லா. நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது. முல்லாவையும்விட மேலான துறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து " முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாய்ந்த துறவி யார்?" என்ற கேட்டான். " அந்தத் துறவி நீர் தான் " என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான். " நானா அந்தத் துறவி அது எப்படி?" என்று கேட்டான். " என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?" என்று முல்லா பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.
நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீன் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால்நண்டு மிகக் கவலையோடு நின்று கொண் டிருந்தது. அந்த நண்டைப் பார்த்து, நீ ஏன் கவலையோடிருக்கிறாய்?" என்று கொக்குக் கேட்டது. என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார் கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக் கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைக்குத் தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பால்நண்டு பதில் கூறியது. நண்டே, நண்டே, பால் நண்டே! அந்தப் பழிகார வலைகாரர்கள் வருமுன்னே தப்புவிக்க நான் ஒரு வழி சிந்தித்திருக்கிறேன். அந்தப்படி செய்தால் எல்லா மீன்களுமே உயிர் தப்பலாம் என்று கொக்கு கூறியது. எப்படி?" என்று நண்டு ஆவலோடு கேட்டது. ‘எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்" என்றது கொக்கு. கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்றிருந்த மீன்கள் இந்தக் கருத்தை உடனே ஒப்புக் கொண்டன. மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது. மீன்கள் எல்லாவற்றையும் கொத்திக் கொண்டு சென்ற பின் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பறந்து செல்லும் வழியில் நண்டு கீழே பார்த்தது. எங்கு பார்த்தாலும் மீன் எலும்புகள் தரையில் கிடப்பதைக் கண்டதும், அது கொக்கு செய்த செயல் என்னவென்று புரிந்து கொண்டது. மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சி யால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லு முன் இதை நாம்; கொன்றுவிட வேண்டும்" என்று எண்ணிய நண்டு, மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து இறந்தது. நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன் இனத்தோடு சேர்ந்து கொண்டது. பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து விளங்குகிறது.
அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. "ஸாரி ஸார்" என்ற அழைப்புக்குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது. காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதிவிறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகைபோல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன. இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை. கீழ்வீடு காலியாக இருந்தது. நல்ல வாடகை, திகைகிற வரை வீட்டுக்காரர் வாடகைக்கு விடப்போவதில்லை. செண்பக தேவியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார். வீடு பார்க்க வருகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டைத் திறந்த காட்டவேண்டும். "இதோ வர்றேன்" எழுந்து வீடு காட்டுவதற்காக கையில் சாவியை எடுத்துக்கொண்டு கீழிறங்கினாள். கீழ்வீட்டுக்கு ஒரு அழைப்பு மணியும், மேல் வீட்டுக்கு ஒன்றும் தனித்தனியாக இருந்தன. அம்புக் குறியிடப்பட்டிருப்பதைப் பார்த்து, வலது பக்க அழைப்பு மணியை அழுத்தியிருக்க வேண்டும். அழைப்பு மணிக்கு பதில் அவரே குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். வந்தவருக்கு அவ்வளவு விபரம் பத்தாது. களைத்து வாசற்படியில் உட்கார்ந்து முட்டிக் காலில் தலைசாய்த்திருந்தார். செண்பக தேவிக்கு முதுகுப் பக்கம் முதலில் தென்பட்டது. காலடிச் சத்தம் கேட்டு, விருட்டென்று தலை திரும்பினார். "ஐயா நீங்களா?" செண்பகதேவி அதிசயித்து நின்றுவிட்டாள். அந்த மனிதரது கடந்தகாலத்துக்கும், கிழிந்த அழுக்குத் துணிபோல் நிற்கும் நிகழ்காலத்துக்குமிடையே எட்டு வருடம் ஓடிவிட்டது. செண்பகதேவி இரண்டுபிள்ளைகளுக்குத் தாயாகிவிட்டாள். "ஞாபகம் இருக்கா தாயீ....."" இழந்த குரல் இழுவையாய் வந்தது. "இல்லாம என்ன?" ஆதரவாய் மேலே கூட்டிக் கொண்டு நடந்தாள்." மதுரைக்கார முருகையா வீடு இதுதானே?" எட்டு வருசங்கள் முன் ஊரில் அவரை முதன் முதல் செண்பகதேவி சந்தித்தது ஒரு தனீ நாடகம். அவர் கேட்டுக் கொண்டு வந்தது, நத்தையின் ஊர்தல்போல் தயங்கித் தயங்கி விசாரித்தது. மதுரைக்கார முருகையா வீடு இதுதானே?" வீட்டு முன் நின்று அவர் கேட்டார். "நீங்க யாரு?" செண்பகதேவி எதிர்க்கேள்வியடித்தாள். வீடு தப்பிருச்சா? அவர் ஏறிட்டுப் பார்த்தார். "நீங்க யாரு?" வீடு ஒன்னும் தப்பலை. இங்கதான் இருக்கு" அவள் கேட்ட கேள்வி பதிலளிக்கப்படாது அப்படியே கிடந்தது. "நா சோறு வாங்குறவன். கொஞ்சம் கோழிக் கறியும் சோறும் இருந்தா போடு தாயீ" இரண்டு கையை அளவாய்க் குவித்துக் காட்டினார். "அதென்ன கோழிக்கறி, சோறுன்னு திட்டமா கேக்குறீங்க?", "இன்னைக்கு விசேஷம். பொங்கலுக்கு மறுநாள். கறிநாள். எல்லா வீட்லயும் கவுச்சி இருக்குமின்னு தெரியும் அதான் கேட்டேன்". புதுவெள்ளை வேட்டி, புதுச்சட்டை கோடித் துணி என்பதற்கு வேட்டி முந்தி, சட்டை நுனியில் மஞ்சள் தடவிய அடையாளம் கத்தரிப்பூ வண்ணத்தில் சன்னக்கரையுள்ள துண்டு தோளில் தொய்வாய்க் கிடந்தது. தோற்றத்தில் புதுமாப்பிள்ளை மாதிரியான ஒருவர் சடாரென்ற பிச்சைக்காரராக ஆவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. "அன்னம் போடுங்கம்மா" என்று இழந்த குரல் அந்தத் தொண்டைக் குழியிலிருந்து எழுந்து வரும் என்றோ, குரல்போகும் திசையில் ஏனம் ஏந்திய இருகைகளும் நிற்கும் என்றோ அறிகுறி தெரியவில்லை. முன்னே போகவிட்டு, பின்னே பார்க்க வைக்கும் அந்த உடற்கட்டுமானம், ஐம்பத்தைந்து வயதைத் தூரத் தூக்கியெறிந்திருந்தது. "அப்படியும் சோறு வாங்க ஏனம் ஒன்னும் கொண்டு வரலை?", "ஏனம் இல்லைன்னா என்ன? ஒரு இலை வாங்கிட்டு வந்து ஓரமா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறேன்", "ஐயா வாங்க வாங்க ஒங்களத் தேடித்தான் மேற்கே போயிருந்தேன்" எசப்பாட்டுப் போல் செண்பகதேவி பார்வைக்காரர் உரையாடலை உடைத்துக்கொண்டு முருகையா படபடவென்று உள்ளே வந்தார். "பாயை எடுத்து விரிம்மா" வந்தவர் பார்வை பார்க்கிற சீனி குருசாமி என்பது அப்போதுதான் தெரிந்தது. யாரைத் தேடி மேற்குத் தெருப்பக்கம் அய்யா போனாரோ, அவர் ஏற்கனவே வந்து விட்டார். "விசாரணை கடுமையாத்தான் வந்திச்சி" நைப்பாய் சிரித்தபடியே உள்ளே வந்து உட்கார்ந்தார் பார்வைக்காரர். "தாயி வேப்பிலைதான் பிடிக்கலை. எல்லாக் கேள்வியும் கேட்டிருச்சி." செண்பகதேவிக்கு வெட்கமாக இருந்தது. அய்யா தேடிப்போன ஆள் இவர்தான் என்று முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே என்று நினைத்தாள். இன்னார் வீட்டில் பெண் இருக்கிறது, இன்னின்னார் வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு இணைத்து வைப்பது என்ற சுபகாரிய வேலை அவருக்கு இருந்தது. மதுரைக்கார முருகையா வீட்டில் ஒரு பெண் இருக்கிறது. போய்ப் பாருங்கள் என்று சொல்லி பார்வைக்கார சீனிகுருசாமி வந்தார். வந்த இடத்தில் வேலை மாறிவிட்டது. உழைக்கிற மாடு ஊர்மேல போனா அங்கயும் ரெண்டு ஏரு கட்டி உழச் சொல்வாங்களாம், என்கிற கதையாக அவர் நிலை ஆகிவிட்டது. பெண்ணோட பெற்றோரைச் சந்தித்துப் போக வந்த இடத்தில் கையில் வேப்பங் குலையைக் கொடுத்து, கொஞ்சம் பார்வை பார்த்துப் போகச் சொன்னார்கள். வந்த காரியத்தை வெளியில் விடாமல், மடக்கி உள்ளே வைத்துவிட்டார். வலது காலை குத்துக்காலிட்டு, இடதை மடக்கி மணப்பெண் போல் உட்கார்ந்தாள் செண்பகதேவி. அவளது கை வலதுகால் மேல் கிடந்தது. "கையைக் கீழே போடு தாயி" பார்வைக்காரர் சொன்னார். எந்த அங்கத்துக்கு பார்வை பார்க்கிறாரோ, அந்த அங்கத்துக்கு மறைப்பு கூடாது. செண்பகதேவிக்குள் குமரிக் கூச்சம் ஓடியது. வலது பாதத்தின் மேல் தொங்கவிட்டிருந்த கையை எடுத்து கீழே விட்டாள். கல்லூரிப் படிப்பு முடித்திருந்தாள். அஞ்சல் வழிக்கல்வியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தாள். அது கிராமம் அவள் பெண். மனிதவெக்கை வீசியடிக்க பெண்டுகள் நெருக்கியடிக்கும் இடத்தில் உடலை கூச்சத்துடன் நெளிந்தாள். அவளுக்கு அண்டக் கொடுத்து உட்கார்ந்திருந்த அம்மா இடுப்பில் லேசாய்க் கிள்ளி "நெளியாதே" என்றாள். இன்னும் நெளிந்தாள். சீனிகுருசாமி, செண்பகதேவியின் வலதுகால் பாதத்தை தடவினார். கணுக்காலிலிருந்து முழங்கால்வரை ஆமை முதுகு போல் வீங்கி இருந்தது; காலின் மேல் ஒரு ஆமை உட்கார்ந்திருக்க அதைத் தூக்கிக் கொண்டு நடப்பது மாதிரி இருந்தது. விஷக்கடி எதனால் என்று அறிய முடியவில்லை. இராமநாதபுரம் வரை போய்ப் பார்த்துவிட்டாள். மருத்துவ வகைகள் எவை எவை உண்டோ, அவைகள் இருந்த இடத்துக்கெல்லாம் போய்ப் பார்த்தாகிவிட்டது. கடைசியாய் எம்.டி.டாக்டரிடம் காட்டினார்கள். நீர்க்கட்டு அல்லது வாயுக் கோளாறாக இருக்கும் என்றார். வாயுத்தொல்லையென்றால் உடலின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் வீக்கம் முழுங்காலின் கீழ்ப்பகுதியிலேயே தங்கிவிட்டது; தொடர்ந்து ஊசி போட்டால் சரியாகிவிடும் என்றார். சரியாக இல்லையென்றால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். விஷக்கடி என்பது நாட்டுப்புற வார்த்தை. பொதுவான ஒரு சொல். அப்படியொரு சொல், மருத்துவ அகராதியிலோ, ஆங்கில மருத்துவப் புழக்கத்திலோ கிடையாது என்றார் எம்.டி.மருத்துவர். இங்கிலீஷ் மருந்தை உடனே நிறுத்தணும் என்பது பார்வைக்காரர் போட்ட கட்டளையாக இருந்தது; கையில் வேப்பங்குலை எடுப்பதற்கு முன்பே பார்வைக்காரர் போட்ட நிபந்தனை; இங்கிலீஷ் மருத்தின் பேரில் பார்வை வைத்தியத்துக்கு அதிகாரம் இல்லை. "இந்த வீடு ஒனக்கு சொந்த வீடாம்மா?" முகத்துக்கு நேரே உயர்ந்த பார்வைக்காரரின் சுட்டுவிரலையே பார்த்தாள் செண்பகதேவி. "இந்த வீடு ஒன்னது இல்லை, இல்லையா?" அவளுக்குப் புரியாததால் ஒரு பதிலும் இல்லை. இவர் என்ன கேட்கிறார் என்ற கேள்வி குறியுடன் அம்மா பக்கம் திரும்பினாள். அம்மாவுக்குப் புரிந்தது. சிறு சிரிப்புடன் "நீங்க சொல்றது நிஜம்தான்" என்றாள். பார்வைக்காரர் உலக யதார்த்தத்திலிருந்து எடுத்து வைத்ததை நாற்பது வருஷ வாழ்வின் சுயானுபவத்திலிருந்து அம்மாவினால் எளிதாகப் பிடித்துக்கொள்ள முடிந்தது. "ஆமா, ஆமா" என்றாள். கல்யாணமான பின் இன்னொரு வீட்டுக்கு நடக்க வேண்டியவளாக பெண் பிறவி இருக்கிறாள். இந்த வீடு அவளுடைய வீடு இல்லை. போய்ச் சேருகிற இடம் அவளுக்குச் சொந்தவீடு, வாழ்க்கையின் கால்ப் பகுதி மட்டுமே பிறந்த வீட்டில் கழிகிறது. மீதி முக்கால் வாழ்க்கை அல்லது முழுவாழ்கை, இன்னொரு வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அந்த இன்னொரு வீட்டுக்குச் சொந்த வீட்டுக்குப் போக காத்துக்கொண்டிருக்கிறாள். சொந்த வீட்டுக்குப் போய்ச் சேருகிறபோது உடம்பில் ஒரு ஒச்சத்துடன் எந்தப் பெண்ணும் போகக் கூடாது. "கல்யாணக் குத்தம் எந்தலையில் விழுந்திரக்கூடாது பாரு அதுக்குத்தான் இந்தக் குருவங்குலையை (வேப்பங்குலை) எடுத்தேன்" வேப்பங்குலை என்ற வார்த்தையை அவர் ஒரு போதும் உச்சரிப்பதில்லை. சில தொழில்களுக்கு தொழில்முறை வார்த்தைகள் இருக்கின்றன. அதைத் தாண்டி வார்த்தைகளை பயன்படுத்துகிறபோது, வீரியமும் மதிப்பும் குறைந்து போகின்றன. தோளிலிருந்த துண்டை இறக்கி, இடுப்பில் சுற்றினார். விபூதிப்பையை எடுத்து நெற்றியில் கைகளில் பூசிக்கொண்டார். ஒரு சிட்டிகையளவு விபூதி எடுத்து, செண்பகதேவியின் நெற்றி உச்சி மேட்டில் வீசினார். வேப்பங்குலை உயர்ந்தது. அதற்கு ஒரு உயர அளவு உண்டு. எந்த அங்கத்துக்குப் பார்வை பார்க்கப்படுகிறதோ, அதற்கு ஒரு சாண் உயரத்தில் சுற்றவேண்டும். முதலில் தரைக்கு மேல் பரவிப் பரவி சுற்றியது. படிப்படியாய் அங்குலம் அங்குலமாய் உயரம் கூடிச் சுழன்றது. முகத்துக்கு நேரெதிர் வந்ததும் நின்று கொஞ்சநேரம் தலையை இடப்பக்கம் திருப்பி ஆடியது. பிறகு சர்ரென்ற பறவைபோல் கீழாகப் பாய்ந்து செண்பகாவின் முழங்காலுக்குக் கீழே இப்படியே சுழன்றது. மேலிருந்து கீழாகப் மூன்று தடவை இறக்கினார். இரு கண்களல் நெரியும் நீரை இரு விரல்களால் துடைத்துக் கொண்டேயிருந்தார். வாயிலிருந்து நெரித்துக் கொண்டு வரும் கொட்டாவியை இடது கையால் சுண்டி விட்டுக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் நெரித்துக்கொண்டு வருவது, கொட்டாவி அலகை நெருக்கியடித்து வெளியேறுவது, இரண்டும் பார்வை நன்றாகப் பிடிக்கிறதின் அடையாளங்கள். "நல்ல பார்வைன்னா, அப்படித்தான் பிடிக்கும்," கூட்டத்தில் ஒருவர் மெதுவாகச் சொன்னார். வேப்பங்குலையின் வீச்சுச் சத்தம் தவிர, வேறெதுவும் கேட்காத அமைதி. பேச்சுக் குரலின் சிறு அசைவுகூட அந்த நிசப்தத்தில் கல்லெறிந்தது போல் கெடுத்துவிடலாம். இருபுருவங்களுக்கிடையில் நெற்றிப் பள்ளத்தில் பார்வையை நிறுத்தினார். ஓடைக்கரை தெரிந்தது. ஓடைக்கரை மேல் பருவத்திப் பூத்த ஏடை மரம். வெண்குஞ்சங்கள் பின்னிய குடைகள் அடுக்கி வைத்தது போல் பூப்பூத்த நாலடுக்கு ஏடைமரம். பூக்கள் மின்னிய ஏடை மர உச்சியில் உருவு தெரிந்தது. நெற்றிப் பள்ளத்துக்கும் ஏடை மர உச்சிக்குமாக ஒளிப்பாய்ச்சலாய் உருவு வருவதும் போவதுமாக இருந்தது. "உருவு தெரியுது" தன் புலப்பமாய் வந்தது. அவரோட ஐயா குருவங்கலை (வேப்பங்குலை) மாற்றிக் கொடுக்கிறபோது, சீனிகுருசாமிக்கு வயது பத்தொன்பது. பரம்பரைக் கணக்கு ஒன்று அதன் பின்னால் இருந்தது. அதை வைத்துத்தான் மாற்றிக் கொடுத்தார். கன்னியாலம்மன் கோயிலில் வைத்து நடந்தது. ஊர் முழுதும் கூப்பிட்டு சாப்பாடு போட்டார். நாலு திசைகளுக்கும் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பியிருந்தார். நாலு ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், எல்லோருக்கும் சாப்பாட்டுத் திருப்தி முகத்தில் தெரிய, அறிவார்த்தமான ஆட்களெல்லாம் திரண்டிருந்தார்கள். எல்லா கன்னியாலம்மன் கோயில்களுக்கும் முன்னால் வழமையாய் நிற்கும் சூரிமரம் தளதளவென்று பசுமை ஒளியில் சாட்சியாய் நின்றது. தீபாராதனை காட்டி சாமி கும்பிடு நடத்தி குருவாங்குலை மாற்றிக் கொடுத்தார். தருமகாரியத்தை ஒப்புக்கொண்ட பிறகு அதை நிறைவேற்றுவதில் கவனம் கொள்ளவேண்டும். ஒழுக்கச் சிதைவு கூடாது. இளவட்ட ஆட்டதை ஒடுக்கிவைத்து விடவேண்டும். துப்புரவாக அதை துடைத்துக் தெளிவாய் பக்தி நிலை பூணவேண்டும். அப்போது உள்சுரப்பு வரும். தெய்வ உரு கிடைக்கும். மூடிய கண்கள் வழியாக பாய்கிற உருவை நெற்றிப் பள்ளத்துக்குள் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அதுதான் நல்ல பார்வை. சிவலார்பட்டி தாய்க்கிராமம். அதை இட்டுத்தான் சுத்துப்பட்டு கிராமங்கள் முளைத்தன. சவலைப் பிள்ளையாய் தாயின் முந்தானையைப் பிடித்தபடி கிடந்த சுத்துப்பட்டு கிராமங்கள் அதிசயம்போல் சுறுசுறுப்பாக எழுந்து நடமாடிக் கொண்டன. ஈன்ற கன்றுக்குட்டி போல தம்மீது படர்ந்திருக்கிற சோம்பல் கசடுகளை நீக்கிவிட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றன. படிப்பு, வேலை, வியாபாரம் என்று சேய்க்கிராமங்கள் முந்திக்கொள்ள, வயசாளி போல தாய்க் கிராமம் தவங்கி விட்டது. அய்யா வடக்கே மாடுபிடிக்கப் போனார் ஜோடி 25 ரூபாய். அன்றைக்கு வசமான மாடுகள் சிக்கின. சிவலார்பட்டியில் ஒரு விவசாயி ராத்திரிப் பொழுதில் மாட்டுக்குக் கூளம் பறிக்க படப்புக்குப் போயிருக்கிறார். படப்படியில் கிடந்த ஒரு பாம்பு "படக்" கென்று கொத்தியது. நல்ல பாம்பு. விஷம் சிரசுக்கேறி, தள்ளாடிக் கீழே சாய்ந்தார். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரைக் கயிற்றுக் கட்டிலில் போட்டிருந்தார்கள். உள்ளூர் மருத்துவன் உள்மருந்துகள் கொடுத்துப் பார்த்தும், அசையாமல் கட்டைமாதிரிக் கிடந்தார். சாயந்தரமானபோது, தேர்கட்டி மயானத்திற்கு எடுத்துப் போனார்கள். மாடுகளுடன் அய்யா சிவலார்பட்டிக்குள் நுழைந்தபோது, ஊர் மௌனத்தில் உறைந்து கிடந்தது. காற்றசைவு இல்லை. மயானம் ஊருக்குள் மாறி உட்கார்ந்து விட்டதுபோல் தெரிந்தது. ஒரு பாம்பு, ஊர் மொத்தத்தையும் அரட்டி வைத்துவிட்டிருப்பது தெரிந்தது. அய்யா, கிடு, கிடுவென்று சுடுகாடு நோக்கி நடந்தார். கட்டைகள் அடுக்கிக் கிடத்திய உடல் எருவாட்டிகள் மூடி மூட்டத்திற்குத் தயாராய் இருந்தது. முகம் மீதி வைக்கப்பட்டிருந்தது. சாய்ந்தர இருட்டுக் கவிவைச் சுற்றிலும் அழுது திகைக்கிறவர்களின் முகங்கள் இன்னும் விரைவுபடுத்தியிருந்தன. அய்யா போனதும் கூட்டம் விலகியது. முகத்துக்கு நேரே காதுகள் வைத்துக் கவனித்தார். "ஆள் சாகலே ஊருக்குத் தூக்கிட்டுவாங்க" எந்தப் படப்புக்கடியில் இருந்து நாகம் தீண்டியதோ, அந்த இடத்துக்கு எடுத்து வரச் சொன்னார். ஒரு குத்து வேப்பங்கொழுந்து, ஒரு கை துளசி இலை, கொஞ்சம் மிளகு, இஞ்சி அரைத்து வரச்செய்தார். கடைவாயை அகட்டி, கெட்டித்த பற்களைத் திறந்து அரைப்படிச்சாறு உள்ளே கொடுத்தார். மளமளவென்று தடையில்லாமல் இறங்கியது. உயிர்கழன்று விட்டதென்றால் அல்லது கழன்று போகிற தருணமாக இருந்தால் பால் விட்டாலும் உள்ளே இறங்காது, மூச்சுக்காற்று தொண்டைக் குழி திறந்து உள்ளே விழுகிறது. கையில் திறமாய் வேப்பங்குலை ஏந்தினார். குருவை நினைத்து வேப்பங்குலையை இரு கைகளிலும் நெற்றிக்கு நேரேவைத்து முருகா...வென்றார். "ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வாங்க" என்றார். கண்கள் நீரால் நெரிந்தன. சகல ஜீவராசிகளுக்கும் இரக்கப்பட்டு கருணையால் வாழ்வு எய்திச் செழிக்க வைப்பதாய் கண்ணீர் மளமள வென்று வழிந்தது. அவ்வளவு கண்ணீர் எங்கிருந்தது என்று தெரியவில்லை. வாய், அதக்கி அதக்கி கொட்டாவி பெருக்கெடுத்தது. இடது கையால் கண்களைத் துடைப்பதும், பிறகு அதே கையால் கொட்டாவியைச் சுண்டி விடுவதும் மாற்றி மாற்றி தாளலயமாய் நடந்தது. மந்திரிக்க மந்திரிக்க படப்புக்கு அடியில் ஒடுங்கியிருந்த பாம்பு இருப்பிடம் நீங்கி வெளியில் ஊர்ந்து வந்தது. ஒரு வெள்ளி அருணாக்கயிறு அசைவதுபோல் பாம்பு ஊர்ந்து வந்தது. "பெரிய பாம்பு... பெரிய பாம்பு" கூட்டம் அலறிப்புரண்டது. கட்டையாய்க் கிடந்தவனின் பெருவிரல் முனையில் வாய் பொருத்திய பாம்பு விஷத்தை திருப்பி உறிஞ்சியது. சுழலும் வேப்பங்குலையை நோக்கி தலை தூக்கி நின்றது. பால் கிண்ணத்தை, அய்யா அதன் முன் வைத்தார். பாலைக் குடித்துவிட்டு அசைந்து அசைந்து கிழக்கு நோக்கி மறைந்தது. விஷம் இறக்க மட்டுமே தெரிந்த ஒரு பாம்பு, சொன்னசொல் கேட்கிற நல்ல பிள்ளையாய், வேப்பங்குலை மந்திரிப்புக்குள் அடங்கிக் கட்டுப்பட்டு நடந்த காட்சி, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. பாம்புக்கடி பட்ட இடத்தை அய்யா பார்த்தார். பல் பதிவு தெரிந்தது. பாம்பு பல் பதிக்கிற கோணம் முக்கியம். அலகு சாய்த்துக் கொத்தினால் சக்தி கூடுதல். நேரே கொத்தினால் வீரியம் குறைவு கொத்துப்பட்ட சிவலார்பட்டி சம்சாரிக்கு பாம்பின் பல் நேரெ பதிந்திருந்தது. மூன்று பல் மட்டும் தான். நான்கு பல் பதிந்ததென்றால் ஆள் உயிரைக் காலியாக்கி விடும். நல்ல பாம்பு, விரிசங்கட்டை (விரியன் பாம்பு) இரண்டும் பாம்பு வகைகளிலே விஷம் கூடுதலானவை. அந்த சம்சாரியைக் கொத்தி மரணத்திற்குள் அனுப்பியது நல்ல பாம்பு வகை. மரணத்துக்குள் போன விவசாயியின் உயிரை மீட்டெடுத்துக்கொண்டு வந்த அய்யாவை சிவலார்பட்டி கிராமமே திரண்டு, வண்டிகட்டி, ஊர்வலம்போல் வந்து ஊரில் வந்து விட்டுப்போனார்கள். அவர்களுடன் இரண்டு கோட்டை கம்பம் புல்லும் ஒரு பால்மாடும் வந்தது. அய்யா இறந்தபிறகு அவருடைய சமாதியில் ஒவ்வொரு வருசமும் சிவலார்பட்டிக்காரர்கள் ஊரோடு வந்து குருபூசை நடத்திப்போனார்கள். கைக்குள் அடங்கிச் சுற்றிய வேப்பங்குலையில் வேகம் மெல்ல மெல்லக் குறைந்தது. ஓட்டப் பந்தயக்காரன் எல்லையை மிதித்த பிறகு கொஞ்ச தூரம் ஓடி நிற்கிற காட்சிபோல் தென்பட்டது. "ஒரு குத்து குருவங்குலை" - சீனிகுருசாமி வேப்பிலையைப் பறித்து அம்மாவின் கையில் கொடுத்தார். அதே மாதிரி கையளவு துளசி இலை, பாகற்கொடி பூவுங் கொளுந்துமாய் அரைத்துச் சாறு எடுத்து உள்ளே கொடுக்க வேண்டுமென்றார். "இந்தக் கணக்கிலேயே ஒரு வாரம் கொடுங்க, பிறகு நா வந்து பார்க்கறேன்" என்றார். செண்பகதேவி அர்த்தமுள்ள புன்னகை செய்தாள். இதழ் பிரியாமல் சிரிப்பை உள்ளடக்கினாள். "என்ன சிரிப்பை மிழுங்குறே?" கனகு கேட்டபோது "இல்லே, ஒன்னுமில்லே" என்றாள். மந்திரிக்கிறது மட்டுமல்ல! உள்மருந்தும் கொடுக்கிறார் சுற்றி இருப்பவர்கள் பார்வை பார்ப்பதினால் மட்டுமே நோய் வாசியாகிறது என்று நம்புகிறார்கள். நம்பிக்கையை மட்டுமே கொண்டு அவர்கள் காலத்துக்குள் நகர்கிறார்கள். உடலுக்கு நேருகிற விஷக்கடி மட்டுமல்ல, வாழ்வின் எந்த விஷக்கடியும் இன்றில்லாவிட்டால் நாளை தீரும் என்ற நம்பிக்கையோடு வாழ்வுக்குள் நடக்கிறார்கள். அம்மாவுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. பார்வைக்காரரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். "பாப்பாவுக்கு இப்ப தூரமா?" பார்வைக்காரர் கேட்டார். "இன்னைக்கு மூனாவது நாள்" அம்மாவின் வாய்ச்சொல் ரகசியம் போல் மெல்லக் கசிந்தது மாதவிடாய் ஆன பருவத்தில் பார்வை வைத்தியத்துக்கு நோயின் மேல் அதிகாரம் கிடையாது. அதைச் சொல்லிரணுமால்லே என்றார். முடிந்ததுக்குப் பிறகுதான் உள்மருந்து எடுக்க வேண்டும். ஒரு செண்பகதேவிக்கு மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த செண்பகதேவிகளுக்கும் தெரிந்துகொள்வற்கான சேதியாக இருந்தது. "எல்லோரும் கேட்டுக்கோங்க என்றார்" சேலைக்குள் பதுங்கியிருந்த கால்களின் நடையில் வித்தியாசம் தெரியவில்லை. கால்கள் பத்திரமாக இருக்கின்றன. "கால் எப்படியிருக்கு?" முதல் விசாரிப்பாக அதைக் கேட்க வேண்டுமென்று நினைத்தார் பார்வைக்காரர். கேட்டு அறிந்து கொள்ளத் தயக்கமிருந்தது. நேரடியாகக் கேட்காமல், பார்வையிலேயே தெரிந்துகொள்ள முடியும். பார்வை உதவாத இடத்தில் மட்டுமே வார்த்தைகள் உதவமுடியும் கணுக்காலுக்கு மேல் ஆடை கொஞ்சம் தூக்கிக் கொண்டால் போதும்; கண்டு கொள்ளமுடியும் கண்டுகொள்ளும் ஆவலில், கேட்டு அறிந்துகொள்ளும் நினைப்பை மடக்கி உள்ளே வைத்தார். "எத்தனை பிள்ளைக?" பார்வைக்காரர் கேட்டார். "ரெண்டு" பள்ளிக்கூடம் போகுற வயசா?", "ஆமா, போகுதுங்க", "எப்ப கல்யாணம் நடந்திச்சி" பார்வை வைத்தியம் பார்த்து முடித்த அடுத்த வருசமேகல்யாணம் நடந்திருக்கிறது. கல்யாணத்துக்கு கால்கள் தடையாயிருந்திருக்காது. எந்த சொஸ்திக் குறைவுமில்லாததால், கால்களை முன்னிட்டு கல்யாணம் நின்று போகவில்லை என நினைத்தார். ஒரு கத்தைக் காகிதங்களை பையிலிருந்து எடுத்து "இதப்பாரும்மா?" என்றார். "விலாசமெல்லாம் சரியாத்தான் இருக்கு", "எனக்குத்தான் நிகால் பிடிபடலே.", "போன் நம்பர் குறிச்சிருக்கீங்க. போன் பண்ணியிருந்தா அவருக்குச் சொல்லி கூப்பிட்டு வரச் சொல்லியிருப்பனே" வெயில் சுருண்ட புழுப்போல் இடம் கண்டுபிடிக்க அலைந்து வதங்கிவிட்டிருந்தார். ஒரு விலாசத்தை காட்டி தன் சொந்தக்காரர் இருப்பதாகவும் அங்கே போய் தங்கிக்கொள்ள முடியும் என்றார். "ஏன் இங்க தங்கலாம்? அவரு சாயந்தரம் வருவாரு" பார்வைக்காரருக்கு அது ஒப்புதல் இல்லை. கால்களைப் பற்றி ஐயமறத் தெரிந்து கொள்ளாதபோது, தங்குவது என்ற முடிவு சரியாக வராது. மனசு ஐக்கியப்படாமல் தங்குவது சாத்தியப்படாது. கால்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன. மனிதனின் மொத்த வாழ்க்கையையும் எடுத்துச் செல்வதாக கால்கள் இருக்கின்றன. கால்களின் நடமாட்டம்தான் மனிதன் இயங்குவதை அடையாளப்படுத்துகிறது. மூளை மண்டலம்கூட, கால் நட மாட்டத்தை வைத்தே அசைவுகளைத் தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. சில நேரத்தில் கால்கள், வாழ்க்கையில் உறுதிப்பட தூண்களாக இருக்கலாம், கோபம் கொள்ளும், நேரங்களில் கால் ஒரு துடைப்பம் போலவும் விரியலாம். அவர் சாப்பிடுகிற தோரணையைக் கண்டு செண்பகதேவி ஆச்சரியப்பட்டாள். கூர்ந்து கவனித்தாள், சாப்பிடுகிறபோது மன்னன்மாதிரி உட்கார்ந்திருப்பாரே. அவர் இப்போது தென்படவில்லை. விரலால் நோண்டி நோண்டித் தாளித்த கருவேப்பிலை சோற்றில் கிடக்கும் சீரகம், கடுகு எல்லாவற்றைம் நுணுக்கு நுணுக்கி எடுத்து வைத்துவிடுவார். அவர் கழித்து வைத்தது மட்டும் ஒரு குத்து (கையளவு) வரும். இப்போது தென்படுகிறவர் எதையும் கழிக்காத மளமளவென்று உணவை உள்ளே தள்ளுகிற ஒரு புதிய மனுசர். அவருக்குள்ளிருந்த பழைய கம்பீரம் கழன்று வெகுநாட்களாகியிருந்தன. வளமான சொல், எடக்கு முடக்காய் பேசும் பேச்சு என சகலமும் காணாமல் போயிருந்தன. அவரிடமிருந்து தொலைந்து போனவைகளில் முக்கியமான பொருள் எந்நேரம் எங்கிருந்து பார்த்தாலும் இருட்டையும் பளிச்சென வெளிச்சமாக்குகிற முகம். புறப்படுகிற போது சொன்னார். பரிதாபமாக இருந்தது. "ஏதாவது ஒரு வேலை இங்ஙன பாக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு தாயீ"", "என்ன வேலை?", "கடையில, ஒட்டல்லே கணக்கெழுதுற வேலை" ஏற்கனவே சில இடங்களில அந்த வேலை பார்த்திருக்கிறார். சொந்தக்காரர் வீட்டு முகவரி கொடுத்தார். அந்த விலாசத்தில் தான் இருப்பதாகவும், சொல்லியனுப்பினால் உடனே புறப்பட்டு வந்து விடுவேன் என்றும் சொன்னார். அவருடன், செண்பகதேவியும் கீழிறங்கிய போது தடுத்து விட்டார். "வேண்டாம் நா போய்க்கிறேன்" என்றார். கடைசிப் படிக்கட்டில் நின்றபடி தனக்கு மேலே படிக்கட்டுகளில் இறங்கிவரும் கால்களைப் பார்த்தார். வீதியில் இறங்கிய பார்வைக்காரர் கேட்டார் "அவரு ஒனக்குச் சொந்தமா?", "ஆமா" அவள் சிரித்த சிரிப்பில் ஏன் அப்படிக் கேட்டீங்க என்ற கேள்வி வெளிப்பட்டது. விஷக்கடி நீர் ஏறி வீங்கி பனை நிறத்தில் இருந்த அந்தக்கால் தன் முகத்தில் ஒங்கி ஒரு உதைவிட்டது போலிருந்தது, இரண்டு வழிகளில் மட்டுமே அந்தப் பெண்ணுக்கு சாபவிமோசனத்தின் கதவுகள் திறந்திருக்க முடியும். ஒன்று சொந்தக்காரன் என்பதால் திறக்கப் பட்டிருக்கலாம். அல்லது ஏராளமான சீர்வரிசை, சொத்து, ரொக்கம் ஆகியவைகளால் கறுத்து வீக்கமான அந்தக் கால் மறைக்கப்பட்டிருக்கும். பார்வைக்காரரின் கால்கள் மண்ணில் உறுதியாகப் பதியாமல் தளர்ந்தன. எதையோ தொலைத்து விட்டவர்போல் கூனிக்குனிந்து நடந்து போனவரை செண்பகதேவி வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் துர்கா. யசோதையிடம் நிறையப் பசுக்கள் இருந்தன. துர்காவிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் விற்பவர்களே. யசோதை ஊதாரித்தனமாகச் செலவுகள் செய்பவள். ஆனால் துர்காவோ சிக்கனமானவள். ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டுக்காரி துர்காவிடம் சென்று ஒருபடி நெய் கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டிற்குச் சென்று நெய்யைக் கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு யசோதை உன்னிடம் எப்போது நான் நெய் வாங்கினேன்? என்று கேட்டு விட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டென் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டாள். வழக்கைக் கேட்ட மரியாதை இராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்க்காக ஓர் காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர். பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார். முதலில் யசோதையையும் இரண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமாக நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினாள். சேறு சரியாகப் போகவில்லை. சேறு அப்படியே இருந்தது. அடுத்து துர்கா சேற்றில் இறங்கி நடந்தாள். பின் கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச் சுத்தப்படுத்திய பின் செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு வந்தாள். செம்பிலும் சிறிது தண்ணீர் மிச்சமாக இருந்தது. அடுத்து மரியாதை இராமன், யசோதையை அழைத்து அவள் கருத்தைக் கேட்டார். நான் நிறையப் பசுக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு அவற்றால் போதுமான அளவு நெய் கிடைக்கிறது. ஆனால் துர்காவிடம் மிகக் குறைந்த அளவே பசுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்க நான் அவளிடம் நெய் கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னை அவமானப் படுத்த வேண்டுமென்பதற்காக என்மேல் இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளாள் என்றாள் யசோதை. இதைப் பொறுமையாகக் கேட்ட மரியாதை இராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினான். துர்கா காலிலுள்ள சேற்றை கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிய பின் சிறிது தண்ணீரும் செம்பில் மிச்சம் இருக்கிறது. ஆகையால் அவள் சிக்கனக்காரி. நீயோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்துவிட்டாய். இதிலிருந்தே நீ ஊதாரி எனத் தெரிகிறது. ஆகையால் நீ துர்காவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறாய் என்பது உறுதியாகிறது என்றார் மரியாதை இராமன். யசோதையும், துர்காவிடம் நெய் கடனாக வாங்கிக் கொண்டதை ஒத்துக் கொண்டாள். பின் கடனாக வாங்கிய நெய்யை துர்காவிடம் கொடுக்க யசோதைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இத்தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.
அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, "பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்" என்றான். அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன! ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, "முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?" என்று சீறினார். அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, "உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!" என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் "அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?" என்று கேட்டான். "இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றான் அலி. "தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?" என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், "வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!" என்றான்."என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!" என்றான் அலி!"இன்று ஒருநாள் மட்டும் செய்" என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, "ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?" என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி "இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!" என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, "நீ இன்னும் சாகவில்லையா?" என்று கேட்டார்."இல்லை, பிரபு!" என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, "வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!" என்றான். "உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?" என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், "பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?" என்று அக்பர் கேட்டார். "பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்" என்றான் பீர்பல்."அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?" என்று அக்பர் கேட்க, "அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?" என்று கேட்டான் பீர்பல்.அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், "நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்" என்றவர் அலியைப் பார்த்து, "பிழைத்துப் போ" என்றார்.
ஒரு ஊரில் நாய் ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் முட்டைகளை சாப்பிட்டே பழக்கம். ஒரு நாள் அது முட்டை வடிவில் இருந்த ஒரு சிப்பியைப் பார்த்தது. உடனே முட்டை என்று நினைத்து அப்படியே கவ்வி, விழுங்கிவிட்டது. ஆனால், விழுங்கியது சிப்பி என்பதால், நாயின் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது. "எனக்கு இது தேவைதான். முட்டை வடிவில் இருப்பதெல்லாம் முட்டை என்று நினைத்த என் முட்டாள்தனத்திற்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" என்று புலம்பியது அந்த நாய். முன்யோசனையின்றி ஒரு செயலில் ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார். அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர். மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார். மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர். மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான். புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான். புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான். புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர். இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார். பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார். "மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன். இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார். இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான். முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................" அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று. விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார். நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன். அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார். அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார். ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான். சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை. சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார். நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான். முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான். “ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான். சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர். இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார். அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார். அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார். அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான். நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும். “சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான். விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். மனைவி அவனிடம், "நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்" என்றாள். "நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை" என்றான் அவன். கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர். " ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்" என்றான் விறகுவெட்டி. எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சொன்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான். நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள். "இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்" என்று நினைத்தான் அவன். " நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்" என்றான் அவன். அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள். அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன். அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது. " தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்" என்றான் மூத்தவன். எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். " ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?" என்று அலறினான் இரண்டாமவன். " கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்" என்று ஆறுதல் சொன்னான் குள்ளன். நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள். வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?" என்றான் அவன். " எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்" என்றாள் அவள். நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர். கதவு தட்டும் ஓசை கேட்டது. " இந்த நேரத்தில் யார்? கதவைத் திற" என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள். சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள். விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை. " நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?" என்று கேட்டான் அவன். " நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது" என்றாள் அவள். அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். " காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்" என்றாள் அவள். குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது" என்று குழம்பினான் அவன். "நேரமாகி விட்டது. புறப்படுங்கள்" என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி. அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான். அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர். " நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்" என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான். பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான். கீழே இறங்கிய அவன், " அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்" என்றான். எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள். குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. " பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்" இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்" என்றான் குள்ளன். " இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்" என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள். சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள். " நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்" என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர். தன் மகனைப் பார்த்துக் கிழவி, " இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன். பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்" என்றாள். " அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?" என்று கேட்டான் அரக்கன். " நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்" என்றாள் அவள். குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது. கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. "ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது" என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான். சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான். நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், " அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்" என்றான். இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள். பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. " என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்" என்றாள். அறைக்குள் நுழைந்த அவன், " அம்மா! இங்கு யாருமே இல்லையே" என்று அலறினான். அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. " ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். " கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?" என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன். இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள். ஒருவாறு மனம் தேறிய அரக்கன், " என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்" என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான். " என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா" என்று கத்தினான் அவன். கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். " அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்" என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர். " என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை" என்றான் மூத்தவன். " அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்றான் குள்ளன். எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. " ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?" என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான். இதைப் பார்த்த குள்ளன், " அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்" என்றான். எல்லோரும், " எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்" என்றார்கள். வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான். "ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்" என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது. " பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து" என்று கத்தினான் அவன். கதவைத் திறந்த கிழவி, " என் மகனுக்கு என்ன?" என்று கேட்டாள். " உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள். மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். " இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்" என்று என்னை அனுப்பினார்" என்று பரபரப்புடன் சொன்னான் அவன். " ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?" என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள். அந்தப் பையை வாங்கிய அவன், " இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான். " இனி இந்த அரசனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன். எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள். " மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்" என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள். அவர்கள் தந்தையும் தாயும், " மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்" என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். " அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற் காசுகளுடன் வந்து இருக்கிறோம்" என்றான் குள்ளன். சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள். தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன். வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், " மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்" என்றாள். " என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன். நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள். " அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?" என்று அழுதுகொண்டே கேட்டான் அவன். "மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது" என்று அறிவுரை சொன்னாள் அவள். " நீ சொன்னபடியே நடக்கிறேன்" என்றான் அவன். பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
சின்னராணி சித்திரலேகாவின் அழகும், அறிவும் அவனி அம்பத்தாறு தேசங்களிலும் பிரபலம். சின்னராணியை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரர்கள் "நீ, நான்" என்று ஒற்றைக் காலில் நின்றனர். சித்ரலேகாவின் தந்தை சித்திரசேனன் யாருக்கு அவளை திருமணம் செய்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார். புத்திசாலியான தன் மகளிடமே இதற்கு ஒரு நல்ல உபாயம் சொல்லுமாறு கேட்டார். சின்னராணியின் ஆலோசனைப்படி அரசன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். "அழியாத செல்வம் உடையவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் அதை சின்னராணியிடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்த ஆண் மகனுக்கு சின்னராணி மாலை இடுவார்". இப்படி அறிவிக்கப்பட்டது. சின்னராணியின் சுயம்வரச் சேதி காட்டுத் தீ போலப் பரவியது. ராஜகுமாரர்கள் சித்திரசேனனின் நாட்டை நோக்கி விரைந்தனர். சித்திரசேனனின் சிங்காரப்பட்டினம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் தங்கள் ராஜகுமாரியை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். விழா மண்டபத்தில் மன்னன் சித்திரசேனன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒருபுறம் பட்டத்து ராணியும் மறுபுறம் சின்னராணியும் அமர்ந்திருந்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு ராஜப்பிரதானிகளும் பொது மக்களும் அரசவை மண்டபத்தில் திரண்டிருந்தனர். சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர்கள் முன் வரிசையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு ராஜகுமாரனும் தன்னுடைய நாட்டின் பரப்பு, செல்வ வளம், இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொண்டு வந்து சித்திரசேனனிடம் கொடுத்தனர். உலகத்திலேயே விலை மதிப்பற்ற ஒரு அரிய வைரக்கல்லை கொண்டு வந்து சின்னராணியின் காலடியில் வைத்தான் ஒரு ராஜகுமாரன். இன்னொருவன் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மிக அழகிய சிம்மாதனம் ஒன்றைக் கொண்டு வந்தான், தனது செல்வத்தின் அடையாளமாக. இவை எதுவுமே ராஜகுமாரியை திருப்திப்படுத்தவில்லை. ராஜகுமாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அப்போது இளைஞன் ஒருவன் மண்டபத்திற்குள் வந்தான். அவன் கையில் ஓலைச்சுவடி கட்டு ஒன்றை வைத்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு ஏழைப்புலவன் போல இருந்தான். "புலவரே.. இன்று சுயம்வரம்.. நடக்கிறது நாளை வாருங்கள் சன்மானம் தருகிறேன்.." என்றார் மன்னர். "நான் சன்மானம் பெற வரவில்லை.. சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.." என்றான் இளைஞன். "நீ.. என்ன விலைமதிப்பற்ற செல்வம் கொண்டு வந்திருக்கிறாய்.." என்று சிரித்தபடியே கேட்டார் மன்னர். உடனே அந்த இளைஞன் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை மன்னனிடம் கொடுத்தான். ஓலைச் சுவடிக் கட்டை சின்னராணியிடம் கொடுத்தார் மன்னர். சின்னராணி சுவடியைப் பிரித்தாள். திருக்குறள் அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது. "நான் கேட்டது விலை மதிப்பற்ற செல்வம்.. அழியாத செல்வம்.. ஆனால் நீ என்னிடம் கொடுத்திருப்பது.. திருக்குறள்.." என்றாள் சின்னராணி. "ஆமாம் இளவரசி.. இரண்டும் ஒன்றுதானே திருக்குறள் கல்வியின் அடையாளம். எல்லாச் செல்வத்திலும் கல்விதான் அழியாத செல்வம். விலைமதிப்பற்ற செல்வம்", "அது எப்படி அழியாத செல்வம் ஆகும்" என்றாள் சின்னராணி. "நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். அள்ள அள்ள குறையாதது கல்வி ஒன்றுதான்" என்றான். "நீங்கள் போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றாள் சின்னராணி. "அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆசிரியன் நான்" என்றான் அவன். கல்வி கேள்விகளில் சிறந்த ஆசிரியர் சின்னமணி அழகிற் சிறந்த சின்னராணிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. சின்னமணியும் சின்னராணியும் சிங்காரப்பட்டினத்தில் பல ஆண்டுகள் அரசாண்டு பல பள்ளிகளைத் திறந்து மக்களின் கல்விக் கண்களைத் திறந்தனர்.
ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின. அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை. அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம். இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான். அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான். பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது. ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான். செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் "எல்லாம் நன்மைக்கே!" என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. இரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர், "அரசே! எல்லாம் நன்மைக்கே!" என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், "நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதா?, காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுங்கள்" என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப்படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தனர். அப்போதும் அமைச்சர், "எல்லாம் நன்மைக்கே!" என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்காக மலைவாசிகள் கொண்டு வந்த அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, "காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம்" என்றான். விடுதலை பெற்ற அரசன்! அரண்மனைக்கு வந்தான். உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், "சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மை உணர்ந்தேன். உம்மைச் சிறையில் அடைத்ததற்காக வருந்துகிறேன்" என்றான். அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் என்னையும் உங்களுடன் சிறைப்படுத்தி இருப்பார்கள். விரல் வெட்டுப் பட்டதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன். "எல்லாம் நன்மைக்கே!" என்றார் அவர்.
சீமான் முதலாளி வீட்டு வேலைக்காரன் வந்து சொன்னதும், தலையில் இரும்புத்தடி விழுந்தது மாதிரி இருந்தது, அம்மாசிக்கிழவனுக்கு. விஷயத்தைத் தெரிந்ததுமே விழுந்தடித்து ஓடக் கூடியவன் தான்; ஆனால் முடியவில்லை. வாழ்க்கையில் முக்காலேயே மும்மாகாணிக் காலத்தை ஓட்டி விட்ட அந்தப் பழுத்த பழத்துக்கு இப்போ மேலுக்கு நல்ல சுகமில்லை. முகம் சுரைக்குடுக்கை மாதிரி வீங்கியிருக்கிறது. உடம்பிலுள்ள தோல் எல்லாம் காய்ந்த வாழை மட்டையாகத் தொங்குகின்றன. மார்பு எலும்புகள் கூடுபாய்ந்து மூங்கில் கூடை மாதிரி வரிவரியாகத் தெரிகின்றன. அடிவயிறு முட்டிக் கலயம் போல உருண்டு மினுமினுப்பாயிருக்கிறது. அன்னம், தண்ணி, ஆகாரம் என்று உள்ளேயிறக்கிப் பத்து நாட்களுக்கு மேலாச்சு. வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள பிரத்தியேகமாக யாரும் கிடையாது. அவன் தனிக் கட்டையாகி ரொம்பக் காலமாச்சு. பக்கத்துக் குடிசைகளிலிருக்கும் அண்ணன் மக்கள், தம்பி மக்கள் தான் தற்போது அவனைக் கவனித்துக் கொள்கிறார்கள். முன்பு அவன் கெதியும் மதியுமாய் இருந்தபோது, ஊருக்குள்ளே போய் முதலாளிமார்கள் வீடுகளில் ஏதாவது அத்தம் தொத்தம், எடுபிடி வேலைகள் செய்து கஞ்சி வாங்கி வந்து குடிப்பான். இப்போ அதிகமாக அந்தப் பக்கம் நடமாட்டமில்லாததால் சீமான் முதலாளி வீட்டு நிலவரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது. ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கிற அந்தக் குடியிருப்புக்கு மெனக்கிட்டு யார் வந்து சொல்லப் போகிறார்கள்? சீமான் முதலாளி செத்துப் போனாராம்! அம்மாசிக்கிழவனின் ஆட்கள் உடனடியாக அங்கு போய் நிற்கணுமாம்! - பழைய கிராம முன்சீப் ஐயா தாக்கல் சொல்லிவிட்டிருக்கிறார். பெரிய வீட்டுத் துட்டி. எள் மூட்டை வந்ததும் எண்ணெய் டின்களாகப் போய் நிற்க முடியவில்லையே என்று கிழவனுக்கு ஒரே மன உளைச்சல், விசாரம். காலை நேரம், பொழுது கிளம்பி மேலே ஒரு பாகம் உயரம் வந்திருக்கும். சரி. கிழவனால்தான் போக முடியவில்லை. மற்றவர்களையாவது அவன் உடனே அங்கு அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் சாமிமார்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும். பொம்பளைகள் ஊர், ஊருக்குத் துட்டி சொல்லிப் போகணும்; ஆம்பிளைகள் கொட்டடிக்கணும்; தேர்க் கட்டக் கம்பு வெட்டி வரணும்; சுடுகாட்டுக்குப் பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு சேர்க்கணும். மூடை, மூடையாக எருவும், தென்னங் கூந்தலங்களும் வேறு போய்ச் சேர வேண்டியதிருந்தன. இது போக அல்லறை சில்லறை வேலைகளும் அவர்களுக்காகவே இருக்கும். ராத்திரி சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிப்பது ஒரு முக்கியமான சோலி. அம்மாசிக் கிழவனின் அண்ணன் மகன் சடையனோடு சேர்ந்து அந்த ஆறு வீட்டு ஆணும், பொண்ணும் ராத்திரி செங்கல்லோடு வேலைக்குப் போய்விட்டு அப்போதுதான் அங்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் போய் நின்ற அம்மாசி, விஷயத்தைச் சொல்லி அப்படியே துட்டி வீட்டுக்கு ஓடும்படி விரட்டினான். அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் சங்கடம்தான். ராத்திரிப் பூராவும் தூங்காமல் வேலை செய்த அசதி. இருந்தாலும் பெரிய ஆள் சொல்வதை அவர்களால் தட்ட முடியவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்தில், ஆம்பிளைகள் அவரவர்கள் வைத்திருக்கும் கொட்டுகள் சகிதமாக வந்து விட்டார்கள். மூணு பெரிய கொட்டு, ஒரு பம்பைக் கொட்டு, ஒரு கிடுகட்டி, ஒரு ஜதை சிங்கி. பொம்பளைகள் அள்ளி முடிந்த கொண்டைகளோடு புறப்படலானார்கள். எப்போதும் அம்மாசிக் கிழவன் தான் சூழல் வாசிப்பது. அவன் தான் நடக்கக் கூட ஜீவனில்லாமல் கிடக்கிறானே! வெறும் கொட்டுகள் மட்டுமே போயின. துட்டி வீட்டுக்கு முன்னால் ஊரே திரண்டு கிடந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலுமாக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சீமான் முதலாளியின் மக்கள் மார்கள், வீட்டுக்கு முன்னாலுள்ள பெரிய ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து வந்தவர்களுக்குத் துட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பந்தல் போடும் வேலைகள் முடிந்திருந்தன. கொட்டுக்காரன் - சடையனின் கூட்டம், துட்டி வீட்டுக்கு முன்னால் போய்ப் பவ்யமாக நின்று அங்கிருந்த எல்லாரையும் பார்த்து கும்பிட்டுக் கொண்டார்கள். சாவு ஓலைகள் தயாராக எழுதப் பட்டிருந்தன. பழைய கிராம முன்சீப் ஐயா, அவற்றைச் சடையன் ஏந்தி நின்ற துண்டில் எட்டயிருந்து போட்டு, 'இன்னின்ன ஊர்க்கெல்லாம் போகணும்டா' என்றார். சடையன் அதைப் பொம்பளைகள் கையில் கொடுத்து, 'இன்னின்னார் இன்னின்ன திசைக்குப் போங்க' என்றான். கொஞ் நேரம் யாரும் எதுவும் பேசவில்லை... பொம்பளைகள் சற்று தயங்கியபடி நின்றார்கள். அதைப் புரிந்து கொண்ட சடையன், கி.மு.ஐயாவிடம், ' இந்தப் பொம்பளைகளுக்குப் பஸ் சார்ஜ்க்கும், ஒரு நேரம் பசியாறுகிறதுக்கும் ஏதாவது குடுத்து அனுப்புங்க சாமி' என்றான். 'என்னடா சடையா? இது புதுசா இருக்கு? என்னைக்கு மில்லாத வழக்கமா?' - ஊர் மணியக்காரர் கேட்டார். 'அதெல்லாம் இங்கு ஒன்னும் நடக்காது; நீங்க ஆக வேண்டிய காரியத்தப் பாருங்க!' என்றார், அதே கி.மு.ஐயா. சிறிது நேரம் வளர்த்த நாய் முகத்தைப் பார்த்தது போல துட்டி வீட்டுக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பொம்பளைகள் போகலானார்கள். சடையனோடு சேர்ந்த கொட்டுக்காரர்கள், ஒரே கலரில் அமைந்த உடைகளை எடுத்து மாட்டினார்கள். காலில் சதங்கையைக் கட்டிக் கொண்டார்கள். கொட்டுக்களை எடுத்து இடுப்பில் வரிந்து கொண்டார்கள். கொட்டைத் தொட்டு கும்பிட்டு விட்டுச் 'சட், சட்' என்று தட்டிச் சுதி பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில், 'கும்...கும்...கும்...கும்...' என்று வழக்கமாக அடிக்கும் அடியில் ஆரம்பித்துக் போகப் போக அடியை மாற்றிச் சாவு வீட்டிற்கே உரிய வர்ணத்தில், 'சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங். 'சட்..சட்... சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங்...' என்று முழங்கினார்கள். கூட்டம் அவர்கள் அடிக்கும் அடியைப் பார்த்தும், அவர்கள் போடும் ஆட்டத்தைப் பார்த்தும் ரசித்துக் கொண்டிருந்தது. சீமான் முதலாளியின் மூத்த மகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சல்லிச் செல்லையா, திடீரென்று அந்தப் பெரிய திண்ணை யிலிருந்து குதித்து வந்து, கொட்டுக் காரர்களுக்கு அருகில் போய் நின்று, இடது கையை மேலே தூக்கிப் பிடித்து, 'நிறுத்துங்கடா கொட்ட!' என்றார். மறுநிமிசம் கொட்டுச் சத்தம் நின்றது. 'என்னடா! சூழல் இல்லாமக் கொட்டடிச்சு ஒப்பேத்திட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கீளா? எங்கடா அந்த வாசிப்புக்காரன் அம்மாசிக் கிழவன்?' என்று பேயாக இரைந்தார், அந்த இடமே அதிரும்படியாக. 'பெரிசுக்கு ஒடம்புக்குச் சொகமில்ல மொதலாளி' சடையன் சொன்னான். 'அவனுக்கு என்ன பேதியா எடுத்துருக்கு?' 'சாப்பாடு, தண்ணி செல்லாமக் கெடக்காரு மொதலாளி' 'என்னடா! இதுக்கு முன்னால என்னயச் சாமி, சாமியின்னு சொல்லுவ! இப்போ என்னல புதுசா மொதலாளிப் பட்டம் குடுக்கிற!... அஞ்சு ஏர்க்காட்டையும் அழிச்சுக் குடிச்சுட்டு, இப்ப, கையகல நெலமில்லாம இருக்கிற என்னய நக்கலா பண்ற? செருப்புப் பிஞ்சு போகும்!' என்று ஆவேசமாக எச்சரித்தார் அவர். 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சாமி' 'கெழவன் என்ன சாகவா கெடக்கிறான்? அவனால முடியலையின்னா ஒங்கள்ல ஒருவன் எடுத்துக் குழல் ஊத வேண்டியதுதானடா!' கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். 'அதுக்குக் கொஞ்சமாவது ராகம் தெரியணுமே சாமி!... மேல் உதடு இல்லாதவன் சீங்குழல் வாசிச்ச மாதிரி இருக்கும்' 'வேற ஊருலயிருந்து ஒருவன கூட்டிக்கிட்டு வர வேண்டியது தானடா!' - இது இன்னொருவர். 'அவங்க, முன்னூறு, நானூறுன்னு சம்பளம் கேக்குறாங்களே!' 'குடுத்துக் கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே?... குழல் இல்லாத கொட்டு, தலையில்லாத முண்டம் மாதிரியில்ல இருக்கு? சோறு போட்டா வெஞ்சனத்தோட போடணும்' கீழவீட்டுப் பண்ணை சொன்னார். 'துட்டி வீட்டுச்சாமிமார்க செலவ ஏத்துக்கிட்டாகன்னா, அஞ்சு நொடியில ஆளக்கொண்டுக்கிட்டு வந்துருவேன்' 'நாங்க ஏண்டா அத ஏத்துக்கிறணும்? அது ஒங்களப் பொறுத்த விசயம் தானே?' சீமான் முதலாளியின் ரெண்டாவது மகன் கேட்டான். 'சாமி, நாங்க அன்றாடம் கூலி வேலைக்குப் போய்த்தான் கஞ்சி குடிக்கிறோம். இந்த நிலையில் முன்னூறு, நானூறுக்கு எங்க போவோம்?' 'இப்டியே விட்டா கொட்டிக்கிறதுக்கும் கூலி கேப்பாங்க போலிருக்க' கி.மு.வின் மூணாவது மகன் அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான். 'டேய், ஊருக்குத் தொண்டூழியம் செய்யறதுக்குத் தானடா அந்தக் காலத்துல ஒங்களுக்கு மானியக்காடுக விட்டிருக்காக!' என்றார் பழைய கிராம முன்சீப் ஐயா. 'ஒங்களுக்குத் தெரியாத விசயமில்ல சாமி. அது மூணு தலைமுறைக்கு முன்னாலயே எங்கள விட்டுப் போயிருச்சே!' 'என்னல நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; பேச்சுக்குப் பேச்சுப் பேசி அடைச்சுக்கிட்டேயிருக்க!' - கோபாவேசத்தில் வந்த சல்லிச் செல்லையா, சடையனின் கன்னத்தில் ஒரு போடு போட்டார், காதோடு சேர்த்து. 'என்ன சாமி, அண்ணனப் போட்டு இப்டி அடிக்கிறியே?' கிடுகட்டிக்காரன் கேட்டான். 'நீ ஞாயம் கேக்குறயாடா, சிரிக்கிபுள்ள!' - அவனுக்கும் ஒரு பூசை விழுந்தது. ரெண்டு பேரும் கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டு அங்கேயே நின்றார்கள். 'சரி, அது போகட்டும். அம்மாசிக் கிழவன் இன்னைக்கு வரல. வழக்கமாக அவன்தான் பிரேதங்கள் சுட்டுச் சாம்பலாக்கிக் குடுப்பான். இன்னைக்கு அவன் வேலய யார் பார்க்கப் போறா? அந்தச் சோலி ஒங்களுக்குத் தெரியுமா?' கி.மு. ஐயாதான் இதையும் கேட்டார். 'என்னமோ தெரிஞ்ச மட்டும் பாக்குறோம்... ஒங்க திருப்திக்கு வேணும்ன்னா நீங்களும் கூட மாடாயிருந்து கோளாறு சொல்லுங்க' என்றான் சடையன். 'என்னடா சொன்ன? அந்த ஈனத் தொழில நாங்களும் சேந்து செய்யணுங்கிறயாடா! நீங்க எதுக்குடா இருக்கியே!' சொல்லிக் கொண்டே வந்த ஒரு மீசைக்காரர், வந்த வெறியில் சடையனைக் கொட்டோடு சேர்த்துக் கீழே தள்ளி, 'நளுக்கு, நளுக்' கென்று நாலு மிதித்தார். 'சிரிக்கி புள்ளயக் கொல்லாம விடக்கூடாது' - சல்லிச் செல்லையாவுக்கு வந்த கோபம் இன்ன மட்டுமென்றில்லை. இடையில் நின்ற ஒருவர் அவரைத் தடுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டார். 'என்ன சாமிமார்களா? இந்த ஏழக்குடிகள இந்தப் பாடுபடுத்துறீயே' - கேட்ட சிங்கிக்காரனுக்கு விழுந்த பூசையும் காணும். கீழே விழுந்து கிடந்த சடையன், மெதுவாக எழுந்து, இடுப்பைப் பிடித்துக் கொண்டே மற்றவர்களைப் பார்த்து, 'வாங்கடா, போகலாம்' என்றான். காலில் கட்டிய சதங்கைகளை அவிழ்த்துக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாருமாக வீட்டைப் பார்த்து நடக்கலானார்கள். துட்டி வீட்டில் அவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் எத்தனையோ இருந்தன. 'எங்கடா போறியே?' சல்லிச் செல்லையா கேட்டார். அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தார்கள். 'ஒங்களையெல்லாம் வீட்டோட வச்சுக் கொளுத்தணும்டா!... போங்க! முக்குரோடு சிங்கம் மச்சான் கடைக்குப் போயிட்டு நேரே அங்கவாறேன்' என்றாரவர். வீட்டுக்குப் போன அவர்கள், அம்மாசிக் கிழவனுக்கு முன்னால் போய் நின்றார்கள். அவன் திடுக்கிட்டுப் போனான். கடையன் துட்டி வீட்டில் நடந்ததையெல்லாம் சொன்னான். கிழவனுக்கு இவர்கள் மேல்தான் கோபம். 'என்னடா வேல பண்ணிட்டு வந்திருக்கியே! சாமிமார்கள எதிர்த்துப் பேசலாமா? அவுக அடிக்க, அடிக்க நாம கையேந்துகிறவங்கதான்... முட்டாத்தனமா நடந்திருக்கேளேடா.' பேசுவதற்கு ஜீவன் இல்லாவிட்டாலும் ஒரு வெறியில் ஓங்கிச் சத்தம் போட்டான் கிழவன். கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்த சடையன், அப்புறம் கேட்டான்; ' இப்போ நாங்க என்ன செய்யணும் சின்னையா?' 'எல்லோரும் அங்க போகணும்; நாம செய்யக் கூடிய சாவுச் சடங்குள எல்லாம சாமிமார்க மனங்குளிரச் செய்யணும்' சடையனோடு சேர்ந்து அங்கு நின்ற எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திடீரென்று கிழவனுக்கு எங்கிருந்துதான் அந்தத் தெம்பு வந்ததோ, 'விருட்'டென்று வீட்டுக்குள் போய் ஒரு போணி தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு அவன் ஊதுகின்ற குழலோடு வெளியே வந்தான். அப்போது சடையன் கிழவனைப் பார்த்து சொன்னான்: "சின்னையா, இது ஒங்க காலத்தோடு சரி.. நாங்க இந்த ஊர்ல இருந்தாலும் சரி; அடியோடு போக்கழிஞ்சு போனாலும் சரி...' "..................' அந்த ஆறு வீட்டுக்காரன்களின் குழந்தை குட்டிகள் எல்லாம், வெள்ளங்காட்டி (காலை)க் கஞ்சி கூடக் குடிக்காமல் பரட்டைத் தலையோடு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தன. நாலா ஊர் ஜனங்களும் வந்து, செய்ய வேண்டிய சாஸ்திரங்கள் யாவும் செய்து முடித்தபின், கொட்டு முழக்கோடும், குழல் சத்தத்தோடும் சீமான் முதலாளி தேர் ஏறிப் போக, ராத்திரி ஊர் ஒடுங்கும் நேரத்திற்கு மேலாகிவிட்டது. இனி, சுடுகாட்டில் வைத்து நடத்தக் கூடிய காரியங்கள் மட்டுமே பாக்கி. - முதலாளியைக் கொண்டு கட்டையில் வைத்தார்கள். மக்க(ள்)மார்கள் மொட்டையடித்துக் கொண்டார்கள். வாய்க்கரிசி போடப்பட்டன. பிரேதத்தின் மேல் எருவையும், தென்னங்கூந்தல்களையும் அழகாக அடுக்கினான் அம்மாசிக் கிழவன். மூத்தமகன் கொள்ளி வைத்து முடித்ததும், கூட்டம் கலையலாயிற்று. அடுத்து நடக்க இருப்பது அம்மாசிக்கிழவன் வேலைதான். யாரையுமே உதவிக்கு அங்கு நிற்கும்படி கிழவன் கேட்டுக் கொள்ளவில்லை, வழக்கம் போல. காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த சடையன், சின்னையாவுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு, ஊருக்குத் தெற்கே வெகுதூரத்திலிருக்கும் மயானத்திற்குப் போனான். சுடலையில் சீமான் முதலாளி 'தகதக' வென்று எரிந்து கொண்டிருந்தார். அம்மாசிக் கிழவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான் சடையன், பரபரப்புடன். ... முதலாளியின் கால்மாட்டிற்கு நாலுபாகம் வடக்கே தள்ளி ஒரு பள்ளத்தில் கிழவன் விழுந்து கிடப்பது, அந்தச் சுடலை வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் "ஐயோ" என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான். உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி "ஐயோ" வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம். அதான் "ஐயோ" என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை. நீதிக் கதைகள்
பெரியசாமி என்பவர் ஒரு பெரிய செல்வந்தர், அவருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமண வயது வந்துவிட்டது. திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டுமென்று நினைத்தார் பெரியசாமி. கல்யாண ஊர்வலதில் யானைமீது தன் மகன் ஊர்வலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்தார். பக்கத்து ஊரில் நைனா முகமது என்றொருவர் இருந்தார். அவர் காட்டில் இருக்கும் மரங்களை வெட்டி எடுத்து வந்து வியாபாரம் செய்வார். வெட்டிய மரங்களைக் காட்டிவிருந்து எடுத்துவர ஒரு யானையை வைத்துக் கொண்டிருந்தார். அவர் யானையைக் கல்யாண ஊர்வலத்திற்குக் கேட்கலாம் என்ற எண்ணத்துடன் பெரியசாமி நைனா முகமதுவின் வீட்டிற்குச் சென்றார். "என்ன பெரியசாமி, ஏது இவ்வளவு தூரம்?" என்றார் நைனா முகமது. "என் மகன் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கிறேன். கல்யாண ஊர்வலத்திற்கு ஒரு யானை வேண்டும், அதற்காகத் தான் உன்னிடம் வந்தேன்" என்றார் பெரியசாமி. ஓ. அதற்கென்ன? கல்யாண ஊர்வலம் இரவில் தானே நடக்கும். அப்போது யானைக்கு இங்கு வேலை கிடையாது. நீ தாராளமாக யானையைக் கொண்டு செல்லலாம். ஊர்வலம் முடிந்ததும் யானையை திருப்பி அனுப்பிவிடு" என்றார் நைனா முகமது. நைனா முகமது தாம் சொன்னவாறே கல்யாண ஊர்வலத்திற்குத் தம்முடைய யானையை அனுப்பி வைத்தார். ஊர்வலம் பாதி தூரம் வத்து கொண்டிருக்கும் போது யானை மயக்கம்போட்டுக் கீழே விழுந்தது. விழுந்த பின்னர் பரிசோதித்ததில் அது இறந்து விட்டது தெரிந்தது. கல்யாண ஊர்வலத்தில் யானை இறந்து போனதற்காகப் பெரியசாமி மிகவும் வருந்தினார். நைனா முகமதுவிடம் வேறு யானை வாங்கிக் கொடுத்து விடுவதாகக் கூறினார். இல்லாவிட்டால் அவர் எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுத்து விடுவதாகக் கூறினார். நைனா முகமதுவோ, "அதெல்லாம் முடியாது. என்னுடைய யானைதான் எனக்கு வேண்டும்" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். பெரியசாமிக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. மரியாதை இராமனிடம் சென்று தம் வழக்கைக் கூறினார். பெரியசாமியின் வழக்கைக் கேட்ட மரியாதை இராமன் நைனா முகமதுவைக் கூட்டி வரச் சொன்னார். நைனா முகமது வழக்கு மன்றத்திற்கு வந்ததும், "ஏதோ எதிர்பாராத விதமாக உங்கள் யானை இறந்து போய்விட்டது. அந்த யானைக்காக நீங்கள் எவ்வளவு நஷ்ட ஈடு கேட்டாலும் பெரியசாமி கொடுக்கத் தயாராக இருக்கிறார். அல்லது வேறு ஒரு யானை வாங்கித் தரச் சொன்னாலும் வாங்கித் தரச்சம்மதிக்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று நைனா முகம்மதுவிடம் கேட்டான் மரியாதை இராமன். என்னுடைய யானைதான் எனக்கு வேண்டும் என்று மீண்டும் பிடிவாதமாகக் கூறினார் நைனா முகமது. "சரி, நீங்கள் இருவரும் நாளைய தினம் இத்த சபைக்கு வாருங்கள், என்னுடைய தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்றான் மரியாதை இராமன். நைனா முகமது சென்றவுடன் பெரியசாமியை மட்டும் தம்மிடம் அழைத்து வரச் சொன்னான் மரியாதை இராமன். அவர் வந்ததும் அவரிடம் "நாளைய தினம் குறித்த நேரத்திற்கு நீங்கள் சபைக்கு வராதீர்கள். நான் நைனா முகமதுவையே உங்கள் வீட்டுக்கு அனுப்பி உங்களைக் கூட்டி வரச் சொல்கிறேன். அவர் வரும் போது நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள பழம் பானைகளைக் கதவின் பின்னால் அடுக்கி வைத்துவிட்டுக் கதவை மூடி வைத்திருங்கள். நைனா முகம்மது கதவைத் திறந்து கொண்டு வந்ததும் பானைகள் எல்லாம் உடைத்து நொறுங்கி விடும். நீங்கள் சபைக்கு வந்து என்னுடைய பழம் பானைகள் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று உபாயம் சொல்லி அனுப்பி வைத்தான் மரியாதை இராமன். மறுநாள் பெரியசாமி குறித்த நேரத்திற்கு வழக்கு மன்றத்திற்கு வரவில்லை. மரியாதை இராமன் நைனா முகமதுவைப் பார்த்து, "நீங்களே பெரியசாமி விட்டுக்குப் போய் அவரைக் கையுடன் கூட்டி வாருங்கள்" என்று அனுப்பினான்.
பெரியவனே... ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான். அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்... அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்... புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள். கோபம் எழுந்தது. வேகமாய் நடந்து வந்தவள் இவனை வெறித்துப் பார்த்தாள். இவன் முகம் கோபத்தில் இருப்பதை பார்த்தும் அவளுக்கும் கோபமாகியது. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் ஒனக்குப் புரியமாட்டங்குது, கல்யாணம் காட்சின்னு பண்ணி எப்படி குடும்பம் நடத்தப் போறேன்னு தெரியல போ... அந்த தாழைக்குடி செல்லியம்மன்தான் ஒன்னக் காப்பாத்தனும் இவளுக்கு மேலும் கோபம் அதிகமாகியது. சின்னவன் வயல் பக்கம் போய் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்திருந்தான். படிச்சிட்டா போதுமா? எல்லாமும் தான் கத்துக்கனும் ராசா? வயலப் போயிப் பாரு தண்ணியில்லாம? எல்லாம் கருக்கிட்டு இருக்கு சற்று அழுத்தமாகவே இதைச் சொன்னாள்... குரல் கம்மியிருந்தது. அந்தி குறைந்து கொண்டிருந்தது. உங்கப்பனைப் பாரு ஒண்டியா கெடந்து தடுமாறுராரு... ஊருல்ல.. இரத்தத்தை மாத்தி தண்ணிய பாய்ச்சுறாங்க. நீங்க கொஞ்சம் அவருக்கு ஒத்தாசையா இருக்கலாம்முல்ல சமீப காலமாக அவள் பேச்சு இவனுக்கு கோபத்தைத் தவிர வேறெதுவும் தருவதில்லை. கொஞ்ச நாளாவே அவள் பேச்சு முற்றிலுமாக பிடிப்பதில்லை... அம்மாவை... சின்னவன் சத்தமிட்டு அழைத்தான். இவன் வயல் பக்கம் வேகமாக நடக்கத் தொடங்கினான். பயிரை காப்பாற்ற ஆற்றிலிருந்த இஞ்சின் வைத்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆற்று மடுவில் தேங்கி கிடக்கும் நீரை இப்படித்தான் கொண்டு வர முடியும். அதிகம் நிலம் உள்ளவர்கள் மட்டுமே இஞ்சின் வைத்திருக்க முடிந்தது. சிறு விவசாயிகள் இத்தனை காலமும் மழையையும், ஆற்று நீரையும் நம்பிதான் சாகுபடி செய்தார்கள். ஆனால் இன்று பருவம் தவறிவிட்டது. மழை காலங்களில், பெய்ய வேண்டிய மழை எங்கே போனது. மனிதர்கள் மழையை விரட்டினார்கள். இந்த பிரதேசம் எங்கும் காடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் இரண்டு பெரும் புயல்கள் அழித்தன... என்றால் மனிதர்கள் அவர்கள் பங்குக்கு வெட்டினார்கள். பெரும் மரங்களை வீழ்த்தினார்கள். அப்பா பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு மழை கால இரவில் இனிமே மழை தண்ணியெல்லாம் சரிபட்டு வராது என்றது இதை தானோ...? அப்பா தெருமுனையில் இருக்கும் மதகில் அடிக்கடி உட்கார்ந்து வானத்தை பார்ப்பது ... சுருட்டு புகைக்குள் ஒளிந்து போவது... துளிர்விடும் மூங்கில் குருத்தை பார்த்துக் கொண்டிருப்பது... மாட்டின் கழுத்தை வருடி கொடுப்பது... எல்லாம் எதற்காக? என்று நினைத்துக் கொண்டான். சூரியனை பார்த்தாள் வட்டமாய் சுருங்கிக் கொண்டிருந்தது... வரப்பில் நடக்கையில் பொறுக்குகள் குத்தின... நடக்கையில் ஏற்பட்ட அந்த துள்ளல் எதனால்? சூரிய காட்சி ஏற்படுத்திய ஆனந்தமா? இல்லை எதிரே புல் அறுத்துக் கொண்டு வரும் அமுதா ஏற்படுத்திய கிளுகிளுப்பா...? அமுதா இவனோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். இவனுக்கு அடிக்கடி வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பாள். நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைத்து இருந்தால் இவள் வாழ்க்கை மாறியிருக்கக் கூடும். இவள் அப்பா வேளாங்கன்னிக்கு போனவர் திரும்பி வரவில்லை. தொலைந்து போயிருக்க வேண்டும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். குடும்ப வறுமையை போக்க... அம்மாவோடு வயல் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்னும் இல்வாழ்க்கை குறித்து சிந்தித்து இருக்கவில்லை போலும். இவள் வயசுக்கு இளைய பெண்கள் எல்லாம் திருமணம் முடித்துப் போய் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவள் மட்டும் தன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டிருக்கிறாள். இவனோடு கொஞ்சம் கனிவாக பேசுவாள் மற்ற ஆம்பளைகளோடு அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை. இவனோடு சிநேகம் கொள்வதில் அவளுக்கும் விருப்பம் தான் என்பதை பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறாள். பெரிய புல் கட்டினை மிக அசாத்தியமாக தூக்கிக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவள் இன்று ... ந்தே... என்றாள். இவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கமுடியாத சிரிப்பு... ஹ"... ஹ".... ஹ"... பல்லு மட்டும்தான் இளிக்க காத்தருக்கே வேற என்னச் செய்ய சொல்றே அமுதா... ம் என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். நிறைய பேச ஆசைதான். போய்க் கொண்டிருக்கிறாளே என்ன செய்ய...? கொஞ்ச நேரம்... நடக்கும் பொழுது அவள் பின்னழகு அசைவதை ரசித்தான். சூரியன் மேலும் சுருங்கி சிறுவட்டமாய்... ஒளிர்ந்து கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் மறைந்து விடலாம். கடந்து சென்ற பின்பு அவள் குறித்தான சிலிர்ப்புக்களை மீண்டும் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்ற பிறகு வயல்வெளி மிகுந்த வெக்கையை எழுப்பியது. இந்த கார்த்திகை மாதத்தை கால் கோடை என்பார்கள். அது எல்லாம் பொய் ஆகி முழு கோடை காலமாய ஆகிவிட்டிருக்கிறது.. பெய்ய வேண்டிய மழை யெல்லாம் எங்கே போயிற்று...? ஒரு மாபெரும் தோட்டம் தொடங்கப்பட்டு விட்டது... நட்ட பயிர் வளராமல்... இட்ட விதை முளைக்காமல்... வயல்வெளி பச்சை நிறத்தை இழந்து... மனிதர்கள் மகசூலை இழந்து... எவ்வளவு காலம் வாழ்வது? மனம் இறுக்கம் அடைந்து வரப்பில் உட்கார்ந்தான். மனம் எழுந்து பின்னோக்கி ஓடியது. இரவில் தெரு பெரிசுகளும், அப்பாவும் கதை கதையாக சொல்வார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ஊரில் எப்படியெல்லாம் மழை பெய்தது. பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது இடைவிடாத மழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வயல்களில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் வயற்காடு முழுமையும் நீர்பரப்பு சூழ்ந்து கிடக்கிறது. தெருவில் வெள்ளம்... சாலையில் வெள்ளம்... மழை வலுக்கத் தொடங்கினால் மனிதர்கள் எல்லாருக்கும் நடுக்கம் எடுக்கத் தொடங்கி விடும். ஆற்றில் கூடி கரைகளை பலப்படுத்திக் கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பார்கள். காவல் தெய்வம் ஈட்டி மாணிக்கத்துக்கு முக்கால பூசையும், சிறப்பு பூசையும் செய்வார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பது என்பது இங்குள்ள தொன்மையான மரபு. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளம் எடுக்கும் காலங்களில் பறையடித்தே... வெள்ளம் குறைத்தோம்" என்பார்கள். ஆடி மாதம் வரை நீர் வற்றாது குளங்களில் ஊரிலிருக்கும் ஐந்து குளங்களும் வற்றாத ஜீவநதியாகவே கருதினார்கள். ஆற்றில் படுகையில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருப்பார்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். படுகையில் நிறைந்திருக்கும் வண்டலில் அப்படியொரு உரம்... வண்டி வண்டியாக வெட்டுவார்கள். வெளியூர் வியாபாரிகள் வந்து மலிவு விலைக்கு வாங்கிப் போவார்கள். இப்பொழுது ஆற்றுப் படுகையில் காரை செடிகளும் கருவையும் வளர்ந்து கிடக்கிறது. மக்கள் அதை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். குறுவைக்கான வேலைகள் வைகாசியிலேயே தொடங்கினால்... ஆடியில் விதையிடல் புரட்டாசியில் அறுவடை... பிறகு சம்பா வேலைத் தொடங்கும்... தையில் அறுவடை தாளடிப் போட்டால் பங்குனியில் அறுவடை... "தாளடி" போட விரும்பாதவர்கள் உளுந்து பயிறு விதைப்பார்கள். இப்படியான தொடர் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரையில் தான் ஊர் கோவில் திருவிழா இந்த ஒரு மாதம் மட்டும் தான்... கூத்து கும்மாளம்... ஓய்வு என்றும் கழியும்... மற்ற நாட்கள் இடைவிடாத உழைப்பு.... சூரியன் மறைந்து விட்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் நிரம்பியது. பூச்சிகள் ஓசை காற்றில் கலந்தது. வானத்தைப் பார்த்தான் நிலவு கிழக்கே தெரிந்தது. பௌர்ணமி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இன்று நிச்சயம் முழு நிலவு வரும். பனைமரங்கள் பெரிய வாய்க்கால் கரையில் வரிசையாய் ஒழுங்கு குறையாமல் நிற்பது இவனுக்கு பிடிக்கும். காற்றில் லேசாக தலையை ஆட்டின. வயல்வெளிகளை பார்த்தான்... பச்சை நிறம் மங்கிய நிறத்தில் பழுப்பு நிறம்... படர்ந்து கொண்டிருந்தது. பயிர்கள் மிகுந்த துயரத்தோடு கதறிக் கொண்டிருப்பது போல தோன்றியது. மனசு வலிக்கத் தொடங்கியது. வரப்பிலிருந்து வயலில் இறங்கினான். பாளம் பாளமாய் வெடித்து பொறுக்குகள்.. உடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டே நாள் இது நீடிக்குமானால் சாம்பல் தான் மிஞ்சும் தங்களுடைய ஆறு "மா"வும்... கருகிவிடதான் காத்திருக்கிறதா? இது நாள்வரை வசதியானவர்கள் ஆற்றிலிருந்து நீர்க் கொண்டு வருகிறார்கள். நம்ம கதி? பயிர்கள் மிகுந்த கவலையோடு வானத்தைப் பார்த்து நீயாவது கருணை செய் வேண்டுவது என்பது போல... தோன்றியது.... கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும் உள்ளேயிருந்து கதிர் வந்துவிடும். கதிர் விடும் பக்குவத்தோடு நிற்கிறது. நடக்கத் தொடங்கினான் வயலுக்கு வரும் கண்ணியின் கரையில் நடந்தான். அது பெரிய வாக்காலில் கலந்தது. அதிலிருந்து பிரிந்து தான்... வயலுக்கு பாய்ச்சல். இதுதான் இந்த பக்கத்துல வயல்களுக்கு பாசன கண்ணி. பெரிய வாய்க்கால் வற்றி ஈரம் உலர்ந்து விட்டது... தலைக்கு மேலேயிருந்து ஏதோ ஒலி கேட்டதும் வானத்தைப் பார்த்தான். மடையான்மகள் அணிவகுத்து பறந்தன. பெரிய வாக்காலிலிருந்து பிரியும் இன்னொரு கண்ணி" பெரிய குளத்துக்கு நீர் விடவும். அதில் வழியில் இருக்கும் வயல்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது. இப்போது அவன் பெரிய குளத்துக்கு போகும் கன்னிக்கரையில் நடந்தான். குளத்தை மூன்று பக்கமும் சுற்றி நீண்ட திடல்... அதை சூழ்ந்துள்ள மரங்கள்.... மரத்தில் இரவை கழிக்க கொக்குகளும், மடையான்களும் உட்கார்ந்திருந்தன. ஒரு கொன்னை மரத்தில் கொக்குகள் அடர்த்தியாய் உட்கார்ந்து இருப்பது ஒரு விதமான லகிரியை ஏற்படுத்துகிறது. குளத்தினை பார்த்தான். சலனம் அடையாள நீர்பரப்பு. அல்லி செடிகள் படர்ந்து கிடக்கின்றன. அல்லி பூக்கள் இரவில்தான் பூக்கும் என்பார்கள். விண்மீன் ஒளியில் தாளைகள் மலரும் என்றும் சொல்வார்கள். வெய்யிலில் உலர்ந்திருந்த பூக்கள்... லேசாக இதழ் விரிக்கத் தொடங்கியிருந்து, கண்ணி குளத்தோடு நிறையும் இடத்தில் ஒதியன் மரம் நின்றது. இலைகள் உதிர்ந்து வெறும் உடம்பாய் காட்சியளித்தது. மரத்தை பார்த்த அடுத்த கணமே சட்டென்று அவனுக்குள் வெளிச்ச புள்ளிகள் மின்னின. மீண்டும் ஒரு தடவை பார்த்தான். வேகமாக நடக்கத் தொடங்கினான். இருட்டு பூசினாற் போலிருந்தது. நிலவு கிழக்கில் லேசான வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. பூசினாற் போலிருந்த இருட்டில் வெளிச்சம் குறைவான நிலவின் ஒளி இணையும் போது ஒரு விதமான மங்கிய ஒளியும் அல்லாத இருட்டும் அல்லாத ஒரு விதமான வெளிச்சம் நிரம்பியது. ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி வந்து விட்டது. ஏழெட்டு மாடுகள் பலியாகிவிட்டது. இருக்கின்ற மாட்டை காப்பாற்ற வேண்டும். மாடுகளை சிவன்கோவில் குளத்தில் வண்டல் கும்பியல் நிறுத்தியிருக்கிறார்கள். கால்களில் புண்களாகி அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஆடுகள் இந்த நோய் கண்ட அடுத்த மணி நேரத்துக்குள்ளே உயிரோடு கறிகடைக்காரனிடம் வந்து விட வேண்டும். இது போன்ற மாதத்தில் நோய் வருவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் போட்டிருந்தால் தடுத்து இருக்கலாம். தென்னந்தோப்பில் நுழைந்தான். நீர் பற்றாக்குறையால் மரங்கள் காய்ந்து வதங்கியிருக்கிறது. தேங்காய் மகசூல் மொத்தமும் காலி. ஆசையாக அம்மா போட்டிருந்த டிசம்பர் பூக்கள் செடிகள் இனி பூக்காமல் போகலாம். ஏற்றம் இறைக்க தேவையான மிதி மரம், பாலாடை மரம், சால், ஏற்ற மரம் போன்றவை. மூங்கில் கொட்டகையில் இருக்கிறது. அப்பா கொண்டு வந்து இங்க வைத்திருக்கிறார். இவையனைத்தையும் மிக சிரமத்தோடு, இரண்டு தோளிலும் மிகுந்த நுட்பத்தோடு தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்... நிலவு அடர்த்தியான வெளிச்சத்தை பரப்பத் தொடங்கியது. அந்த பெரிய குளத்து ஒதியன் மரத்தில் இவற்றை பொருத்துவதற்கு கயிறு வேண்டும். கைக்கு ஒரு அரிவாள்... மண் எடுத்துப் போட மண்வெட்டி, இதைவிட வயிற்றுக்கு கொஞ்சம் சோறு....? குளத்தில் மரத்துக்கு கீழே போட்டான். நிலவு நிர்மல்யமான முறையில் ஒளிர்ந்தது. மணி ஒன்பதாகியிருந்தது, கார குழம்பு வைத்திருந்தாள் அம்மா. சாப்பிட பிடிக்கவில்லை. கவனம் முழுவதும் சாப்பாட்டிலிருந்து சிதைந்திருந்தது. சமயலறையில் கிடந்த அரிவாளை எடுத்து கொல்லைப்புறத்தில் போட்டான். ஒரு முடித்துக் கயிறு மாட்டு கொட்டகையில் சொருகியிருந்தது. அப்பா திண்ணையில் பேசிக் கொண்டிருக்கிறார். முகம் அதிகமான சோர்விலும், கவலையிலும் வாடியிருந்தன. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எந்த வருஷமும் சாகுபடியை நம்பி பயனில்லை. அம்மா கதவு ஓரத்தில் எதிர் வார்த்தை செய்கிறாள். வேற என்னதான் செய்யுறது. வித்துப்புடலாம்...? ஆமா ரோட்டோரமா இருந்தாலாவது மனை போடுறவங்க யாராவது வாங்கிட்டு பேயிடுவாங்க தண்ணியும் பாயுமா? வெள்ளமும் வழியுமா? இருக்கிற நிலத்தை யாரு வாங்குவா சொல்லு? அப்பா மேலும் பேச விரும்பாமல் அமைதியானார். வெற்றிலை பொட்டலத்தை அப்பாவிடம் நீட்டினாள். இவற்றையெல்லாம் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்... சின்னவன் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தான். கயிறு, அரிவாள், மண்வெட்டியோடு பெரியகுளம் நோக்கி நடந்தான். அப்பாவும் அம்மாவும் மேலும் பேசத் தொடங்கினார்கள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருப்பது தவிர வேறு என்னதான் செய்வது. முப்போகம் வெளைஞ்ச பூமி தரிசா போய்கிட்டு இருக்கிறதை நினைச்சா வயிறு எரியுது. "என்ன பண்றது", "யார்கிட்டேயாவது இஞ்சின் கேட்டிருக்கீங்களா", "ம், கேட்காத ஆளில்லை. நாளைக்கு இன்னிக்கின்னு சொல்வாங்களே தவிர ஒருத்தரும் தரமாட்டேங்கறாங்க. "ஒரு நாலு மணிநேரம் ஓடுனாப் போதும் கதிர் வந்துடும்.", "ஆமாண்டி... உயிர் இருந்தா போருமுன்னு நினைக்கிறேன். கதிர்பத்தி பேசுறே... கோபம் வந்தது அப்பாவுக்கு. அம்மா பெரிய மகனைப் பற்றி குறைச் சொல்லத் தொடங்கினாள். சொல்லி முடித்த பிறகு... ஊர் கதைகள் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இடைவிடாது தொடர்ந்து பேசினார்கள். நீண்டு கொண்டே போயிற்று பேச்சு. சின்னவன் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு... படுத்துவிட்டான். "நேரமாயிடுச்சு" படுப்போம் என்றார் அப்பா. "சீக்கிரம் எழுந்திருக்கனும் அம்மா சொல்லியபடி பாயி" - ல் சாய்ந்தாள். காலை விடிந்து விட்டிருந்தது. சின்னவன் எழுந்தான். அண்ணனை காணோம். திண்ணைக்கு வந்தான். அப்பாவும் அம்மாவும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். அம்மா என்று சத்தமிட்டான். அப்பாவும் அம்மாவும் துடித்து பிடித்து எழுந்தார்கள். அப்பா முகத்தை கழுவிக் கொண்டு வயல் பக்கம் நடந்தார். அம்மா பெரியவன் எங்கே காணோம் என்று சின்னவனிடம் கேட்டாள் தெரியல என்று கையை விரித்தான். அப்பா வரப்பில் நடந்து... தன் வயலின் தலைமேடு பக்கம் வந்தபோது காலை நேரத்து குளிர்ந்த காற்றில் மண் மனம் நாசியை தாக்கியது. அப்பாவுக்குள் ஏதோ ஒளிர்ந்தது. திடீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. வயல்வெளியில் நிறைந்திருந்த குளிர் தன்மை நீர்வரத்தினை உணர்த்தியது. வயலில் இறங்கி பார்த்தவருக்குள் இன்ப அதிர்ச்சி... கண்ணியில் நீர் ஓடிவரும் சப்தம். காலை நேரத்தில் தவளைகள் சத்தமிட்டன. மகிழ்ச்சி பெருக்கெடுக்க... நீர் கண்ட ஆனந்தம்! கண்ணியை நோட்டமிட்டவர் எதேச்சையாக வடக்கே திரும்பினார். பெரிய குளத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருப்பது யார்? நம்ப முடியவில்லை... பெரியவனே தான்... நிலத்தைப் போலவே அப்பாவுக்கும் "கண்கள் ஈரமாகியது".
ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன்.அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். "நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்" என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான். அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின.மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன. பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான்.கிழப்பேய் ஒன்று, "ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்" என்று கெஞ்சியது.இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், "நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்" என்று கதை அளந்தான் அவன்."ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன."கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்" என்றான் அவன்.கிழப்பேய் அவனைப் பார்த்து, "ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?" என்று கேட்டது."ஐம்பது மூட்டை எள்?" என்றான் அவன்."ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்" என்று கெஞ்சியது அது.உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்" என்றான் அவன்."எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்" என்றது அந்தப் பேய்.மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான்.அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன.பேய்களைப் பார்த்து அவன், "சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்" என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான்.நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது."சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டது அது.நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்."நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது" என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?" என்று கேட்டது."அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்" என்றது ஒரு பேய்."போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்" என்று புறப்பட்டது புதுப்பேய்."வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்" என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது.புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன்.தன் வேலைக்காரனைப் பார்த்து, "டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்" என்று உரத்த குரலில் கத்தினான் அவன்.பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. "ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?" என்று குழம்பியது அது.மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான்.அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சியது.தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், "என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடுன் கத்தினான்.இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, "எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன" என்று பொய் சொன்னது."எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று இடிக்குரலில் முழங்கினான் அவன்."பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?" எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்" என்று நடுங்கியபடியே கேட்டது அது."இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு." என்று விரட்டினான் அவன்.எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது.அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது."என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?" என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்."உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது" என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்."அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?" என்று கேட்டது ஒரு கிழப் பேய்."நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்" என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்."என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது" என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன."தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது" என்று மகிழ்ந்தான் அவன்.
முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார். ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார். இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமந்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார். உடனே அவர் எழுந்து " தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார். " இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா?" என்று தத்துவஞானி கேட்டார். " சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் " என்றார் முல்லா. " என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் " தத்துவ ஞானி கேட்டார். " நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் " என்றார். " அதன் விளைவு என்ன?" என்று தத்துவ ஞானி கேட்டார் " எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் " என்று சொன்னார். இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.
பெரியவனே... ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான். அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்... அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்... புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள். கோபம் எழுந்தது. வேகமாய் நடந்து வந்தவள் இவனை வெறித்துப் பார்த்தாள். இவன் முகம் கோபத்தில் இருப்பதை பார்த்தும் அவளுக்கும் கோபமாகியது. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் ஒனக்குப் புரியமாட்டங்குது, கல்யாணம் காட்சின்னு பண்ணி எப்படி குடும்பம் நடத்தப் போறேன்னு தெரியல போ... அந்த தாழைக்குடி செல்லியம்மன்தான் ஒன்னக் காப்பாத்தனும் இவளுக்கு மேலும் கோபம் அதிகமாகியது. சின்னவன் வயல் பக்கம் போய் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்திருந்தான். படிச்சிட்டா போதுமா? எல்லாமும் தான் கத்துக்கனும் ராசா? வயலப் போயிப் பாரு தண்ணியில்லாம? எல்லாம் கருக்கிட்டு இருக்கு சற்று அழுத்தமாகவே இதைச் சொன்னாள்... குரல் கம்மியிருந்தது. அந்தி குறைந்து கொண்டிருந்தது. உங்கப்பனைப் பாரு ஒண்டியா கெடந்து தடுமாறுராரு... ஊருல்ல.. இரத்தத்தை மாத்தி தண்ணிய பாய்ச்சுறாங்க. நீங்க கொஞ்சம் அவருக்கு ஒத்தாசையா இருக்கலாம்முல்ல சமீப காலமாக அவள் பேச்சு இவனுக்கு கோபத்தைத் தவிர வேறெதுவும் தருவதில்லை. கொஞ்ச நாளாவே அவள் பேச்சு முற்றிலுமாக பிடிப்பதில்லை... அம்மாவை... சின்னவன் சத்தமிட்டு அழைத்தான். இவன் வயல் பக்கம் வேகமாக நடக்கத் தொடங்கினான். பயிரை காப்பாற்ற ஆற்றிலிருந்த இஞ்சின் வைத்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆற்று மடுவில் தேங்கி கிடக்கும் நீரை இப்படித்தான் கொண்டு வர முடியும். அதிகம் நிலம் உள்ளவர்கள் மட்டுமே இஞ்சின் வைத்திருக்க முடிந்தது. சிறு விவசாயிகள் இத்தனை காலமும் மழையையும், ஆற்று நீரையும் நம்பிதான் சாகுபடி செய்தார்கள். ஆனால் இன்று பருவம் தவறிவிட்டது. மழை காலங்களில், பெய்ய வேண்டிய மழை எங்கே போனது. மனிதர்கள் மழையை விரட்டினார்கள். இந்த பிரதேசம் எங்கும் காடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் இரண்டு பெரும் புயல்கள் அழித்தன... என்றால் மனிதர்கள் அவர்கள் பங்குக்கு வெட்டினார்கள். பெரும் மரங்களை வீழ்த்தினார்கள். அப்பா பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு மழை கால இரவில் இனிமே மழை தண்ணியெல்லாம் சரிபட்டு வராது என்றது இதை தானோ...? அப்பா தெருமுனையில் இருக்கும் மதகில் அடிக்கடி உட்கார்ந்து வானத்தை பார்ப்பது ... சுருட்டு புகைக்குள் ஒளிந்து போவது... துளிர்விடும் மூங்கில் குருத்தை பார்த்துக் கொண்டிருப்பது... மாட்டின் கழுத்தை வருடி கொடுப்பது... எல்லாம் எதற்காக? என்று நினைத்துக் கொண்டான். சூரியனை பார்த்தாள் வட்டமாய் சுருங்கிக் கொண்டிருந்தது... வரப்பில் நடக்கையில் பொறுக்குகள் குத்தின... நடக்கையில் ஏற்பட்ட அந்த துள்ளல் எதனால்? சூரிய காட்சி ஏற்படுத்திய ஆனந்தமா? இல்லை எதிரே புல் அறுத்துக் கொண்டு வரும் அமுதா ஏற்படுத்திய கிளுகிளுப்பா...? அமுதா இவனோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். இவனுக்கு அடிக்கடி வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பாள். நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைத்து இருந்தால் இவள் வாழ்க்கை மாறியிருக்கக் கூடும். இவள் அப்பா வேளாங்கன்னிக்கு போனவர் திரும்பி வரவில்லை. தொலைந்து போயிருக்க வேண்டும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். குடும்ப வறுமையை போக்க... அம்மாவோடு வயல் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்னும் இல்வாழ்க்கை குறித்து சிந்தித்து இருக்கவில்லை போலும். இவள் வயசுக்கு இளைய பெண்கள் எல்லாம் திருமணம் முடித்துப் போய் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவள் மட்டும் தன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டிருக்கிறாள். இவனோடு கொஞ்சம் கனிவாக பேசுவாள் மற்ற ஆம்பளைகளோடு அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை. இவனோடு சிநேகம் கொள்வதில் அவளுக்கும் விருப்பம் தான் என்பதை பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறாள். பெரிய புல் கட்டினை மிக அசாத்தியமாக தூக்கிக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவள் இன்று ... ந்தே... என்றாள். இவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கமுடியாத சிரிப்பு... ஹ’... ஹ’.... ஹ’... பல்லு மட்டும்தான் இளிக்க காத்தருக்கே வேற என்னச் செய்ய சொல்றே அமுதா... ம் என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். நிறைய பேச ஆசைதான். போய்க் கொண்டிருக்கிறாளே என்ன செய்ய...? கொஞ்ச நேரம்... நடக்கும் பொழுது அவள் பின்னழகு அசைவதை ரசித்தான். சூரியன் மேலும் சுருங்கி சிறுவட்டமாய்... ஒளிர்ந்து கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் மறைந்து விடலாம். கடந்து சென்ற பின்பு அவள் குறித்தான சிலிர்ப்புக்களை மீண்டும் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்ற பிறகு வயல்வெளி மிகுந்த வெக்கையை எழுப்பியது. இந்த கார்த்திகை மாதத்தை கால் கோடை என்பார்கள். அது எல்லாம் பொய் ஆகி முழு கோடை காலமாய ஆகிவிட்டிருக்கிறது.. பெய்ய வேண்டிய மழை யெல்லாம் எங்கே போயிற்று...? ஒரு மாபெரும் தோட்டம் தொடங்கப்பட்டு விட்டது... நட்ட பயிர் வளராமல்... இட்ட விதை முளைக்காமல்... வயல்வெளி பச்சை நிறத்தை இழந்து... மனிதர்கள் மகசூலை இழந்து... எவ்வளவு காலம் வாழ்வது? மனம் இறுக்கம் அடைந்து வரப்பில் உட்கார்ந்தான். மனம் எழுந்து பின்னோக்கி ஓடியது. இரவில் தெரு பெரிசுகளும், அப்பாவும் கதை கதையாக சொல்வார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ஊரில் எப்படியெல்லாம் மழை பெய்தது. பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது இடைவிடாத மழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வயல்களில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் வயற்காடு முழுமையும் நீர்பரப்பு சூழ்ந்து கிடக்கிறது. தெருவில் வெள்ளம்... சாலையில் வெள்ளம்... மழை வலுக்கத் தொடங்கினால் மனிதர்கள் எல்லாருக்கும் நடுக்கம் எடுக்கத் தொடங்கி விடும். ஆற்றில் கூடி கரைகளை பலப்படுத்திக் கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பார்கள். காவல் தெய்வம் ஈட்டி மாணிக்கத்துக்கு முக்கால பூசையும், சிறப்பு பூசையும் செய்வார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பது என்பது இங்குள்ள தொன்மையான மரபு. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளம் எடுக்கும் காலங்களில் பறையடித்தே... வெள்ளம் குறைத்தோம்" என்பார்கள். ஆடி மாதம் வரை நீர் வற்றாது குளங்களில் ஊரிலிருக்கும் ஐந்து குளங்களும் வற்றாத ஜீவநதியாகவே கருதினார்கள். ஆற்றில் படுகையில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருப்பார்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். படுகையில் நிறைந்திருக்கும் வண்டலில் அப்படியொரு உரம்... வண்டி வண்டியாக வெட்டுவார்கள். வெளியூர் வியாபாரிகள் வந்து மலிவு விலைக்கு வாங்கிப் போவார்கள். இப்பொழுது ஆற்றுப் படுகையில் காரை செடிகளும் கருவையும் வளர்ந்து கிடக்கிறது. மக்கள் அதை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். குறுவைக்கான வேலைகள் வைகாசியிலேயே தொடங்கினால்... ஆடியில் விதையிடல் புரட்டாசியில் அறுவடை... பிறகு சம்பா வேலைத் தொடங்கும்... தையில் அறுவடை தாளடிப் போட்டால் பங்குனியில் அறுவடை... 'தாளடி' போட விரும்பாதவர்கள் உளுந்து பயிறு விதைப்பார்கள். இப்படியான தொடர் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரையில் தான் ஊர் கோவில் திருவிழா இந்த ஒரு மாதம் மட்டும் தான்... கூத்து கும்மாளம்... ஓய்வு என்றும் கழியும்... மற்ற நாட்கள் இடைவிடாத உழைப்பு.... சூரியன் மறைந்து விட்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் நிரம்பியது. பூச்சிகள் ஓசை காற்றில் கலந்தது. வானத்தைப் பார்த்தான் நிலவு கிழக்கே தெரிந்தது. பௌர்ணமி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இன்று நிச்சயம் முழு நிலவு வரும். பனைமரங்கள் பெரிய வாய்க்கால் கரையில் வரிசையாய் ஒழுங்கு குறையாமல் நிற்பது இவனுக்கு பிடிக்கும். காற்றில் லேசாக தலையை ஆட்டின. வயல்வெளிகளை பார்த்தான்... பச்சை நிறம் மங்கிய நிறத்தில் பழுப்பு நிறம்... படர்ந்து கொண்டிருந்தது. பயிர்கள் மிகுந்த துயரத்தோடு கதறிக் கொண்டிருப்பது போல தோன்றியது. மனசு வலிக்கத் தொடங்கியது. வரப்பிலிருந்து வயலில் இறங்கினான். பாளம் பாளமாய் வெடித்து பொறுக்குகள்.. உடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டே நாள் இது நீடிக்குமானால் சாம்பல் தான் மிஞ்சும் தங்களுடைய ஆறு 'மா'வும்... கருகிவிடதான் காத்திருக்கிறதா? இது நாள்வரை வசதியானவர்கள் ஆற்றிலிருந்து நீர்க் கொண்டு வருகிறார்கள். நம்ம கதி? பயிர்கள் மிகுந்த கவலையோடு வானத்தைப் பார்த்து நீயாவது கருணை செய் வேண்டுவது என்பது போல... தோன்றியது.... கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும் உள்ளேயிருந்து கதிர் வந்துவிடும். கதிர் விடும் பக்குவத்தோடு நிற்கிறது. நடக்கத் தொடங்கினான் வயலுக்கு வரும் கண்ணியின் கரையில் நடந்தான். அது பெரிய வாக்காலில் கலந்தது. அதிலிருந்து பிரிந்து தான்... வயலுக்கு பாய்ச்சல். இதுதான் இந்த பக்கத்துல வயல்களுக்கு பாசன கண்ணி. பெரிய வாய்க்கால் வற்றி ஈரம் உலர்ந்து விட்டது... தலைக்கு மேலேயிருந்து ஏதோ ஒலி கேட்டதும் வானத்தைப் பார்த்தான். மடையான்மகள் அணிவகுத்து பறந்தன. பெரிய வாக்காலிலிருந்து பிரியும் இன்னொரு கண்ணி' பெரிய குளத்துக்கு நீர் விடவும். அதில் வழியில் இருக்கும் வயல்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது. இப்போது அவன் பெரிய குளத்துக்கு போகும் கன்னிக்கரையில் நடந்தான். குளத்தை மூன்று பக்கமும் சுற்றி நீண்ட திடல்... அதை சூழ்ந்துள்ள மரங்கள்.... மரத்தில் இரவை கழிக்க கொக்குகளும், மடையான்களும் உட்கார்ந்திருந்தன. ஒரு கொன்னை மரத்தில் கொக்குகள் அடர்த்தியாய் உட்கார்ந்து இருப்பது ஒரு விதமான லகிரியை ஏற்படுத்துகிறது. குளத்தினை பார்த்தான். சலனம் அடையாள நீர்பரப்பு. அல்லி செடிகள் படர்ந்து கிடக்கின்றன. அல்லி பூக்கள் இரவில்தான் பூக்கும் என்பார்கள். விண்மீன் ஒளியில் தாளைகள் மலரும் என்றும் சொல்வார்கள். வெய்யிலில் உலர்ந்திருந்த பூக்கள்... லேசாக இதழ் விரிக்கத் தொடங்கியிருந்து, கண்ணி குளத்தோடு நிறையும் இடத்தில் ஒதியன் மரம் நின்றது. இலைகள் உதிர்ந்து வெறும் உடம்பாய் காட்சியளித்தது. மரத்தை பார்த்த அடுத்த கணமே சட்டென்று அவனுக்குள் வெளிச்ச புள்ளிகள் மின்னின. மீண்டும் ஒரு தடவை பார்த்தான். வேகமாக நடக்கத் தொடங்கினான். இருட்டு பூசினாற் போலிருந்தது. நிலவு கிழக்கில் லேசான வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. பூசினாற் போலிருந்த இருட்டில் வெளிச்சம் குறைவான நிலவின் ஒளி இணையும் போது ஒரு விதமான மங்கிய ஒளியும் அல்லாத இருட்டும் அல்லாத ஒரு விதமான வெளிச்சம் நிரம்பியது. ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி வந்து விட்டது. ஏழெட்டு மாடுகள் பலியாகிவிட்டது. இருக்கின்ற மாட்டை காப்பாற்ற வேண்டும். மாடுகளை சிவன்கோவில் குளத்தில் வண்டல் கும்பியல் நிறுத்தியிருக்கிறார்கள். கால்களில் புண்களாகி அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஆடுகள் இந்த நோய் கண்ட அடுத்த மணி நேரத்துக்குள்ளே உயிரோடு கறிகடைக்காரனிடம் வந்து விட வேண்டும். இது போன்ற மாதத்தில் நோய் வருவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் போட்டிருந்தால் தடுத்து இருக்கலாம். தென்னந்தோப்பில் நுழைந்தான். நீர் பற்றாக்குறையால் மரங்கள் காய்ந்து வதங்கியிருக்கிறது. தேங்காய் மகசூல் மொத்தமும் காலி. ஆசையாக அம்மா போட்டிருந்த டிசம்பர் பூக்கள் செடிகள் இனி பூக்காமல் போகலாம். ஏற்றம் இறைக்க தேவையான மிதி மரம், பாலாடை மரம், சால், ஏற்ற மரம் போன்றவை. மூங்கில் கொட்டகையில் இருக்கிறது. அப்பா கொண்டு வந்து இங்க வைத்திருக்கிறார். இவையனைத்தையும் மிக சிரமத்தோடு, இரண்டு தோளிலும் மிகுந்த நுட்பத்தோடு தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்... நிலவு அடர்த்தியான வெளிச்சத்தை பரப்பத் தொடங்கியது. அந்த பெரிய குளத்து ஒதியன் மரத்தில் இவற்றை பொருத்துவதற்கு கயிறு வேண்டும். கைக்கு ஒரு அரிவாள்... மண் எடுத்துப் போட மண்வெட்டி, இதைவிட வயிற்றுக்கு கொஞ்சம் சோறு....? குளத்தில் மரத்துக்கு கீழே போட்டான். நிலவு நிர்மல்யமான முறையில் ஒளிர்ந்தது. மணி ஒன்பதாகியிருந்தது, கார குழம்பு வைத்திருந்தாள் அம்மா. சாப்பிட பிடிக்கவில்லை. கவனம் முழுவதும் சாப்பாட்டிலிருந்து சிதைந்திருந்தது. சமயலறையில் கிடந்த அரிவாளை எடுத்து கொல்லைப்புறத்தில் போட்டான். ஒரு முடித்துக் கயிறு மாட்டு கொட்டகையில் சொருகியிருந்தது. அப்பா திண்ணையில் பேசிக் கொண்டிருக்கிறார். முகம் அதிகமான சோர்விலும், கவலையிலும் வாடியிருந்தன. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எந்த வருஷமும் சாகுபடியை நம்பி பயனில்லை. அம்மா கதவு ஓரத்தில் எதிர் வார்த்தை செய்கிறாள். வேற என்னதான் செய்யுறது. வித்துப்புடலாம்...? ஆமா ரோட்டோரமா இருந்தாலாவது மனை போடுறவங்க யாராவது வாங்கிட்டு பேயிடுவாங்க தண்ணியும் பாயுமா? வெள்ளமும் வழியுமா? இருக்கிற நிலத்தை யாரு வாங்குவா சொல்லு? அப்பா மேலும் பேச விரும்பாமல் அமைதியானார். வெற்றிலை பொட்டலத்தை அப்பாவிடம் நீட்டினாள். இவற்றையெல்லாம் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்... சின்னவன் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தான். கயிறு, அரிவாள், மண்வெட்டியோடு பெரியகுளம் நோக்கி நடந்தான். அப்பாவும் அம்மாவும் மேலும் பேசத் தொடங்கினார்கள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருப்பது தவிர வேறு என்னதான் செய்வது. முப்போகம் வெளைஞ்ச பூமி தரிசா போய்கிட்டு இருக்கிறதை நினைச்சா வயிறு எரியுது. 'என்ன பண்றது' 'யார்கிட்டேயாவது இஞ்சின் கேட்டிருக்கீங்களா' 'ம், கேட்காத ஆளில்லை. நாளைக்கு இன்னிக்கின்னு சொல்வாங்களே தவிர ஒருத்தரும் தரமாட்டேங்கறாங்க. 'ஒரு நாலு மணிநேரம் ஓடுனாப் போதும் கதிர் வந்துடும்.' 'ஆமாண்டி... உயிர் இருந்தா போருமுன்னு நினைக்கிறேன். கதிர்பத்தி பேசுறே... கோபம் வந்தது அப்பாவுக்கு. அம்மா பெரிய மகனைப் பற்றி குறைச் சொல்லத் தொடங்கினாள். சொல்லி முடித்த பிறகு... ஊர் கதைகள் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இடைவிடாது தொடர்ந்து பேசினார்கள். நீண்டு கொண்டே போயிற்று பேச்சு. சின்னவன் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு... படுத்துவிட்டான். 'நேரமாயிடுச்சு' படுப்போம் என்றார் அப்பா. 'சீக்கிரம் எழுந்திருக்கனும் அம்மா சொல்லியபடி பாயி' - ல் சாய்ந்தாள். காலை விடிந்து விட்டிருந்தது. சின்னவன் எழுந்தான். அண்ணனை காணோம். திண்ணைக்கு வந்தான். அப்பாவும் அம்மாவும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். அம்மா என்று சத்தமிட்டான். அப்பாவும் அம்மாவும் துடித்து பிடித்து எழுந்தார்கள். அப்பா முகத்தை கழுவிக் கொண்டு வயல் பக்கம் நடந்தார். அம்மா பெரியவன் எங்கே காணோம் என்று சின்னவனிடம் கேட்டாள் தெரியல என்று கையை விரித்தான். அப்பா வரப்பில் நடந்து... தன் வயலின் தலைமேடு பக்கம் வந்தபோது காலை நேரத்து குளிர்ந்த காற்றில் மண் மனம் நாசியை தாக்கியது. அப்பாவுக்குள் ஏதோ ஒளிர்ந்தது. திடீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. வயல்வெளியில் நிறைந்திருந்த குளிர் தன்மை நீர்வரத்தினை உணர்த்தியது. வயலில் இறங்கி பார்த்தவருக்குள் இன்ப அதிர்ச்சி... கண்ணியில் நீர் ஓடிவரும் சப்தம். காலை நேரத்தில் தவளைகள் சத்தமிட்டன. மகிழ்ச்சி பெருக்கெடுக்க... நீர் கண்ட ஆனந்தம்! கண்ணியை நோட்டமிட்டவர் எதேச்சையாக வடக்கே திரும்பினார். பெரிய குளத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருப்பது யார்? நம்ப முடியவில்லை... பெரியவனே தான்... நிலத்தைப் போலவே அப்பாவுக்கும் 'கண்கள் ஈரமாகியது'.
அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?’ என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை ஒருநாள் அவர்களிடம் பீர்பல் கூறிவிட, அவர்கள் வெகுண்டனர். “பீர்பல்! என்ன தைரியம் இருந்தால் எங்களை நாய்கள் என்று குறிப்பிடுவாய்! நீ எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என்று கோபத்தில் எகிறிக் குதித்தனர். “ஏன் உங்களை நாய்கள் என்று சொல்லக்கூடாது?” என்று பீர்பல் கேட்டதும், “நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள்!” என்றனர். “அதுதான் தெரிகிறதே!” என்றார் பீர்பல் ஏளனத்துடன்! “அப்படியெனில் ஏன் எங்களை நாய்கள் என்று சொல்கிறாய்?” என்று கேட்டனர். “தவறுதான்! ஏனெனில் நாய்களுக்கு வால் உண்டு. உங்களுக்கில்லை!” என்றார் பீர்பல். “நாக்கை அடக்கிப் பேசு!” என்று அவர்கள் சீறி விழ, “நான் என்ன பிரமாதமாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் இப்படி கோபத்தில் குதிக்கிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இல்லை என்றும், நீங்கள் கோழைகள் என்றும் கூறுகிறேன். அது தவறா?” என்றார் பீர்பல். “சரி, அதைவிடு! நாங்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். ஆனால் நீ எங்களை விட தைரியசாலியா?” என்று ஒருவன் பீர்பலிடம் கேட்டான். “ஆமாம், சந்தேகம் இல்லாமல்!” என்று மார்தட்டிய பீர்பல், “உங்களுக்கு என் தைரியத்தை நான் எந்த விதத்தில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள்!” என்றார். “முன்கூட்டியே சக்கரவர்த்தியிடம் அனுமதி பெறாமல் தர்பாருக்கு உன்னால் தாமதமாக வரமுடியுமா?” என்று ஒருவர் சவால் விட்டார். அக்பர் சபைக்கு வருமுன்னரே, மற்றவர்கள் வந்துவிட வேண்டும் என்பது அக்பரின் கட்டளை! அப்படி யாராவது குறித்த நேரத்தில் வர முடியவில்லையெனில், தாமதமாக வருவதற்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும். அந்த நியதியை மீறுபவர்களின் மீது சக்கரவர்த்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதுஉண்டு. இந்த விஷயம் பீர்பலுக்கும் தெரியும். ஆயினும், முன் வைத்த காலைப் பின் வைக்க மனமின்றி, “சரி! நாளைக்கு நான் முன் அனுமதிஇன்றி தாமதமாக சபைக்கு வந்துக் காட்டுகிறேன்!” என்று கூறினார். நாளைக்கு பீர்பலுக்கு சக்கரவர்த்தி கடுமையான தண்டனை விதிப்பார் என்று எண்ணியவாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மறுநாள் அக்பர் தர்பாரில் நுழைந்த போது, பீர்பலைத் தவிர மற்றவர் அனைவரும் ஏற்கெனவே வந்து இருந்தனர். அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்திய பிறகு தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். அக்பரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு சபையோரை ஒருமுறை பார்த்த அக்பர் அவர்களில் பீர்பல் மட்டும் இல்லாததை உணர்ந்தார். “பீர்பல் ஏன் வரவில்லை? ஏதாவது தகவல் அனுப்பியிருக்கிறாரா?” என்று அக்பர் சபையோரைக் கேட்டார். உடனே, சபையில் ஒருவர் எழுந்து, “இல்லை, பிரபு!” என்றார். “தர்பாருக்கும் வரவில்லை; தகவலும் அனுப்பவில்லை! அவரை இங்கு அழைத்து வர ஆள் அனுப்புங்கள்!” என்று அக்பர் உத்தரவிட்டார். பீர்பலை அழைத்து வரச் சென்ற ஆள் சிறிது நேரத்தில் திரும்பினான். “பிரபு! அவருடைய குழந்தை அழுது அடம் பிடிக்கிறதாம்! அதை சமாதானப்படுத்திய பிறகு வருவதாகக் கூறினார்!” என்றான் அவன். “என்ன திமிர் இருந்தால் பீர்பல் இப்படி ஒரு பதிலை அனுப்புவான்! மிகவும் கெட்டிக்காரனான பீர்பலுக்கு அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லையா? இது நம்புகிற மாதிரி இல்லையே!” என்றார் அக்பர். பிறகு கோபத்துடன், “பீர்பல் உடனே இங்கு ஆஜராக வேண்டும் என்று என் கட்டளையைத் தெரிவியுங்கள்! அப்படியும் ஏதாவது சமாதானம் கூறினால், அவரைக் கட்டியிழுத்து வாருங்கள்!” என்று என்று பணியாளரிடம் உத்தரவிட்டார். அவர் கோபத்துடன் கட்டளைப் பிறப்பிக்கும்போதே, பீர்பல் அவசர அவசரமாக சபைக்குள் நுழைந்தார். பீர்பலை தலையோடு கால்வரை உற்று அக்பர் உற்று நோக்கினார். “என்னை மன்னித்து விடுங்கள் பிரபு! என்னுடைய மூன்று வயதுக் குழந்தை காலையிலிருந்து தொடங்கி அடம் பிடித்து அழுது கொண்டேயிருக்கிறது. அதை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் என்னால் தர்பாருக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. என் குழந்தை இன்னமும் அழுது கொண்டேயிருக்கிறது!” என்றார் பீர்பல். “உன்னால் ஒரு குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன்!” என்றார் அக்பர். “நான் நடந்ததைக் கூறுகிறேன், கேளுங்கள்! காலையில் எழுந்தவுடன் என் குழந்தை கரும்பு கேட்டது, நானும் வாங்கித் தந்தேன். அதைப் பிழிந்து சாறு தரும்படிக் கேட்டது. நானும் அவ்வாறே செய்து ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன். உடனே கோப்பையிலிருந்த கரும்புச் சாற்றைத் தரையில் கொட்டிவிட்டு, தரையில் ஓடும் சாற்றை மீண்டும் கோப்பையில் எடுத்துத்தரச் சொல்லிப் பிடிவாதம் செய்தது. அது என்னால் எப்படி முடியும்? அது முடியாத காரியம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அதனால்தான் எனக்கு தாமதமாகி விட்டது!” என்று பீர்பல் பரிதாபமாகக் கூறினார். “ஒரு குழந்தையை சமாதானப் படுத்த சாமர்த்தியமற்ற உன்னைப் போய் பிரதம ஆலோசகனாக நியமித்துக் கொண்டேனே!” என்று அக்பர் விமரிசனம் செய்தார். “பிரபு! உலகிலேயே மிகக் கடினமான காரியம் அது ஒன்று தான்! நீங்கள் எப்போதாவது அழும் குழந்தையை சமாதானம் செய்து இருக்கிறீர்களா?” என்று பீர்பல் கேட்டார். தொடர்ந்து, “எங்கே! சற்று முயற்சி செய்து பாருங்களேன்! நான் இப்போது ஒரு குழந்தை போல் நடிக்கிறேன். நீங்கள் என்னை சிரிக்க வையுங்கள்!” என்றார். அதற்கு அக்பரும் சம்மதித்தார். உடனே, பீர்பல் தரையில் படுத்துக் கொண்டு குழந்தையைப் போல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தார். அக்பரும் சிம்மாசனத்தில்இருந்து இறங்கி வந்து “அழாதே பாப்பா! உனக்கு என்ன வேண்டும்?” என்று கெஞ்சினார். “ஹூ…ஹூ! எனக்கு தங்க மோதிரம் வேண்டும்!” என்று பீர்பல் குழந்தைக் குரலில் கேட்டார். உடனே, அக்பர் தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றி பீர்பலின் விரலில் அணிவித்தார். ஆனால், மறுபடியும் பீர்பல் குழந்தையின் குரலில் உரக்க அழுதார். “எனக்கு ஒரு யானை வேண்டும்!” என்று கத்த, அக்பர் உடனே ஒரு யானையை வரவழைக்கச் செய்தார். அதன்பிறகும், பீர்பல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதார். “இந்த மோதிரத்தினுள் யானை நுழைந்து வெளியே வரவேண்டும்! ஹூ…ஹூ!” என்று கத்தினார். தலையைப் பிடித்துக் கொண்ட அக்பர், “ஐயோ! உன்னை என்னால் சமாதானப் படுத்த முடியாது!” என்று கூவ, “இப்போதாவது புரிந்ததா பிரபு! அடம் பிடித்து அழும் குழந்தையை சமாதானம் செய்வது மிகவும் கடினம்!” என்றார் பீர்பல். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அக்பர், “பீர்பல்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!” என்றார். பீர்பலுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதிகாரிகளின் முகத்தில் அசடு வழிந்தது.
அந்த இளைஞன் சங்கரனைப் பார்க்கிற போதெல்லாம் புதிராகத் தெரிந்தான் ராமசாமிக்கு. அவனது உள்மனசைக் கிளறி உண்மையை உதடுகளுக்கு வரவழைக்க வேண்டும் என வதைக்கிற சந்தேகச் சித்ரவதை. நல்ல உயரம், ஓரளவு நிறம் வளையாத பனைமரம் போல உறுதியுடன் சீரான தேகம். எந்த நேரமும் ஏதோ தேடலுடனான பார்வை. எதையோ பறிகொடுத்தவன் போல இயல்பின்றி இறுக்கமான முகம். வார்த்தை கொடுத்தாலன்றி வலிய வராது விலகியே செல்கிற சுபாவம். இது ஒரு பக்கமிருக்க, இதையெல்லாம் மிஞ்சுவது போலவும், அவனைப் பற்றிய அனுமானம் அடிவயிற்றைக் கலக்கி அஜீரணமாவது போலவும் 'அந்தப் பயல் சங்கரன் எங்க ஊரு தான். பழக்கமில்ல; ஆனா நல்லாத் தெரியும். தேவையில்லாத பிரச்சினைகள்ல மூக்கை நுழைச்சு வீண் விவகாரம் பண்ணுவான். ஊர்ப்பிரச்சினை அது இதுன்னு கண்டவங்க கூட விவகாரம் பண்ற சண்டியர். எதுக்கும் அவன் மேல ஒரு கண்வையுங்க' என நேற்று சங்கரனின் சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்தில் தங்குவதற்காக வந்திருக்கிற அரசு ஊழியர் தேவதாஸ் சொல்லியிருந்த வார்த்தைகள் நெற்றியடியாய் கிறுகிறுக்கச் செய்கிறது. 'அந்தப் பையன் ராத்திரி வரவும், 'நீங்க இங்க தங்கினது; போதுமப்பா. இனி வேற எடம் பாரு' ன்னுச் சொல்லிற வேண்டியதுதா' என்று தீர்மானம் பண்ணியவாறு அலுவலகத்தில் அங்கிட்டும் இங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தார் அறுபது வயசு ராமசாமி. இந்தப் பொது அலுவலகத்தில் தங்கிக் கொள்வதற்காக தனது சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்திற்கு நெருக்கமான தொடர்புடைய ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த சிபாரிசுக் கடிதத்தைத் தவிர, சங்கரனுக்கும் இந்த அலுவலகத்திற்கும் வேறெந்த சம்பந்தமும் இல்லை. அவன் இங்கு வந்து தங்க ஆரம்பித்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து முடித்து, ஆறு மணிக்கெல்லாம் வெளியில் கிளம்பிப் போகிற அவன், இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் திரும்ப வருகிறான். இடைப்பட்ட நேரத்தில் ஒருநாள் கூட வந்தது இல்லை. இரவு வந்ததும் படுப்பதும் இல்லை. ஏதேதோ சிந்தித்த வண்ணமிருக்கிறவன், நடுநிசிக்கு மேல் உறங்குவதுண்டு. 'இங்கு வந்த முதல்நாளே சென்னைக்கு வந்த நோக்கம், இங்கு பல தினங்கள் தங்கப் போவதின் அவசியம் பற்றித்துருவி விசாரிக்காமல் விட்டது தப்போ?' என்று தோன்றியது ராமசாமிக்கு. இந்த அலுவலகத்திற்கு அவன் இந்த கோலம் அப்படி. அந்தக் கணத்தில் அவனுக்கு உதவ வேண்டுமெனத்தான் தோன்றியதேயன்றி துருவி விசாரிக்க மனமில்லை. அன்று - காலை ஏழரை மணி. பெருத்த இரைச்சலுடன் பேய்மழை குமிறிக் கொட்டிக் கொண்டிருக்க, வேகமாய் வந்த ஆட்டோ ஒன்று அலுவலக வாசலில் நின்றது. முகமெங்கும் மழை நீர் சொட்டச் சொட்ட அந்த ஆட்டோவுக்குள்ளிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் சங்கரன் சிறிய தோள்பை ஒன்றைச் சுமந்தபடி அலுவலகத்திற்குள் வந்து நின்றான். ராமசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. "யாரப்பா நீ? என்ன விஷயம்?" எனக்கேட்டார். நெற்றியில் வழிந்தோடிய மழை நீரை ஆள் காட்டி விரலால் நீவி வழித்தபடி, ' நா கூடலூருக்குப் பக்கத்திலிருந்து வாறேன். மெட்ராசுக்கு வேல விஷயமா வந்திருக்கேன். சில தினங்கள் இந்த ஆபிசுல தங்கணும்.' என்றான், பின் தோள் பையைத் திறந்து பளுப்பு நிறக்கவர் ஒன்றை எடுத்தவன் 'இதோ சிபாரிசுக் கடிதம்' என்றபடி அவரிடம் நீட்டினான். வானவிலை மனசில் உறுத்த, சேரிதம்பி.. ரெண்டாவது மாடியில போயித்தங்கிக்க' என்று அனுமதித்தார். சங்கரனின் மழை நீரால் கசங்கிய முகத்தில் மலர்ச்சி. பிளாட் பாரவாசிகள் பெருத்த நகரில் புகழிடம் கிடைத்தப் பூரிப்பு. மறு நொடியே மாடிப்படிகளில் தாவி ஏறியவாறு மேலே போனான். அப்புறம் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்து, உடை மாற்றி மழைத்தூறலில் நனைந்தவாறே வெளியில் போனான். 'வந்ததும் வராததுமா இந்தத் தூரல்ல நனைஞ்சிட்டுப் போறளவுக்கு அப்படி அவனுக்கு என்ன தான் தலைபோற அவசரம்னு தெரியல' என்று முழித்தார் ராமசாமி. நாட்டு நடப்பு அவரது உள்மனசை உலுக்குகிறது. அவனைப் பரிவுடன் தங்கிக் கொள்ள அனுமதித்தது, அவசரப் புத்தியோ?' என அங்கலாய்ப்பு, 'நாட்ல எங்க பாத்தாலும் குண்டு வெடிப்புக் கதியா இருக்குது. முன்பின் தெரியாதவங்களயெல்லாம் இப்டி அனுதாபப்பட்டு தங்கிக்க அனுமதிச்சுடறோமே... ஏதாவது ஏடாகூடமாயிட்ட எனக் குழம்பிப் போயிருந்தவருக்கு, அவன் வந்த முதல் நாளே தூக்கம் துப்புரவாக இல்லை. விரித்திருந்த 'பெட்ஷ“ட்'ட்டில் அங்கிட்டும் இங்கிட்டுமாக புரண்டு புரண்டு படுத்தார். தலைக்கு மேல் சுற்றுகிற காற்றாடியைப் போலவே, மூளைக்குள் ஆற்றாமை ராட்டினமாய் சுற்றியது. பின், 'சரி... விடியட்டும் அந்தப் பையன்கிட்டத் தீரமா விசாரிச்சுடலாம்' என தனக்குள் சமாதானம் பண்ணிக் கொண்ட பிறகே உறக்கம் வந்திருந்தது. மறுநாள் காலை சங்கரன் குளிப்பதற்காக சோப்பு டப்பா, டவல் சகிதமாய் கீழ்தளத்திற்கு வந்த போது, திடுமென்று விழித்துக் கொண்டபடி எழுந்து உட்கார்ந்தார். அவனைப் பற்றிய முழு விபரங்களையும் அலசிக் கேட்பதற்காக நாவில் ஆவல். கடுந்தவம் போலான விபரம் அறிவதற்கான இரவு விழிப்பினால் தூக்கக் கலக்கத்தில் இமைச் சொக்குதலையும் மீறி அகலக் கண் விரித்து அவனைப் பார்த்தார். விசாரிக்க இதயம் எத்தணிக்கிறது. ஆனால், உள்ளுக்குள் தயக்கம். சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஒருவரை விசாரிக்க, அவன் வெடித்து விட்டான். 'நாந்தான் இந்த சங்க அலுவலகத்து முக்கியமான ஆளுகிட்டேயிருந்து கடிதம் வாங்கி வந்திருக்கேனே! அப்புறம் எதுக்கு, ஏதோ திருடனக் கண்டது கணக்கா இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறீங்க?' என்று. ராமசாமிக்கும் கோபம் வந்துவிட்டது. 'நாங் கேக்காமெ வேறெந்தப் பய கேப்பான்? இங்க நாந்தான பொறுப்பாளி?' என்று முதியவரானாலும் முறுக்கி நின்று கேட்டார். பக்கத்திலிருந்தவர்கள் சமாதானம் பண்ணிவிட்டிருந்தார்கள். - அந்தச் சம்பவம் மனசில் சலனமிட, 'அந்த ஆளப் போல சங்கரணும் கோவிச்சிட்டா? தர்மசங்கிடமாயிருமே!' என்றெண்ணிப் பேசாமலிருந்து விட்டார். ஆனாலும், சங்கரன் மீதான சந்தேக மன அரிப்பு மட்டும் சன்னங்கூட மட்டுப்படாதிருந்தது. ஓயாது உள்ளுக்குள் புலுங்கினார். அவன் மீது தினமும் சந்தேக வலை பின்னியபடியே இருந்தது அவரது பார்வை. 'முன்னூறு மைல்களுக்கப்பால் இந்தப் பெரிய நகரத்துல வந்து என்னத்தப் பண்ணப் போறானோ?' துவம்சம் செய்கிற புலப்படாத புதிர்க் கேள்விகள். 'உள்ளூர் பயல்கள் படிச்சிட்டு ஆயிரமாயிரமா வீதியில அலையுறப்போ, எதுக்கு இப்டி இங்க வந்து அழுக்குச் சட்டை, வறண்ட தலையுமா அலையணும்? என்னதான் படிச்சவனாயிருந்தாலும் அவ்வளவு சுலபமா வேல கெடைச்சிருமா என்ன? இந்தப் பட்டிக்காட்டானுக்கு யார் வேல தருவாங்க?' புழுதியும், புகைச்சலுமாய் நெஞ்சு நிம்மதியின்றி அற்றலைந்து கொண்டிருந்தது. 'சங்கரன் வரவும் இனி இந்த ஆபீஸ்ல தங்க வேணாம்... வேற ஏதாவது எடம் பாத்துத் தங்கிக்கோனு தறாராச் சொல்லிறணும்' என்று மனசுக்குள் அசை போட்டபடி அவனது வருகைக்காக அவன் தங்கியிருக்கிற இரண்டாவது மாடியில் அவனை எதிர்பார்த்து, மரப்பெஞ்சில் பத்திரிகை ஒன்றைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்த ராமசாமி. அந்த அலுவலகத்துக்குக் கீழ் வீதியில் திடீரென மனிதக் குரல்களின் மல்லுக்கட்டுகிற சலசலப்பு ஓசை செவிகளில் வந்தறைய, எதுவும் விளங்காது மாடிப்படியிறங்கி அப்படியே கீழே வந்து வாசலில் நின்று பார்த்தார். அலுவலகத்தின் முன்பிருக்கிற சுவரின் ஓரம் பெரிய கும்பல் நின்றிருக்க, அவரும் அந்தக் கும்பலுடன் வந்து நின்று கொண்டார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபாச சினிமா போஸ்டர் ஒட்டுகிற ஆசாமி ஒருத்தன், எதிரே உள்ள சுவரில் அந்தப் போஸ்டரை ஒட்டப் போக ஆயத்தப்படுவதும், சங்கரன், "டேய்... ஒனக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவிருக்குதா? நீ மனுஷன்தானா? பார்டா நல்ல. எதிர்த்தாப்ல இருக்குறது ஒரு பொது அலுவலகம். இந்த மாநிலம் பூராவிலிருந்தும் அந்தச் சங்கத்தச் சேர்ந்த பெண் ஊழியருங்க அடிக்கடி வந்து போறாங்க. அப்டி இருக்கையில், இந்த ஆபீஸ் முன்னால - பல குடும்பங்க பொழைக்கிற இந்த எடத்துல வந்து ஆபாச சினிமா போஸ்டர் ஒட்றியே" என்று அதிரும் குரலில் கூறியவாறு அவனை ஆபாச போஸ்டர் ஒட்ட விடாது இடை மறித்து நிற்பதும் தெரிகிறது. அந்த ஆள், "நா போஸ்டர் ஒட்டாமப் போக மாட்டேன். நீ என்னடா பண்ணுவ?" என்று சங்கரனை முறைத்து எகிற, "நீ ஒட்றதுக்கு நா விடவேமாட்டேன். அதனால என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்" கூறிக் கொண்டே மீண்டும் அவனை சுவரை நெருங்க விடாது மறித்து நிற்கிறான், சங்கரன். இப்படியாக இருவருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம்! போஸ்டர் ஒட்டப் போவதும்; ஒட்ட விடாததுமாய் அவரவர் குறிக்கோளில் எள்ளளவும் இறங்கி வராத உடும்பின் உறுதி. இறுதியில், "என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்" என்ற சங்கரனின் வீர்யமான துணிச்சலில், ஆபாச போஸ்டர்காரனின் அற்ப முயற்சி அப்பளமாய் நொறுங்கிப் போனது. அவன் மீண்டும் பசை வாளியையும், போஸ்டரையும் சைக்கிளில் வைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகன்றான். கும்பலும் கலையத் துவங்கியது. நடந்தவற்றையெல்லாம் நங்கூரப் பார்வையால் ஆழ்ந்து விழுங்கி நெகிழ்ந்து போனார் ராமசாமி. அவ்வளவு சீக்கிரமாய் மீள முடியாத ஆச்சர்யம். 'நமக்கேன் வம்பு?' என இந்தத் தெரு வாசிகளே ஆபாசப் போஸ்டரை அனுசரித்துப் போயிருக்க, நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து வந்த சங்கரன், அதை மறுதலித்து மல்லுக்கு நிற்கிற தைரியம் அவரை நெஞ்சுருகச் செய்தது. வேகமாய் அவனுக்கு அருகில் போனவர், அவனைப் பற்றிய கலங்கலான எண்ணத்தைக் கழுவித் துடைத்தபடியும் நெஞ்செல்லாம் நிம்மதிவாசம் மணக்கவுமாய், அவனது கைகளை இருகப் பற்றினார். "என்னப்பா சங்கரா? பிரச்சினை முடிஞ்சதா? ஆபாசப் போஸ்டர்காரன் திரும்பிப் போயிட்டான் போல. சங்கரன், ரியலி யூ ஆர் அவுட் ஸ்டாண்டிங் யூத் ஆஃப் திஸ் கன்ட்ரி" என்றவர். "வா நம்ப ஆபீஸ்ல தங்கிக்கிறலாம். நான் அனுமதி வாங்கித் தாறேன்" என்றவாறு அவனை அரவணைத்தபடி அலுவலகம் நோக்கி நகர்ந்தார். 'இதைத்தான் ஒங்க ஊர்ல சண்டியர்த்தனம்னு சொல்றாங்களா? இது மட்டுமில்ல தம்பி இதே ரோட்ல கேடிகளோட மாமூல் வசூல் அது இதுன்னு நிறையக் கோளாறு இருக்குது. நிறையக் கோளாறு இருக்குது. ஒன்னப் போல இளைஞர்களாலதான் அதுக்கெல்லாம் ஒரு விடிவு வரும்' - சொல்லிக் கொண்டே அவனுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த ராமசாமியின் கண்களில் சங்கரனைப் பற்றி புகார் கூறிய அரசு ஊழியர் தேவதாஸ்! வெட்கிக் குனிந்திருந்த அந்த ஆள் முகத்தில் உயிரில்லை.
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.